பிரீமியம் ஸ்டோரி
##~##
கா
ந்தி ஜெயந்தி... கிருஷ்ண ஜெயந்தி... எல்லாமே எனக்குப் பிடிக்கும். காரணம்... ஜெயந்தியைப் பிடிக்கும்!

பார்த்த முதல் கணமே, பைத்தியம் பிடித்தது பாஸ். கொடைக்கானல் மலையில் இருந்து இறங்கி வந்த மேகம் ஒன்று, என் தலை மேல் மட்டும் மழை தூவி மறைந்தது!

அப்போது சாத்தானால்  சபிக்கப்பட்டு ஆண்கள் பள்ளியில் இருந்தேன். +1. நான் யுவன் காலத்து யுவன். கிரிக்கெட், அரவிந்த் தாத்தா வீடு, சே குவேரா நற்பணி மன்றம், சினிமா, பைபாஸ் ரோடு டிரைவ் என இனிதே இருந்த என் 24*7 வாழ்வில் ஒரு மாற்றம்.

ருக்கு வெளியே ஒரு மலையடிவாரத்தில் வீடு மாறியது. 100 வீடுகள். அத்தனையும் புதுசு. அவ்வளவு பேரும் புதியவர்கள். பள்ளி சென்று வர, காலையும் மாலையுமாகப் பேருந்து வசதி. அத்தனை நண்பர்களையும் தொலைத்த நான், தனிமையில் தவித்தேன். ஸ்கூல்விட்டு வந்தால், பழைய கிடாரை எடுத்துக்கொண்டு பக்கத்து ஏரிக் கரைக்கு ஃபீலிங் டிரிப் போவேன். 'இளைய நிலா பொழிகிறதே’தான் ஏனோ எல்லா கிடாரிஸ்ட்டுகளுக்கும் ஃபேவரைட். இப்படியே கிடந்தால், 'காதல்கொண்டேன்’ தனுஷ் ஆகிவிடுவேனோ எனப் பயந்த ஒரு கணத்தில்தான் ஜெயந்தி தரிசனம்!

ஏரிக் கரையில் ஒரு சான்ட்ரோ நின்றது.   'தம்பி ப்ளீஸ்’ என டிரைவர் உதவிக்கு அழைத்தார். காரைத் தள்ளிவிட்டு  நிமிர்ந்தால், பின் ஸீட்டில் இருந்து திரும்பிப் பார்த்து, 'தேங்க்ஸ்’ என்றவள்தான் ஜெயந்தி.

ஒரே ஒரு பார்வை... உங்களை மைனஸ் குளிரில் உறையவிட்டு, கடும் கோடையில் உருகவிட முடியுமா?

தொடர்கதை : ஒன்று

அந்தச் சிறு வனத்தில் கையில் கிடாருடன் நின்றவனை ஆர்வமாகப் பார்த்தாள் ஜெயந்தி. அதன் பிறகு, அடிக்கடி ஏரிக் கரை காரில் தேவதை ஜெயந்தி. அந்தி வானம் ஆரஞ்சு நறுக்கும் ஷாட்களில், கிடைக்கும் ஜெயந்தி தரிசனம்!

ஜெயந்தியும்  + 1தான்.  என் பக்கத்துக் கிராமம். அவளின் அப்பா, ஆறேழு வியாபாரங்களில் இருந்தார். பெரிய குடும்பம். அத்தனை பேரும் சிவப்பு. ஊருக்குள் என்ன நல்லது கெட்டது என்றாலும், ஜெயந்தியின் அப்பாதான் முன்னால் நிற்பார். அநேகமாக நாலைந்து மாமன்களாவது இருப்பாய்ங்க. எல்லோரும் புல்லட்டிலும், யமஹாவிலும் தொடை தெரியத் திரிவாய்ங்க!

ங்கே நான் ஒரு கிரிக்கெட் அணி துவக்கி, நானே கேப்டனும் ஆகி, ஒரு சில மேட்ச்களில் பக்கத்துப் பட்டிக்காட்டுப் பையன்களை வெளுக்க ஆரம்பித்ததில், ஏரியா இளவட்டங்கள் மத்தியில் கொஞ்சம் பிரபலம். பிரசிடென்ட்டே, ''உன்னாலதாம்ப்பா நம்ம ஊருக்கே பெருமை வந்திருக்கு'' எனப் பாராட்டும் அளவு சின்னக் கிராமம் அது. மாலைமுரசு மதுரைப் பதிப்பில் ஒரு முறை என் புகைப்படம் வந்து இருக்கிறது. வீரபாண்டி மாரியம்மன் கோயில் திருவிழாவுக்கு உங்களை வரவேற்கும் ஃப்ளெக்ஸ் பேனர்களில் நிச்சயம் நானும் கையெடுத்துக் கும்பிட்டபடி நிற்பேன்.  

தொடர்கதை : ஒன்று

ச்சர்யமாக, அதன் பிறகு பஸ்ஸில் வர ஆரம்பித்தாள் ஜெயந்தி. ஒரே பேருந்தில்தான் பயணம். தினமும் பள்ளிக்கூட யூனிஃபார்ம்தான். என்றாலும், எக்ஸ்ட்ரா எஃபெக்ட்டுக்காக, நான் கையில் வைரமுத்து கவிதைகள் வைத்து இருப்பேன். ஜெயந்திக்கு என்னைப் பார்த்ததும் எப்படித்தான் அப்படி ஒரு சிரிப்பு பொங்குமோ, இறங்கிச் செல்லும் வரை வைத்த கண் விலக்காமல் கவிதையாய் இருப்பாள். நான்கைந்து நிமிடங்களுக்கு ஒரு முறை துப்பட்டாவைச் சரிசெய்யும் பெண்தான். ஆனாலும், என் மீது மட்டும் அது என்ன வகைப் பிரியமோ?

என்ன பேசினோம், என்ன பகிர்ந்தோம் எனில் எதுவும் மிஞ்சாது. ஆனால், ஆயிரமாயிரம் வானவில்கள் வந்து வந்து போகும் பார்வைப் பரிமாற்றங்கள். ஒரு அப்பத்தா எனக்கு உறவுமுறை போலும். பஸ்ஸில் ஒருநாள், ''டேய், பாலா... நீ சின்னவனா இருக்கிறப்ப, உங்க ஆத்தா உன்னை சாமி கும்பிடுக்குத் தூக்கிட்டு வந்திருந்தா. நீ பணியாரத்தை அள்ளி அள்ளித் தின்னு... உனக்கு வகுத்தால புடுங்கிக்கிச்சுடா. யாத்தே... உனக்குக் கழுவிவிட்டு கழுவிவிட்டு, எங்க கெணத்துத் தண்ணியே வத்திப்போச்சுடா'' என பஸ்ஸில் எல்லோருக்கும் கேட்கும்படி,  லவுட் ஸ்பீக்கர் தொண்டையில் ஃப்ளாஷ்பேக்கிட,  அன்றைக்குத்தான் அவ்வளவு சிரித்தாள் ஜெயந்தி. ஆறேழு நாட்கள் நினைத்து நினைத்துச் சிரித்தாள் ஜெயந்தி. அந்தத் தெற்றுப் பல் அவ்வளவு அழகு ஜெயந்தி!

ருமுறை, ஜெயந்தியின் ஊரில் பொங்கல் கபடிப் போட்டி. சிறப்பு விருந்தினர் நான்தான். 'இப்போது நமது சிறப்பு விருந்தினர் பவுண்டரி பாலாவுக்கு, செவன் ஸ்டார்ஸ் வீரர்கள் அறிமுகம் செய்துவைக்கப்படுகிறார்கள்’ என மைக்கில் யாரோ மொக்கையாக முழங்க, ஜெயந்தி வீட்டு வாசலேதான் மைதானம். நான் வீராதி வீரர்களுக்குக் கை குலுக்குவதை, ஏதோ ஒலிம்பிக் ஓப்பனிங் செரிமனி போல விழிகள் விரியப் பார்த்தாள் ஜெயந்தி.

தொடர்கதை : ஒன்று

+2 முடிந்து, விடுமுறை. இரண்டு மாதங்கள் ஜெயந்தியைக் காணோம். எனக்கு முப்பொழுதும் அவள் கற்பனைகள். அந்தக் கண்கள் வயதையும் மனதையும் ஏக்கப் பள்ளத்தாக்கில் பங்கி ஜம்ப்பிங் ஆட வைத்தன.

+2 ரிசல்ட் கல்வித் துறை வரலாற்றின் மிராக்கிளாக நான் ஜஸ்ட் பாஸ். பஸ் ஸ்டாண்டுக்கு வந்தபோது, ஜெயந்தியும் வந்தாள். அட, என்னை நோக்கி. எனக்கு இதயத்தில் கதகளி. காட்பரீஸ் நீட்டினாள்.

பக்கத்தில் யாரும் இல்லாத தைரியமா? அல்லது அபரிமித அன்பா? அப்போதுதான் பேசினோம் முதன்முதலாக!

''சாக்லேட் எடுத்துக்கங்க... நான் +2 பாஸ் மாமா!''

''ஹே... மாமாவா?'' என வாயெல்லாம் பல்லான நான், ''கங்கிராட்ஸ் பட்டிக்காடு. நானும் பாஸ்!''

''ஓ... ஆமா, நீங்க லண்டன் ரிட்டன்ல!'' எனச் சிரித்தவள், ''எங்க சேரப் போறீங்க?''  என்றாள்.

''மதுரைதான்... அமெரிக்கன் காலேஜ்.''

''ஹைய்யோ... நான் லேடி டோக்!''

நான் 'நத்திங் பட் விண்ட்’ ஆக நின்றேன். பரவசத்தில் வார்த்தைகள் பந்த் நடத்தின.

காலேஜில் பாட்டனி சேர்ந்தேன். பாட்டனி எவனுக்கு வேணும்... ஜெயந்தியின் கூட்டணிக்குத்தான் எல்லாமே. தீவிர செயல் திட்டத்தில் ஜெயந்தியின் தோழிகளும் எனது தோழர்களும் ஒரே குரூப்பானோம்.  ரமேஷ், அபிநயாவை லவ்வியதுதான் முதல் அத்தியாயம். ரமேஷ் ப்ரபோஸ் பண்ணி, அபியும் சம்மதித்து எல்லாம் சுபம்தான்.

ஆனால், அப்புறம்தானே அதகளம்.  ரமேஷ் அவ்வப்போது பீர் போட்டுவிட்டு போன் பண்ணி அழுவது, போன் பிஸியாக இருந்தால் சந்தேகப்படுவது என இம்சிக்கிறான். அந்தக் காமெடிப் பஞ்சா யத்தில் நானும் ஜெயந்தியும்தான் நாட்டாமைகள்.

ஜெயந்திதான் ஆரம்பித்தாள்.

''ஏன் இப்படி எல்லாப் பசங்களும் ஃபீலிங்ல பிராண்டுறீங்க?''

''ஹலோ... நாங்கள்லாம் ஒரு பீருக்கே அழுதுருவோம்... அவ்வளவு லவ்வபிள். பொண்ணுங்களுக்குத்தான் எப்பவும் ஈகோ... எதுக்கெடுத்தாலும் ஈகோ!''

''ஆம்பளப் பசங்க அட்டர் வேஸ்ட்டு!''

''பொண்ணுங்க சும்மா அலட்டல் கேஸு!''

''ஏய்... உனக்கெல்லாம் எவ வருவாள்னு பாக்கறேன்.''

''உனக்கும் எவன் வர்றான்னு நாங்களும் பார்ப்போம்ல!''

