Published:Updated:

சொல்வனம்

படம் : அருண் டைட்டன்

சொல்வனம்

படம் : அருண் டைட்டன்

Published:Updated:
##~##

இயலாமை

 ண்திருஷ்டித் தாவரம் என்று
கற்றாழையை வாசலில் தொங்கவிட்டு
இரண்டே நாளில்
அதன் நுனி கருக
அத்தனையும் கண்ணெரிச்சல் எனக்
கருகிய நுனி கிள்ளி எறிந்து
புலம்பித் தீர்த்தாள் அம்மா
'கற்றாழை சுருங்கச் சுருங்க
நம்மளும் சுருங்கிருவோம்டா’
- அப்பத்தா ஆரூடம் சொல்லியதில் இருந்து
அநேக சமயங்களில்
சுருங்கி இருக்கின்றனவா எனக்
கற்றாழையைக் கண்கள் தேடுகின்றன
கடன் கழுத்தை நெரிக்க
கற்றாழையும் கைவிட்டுவிட்டது எனப்
பணத் தாவரம் எனும் ஒரு வகைச் செடியை
நட்டுவைத்துத் தண்ணீர் ஊற்றி
செடி வளர வளர வசதியும் வளரும் என்ற அப்பாவை
என்னவென்று சொல்வது?
பணத் தாவரமும் கைவிட்டு
வட்டி விழுங்கிய
வாழ்க்கையின் எச்சமாக
வாழ்வா சாவா போராட்டத்தில்
யாருக்கும் தெரியாமல்
ஒரு மழை நாள் இரவில்
குடும்பத்துடன் பரதேசம் போன
நாளிலிருந்து நான்காவது நாள்
பக்கத்து வீட்டு ரகசிய நண்பன்
அலை பேசுகிறான்
நீங்கள் விட்டுச்சென்ற
பணத் தாவரத்தில் புதிதாக
இலைகள் இரண்டு துளிர்த்து இருக்கின்றன என!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- கு.விநாயகமூர்த்தி

 அடுப்படி

சொல்வனம்

யாருக்கு என்ன வேண்டும்
எல்லாமும் உனக்கு அத்துப்படி

அலுவலகக் கோபத்தினை
மின்னல் வார்த்தைகளால்
கொட்டும் கணவருக்கு
நீதான் இடிதாங்கி

அம்மா எனப் பள்ளி முடிந்து வரும்
பிள்ளைகளை அரவணைத்து
அமர்த்துவாய் உன் மடி தாங்கி

இரவு உணவோடு முடிந்துவிடும்
அனைவரின் ஆட்டம்

உனக்கோ பாத்திரங்களுடன்
காத்திருக்கும் சிறு போராட்டம்

ஓடி ஆடி
பம்பரமாய்ச் சுழன்றாலும்
அங்கீகாரமின்றியே
போய்விடுகிறது
உன் உழைப்பு

வாடிப்போய்ப் படுக்கையில்
நீ சொல்லும் 'அப்பாடா’வில்
உள்ளது பல தலைமுறைப்
பெண்களின் களைப்பு!

- என்.எம்.குணசேகர்

வரம்

ரம் பெற்ற மரம்
நதியில் மிதந்தது
நிழலாய்.

- கவிஜி

தந்தையின் பெயரை மீட்ட பிள்ளைகள்

மொந்தையனின் பெயரை
தங்கராசும் சிவசாமியும் வளர்ந்து
கருப்பையன் ஆக்கினார்கள்

மாவானின் மகன்கள்
ராஜேந்திரனும் குமாரும்
அமெரிக்கா சென்றுதான்
அழகப்பன் என
அறியச்செய்தார்கள்

பரட்டையனின் பெயரை
நடராஜனும் அரங்கராஜனும்
பதவி வகுத்துதான்
சிங்காரம் எனப்
பொறித்துவைத்தனர்

காக்கையனின் பிள்ளைகள்
தமிழ்மாறனும் இளவரசனும்
கார் வாங்கித்தான்
முருகையன் ஆக்கினார்கள்

கொட்டாப்புளியின் மகன்கள்
அண்ணாதுரையும் பவுன்ராஜும்
பண்ணை உண்டாக்கி
ரெங்கசாமி ஆக்கினார்கள்

இப்படி தொத்தன், பொடச்சட்டி
உடுக்கன் தவுடன் மகன்களும்
தந்தையின் பெயர்களைப்
பதித்தார்கள்!

- சிவராஜ்

சொல்வனம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism