##~## |
உறைதல்
நெடுஞ்சாலை ஒன்றின்
ஓரத்துச் சரிவில் உறைந்திருக்கிறது
அழகம்மையின் சமாதி
தோற்றம் 10.04.1943
மறைவு 23.07.1955

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பேருந்து வரும் வரை
புத்தகச் சுமைதாங்கி எனவும்
விடுமுறை தினங்களில்
வாதாம் கொட்டை நசுக்கும் மேடை எனவும்
தொடர்ந்தவாறிருக்கிறாள்
தோழர்களுடனான விளையாட்டை

அப்பச்சியாய் அம்மச்சியாய்
வடை சுட்ட கதை சொல்லியிருப்பாள்
இப்போதிருந்தால்
எனினும்
வந்துபோன கனவொன்றில்
பதின்பிராயத்துச் சிறுமியாகத்தான்
ஊஞ்சலாடிப்போனாள் அழகம்மை
தின்பண்டம்
திருவிழா தீபாவளி மத்தாப்பு
கொட்டும் மழை
கோடைச் சுற்றுலாவென
நிரம்பி வழிந்திருக்கக் கூடும்
அழகம்மைக்குள்ளும் ஆயிரம் கனவுகள்
தேடித் தீராத கண்ணாமூச்சி
தெருவெங்கும் கீறிவைத்த
சில்லுப் பாண்டியென
சோழியிறைத்த சிரிப்புகள்
காற்றில் இன்னும்
உலவிக்கொண்டிருக்கக்கூடும்
பிறையினுள் படிந்த
தீபத்தின் புகைபோல் எவர் நினைவிலேனும்
இப்போதும் படிந்திருக்கக்கூடும்
அழகம்மையும்
யாவும் தன்னுள் அடக்கி
மறு எழுப்புதல் நிமித்தமோ - அன்றி
பிரளயத்திற்குப் பிறகான ஒரு
புதிய விடியலுக்கென்றோ காத்திருக்கிறது
ஓரங்கள் உதிர்ந்துபோன
அழகம்மை சமாதி.
-ஆர்.ரமேஷ்
அப்பா

தெருமுனையைத் தாண்டியதும்
கேட்கத் தொடங்கியது
நர்மதா குட்டியின் குரல்
பதற்றத்தோடு திரும்புகையில்
புடைவை கட்டிய பேரழகியாய்
அவள் அக்காவின் தாவணியை
கட்டிக்கொண்டு ஓடி வருகிறாள்
சற்று அருகில் வந்ததும்
அப்பா நானும் வரேன்
என்பவளைத் தூக்கி
தோளின் மீது அமர்த்துகையில்
லாகவமாகப்
பிடித்துக்கொள்கிறாள்
என் உச்சந்தலையை.
இரண்டு தெரு தாண்டியதும்
மீண்டும் கேட்கிறது
நர்மதா குட்டியின் குரல்
திரும்புகையில்
தாவணி கட்டிய இளவரசியாய்
வருகிறாள்.
சற்று நேரத்துக்கு முன்
16 வருடம் பின்னோக்கிப் போனதை
அப்போது உணருகையில்
என்னப்பா என்கிறாள்
நர்மதா குட்டி.
ஒண்ணுமில்லேம்மா என்று
அவள் உச்சந்தலையைப்
பிடித்துக்கொள்கிறேன்
குழந்தையாய் மாறி.
- தாய் சுரேஷ்