''எனக்கு எவன் வந்தாலும், சமையல் வேலை எல்லாத்துலயும் 50-50... இதான் கண்டிஷனே!''

''அடடா, அறுசுவை நடராஜன் சாருக்குக் கல்யாணம் ஆகிடுச்சே!''

''நீ ஓவராப் பேசுற பாலா!''

''நீயும்தான்டி பட்டிக்காடு!''

பஞ்சாயத்து பாதியில் முடிய, ரமேஷ் கேட்டான். ''ஆக்சுவலி... ரெண்டு பேரும் எங்களைச் சேக்க வந்தீங்களா? இல்லே... நீங்க சேர வந்தீங்களாடா?''

டுத்த வாரம் என் கல்லூரியில்  ஹெர்பேரியம் டூர்... பிளான்ட் கலெக்ஷன் டிரிப். பக்கத்துக் குளிர் மலை நகரத்தில் மூன்று நாட்கள் கேம்ப் போட்டு, விதவிதமான விநோதத் தாவரங்கள் சேகரிக்கும் பயணம்.  ஒரு ஏர் பஸ் பிடித்துக் கிளம்பினோம். பாட்டும் கூத்துமாகப் போய் டீக்கு வத்தலகுண்டில் இறங்கினால்... பஸ் ஸ்டாண்ட் முழுக்க ஃபிகர்கள்.

''மாப்ள... நம்ம லேடி டோக்  பொண்ணுங்கடா!'' - நண்பன் பரவசத்தில் அலறினான்.

''பாட்டனி புள்ளைங்க. அதுங்களுக்கும் ஹெரிபேரியம் டூர்தான்!''-மூச்சு வாங்க தலைப்புச் செய்தி வாசித்தான் இன்னொருவன்.

எனக்கு இதயம் எக்குத்தப்பாகத் துடித்தது. கூட்டத்தில் இருந்து என்னைப் பார்த்தாள் ஜெயந்தி.

ல்ல்லோ.. இங்க எங்கே?''

''ஹெர்பேரியம் டூர் வந்தோம் பாலா.''

''புளியோதரை பார்சல்லாம் கொண்டு வந்து இருப்பீங்களே?''

''ஏய்... எனக்கு ஒரு ஹெல்ப் வேணும் பாலா. மேம்தான் டூர் இன்சார்ஜ். நாங்க வந்த பஸ்ல லக்கேஜை எடுக்க மறந்துட்டு இறங்கிட்டாங்க. பஸ் போயிருச்சு. ஏதாவது பண்ண முடியுமா பாலா?''

எனக்கு அடி வயிற்றில் ஐஸ் நதி புரண்டது. சென்றாயப் பெருமானே... உன் கருணையே கருணை. அப்போதைய வத்தல குண்டு சர்க்கிள் இன்ஸ்பெக்டர் என் சித்தப்பா.

"என்ன இது, ஹெல்ப் அது இதுன்னு பெரிய வார்த்தை எல்லாம் பேசிக்கிட்டு.   ஜஸ்ட் லைக் தட் பண்ணிரலாம் ஜெய்!''

இருவரையும் அழைத்துக்கொண்டு போலீஸ் ஸ்டேஷன் போனேன். கான்ஸ்டபிளில் இருந்து, ரைட்டர் வரை எனக்கு அடித்த சல்யூட்களில் அரண்டுபோனாள் ஜெயந்தி. சர்க்கிள் சித்தப்பா மெதுவடை - டீ

சொன்னார். கொஞ்ச நேரத்தில் வயர்லெஸ்ஸில் தகவல் பறந்து, லக்கேஜ் கைப்பற்றப்பட்டது. புரொஃபசர் மேம் என் கை பிடித்துக் கலங்க, 'நான் என் கடமையைத்தானே செஞ்சேன்’ ரேஞ்சில் பார்த்தேன்.

ஜெயந்தி முன்னால் பொசுக்கென்று ஹீரோவானேன். எங்கள் பஸ்ஸிலேயே லேடீஸ் காலேஜும் ஏறியது,  எந்த ஜென்மத்திலோ எங்களில் எவனோ செய்து,இன்ன மும் சேவிங்கிஸில் இருந்த புண்ணியம்.

லேடி டோக்கு சீமாட்டி
என்னப் பாரு ஒரு வாட்டி’
- எனப் பாட்டுக்கள் பறந்தன. ஜெயந்தியும் நானும் காதல் வழிய வழியப் பார்த்தோம். இரண்டு பேரும் சேர்ந்து எல்லோருக்கும் பிஸ்கட் கொடுத்தோம். மலைப் பாதைகளில் ஏறி, இறங்கி தாவரங்கள் தேடினோம். நீர் தெளித்து விளையாடினோம். வண்ணப் புகைப்படங்கள் எடுத்தோம். நிச்சயம் ஹனிமூனும் இங்குதான் என எனக்கு ஏனோ தோன்றியது. தொப்பி தூக்கும் பாறையில் நான் தூக்கிப்போட்ட தொப்பி திரும்ப வரவே இல்லை. ஜெயந்தி சிரிக்க, நானும் சிரித்தேன். காரணம், அது சக்தியின் தொப்பி!

லை நகரத்தில் இரண்டு காலேஜும் ஒன்றாகவே திரிந்தது. நானும் ஜெயந்தியும் வாடகை சைக்கிள் எடுத்துக்கொண்டு குண்டூசி சாலைகளில் கிளம்பினோம். ஏரிச் சாலைகளில் பறந்தோம். இரண்டு பேரும் போட்டிங் போனோம். சுற்றிலும் தண்ணீர் விரிந்துகிடக்க, ஏரியின் நடுவே ஜெயந்தி என்னைப் பார்த்து, 'வசீகரா... என் நெஞ்சினிக்கப்’ பாடினாள். இரவு கேம்ப் ஃபயர். 'என் இனிய பொன் நிலாவே...’ தீயைச் சுற்றி வயசும் மனசும் கும்மியடித்தது. ஜெயந்தி எனக்கு சால்வை தந்தாள். விரல்கள் தீண்டி உயிர் வரை ஊதக் காற்று.

தொடர்கதை : ஒன்று

''நான் தூங்கப்போறேன்ப்பா. குட் நைட் பாலா. ஸ்வீட் ட்ரீம்ஸ்!''

னியே என்னை அழைத்தாள் ஜெயந்தி. 'டவுன் ஹால் ரோடு ஷாப்பிங் போவணும். எங்க மேம்க்கு பர்த் டே. ஒரு சாரி வாங்கணும். வர்றியா?''

நிஜமாகவே மேம்க்கு ஒரு புடவை வாங்கி னாள் ஜெயந்தி.

''சாரி செலெக்ட் பண்ண வர்றது இதுதான் என் லைஃப்ல ஃபர்ஸ்ட் டைம் ஜெய்'' என சிரித்தேன்.

''ஒரு பையனோட இப்பிடித் தனியே வெளியே வர்றது இதுதான் எனக்கும் ஃபர்ஸ்ட் டைம்'' என்றவள், ''என்னவோ மனசுக்குக் கஷ்டமா இருக்கு பாலா'' என்றாள்.

அடிக்கடி அரியர் வைக்கும் பையன்களாகிய எங்களுக்கு அப்போது ஒரு சென்டிமென்ட் உண்டு. அதுபோன்ற தருணங்களில் மீனாட்சி அம்மன் கோயில் போய் பொற்றாமரைக் குளம் பக்கம் உலவி வந்தால்... நினைத்தது நடக்கும். அதை ஜெயந்தியிடம் சொன்னேன். ''அப்ப, என்னைக் கூட்டிட்டுப் போயேன்'' என்றாள்.

அர்ச்சனைத் தட்டு வாங்கினாள். எங்கள் இருவரின் ராசி, நட்சத்திரம் சொல்லி பூஜை பண்ணக் கொடுத்தாள்.

கோயில் குங்குமத்தைத் தன் நெற்றியில் இட்டுவிடச் சொன்னாள். ''தேங்க்ஸ்டா'' எனக் கண்ணீரில் சிரித்தாள் ஜெயந்தி.

டூர் ஆல்பம் வந்திருந்தது.

''ஜெயந்தி... இந்த ரெட் கலர் மிடி... இவகிட்ட எல்லாம் பழகாத. இவ நல்ல பொண்ணு இல்ல...''

''ச்சே... சங்கீதா ரொம்ப நல்ல பொண்ணு பாலா!''

''ஐயே, ஹாஸ்டல் பொண்ணுங்களை நம்ப முடியாது.''

''இவ ஹாஸ்டல் இல்ல... இங்க மேல மாசி வீதிலதான் வீடு.''

''ஓ... அவங்க அண்ணன்தான் ரௌடின்னு சொல்வாங்கல்ல?''

''பாலா... அவ வீட்டுக்கு ஒரே பொண்ணு!''

''தேங்ஸ்டி. இந்த டீடெய்ல்ஸுக்குத்தான் கேட்டேன். சங்கீதாவை நம்ம நாகு லவ் பண்றான்.''

''ஃப்ராடு... ஃப்ராடு...'' அவ்வளவு சிரித் தாள் ஜெயந்தி.

ஜெயந்தி, அவள் பாட்டிக்கு உடல்நிலை சரியில்லை என ஊருக்குப் போனாள். திடீரெனப் பார்த்தால், காலேஜ் டிஸ்கன்டினியூ. ஊருக்குப் போனால், ஜெயந்தி எங்கே எனத் தெரியவே இல்லை. குட் நைட்டும் ஸ்வீட் ட்ரீம்ஸும் இற்றுப்போன இரவுகள். இலக்கற்றுத் திரிந்தேன்.

என் அப்பாவுக்கும் மதுரை டிரான்ஸ்ஃபர். நான் வேலை தேடி, கிடைத்து, மதுரையிலேயே டிரெய்னிங் போட்டு இருந்தார்கள்.

பாஷாதான் சொன்னான். ''ஜெயந்திக்குக் கல்யாணமாயிருச்சு மச்சான். அவங்க அப்பாவுக்கு பிசினஸ்ல பெரிய லாஸாகி, அவர் சூசைட் அட்டெம்ப்ட்லாம் பண்ணி... ஏதேதோ நடந்துருச்சு மச்சான்'' என்றான்.

று மாதங்களுக்குப் பிறகு ஒருநாள்... ராஜாவை டிராப் பண்ணிவிட்டு வரும் வழியில் மீனாட்சியம்மன் கோயில். எங்களின் காதல் திருத்தலம். நெற்றி நிறைய நான் குங்குமம் அள்ளிவைத்த திருமணத் தலம்.

காதலி சென்றுவிட்ட பிறகு, காதல் பகிர்ந்த இடங்களைப் பார்ப்பது துயரம். நினைவுகள் மீளவும் வழியற்ற பாதையில் நிறைந்துகிடக்கின்றன பிரியங்கள்.

பொற்றாமரைக் குளம் பக்கம் போனேன். தங்கத் தாமரை மகளே... என் ஜெயந்தி எங்கே இருக்கிறாய்? யாரோடு இருக்கிறாய்? எப்படி இருக்கிறாய்?

எப்படியடி சம்மதித்தாய் திருமணத்துக்கு? ஒரு சிறு பொழுதேனும் ஏதேனும் அற்புதம் நிகழும் என எனக்காகக் காத்திருந்தாயோ பெண்ணே? அப்படி எனில், என் ஆப்சென்ஸ்... எத்தனை அபத்தம்!

என் ஹைபிஸ்கஸே... கன்னாபிஸே... கண்மணியே...

ஏதேதோ நினைவுகள் அலை பாய, அர்ச்சனைத் தட்டு வாங்கித் திரும்பினால்... நிஜமாகவே ஜெயந்தி!

நெற்றி வகிட்டில் குங்குமம் தீற்றி, அரக்குப் புடவையில் தகதகவென என் எதிரே ஜெயந்தி!

பக்கத்தில் அழகாக இருந்தான் புருஷன். ஒரு கணம் உயிர் நடுங்கி, ரியாக்ஷன் மறந்தேன். சுதாரித்து 'ஜெய்’ என விரல்கள் விசிறிச் சிரிக்க முற்பட்ட விநாடியில், இதுவரை இப்படி ஒரு ஜீவராசியை உலகில் கண்டதே இல்லை என்பதைப்போல் ஜெயந்தியின் பார்வை என் மேல் பட்டு... விட்டு... விலகியது. ''போலாமாங்க?'' எனத் தன் கணவனிடம் சொல்லியபடி, காற்றைக் கடந்து போவதுபோல் என்னைக் கடந்தாள். சகலமும் அதிர்ந்தது. 'ஏன் ஜெயந்தி, ஏன்?’

அர்ச்சனைத் தட்டை அப்படியே போட்டுவிட்டு, வெளியேறினேன்!

டுத்த சில வாரங்களில் மறுபடி ஜெயந்தியைப் பார்த்தேன். 'ஏன் பார்த்தேன்?’ என செத்துச் சுண்ணாம்பாகும்படி ஒரு சந்திப்பு.

என்  காலேஜ் புரொஃபசர் இளங்கோவின் பிரிவு உபசார விழா. ஆசிரியன், அண்ணன், நண்பன். அதனால் ஓடினேன். கெட் டு கெதருக்கு ஜெயந்தியும் தனியே வந்து இருந்தாள்.

பாஷாவுடன் பேசிக்கொண்டு இருந்தவள் என்னைப் பார்த்ததும் தடதடவென ஓடி  இளங்கோ சார் பக்கத்தில் நின்றுகொண்டாள்.

எல்லோரும் குரூப் போட்டோவுக்கு மேடையேறினோம். 'ஜெயந்தி இங்க நில்லு... மச்சி நீ வா!’ எனத் திருமா என்னை ஜெயந்தியின் பக்கத்தில் நிற்க இழுத்தான். கேமரா ஃப்ளாஷ் மின்னும் முதல் விநாடியில், ஏதோ அவசரமான அழைப்புபோல செல்போனைக் காதில் வைத்தபடி தள்ளி நகர்ந்த ஜெயந்தி, ஓரிரு நிமிடங்களில் அப்படியே கிளம்பிப் போய்விட்டாள்.

நடுங்கிய என் கைகளைப் பற்றினான் பாஷா, ''ச்சில்லுனு ஒரு பீரைப் போடுவோமா?''

ன் அக்காவுக்கு பாப்பா பிறந்து இருந்தது. பெண் குழந்தை. இனி, நான் தாய் மாமன். என் அம்மா, ஒரு பட்டியலே வாசிக்க, எல்லாம் வாங்கிக்கொண்டு ஓடினேன். ஆஸ்பத்திரி  வராந்தாவில், ஜெயந்தி. கர்ப்பமாக இருந்தாள். பெரிய வயிறு. கை நிறைய வளையல்கள். நிஜமாகவே நெகிழ்ந்தேன். உதடு, கன்னம், விரல்கள் வரை பூரிக்குமா என்ன?

மூச்சு வாங்கி அமர்ந்து இருந்தவளின் பக்கத்தில் அவள் அம்மா. என்னைப் பார்த்தால் பேசுவாளா என்பதை

விட, என்ன நினைப்பாள் என நினைத்துத் தவித்து, தயங்கினேன்.

