Published:Updated:

முனிவர் தந்த ஜோதி மரம் !

கண்ணாகொ.மா.கோதண்டம்

முனிவர் தந்த ஜோதி மரம் !

கண்ணாகொ.மா.கோதண்டம்

Published:Updated:
##~##

அது ஒரு பெரிய மலை இல்லை என்றாலும் வளமான மலை. அந்த மலையில் பலவிதமான மரங்கள், மூலிகைத் தாவரங்கள் இருந்தன. அங்கே வனமும் நீர்நிலைகளும் இருந்தன. மான்கள், கரடிகள், குரங்குகள், முயல்கள் எனப் பல விலங்குகள் வாழ்ந்துவந்தன. அங்கே கரண் என்ற குரங்கும், அதன் மனைவியும் இரண்டு குட்டிகளுடன் ஒரு மரத்தின் கிளையில் மின் விளக்கு போன்ற வசதியுடன் வசித்தது.

இரவில் மின்சாரம் போய்விடுவதால், கரணின் வீடு கரி பூசிவிட்டதுபோல் இருண்டுவிடும். குட்டிகள் தூங்காமல் அழ ஆரம்பிக்கும். கரணும் மனைவியும் ஆளுக்கு ஒரு குட்டியைத் தூக்கிக்கொண்டு மரத்தில் இருந்து இறங்கிவந்து, பாட்டுப் பாடியும் வித்தை காட்டியும் குட்டிகளைத் தூங்கவைக்க முயற்சிப்பார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரு நாள், ஒரு முனிவர் தள்ளாடியவாறே வந்து மரத்தின் கீழே அமர்ந்தார். கரண் கீழே இறங்கிவந்து முனிவரிடம், ''சுவாமி ஏன் சோர்ந்து இருக்கிறீர்கள்?'' என்று கேட்டது.

''எல்லா மலைத் தலங்களுக்கும் போய் வருகிறேன். இப்போது இங்கே வந்தேன். ஒரே பசியாக இருக்கிறது'' என்றார் முனிவர்.

கரண் தாவி ஓடியது. பலாப் பழச் சுளைகள், வாழைப்பழம் எனக் கொண்டுவந்து தந்தது. முனிவர் உண்டு பசியாறினார். கரணின் மனைவி பெரிய இலையைப் புனலாக்கி, அதில் தண்ணீர் கொண்டுவந்து முனிவரிடம் தந்தது. அவர் தாகம் தீர்த்துக்கொண்டார்.

முனிவர் தந்த ஜோதி மரம் !

பிறகு முனிவர், ''உங்கள் முகத்தில் ஏதோ வருத்தம் தெரிகிறதே என்ன விஷயம்?'' என்று கேட்டார்.

''சுவாமி, இரவில் மின்சாரம் நின்றுவிடுவதால், குழந்தைகள் தூங்காமல் அழுகின்றன. அதுதான் எங்கள் வருத்தமே'' என்று கூறியது கரண்.

''இதற்கு ஒரு தீர்வு என்னிடம் இருக்கிறது. மேற்குத்தொடர் மலைப் பகுதியின் தென்தமிழக மலைகளில் ஜோதி மரம் என்ற ஒரு வகை மரம் உண்டு. இரவில் பளிச்சென்ற ஒளி பரவி, பகல்போல் ஆக்கும். தமிழ் இலக்கியங்களிலும் இதுபற்றி உள்ளது. அந்த ஜோதி மரங்களில் ஒரு சாண் அளவு மரத் துண்டைக் கொண்டுவந்து உள்ளேன். இதை உன் கூட்டில் வைத்துக்கொள். இரவில் பளபள என்று ஒளிவிடும்'' என்று கூறி, அந்தக் கட்டையைத் தந்தார். பிறகு விடைபெற்றுச் சென்றார்.

அன்று முதல் இரவில் கரணின் கூட்டில் வரும் ஒளியைப் பார்த்து... மற்ற விலங்குகள், பறவைகள் எல்லாம் அந்த மரத்தையே சுற்றிச் சுற்றி வந்தன. இதை எல்லாம் பார்த்த ஒரு கரடிக்குப் பொறாமை அதிகரித்தது. கரண் இல்லாத நேரம் பார்த்து மரத்தில் ஏறி, கரணின் மனைவியைப் பயமுறுத்திவிட்டு, ஜோதி மரக்கட்டையை எடுத்துச் சென்றுவிட்டது.

அந்தக் கரடி, மலையில் இருந்த ஒரு குகையின் உள்ளே சென்று, மண்ணைத் தோண்டி அந்த ஒளி தரும் கட்டையைப் புதைத்தது. அத்துடன், ஒரு பெரிய பாறையை உருட்டிவந்து வாசலையும் அடைத்துவிட்டுச் சென்றது.

வெளியே சென்று திரும்பிய கரணிடம் மனைவி நடந்ததைக் கூறியது. இரண்டும் அந்தக் குகைக்கு அருகே சென்று பார்த்தன. ''என்ன செய்வது? வாயிலை மூடி இருக்கும் இவ்வளவு பெரிய பாறையை எப்படித் தள்ளுவது?'' என்றது பெண் குரங்கு.

''நம்ம பாட்டன்கள் பெரிய பெரிய மலைப் பாறைகளைத் தூக்கிப்போட்டு சமுத்திரத்தில் பாலம் கட்டினார்கள். அதில்தான் ராமரே நடந்து போனார்'' என்றது கரண்.

''பழைய கதையைப் பேசுவதைவிட்டுக் காரியத்துக்கு வாங்க'' என்றது மனைவி.

கரண், குகையை மூடி இருந்த பாறையைக் கவனித்தது. உடனே மகிழ்ச்சியில் துள்ளியது. ''இந்தப் பாறைக்குக் கீழே கவனி. சின்னச் சின்ன கற்கள் இருக்கின்றன. அவற்றை எல்லாம் எடுத்துவிட்டு பாறையைச் சுற்றி மணலைத் தோண்டினால், பாறை உருண்டு குகை திறந்துவிடும்'' என்றது.

''இப்படியே எவ்வளவு நேரம் செய்ய முடியும்?'' என்று பெண் குரங்கு சொன்னாலும், கரணுடன் இணைந்து வேலையில் இறங்கியது.

அவற்றின் முயற்சி வீண்போகவில்லை. பாறைக்கு அடிப் பகுதியில் இருந்த கற்களும் மணலும் வெளியேற்றப்பட்டதால், இடைவெளி உண்டாகி, பாறை உருண்டுபோயிற்று. உடனே இரண்டு குரங்குகளும் உள்ளே சென்று கரடி புதைத்து வைத்த ஜோதி மரத் துண்டை எடுத்துவந்து தங்கள் கூட்டில் பாதுகாப்பாக வைத்தன.

அது சரி... கரடி என்ன ஆச்சு? பாறை உருண்டபோது, கரடி மலைக்குக் கீழேதான் இருந்தது. பெரும் சத்தத்துடன் பாறை வருவதைப் பார்த்துப் பயந்து பிடித்த ஓட்டத்தை அடுத்தக் காட்டில் சென்றுதான் நிறுத்தியது. பிறகு இந்தப் பக்கமே வரவில்லை.