Published:Updated:

கொல்லிமலைப் புதையல் !

வேணு சீனிவாசன் ஸ்யாம்

கொல்லிமலைப் புதையல் !

வேணு சீனிவாசன் ஸ்யாம்

Published:Updated:
##~##

கோயில் யானை சில நாட்களாக உணவு உட்கொள்ளாமல் இருப்பதன் காரணத்தை அறிவதற்காக, தாத்தாவுடன் கோயிலுக்குச் செல்கிறார்கள் மைதிலியும் வாசுவும். யானைப் பாகன் ஆறுமுகம், 'யானைக்கு ஓடைப்பொன் சார்த்த வேண்டும்’ என்கிறான்.

''ஓடைப்பொன் என்றால், தங்கத்தால் ஆன நெற்றிப் பட்டயம். ராஜாக்கள் காலத்தில் அந்த ஓடைப்பொன்னைப் போட்டுக்க சில யானைகள் ஆசைப்படும். அந்த ஆசை ஏக்கமாக மாறும்போது... யானை சாப்பாடு, தண்ணி எதுவும் எடுத்துக்காம பட்டினி கிடக்கும்'' என்றான் ஆறுமுகம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''அடடே... கதை நல்லா இருக்கே'' என்றான் வாசு.

''யானை தூங்கும்போது கனவு காணும். அந்தக் கனவில் புலி வந்தால் பயப்படும். தூக்கம் கலைந்த பிறகும் புலி எதிரே இருப்பதாக நினைத்து, மரத்தைத் தன் தந்தங்களினால் குத்திச் சண்டைபோடும் என்று சங்க இலக்கியத்தில் படிச்சு இருக்கேன். ஆனால், அது தங்க நகைகளைப் போட்டுக்க உண்ணாவிரதம் இருக்கிற விஷயத்தை இப்பத்தான் கேள்விப்படுறேன்'' என்றார் தாத்தா.

கொல்லிமலைப் புதையல் !

''பொன்னுக்கு வீங்கி நோய் மனிதர்களுக்கு வந்தால், தங்க ஆபரணத்தைப் போட்டுப்பாங்களே... அப்படி யானையும் ஆசைப்படுதோ?'' என்றாள் மைதிலி.

''நீங்க என்னைக் கிண்டல் பண்றீங்கனு தெரியுது. நான் எனக்குத் தெரிஞ்சதைத்தான் சொன்னேனே தவிர, பொய் சொல்லலைங்க'' என்றான் ஆறுமுகம் அப்பாவியாக.

ஆறுமுகம் படிப்பறிவு இல்லாதவன்தான். ஆனால், அனுபவ அறிவு அதிகம். நாம் படித்துத் தெரிந்துகொண்ட பல விஷயங்களை அவன் பெரியவர்கள் மூலமாகக் கேட்டும், அனுபவித்துமே தெரிந்துவைத்து இருப்பான். தவிர, பொய் சொல்லி ஆதாயம் தேடும் குணம் ஆறுமுகத்துக்குக் கிடையாது.

''சே... சே... கிண்டல் பண்ணலை ஆறுமுகம். நீ சொல்ற மாதிரி ஓடைப்பொன்னை யானைக்குப்போட்டு, நோய் குணமாகுதுன்னே வெச்சுக்குவோம். அதை இப்ப எங்கே போய்த் தேடுறது?'' என்றார் தாத்தா.

''எங்க தாத்தா வழியில் வந்தவங்க ஓடைப்பொன் பரிசா வாங்கி இருக்காங்க. அந்தக் காலத்துல... போரில் யானையைப் பயன்படுத்த, காட்டில் இருந்து பிடிச்சுவந்து பழக்குவாங்க. அப்படி பிடிக்கப்போகும் ஆட்களில் என் தாத்தாவும் ஒருத்தர்'' என்ற ஆறுமுகம், விவரிக்க ஆரம்பித்தான்.

அவன் சொன்ன விதம், வாசுவுக்கும் மைதிலிக்கும் 3ஞி திரைப்படம் பார்ப்பதைப் போல வண்ணமயமாக மனக் கண்களில் தெரிய ஆரம்பித்தது.

அடர்த்தியான காடு. ஒரு பெரிய காட்டு யானை தண்ணீர் குடிப்பதற்காகத் தனது பெரிய காதுகளை ஆட்டிக்கொண்டு  ஏரிக்கரையை நோக்கி ஒற்றையடிப் பாதையில் நடந்து வந்தது. அப்போது சற்றுத் தள்ளி இளநீர்க் குலைகளையும் பழங்களையும் கண்டது. தண்ணீர் குடிப்பதை மறந்து, அந்தப் பக்கமாக காலை எடுத்துவைத்தது.

கொல்லிமலைப் புதையல் !

அடுத்த நொடி... தரையில் மண்ணுக்குள் புதைந்து இருந்த மூங்கில் கொம்புகள் மளமள வென்று முறிந்தன. அங்கே தோண்டப்பட்டு இருந்த குழிக்குள் பிளிறியவாறு விழுந்தது யானை.

யானையின் பிளிறலைக் கேட்டு மரத்தில் இருந்த பறவைகள் சடசடவென்று சிறகுகளை அடித்துக் கொண்டு பறந்தன. மரங்களில் இருந்த குரங்குகள் பயத்துடன் 'கீகீ’ என்று அலறிக்கொண்டே தாவி ஓடின. மான்கள் காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டு ஓட ஆரம்பித்தன.

இந்தச் சத்தங்களைக் கேட்டு நான்கு பக்கங்களில் இருந்தும் காட்டு யானைகள் அங்கே வந்து சேர்ந்தன. பள்ளத்தைச் சுற்றிச் சுற்றி வந்தன. அந்த யானையை வெளியேகொண்டு வர, அருகே இருந்த பெரிய மரங்களைப் பிடுங்கிக் குழிக்குள் தள்ளின.

அப்போது, திடீர் என 'டம்...டம்... டம்’ எனத் தாரை, தப்பட்டைகளின் ஓசை கேட்டது. தூரத்தில் 'ஆ... ஊ...’ எனச் சத்தம் எழுப்பிக்கொண்டு பல ஆட்கள் வர ஆரம்பித்தனர். சிலர் தீப்பந்தங்களைக் கொளுத்தி யானைகளை நோக்கி எறிந்தனர். அவ்வளவுதான்... யானைகள் மிரண்டு காட்டுக்குள் ஓடின.

''ஹேய்ய்ய்ய்'' என்று உற்சாகத்துடன் கூச்சல் போட்டுக்கொண்டே யானைப் பாகர்கள் பள்ளத்தை நெருங்கினார்கள். அப்போதுதான் அவர்களிடம் இன்னொரு யானையும் இருப்பது தெரிந்தது. பழக்கப்பட்ட அந்த யானையை அனுப்பி, பள்ளத்தில் விழுந்து இருக்கும் யானையை அமைதிப்படுத்தினார்கள்.

ஆறுமுகம் சொல்லச் சொல்ல, கண் முன்னே விரிந்த காட்சி தந்த  பிரமிப்பில் வாசுவும், மைதிலியும் எங்கோ போய்விட்டனர்.

''அடேங்கப்பா! இப்படித்தான் யானைகளைப் பிடிப்பாங்களா? ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டுக் காட்டு யானைகளைப் பிடிக்கணும்? கோயில்ல வளர்க்கிற யானைகள் குட்டிபோடுமே? அவைகளைப் போரில் பயன்படுத்த முடியாதா?'' என்றாள் மைதிலி.

கொல்லிமலைப் புதையல் !

''இதுக்கு நான் பதில் சொல்றேன். பழக்கப் படுத்தப்பட்ட யானைகள் குணத்தில் சாதுவாக இருக்கும். அவற்றுக்குப் பிறக்கும் குட்டிகளும் ஆவேசமாப் போர் செய்யாது. காட்டு யானைகள் எதிரிகளைக் கண்மூடித்தனமாகத் தாக்கும். பெரிய கட்டைகளைத் தந்தத்துல வெச்சுக்கிட்டு கோட்டை மதில் கதவுகளை மோதி உடைக்கும். அதனாலதான் ராஜாக்கள் காட்டு யானைகளைப் பிடிக்கிறதுல ஆர்வமா இருந்தாங்க'' என்றார் தாத்தா.

''உண்மைதான்! இப்படிக் காட்டு யானைகளைப் பிடிக்கிறதுல எங்க தாத்தா ரொம்பக் கில்லாடி. அப்படி ஒரு காட்டு யானையை ராஜாவுக்குப் பிடிச்சுக் கொடுத்தாரு. ராஜாவுக்கு சந்தோஷம். அதனால், பட்டத்து யானையின் நெத்தியில் போடுற ஓடப்பொன்னை எடுத்துத் தாத்தாவுக்குக் கொடுத்து கௌரவிச்சாரு'' என்று பெருமையோடு சொல்லி முடித்தான் ஆறுமுகம்.

''அதெல்லாம் சரி, இப்போ அந்த ஓடப்பொன் எங்கே இருக்கு?'' என்று கேட்டான் வாசு.

''கொல்லிமலைக் குகைகளில் இருக்கு தம்பி'' என்றான் ஆறுமுகம்.

'கொல்லிமலையா? அது எங்கே இருக்கு?’ என்பதைப்போல் வாசுவும் மைதிலியும் பார்த்துகொண்டார்கள்.

    (தொடரும்...)