பெண்ணின் உள்ளுணர்வுதான் யுகங்களைக் கடந்ததாயிற்றே. திரும்பி என்னைப் பார்த்துவிட்டாள் ஜெயந்தி. விசுக்கென எழுந்து, அம்மாவின் கை பிடித்து அடுத்த அறைக்குள் போயேவிட்டாள். நான் திகைத்து நின்றேன்!

ரப்பாளையத்தில் திருமாவின் கல்யாணம். நண்பர் கள் அனைவருக்கும் வெள்ளை வேட்டி- சட்டை எடுத்துத் தந்திருந்தான். ஆளும்கட்சிப் பொதுக்குழு உறுப்பினர் கள்போல் இருந்தோம் எல்லோரும். மல்லிகையும்,

பட்டும், சந்தனமும், வியர்வையுமாக நிறைந்துகிடந்தது மண்டபம்.

''ஏம்ப்பா, அவஞ்செட்டுதான நீயி... உனக்கு எப்போ கல்யாணம்?'' என்றார் திருமாவின் அப்பா.

''வீட்ல பாத்துட்டு இருக்காங்கப்பா'' எனச் சிரித்த என்னிடம், எனக்குப் பின்னால் கை காட்டி, ''இந்தா வருது பாரு... உங்க செட்டுல ஆளாளுக்குக் கல்யாணம் பண்ணியாச்சு... சீக்கிரம் நல்ல சேதி சொல்லு'' என என் தோள் தட்டினார். திரும்பிப் பார்த்தால், கணவர், கைக் குழந்தையுடன் ஜெயந்தி.

இன்னொரு அவமானத்தை இனி தாங்க முடியாது என்னால். வேகமாக நடந்து போய் நண்பர்களுடன் சேர்ந்துகொண்டேன். அடுத்த ஒரு மணி நேரம் பலருடன் சிரித்தேன். சிலருடன் கை குலுக்கினேன்.

எனக்கே நன்றாகப் புரிந்தது. நான் நல்ல மனநிலையில் இல்லை. அந்தப் பக்கமாக நகர்ந்து வாஷ்பேசினுக்குப் போனேன். கண்ணாடியில் என் முகம் பார்த்தேன்.

முகம் கழுவி  நிமிர்ந்தால்... வாஷ்பேசின் கண்ணாடியில் ஜெயந்தி. எனைப் பார்த்த நொடியின் மேல் திகைத்து நிற்கிறாள். படக்கென்று திரும்பப் போனவள், அறுந்து அதிர்ந்த என் குரலில் அப்படியே நின்றாள்.

தொடர்கதை : ஒன்று

''ஜெய்... ஒரு செகண்ட் நில்லேன், ப்ளீஸ். நான் அப்பிடி என்னப்பா பாவம் பண்ணிட்டேன்... எங்க உன் வாழ்க்கைல நான் ஒரு டிஸ்டர்பன்ஸா வந்திருவேன்னு நினைச்சியா?'' என்ற என்னை ஆழ்ந்து பார்த்தாள்.

''எங்கேயாவது பாத்தா, ஒரு வார்த்தை பேசலாமே... சின்னதா சிரிக்கலாமே...  நல்லா இருக்கியா பாலானு கேக்கலாமே... ஏன், என்னைப் பார்த்தாலே வெலகி வெலகி ஓடுற ஜெயந்தி? சாவலாம்போல இருக்குப்பா. இப்பிடி நீ வெறுத்து ஒதுக்குற அளவுக்கு பிடிக்காதவனாப் போயிட்டனா நான்?''

பொசுக்கென்று ஜெயந்தியின் கண்களில் துளிர்த்தது நீர். வாஷ்பேசினில் தண்ணீரை வாரி முகம் துடைத்து அழுகை மறைத்தவள் என்னைப் பார்த்தாள்.

''போடா லூஸு... உன்னை ரொம்பப் பிடிக்கும்டா!'' - சொல்லிவிட்டு விறுவிறுவென விலகினாள் ஜெயந்தி!

(இன்னும் ஒன்று...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு