Published:Updated:

புத்தாண்டு விருந்து !

ஷூலியட் மரியலில்லி கண்ணா

பிரீமியம் ஸ்டோரி
##~##

அந்தக் காட்டில் புத்தாண்டுப் பிறப்பை வெகு விமரிசையாகக் கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டும் அதற்கான ஏற்பாட்டை யானை செய்துகொண்டு இருந்தது. புது வருஷம் பிறந்ததும் ஒரு விருந்து நடைபெறும். அதற்கான சமையல் பொறுப்பை ஏற்று இருந்த கரடியைக் காணவில்லை.

''யானை அண்ணே... கரடிக்குச் சரியான காய்ச்சல். அதனால் எழுந்திருக்கவே முடியலை'' - கரடியைத் தேடிப்போன நரி திரும்பிவந்து சொன்னது.

யானைக்குத் திக்கென்றது. ''கரடி வராட்டி சமையலை யார் பார்க்கிறது?''

''உங்களுக்கு ஆட்சேபணை இல்லன்னா, பக்கத்துக் காட்டில் இருந்து வந்திருக்கிற என் மாமாவைச் சமைக்கச் சொல்றேன். அவர் தொட்டதெல்லாம் ருசிக்கும்'' என்றது நரி.

வருஷப் பிறப்புக்கு இரண்டு நாளே இருந்தமையால் இந்த யோசனைக்கு ஒப்புக்கொண்டது யானை.

நரி மாமா பந்தாவாக வந்தது. ''எத்தனை பேருக்கு சமைக்கணும்? சமையலுக்கு நான் போடுற லிஸ்ட்படி எல்லாம் வந்தாகணும்'' என்றது.

''நீ லிஸ்ட் போட்டுக் கொடு. எல்லாச் சாமான்களையும் ஒட்டகச்சிவிங்கி வாங்கிக் கொடுக்கும்.'' என்ற யானை, ஒட்டகச்சிவிங்கியை அழைத்துப் பொறுப்பை ஒப்படைத்தது.

புத்தாண்டு விருந்து !

நரி மாமா கொடுத்த பட்டியலுடன் கடைக்குச் சென்றது ஒட்டகச்சிவிங்கி. லிஸ்ட்டைப் பார்த்த கடைக்காரர் குரங்குக்கு மயக்கமே வந்துவிட்டது.

''அட... நெய் 10 கிலோ, சர்க்கரை 20 கிலோ, முந்திரி 20 கிலோ, மாவு வகைகள் தலா ஒரு மூட்டை. அடேயப்பா! இங்கே பாரு... என்கிட்டே இருக்கிறதைத் தர்றேன். மிச்சத்தைப் பக்கத்துக் காட்டிலே வாங்கிக்கோ'' என்றது.

பொருட்களுடன் திரும்பிய ஒட்டகச்சிவிங்கியைப் பார்த்து ''சரி, நல்ல தேனாக இரண்டு பீப்பாய் வாங்கிட்டு வா'' என்று பணித்தது நரி.

ஒட்டகச்சிவிங்கிக்கு இந்தப் புதுச் சமையல்காரனைப் பிடிக்கவே இல்லை. கரடி எப்போதும் காய்கறிகள், கனி வகைகள், கீரைகள் என்றுதான் வாங்கி வரச் சொல்லும். இது என்னமோ புதுசு புதுசாகச் சொல்கிறதே...’ என்று எண்ணியபடி சென்றது.

வழியில் பார்த்த யானை ''வேலை எப்படி நடக்குது?'' என்று கேட்டது.

''இந்த நரி புதுசு புதுசா வாங்கச் சொல்லுது'' என்றது ஒட்டகச்சிவிங்கி.

''புது அயிட்டம் செய்யுமோ என்னமோ. விருந்து பிரமாதமா இருந்தாச் சரி. சிங்க ராஜா இதுல மகிழ்ச்சி அடைஞ்சா, எனக்கு வனப் பாதுகாவலர் பதவி கிடைக்கும்'' என்று யானை சொல்ல, ஒட்டகச்சிவிங்கி முணுமுணுத்தபடி சென்றது.

புத்தாண்டு கோலாகலமாய்ப் பிறந்தது. கம்பீரமாக வந்த சிங்க ராஜா ''எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். எங்கே அமைச்சர் புலியைக் காணோம். அட... சிறுத்தை, மான் என்று யாரையுமே காணோமே'' என்று கேட்டது சிங்க ராஜா.

காட்டு மருத்துவர் காண்டாமிருகம் முன்னால் வந்தது. ''அரசே அவங்களுக்கு உடம்பு சரியில்லை. புலிக்கு ரத்த அழுத்தம் அதிகமாயிட்டுது. மானுக்கு சர்க்கரை நோய். ராஜா கோவிச்சுக்கலைன்னா ஒண்ணு சொல்லணும்'' என்றது.

''சொல்லு... சொல்லு''

''உங்களுக்கு நேத்து ரத்தம் டெஸ்ட் பண்ணினதில் ஹை பி.பி. இருக்கு. காட்டிலே யாரிடமும் கட்டுப்பாடான உணவுப் பழக்கம் இல்லே. கடைசியா என்கிட்டே வந்தால் நான் என்ன செய்றது?'' என்று அலுத்துக்கொண்டது காண்டாமிருகம்.

''ஆமாமா... நேத்துகூட என் அம்மா மயங்கி விழுந்துருச்சு'' என்றது முயல்.

''சரி... இந்த ஆண்டு உடல்நல ஆண்டாக அறிவிக்கிறேன். உடல்நலத்தில் அக்கறையோடு இருக்கணும். புரிஞ்சுதா? இனி கொண்டாட்டத்துக்கு வாங்க. ஹேப்பி நியூ இயர்'' வண்ணப் பலூன்களை வானத்தில்விட்டது சிங்க ராஜா. தொடர்ந்து மற்ற விலங்குகளும் ''ஹேப்பி நியூ இயர்'' என்று கத்தின.

''அருமையான விருந்து தயாரா இருக்கு. வாங்க எல்லாரும் சாப்பிடலாம்'' என்று அழைத்தது யானை.

புத்தாண்டு விருந்து !

நரி மாமா எல்லாவற்றுக்கும் இலையைப்போட்டது. முதலில் நெய் சொட்டச் சொட்ட சர்க்கரைப் பொங்கல். ''ஹி... ஹி... பதினாறு வகை ஸ்வீட் செய்து இருக்கிறேன். காரத்துக்கு பஜ்ஜி, சொஜ்ஜி. சாப்பிட்டுங்க'' என்றது.

இதைப் பார்த்த சிங்க ராஜாவுக்கு கோபம் வந்துவிட்டது. ''எங்கே அந்த யானை?'' என்று கர்ஜித்தது. யானை பயந்தபடி முன்னால் வந்தது.

''என்னய்யா இது... எல்லாரும் சுகரும் பி.பியுமாய் அவஸ்தைப்படுகிறோம். என்ன சமையல் இது? எங்களை எல்லாம் ஒட்டுமொத்தமாய்க் காலி பண்ணுவதற்கு இந்த ஏற்பாடா? இதை எல்லாம் தூக்கிக் கொட்டுங்க. உடல் நல ஆண்டுத் துவக்கத்துலேயே கட்டுப்பாட்டை மீறுவதா?'' என்று உறுமியது.

யானை, தலையாட்டிவிட்டு அங்கும் இங்கும் அலைபாய்ந்துகொண்டு இருந்த சமயத்தில் நரிக்குட்டி மெள்ள அருகே வந்து கேட்டது. ''யானையே.. என் நரி மாமாவுக்கு சம்பளம் வேணுமாம்''

யானைக்கு வந்ததே கோபம். அது விட்ட உதையில், நரிக்குட்டியும் நரி மாமாவும் நாலு காடு தாண்டி ஓடிப்போனார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு