Published:Updated:

நெருநல் உளனொருவன்...

நா.முத்துக்குமார்

பிரீமியம் ஸ்டோரி

பால்ய காலத்தில்
என் கூடை நிறைய
விண்மீன்கள் வைத்திருந்தேன்
என் சுடரை
யார் யாரோ
ஏற்றிவைத்த காலம் அது.

 பதின் பருவத்தில்
என் கூடை நிறைய
பூக்கள் வைத்திருந்தேன்
வண்ணங்களாலும்
வாசனையாலும்
விரைந்துவிட்ட காலம் அது.

நெருநல் உளனொருவன்...

 வாலிப வயதில்
என் கூடை நிறையக்
கனவுகள் வைத்திருந்தேன்
ஒன்றிரண்டை நிறைவேற்றி
ஓடிவிட்ட காலம் அது.

 நடுத்தர வயதில்
என் கூடை நிறைய
ஏக்கங்கள் வைத்திருந்தேன்
கடைசிச் சொட்டு மதுவைப் போல
தீர்ந்துவிட்ட காலம் அது.

 முதுமையின் முதல் படிக்கட்டில்
என் கூடையை
ஆற்றில் விட்டெறிந்தேன்.

 ஒரு சிறுவனை
ஒரு வாலிபனை
தலையோரம் நரைத்தவனை
தனக்குள் சுமந்தபடி
அது மூழ்கிக்கொண்டிருந்தது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு