Published:Updated:

கொல்லிமலைப் புதையல் !

ஸ்யாம், வேணு சீனிவாசன்

பிரீமியம் ஸ்டோரி
##~##

நாமக்கல்லில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில், பச்சைப் போர்வையைப் போர்த்தியதுபோல் நீண்டு இருக்கும் மலைதான் கொல்லிமலைத் தொடர். கடல் மட்டத்தில் இருந்து 1,190 மீட்டர் உயர்ந்து நிற்கிறது. 'ஒரு யானையின் ஓடைப்பொன் ஏக்கத்தைப் போக்குவதற்காகப் புதையலைத் தேடிவந்து இப்படி ஓர் ஆபத்தில் மாட்டிக்கொண்டோமே’ என நினைத்தார் தாத்தா.

மைதிலியின் இதயம் குதிரையின் வேகத்தில் அடித்துக்கொண்டது. வாசுவோ  வியர்வைக் குளியல் நடத்தி இருந்தான்.

செடிகளின் மறைவில் பதுங்கி உட்கார்ந்துகொண்டு, எதிரே அசையும் புதரை அச்சத்தோடு பார்த்தார்கள். அடுத்த விநாடியில் குபீர் என்று பெரிய காட்டுமான் ஒன்று புதரை விலக்கிக்கொண்டு வெளியே பாய்ந்தது. பாதையைக் குறுக்காகக் கடந்து காட்டுக்குள் ஓடி மறைந்தது.

அது பாய்ந்தபோது வாசுவுக்கு மிக அருகாமையில் தாவிச்சென்றது. அதன் மீது மூலிகை வாசம் வீசியதை உணர்ந்தான். நல்லவேளை... அது மட்டும் அவன் மீது காலை ஊன்றி இருந்தால்? நினைக்கவே பயமாக இருந்தது.

அனைவரும் சமாளித்துக்கொண்டு எழுந்து நின்றார்கள். ''சே! புலி, சிறுத்தையோனு பயந்துட்டேன்'' என்றான் ஆறுமுகம்.

''புலி, சிறுத்தை இல்லைன்னாலும் வேற  ஆபத்துகள் இருக்கிற மாதிரி தெரியுது'' என்றாள் மைதிலி.

கொல்லிமலைப் புதையல் !

''இது காட்டுப் பகுதி. இங்கே எந்த நேரத்தில் எது மாதிரியான ஆபத்து வரும் என்று சொல்ல முடியாது. எச்சரிக்கையோடு இருக்கணும்'' என்றார் தாத்தா.

''வாங்க, சீக்கிரமா மூசோ தாத்தாவைப் பார்க்கப் போகலாம்'' என்று நடக்க ஆரம்பித்தான் ஆறுமுகம்.

ஓற்றையடிப் பாதை வளைந்து வளைந்து சென்றது. காலடியில் பலவிதமான வண்ணங்களில் இலைகள், சருகுகள் விழுந்து மெத் என்ற தரைவிரிப்பை விரித்து இருந்தன. பாதை ஏற்ற இறக்கமாக இருந்தது. மூச்சு வாங்கியபடியே நடந்தார்கள்.

ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, ''அதோ தெரியுது பாருங்க, அதுதான் பாம்பாட்டிச் சித்தர் குகை'' என்றான் ஆறுமுகம்.

''பாம்பாட்டிச் சித்தரா?'' என்றாள் மைதிலி.

''ஆமா. 'ஆடு பாம்பே... விளையாடு பாம்பே’னு பாட்டு கேட்டு இருப்பியே. அதை எழுதினவர். குண்டலினி சக்தியைப் பாம்பாக உருவகம் பண்ணிப் பாடல்கள் பாடி இருக்கார்'' என்றார் தாத்தா.

''அவரு இந்தக் காட்டுல தவம் பண்ணி இருக்கார். அவருக்குப் பல சித்துக்கள் தெரியும். தன் உடம்பில் இருந்து பிரிந்து, செத்துப்போன இன்னொரு உடம்புக்குள் பாய்வாராம். அந்த உடம்பு எழுந்து நடக்குமாம். இவரோட உடம்பு செத்துப்போன மாதிரி கெடக்குமாம். இதை எல்லாம் மூசோ தாத்தா சொல்லி இருக்கார்'' என்றான் ஆறுமுகம்.

''ஹய் டூப்பு. இப்படிக்கூட நடக்குமா தாத்தா?'' என்றான் வாசு.

''மிகப் பெரிய சித்தர்கள், மகான்கள் அவசியமானபோது இப்படிச் சித்து விளையாட்டை நடத்தி இருக்காங்க. இதைக் 'கூடுவிட்டுக் கூடு பாய்வது’னு சொல்வாங்க. இதைப் பத்தி அப்புறம் விளக்கமாச் சொல்றேன். இப்போ, குகைக்குள்ளேபோய் தரிசனம் செய்துக்குவோம்'' என்றார் தாத்தா.

பாம்பாட்டிச் சித்தர் குகையைத் தரிசனம் செய்துவிட்டு, ஒற்றையடிப் பாதையில் நடக்க ஆரம்பித்தனர்.

''மூசோ தாத்தாவைப் பத்தி ஏதோ கதை இருக்குன்னு சொன்னியே அது என்ன?'' என்றார் தாத்தா.

கொல்லிமலைப் புதையல் !

''ஓ, சொல்றேன். மூசோ தாத்தாவோட அப்பா, தாத்தா எல்லோருமே எட்டுக்கை அம்மன் கோயில் பூசாரியா இருந்தவங்க. அவங்களுக்கு மந்திரம்  தெரியும். இந்தக் காட்டின் பழங்குடி மக்களுக்கு மாய மந்திரங்களில் அதிகமான நம்பிக்கை. வேட்டைக்குப் போறப்ப நல்ல சகுனம் இல்லேன்னா திரும்பிடுவாங்க'' என்றான் ஆறுமுகம்.

''அந்தக் காலத்துல ராஜாக்கள் எதிரி நாட்டோட சண்டைக்குப் போகும்போது சகுனம் பார்ப்பாங்க. 'உன்னம்’னு ஒரு மரம். அது இலைகளை உதிர்த்துட்டு மொட்டையா இருந்தா, போரில் தோல்வி வருமாம். அதே மரம் இலைகளுடன் பச்சைப்பசேல்னு இருந்தா, வெற்றி கிடைக்கும்னு நம்பினாங்களாம்'' என்றார் தாத்தா.

''அதே மாதிரி பழங்குடி மக்கள் மலையில் ஏறித் தேன் எடுக்கப் போகும்போது, பல்லி எந்தப் பக்கம் குரல் கொடுக்குதுனு கேட்பாங்க. அது நல்ல திசையா இருந்தா தொழிலுக்குப் போவாங்க. இல்லேன்னா அடுத்த நாள்தான். வேட்டைக்குப் போகும்போது, தாத்தா மந்திரிச்ச கருப்புக் கயிறை ஆண்கள் கையில கட்டிவிடுவார். அது இருந்தா, வேட்டையில அவங்களுக்கு மான், காட்டுப் பன்றி எல்லாம் கிடைக்கும். அதோடு புலி, சிறுத்தை, கரடி எல்லாம் அவங்க இருக்கிற பக்கமே வராதாம். மூசோவோட மந்திரக் கயிறு அந்த விலங்குகளை விரட்டிருமாம். அதே மாதிரி ஆத்துல மீன் பிடிக்கப் போறவங்க மூசோ தாத்தா கொடுக்கும் மந்திரிச்ச எண்ணெயைத் தடவிக்கிட்டு ஆத்துல இறங்கினா, முதலை அவங்களைக் கடிக்காதாம்'' என்றான் ஆறுமுகம்.

கொல்லிமலைப் புதையல் !

''சரி விஷயத்துக்கு வா. மூசோவைப் பத்தி சொல்லு'' என்று தூண்டினார் தாத்தா.

''இப்படி ஒரு காலத்துல கொடிகட்டிப் பறந்த மூசோவுக்கு சில எதிரிகள் இருந்தாங்க. அவங்க ஒரு நாள், மூசோ தூங்கிக்கிட்டு இருந்தப்போ அவரோட குடிசைக்கு தீ வெச்சு அவரைக் கொல்லப்பார்த்தாங்க.'' என்று ஆறுமுகம் சொல்ல, வாசுவும் மைதிலியும் திகிலுடன் அவனைப் பார்த்தார்கள்.

( தொடரும்...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு