பிரீமியம் ஸ்டோரி
##~##

உயிர்க் கொல்லி

 பாப்பாவின் கனவில்
அடிக்கடி வருகிறதொரு
கரடிப் பொம்மை

பாப்பாவைவிட உயரமான
பொம்மை ஒன்றைப் பரிசளிப்பதாக
அப்பாவுக்கும் உண்டு ஒரு கனவு

 கடைக்காரர் சொன்ன விலை தடுக்கி
கனவிலிருந்து கீழே விழுந்தார் அப்பா

 சிங்கம் புலி விளையாட்டின்போது
குழந்தையின் நினைவு அடுக்குகளில் இருந்து
எதிர்பாராவிதமாக வெளிப்படுகிறது கரடி
மூர்ச்சையாகிறார் அப்பா

 கரடி வரும்போதெல்லாம்
சமயோசிதமாக இப்படி
மூச்சை அடக்கிக்கொண்டு
செத்ததுபோல் நடிக்கிறார்
அல்லது செத்துச் செத்துப் பிழைக்கிறார்.

- இளையநிலா ஜான்சுந்தர்

பழக்கம்

யாரோ புகைப்படம் எடுக்கக்
காத்திருந்தது மாதிரி
இருந்துவிட்டுச்
சரக்கென்று
பறந்து செல்கிறது
சரணாலயத்துப் பறவை ஒன்று.

- எஸ்.வி.வேணுகோபாலன்

என் சின்ட்ரெல்லா

சின்ட்ரெல்லா கதைகளோடு
தொலைந்துபோயிருந்தார்கள்
என் தேவதைகள்...
பின்னாளில்
என்னுடன் இருந்தவர்கள் எல்லாம்
மனிதர்களும் ராட்சதர்களும்தான்.
அந்த தேவதைக்கு
இந்நேரம் வயசாகி இருக்கும் என்ற
என் எண்ணம் உடைந்தது
எனக்கு வயசாக வயசாக
அந்த தேவதை
குழந்தையாகிவிட்டிருக்கிறது.

- செந்தில் கே.நடேசன்

சொல்வனம்

சலூன்காரர் கவிதை

வருக்குத் தொழில் சவரம்
எனக்குக் கவிதை

 நான் வார்த்தைகளையும்
அவர் முள் முடிகளையும்
செதுக்கியவாறு உள்ளோம்

 நான்
சுயமாக சவரம் செய்ய முயன்று
காயமான தருணங்கள் அநேகம்
அவர் ஒருமுறைகூட
பேனா எடுத்ததில்லை
கவிதை எழுத

 சமயங்களில்
ஒற்றுப் பிழைகள்
தங்கிவிடுவதுண்டு எனக்கு
தெரிந்தவரையில் அவர்
சிராய்ப்பு ஏற்படுத்தியதாக
வரலாறு இல்லை

 பிள்ளையார் பிடிக்க நினைத்து
குரங்காக ஆன நிகழ்வுகள்
ஏராளம் எனக்கு
ஒவ்வொரு முறையும்
அழகாக வரைந்துவிடுகிறார்
முகத்தில் ஒரு கவிதையை அவர்.

-  நா.ராஜேந்திர பிரசாத்

சொல்வனம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு