Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்

சொல்வனம்

சொல்வனம்

Published:Updated:
##~##

என்ன சொல்ல?

 'ஹலோ’ என்கிறாய்
'என்ன?’ என்கிறேன்
'ஒன்றுமில்லை’ என
தொடர்பைத் துண்டிக்கிறாய்
என்னவோ இருக்கிறது
எவ்வளவோ இருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- மா.காளிதாஸ்

மோட்சம்

ன் சுட்டுவிரல்
சொர்க்கத்தில் இருக்கிறது.
விரல்பிடித்து நடைபழகுகிறது
ஒரு பிஞ்சுக் குழந்தை.

- ஜோ.பிரதீஷ் ஷர்மா

பூப்பூவாய்...

மாநகர வாகன நெரிசல் நேரத்தில்
அலுவல் அவசரத்தில்
உங்களுக்கான சிக்னலுக்காக
கடுகடுப்பில் காத்திருக்கிறீர்கள் நீங்கள்
சிக்னல் கிடைத்துவிடுகிறது
ஆயினும்
பின்சுமையோடு சாலை கடக்க
அல்லாடுகிற பள்ளிக் குழந்தைகளுக்கு
வழிவிடுகிற உங்களுக்காக
பூப்பூவாய் பூக்கிறது
எங்கோ ஒரு காட்டுச் செடி.

- ச.சிவசங்கரன்

சொல்வனம்

 பூக்கள் விழுந்த ஓசை மட்டும்

ரவு வேலை முடித்து
பகல் தூக்கத்திலிருந்து
எழுந்தபோது

விடுபட்ட அழைப்புகள் சில
என் கைபேசியில்...

அதில் ஒன்று - என்
மனைவியிடமிருந்து

வழக்கமான விசாரிப்புகளுக்குப் பின்
அத்தனை புகார்கள்
என் ஐந்து வயது மகள்பற்றி.

'தினமும் பள்ளியில் எதையாவது
தொலைத்துவிட்டு வருகிறாள்

இரவெல்லாம் ஆட்டம் போட்டு
காலையில் பள்ளி செல்ல
எழுந்திருப்பதில்லை

என் தாலிச் சங்கிலிபோல்
அவளுக்கும் வேண்டுமாம்’

இப்படியாக... தொடர்ந்தபோது
எதிர்முனையிலிருந்து மகளின் குரல்
'அப்பா எனக்கு
ஒரு கம்பியூட்டர் போதும்
நம்ம கோழி குட்டி போட்ருக்கு
நாளைக்கு
நம்ம ஊருக்குப் போகும்போது
எனக்கு ஒரு ஆட்டுக் குட்டி வேணும்பா.’

அந்த புகார் பெட்டியினுள்
சில பூக்கள் விழுந்த
ஓசை மட்டும்

கடல் கடந்திருக்கும்
என் காதுகளில்.

- த.அழகுராஜன்

 சொற்களால் பூர்த்திசெய்யப்படுதல்...

ரு குறுஞ்செய்தித் தகவல் போதும்
திட்டமிட்டபடியான
நம் பயணத்தில்
எந்த மாற்றமும் இல்லையென
உறுதிப்படுத்த.

 விஸ்தீரணமான மைதானத்தில்
எல்லா முனையிலிருந்தும்
பந்து வீசுகிறாய்
விதிமுறைகளுக்கு உட்பட்டு
விளையாடப் பழகியவன்
சூட்சுமம் தெரியாது திண்டாடுகிறேன்.

சொல்வனம்

ஆயிரம் காரணங்கள் இருந்தாலும்
என் உயிர் சுண்டுவதற்கே
சுருக்கு வைத்திருப்பாய்
உன் கண்ணீரில்.

 நீ சென்று திரும்பிய
தெருமுனையில் நிற்கிறேன்
எல்லா தவிப்புகளோடும்
தொடர்பு எல்லைக்கு
வெளியில் இருப்பதாய்
சொல்கிறது தொலைபேசி.

 பிரிதலின் அடர்த்தி நிறைந்த
மாலை நேரத்தை
இச்சொற்கள் பூர்த்திசெய்கின்றன.

 இச்சொற்களால் ஆவது
ஒன்றுமில்லை என்றாலும்
எழுதித் தொலைக்க வேண்டியிருக்கிறது
உன்னுடனான
உறவின் கசப்பை.

- நீரை.மகேந்திரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism