சினிமா
Published:Updated:

கதைகள் பல கடந்து...

இளம்பிறை

கதைகள் பல கடந்து...

காற்றில் நெளிந்து கலக்கும் கரும்புகையாக
எப்போதும் ரகசியமாக வேஷம் கலைக்கும்
மனிதர்களின்
மெல்லிய நினைவுத் திரைச்சீலைகள்
மனதிலாடிக்கொண்டிருக்கின்றன.
பச்சை விறகுகளை
கழுத்து நடுங்க கட்டிச் சுமந்த
வயிற்றுப் பிள்ளைக்காரி
வீடு வந்து சேர்ந்ததைப்போல்
பதற்றமும் வலியுமற்ற
இந்நிலைக்கு வந்து சேர
நீங்கள் உருவாக்கிப் பேசிக்கொண்டிருந்த
எத்தனையோ என் கதைகளை
கடக்கும்படியாயிற்று நான்.
கழன்று சுழலும்
பலமிழந்த ஏணியின்
குறுக்குக் கம்புகளைப்பற்றிய
கவனம் ஏதுமின்றி
மேலே மேலே ஏறிக்கொண்டிருக்கிறீர்களே
என்பதைத் தவிர
உங்கள்மீது எந்த வருத்தமுமின்றி
தாழிடப்பட்ட வீட்டுக்குள்ளிருந்து
கசியும் ஒளிக்கீற்றுகளாகத்
தொடர்ந்து எழுதிக்கொண்டுதானிருக்கிறேன்
கவிதைகள்!