பிரீமியம் ஸ்டோரி
##~##

மீன்கொத்தியின் அம்மா

 மேடிட்ட உனது வயிற்றைத் தடவி
முத்தமிட்டுச் சொன்னேன்
'உள்ளே இருப்பது
ஒரு தேன்சிட்டு
உலகத்தின் எல்லாப் பூவிலிருந்தும்
அது அப்பாவுக்குத் தேன் கொண்டுவரும்’
அவசரமாக மறுத்துச் சொல்வாய் நீ
'இல்லையில்லை.
உள்ளே இருப்பது
மீன்கொத்திதான்
உலகத்து ஆறு கடல்
குளங்களிலிருந்தெல்லாம்
அது அம்மாவுக்கு
மீன் பிடித்துக்கொண்டுவரும்’
உன் வயிற்றுக்குள் இன்று
நீந்திக்கொண்டிருக்கும் மீன்தான்
உலகத்து மீன்களையெல்லாம் தேடி
நாளை மீன்கொத்தியாகிப் பறக்கப்போகிறது
என்ற அதிசயத்தை எண்ணி
மேலும் ஒரு முத்தமிடுகிறேன்
எப்போதும் தளும்பிக்கொண்டிருக்கும்
உன் வயிற்றில்!

மீன் கொத்துதே வானம்!

மீன்கொத்தியைக் கடக்கும் ஆறு

ற்றைக் கடக்கிறது
மீன்கொத்தி
பறந்தபடி
மீன்கொத்தியைக் கடக்கிறது
ஆறு
அப்படியே இருந்தபடி!

நீ பெயரிட்ட வானம்

த்தனை முறை
சொல்லிக்கொடுத்தாலும்
எந்தப் பறவையையும்
சரியான பெயர் சொல்லி
அழைத்ததில்லை நீ

தேன்சிட்டைத்
தேன்கொத்தி என்பாய்
மீன்கொத்தியை
ஈட்டிமூக்கி
வால்காக்கையை
புக்குருவி
ஆள்காட்டியை
குடுகுடு குருவி
இப்படியே...

சண்டையிடும்
என்னைக் கேட்டாய்
சரியான பெயர் என்று
ஒன்று இருக்கிறதா என்ன?

கல்லெறிந்த அடைமரத்திலிருந்து
படபடத்துப் பறந்தகலும்
பறவைகள்போல்
சட்டென்று
பறந்தோடின பெயர்கள்
பறவைகளை விட்டுவிட்டு
அண்ணாந்து பார்த்தேன்
எல்லாப் பறவைகளையும்
தூக்கிக்கொண்டு
ஒரு பெரும் பறவையாய்ப்
பறந்துசென்றுகொண்டிருந்தது
நீ பெயரிட்ட
பறவைகளின் வானம்
அதற்கு என்ன பெயர்
வைப்பாய் நீ?

நீலம் என்னும் ஒளி

நீலம் என்னும் மரத்தில்
நீலம் என்னும் கூட்டில்
நீலம் என்னும் முட்டையிடுகிறது
நீலம் என்னும் பறவை
அதைத் தட்டிவிடுகிறது
நீலம் என்னும் ஒளி
நீலம் உடைந்து
காலம் ஆகிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு