Published:Updated:

நண்பன் உடையான் பகைக்கு அஞ்சான் !

என்.ஸ்ரீதரன், கண்ணா

 ##~##

ஓயாமாரிக் காடு. அங்கே ஒரு மரத்தில் ஓர் ஆண் புறா வசித்துவந்தது. ஒருநாள் அந்த மரத்தின் ஒரு கிளையில் புதிதாக ஒரு பெண் புறா வந்து அமர்ந்தது. அதன் உடல் பால்போல் வெண்மையாக பிரகாசித்தது. அதன் அழகில் மயங்கிய ஆண் புறா, ''நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாமா?'' என்று கேட்டது.

பெண் புறா தயங்கியது. ''என்னையும் நமக்குப் பிறக்கும் குழந்தைகளையும் ஆபத்து வராமல் உன்னால காப்பாத்த முடியுமா?'' என்று பெண் புறா கேட்டது.

''முடியும்'' என்று ஆண் புறா நெஞ்சை நிமிர்த்திச் சொன்னது.

பெண் புறாவுக்கு நம்பிக்கை வரவில்லை. ''நாமோ புறா ஜாதி. பஞ்சு மாதிரி மெத்துனு உடம்பு. ஒரு ஆபத்துனா நீ உன்னையேகூட காப்பாத்திக்க முடியாதே'' என்று சூழ்நிலையை விளக்கியது.

ஆண் புறா, தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டது. அதன் ஏமாற்றத்தைக் கவனித்த பெண் புறா, ஆறுதல் கூறியது. ''எனக்கும் உன்னைக் கல்யாணம் செய்துக்க இஷ்டம்தான். ஒண்ணு செய். பலசாலியாப் பார்த்து சில நண்பர்கள் உனக்குக் கிடைச்சப்புறம் வந்து சொல்லு. சுயமா பலம் இல்லாதவனுக்கு சிநேகிதர்களால்தான் பலம்'' என்றது. அதை ஆண் புறா ஒப்புக்கொண்டது.

நண்பன் உடையான் பகைக்கு அஞ்சான் !

ஆண் புறா இருந்த மரத்தின் கீழ்ப் பகுதியைச் சுற்றிப் புதர்க் காடு. அதில் ஒரு காட்டுப்பூனை வசித்தது. அருகே இருந்த குளத்தில் ஓர் ஆமை வாழ்ந்துவந்தது. சற்றுத் தொலைவில், ஒரு குகையில் புலி இருந்தது. இந்த மூவரையும் ஆண் புறா தினமும் பார்க்கும். ஆகவே, அது அவற்றிடம் சென்றது. விஷயத்தைச் சொன்னது.

அந்த விலங்குகளுக்குப் புறாவின் மீது இரக்கம் ஏற்பட்டது. ''தம்பி, நீ கவலைப் படாதே, நீ பெண் புறாவோடு வாழ்க்கை நடத்து. ஏதாச்சும் ஆபத்து வந்தால், குரல் கொடு. நாங்க வந்து காப்பாத்திடுறோம்'' என்றன.

ஆண் புறா இந்தச் செய்தியைப் பெண் புறாவுக்குத் தெரிவித்ததும் அது சந்தோஷப்பட்டது. இரண்டும் கூடுகட்டி ஒன்றாக வாழத் தொடங்கின. குஞ்சுகள் பிறந்ததும் அவற்றைப் பாசத்துடன் பராமரித்தன.

ஒரு நாள் அந்த வழியே சென்ற ஒரு வேடன், புறாக் குடும்பத்தைப் பார்த்தான். அவற்றைப் பிடித்துச்செல்ல விரும்பினான். அதற்காக அவன் வில்லையும் அம்புகளையும் கீழே வைத்துவிட்டு மரத்தில் ஏறத் தொடங்கினான்.

இதைப் பார்த்து புறாக்கள் கத்தின.

அதைக் கவனித்த ஆமை கரைக்கு வந்தது. அது பெரிய ஆமை. அது தன் முழுப் பலத்தையும் உபயோகித்து வேடனின் கால்கள் மீது மோதியது. இரும்பு போல் உறுதியான அதன் ஓட்டின் தாக்குதலைத் தாங்க முடியாமல் வேடன் கீழே விழுந்தான். சமாளித்துக்கொண்டு எழுந்தவன், ஆமையை உதைத்துத் தள்ளிவிட்டு மீண்டும் மரத்தில் ஏறினான்.

நண்பன் உடையான் பகைக்கு அஞ்சான் !

அப்போது மரத்தின் அருகில் இருந்த புதரில் தூங்கிக்கொண்டு இருந்த பூனை விழித்து வெளிப்பட்டது. மரத்தில் ஏறும் வேடனை ஒரே பாய்ச்சலில் கால்களைப் பற்றிக்கொண்டது. தனது கூர்மையான நகங்களால் அவன் கால்களைப் பிறாண்டியது. வேடன் கோபத்துடன் தன் பலத்தைத் திரட்டிப் பூனையை ஓங்கி உதைத்ததும், அது தொலைவில் போய் விழுந்தது.

இரண்டு முறை தோல்வி அடைந்த வேடனுக்கு வெறி ஏற்பட்டது. 'புறாக்களைப் பிடித்தே தீருவது’ என்ற பிடிவாதத்துடன் மீண்டும் மரத்தில் ஏறினான். புறாக்கள் கூக்குரல் இட்டன. இதைக் கேட்டு, குகை வாசலில் படுத்து இருந்த புலி பாய்ந்து வந்தது.

அது, வேடனைக் கொல்ல விரும்பவில்லை. அவனை பயமுறுத்தி விரட்ட மட்டுமே தீர்மானித்தது. 'கிர்... கிர்...’ என்று பயங்கரமாக உறுமியது.

வேடன் நடுங்கிவிட்டான். புறா பிடிக்கும் ஆசையைக் கைவிட்டான். மரத்தில் இருந்து இறங்கி ஓட்டம் பிடித்தான். அதேசமயம், ஆமையும் காட்டுப்பூனையும் அங்கே வந்து சேர்ந்தன. ஆண் புறா அவற்றுக்கு நன்றி சொன்னது.

அடுத்த கட்டுரைக்கு