Published:Updated:

நியூ இயர் ஸ்பெஷல் - சரத்... பரத்... பக்கிரி !

நியூ இயர் ஸ்பெஷல் - சரத்... பரத்... பக்கிரி !

பிரீமியம் ஸ்டோரி
நியூ இயர் ஸ்பெஷல் - சரத்... பரத்... பக்கிரி !

மாலை நேரம். பரத் வீட்டில் சரத்தும் பரத்தும் படித்துக் கொண்டிருந்தனர். அப்போது தொலைபேசி ஒலித்தது. ''பரத் நாளைக்கு தாத்தாவோட ஐம்பதாவது பிறந்த நாள். பார்ட்டிக்கு எல்லோரும் நம்ம வீட்டுக்கு வர்றாங்க. எனக்கு நிறைய வேலை இருக்கு. நீ இங்கே வந்து நான் கொடுக்கறதை அம்மா கிட்ட கொடு'' என்றார் பரத்தின் அப்பா.

சரத்துடன் கிளம்பினான் பரத். போகும் வழியில் எதிரே பள்ளிக்கூட வாத்தியார் கிருஷ்ணன் வந்தார். அவரைப் பார்த்ததும் சரத், ''டேய், சாரு ஊருக்குப் புதுசு! நாம ஏதாவது உதவி பண்ணணும்!'' என்று சொல்லிக்கொண்டே இருவரும் அருகே சென்று, ''குட் ஈவ்னிங் சார்'' என்றனர். ''வாங்க பசங்களா! என்ன இந்தப் பக்கம்?'' என்றார் கிருஷ்ணன். ''மார்க்கெட் போறோம் சார். எங்க அப்பா கடை வெச்சிருக்கிறார்''

##~##

என்றான் பரத். உடனே அவர், ''கணபதி பையன்தானே நீ! அங்கேதான் காய்கறி வாங்கிட்டு வர்றேன். உனக்கு விஷயம் தெரியுமா?'' என்று நடந்தவற்றைக் கூறினார். காலையில் கடை திறந்ததுமே பீடி பக்கிரியின் ஆள் வசூலுக்கு வந்திருக்கிறான். 'பிறகு வா, இன்னும் வியாபாரம் ஆகவில்லை’ என்று பரத்தின் அப்பா சொன்னாராம். அவன் கோபமாகச் சென்றானாம். 'கடவுளே என்ன ஆகுமோ?’ எனப் பயந்தவாறு பரத்தும் சரத்தும் கடை வீதிக்குச் சென்றனர். அங்கே கண்ட காட்சி...

கோபத்துடனும் கையில் உருட்டுக் கட்டையுடனும் காய்கறிக் கடைக்கு வந்தான் பக்கிரி. அவனைக் கண்ட பரத்தின் அப்பா, ''வா பக்கிரி...உட்கார், என்ன சாப்பிடுறே'' என்றார் அன்பாக. ''நான் யார் தெரியுமா?'' என்று மிரட்டலாகக் கத்தினான். ''நான் தரலேன்னு சொல்லல பக்கிரி, முதல்ல உட்கார்'' என்றதும், ஸ்டூலில் அமர்ந்தான். ''பக்கிரி, தெரிஞ்சோ தெரியாமலோ நாம செய்ற பாவம் நம்ம பிள்ளைங்களுக்கு வரக்கூடாது. வந்துட்டா நாமதான் அதுக்கு பிராயச்சித்தம் தேடணும். இப்ப உன் குழந்தைக்கு ஹார்ட்ல பிராப்ளம் இருக்கிறதா கேள்விப்பட்டேன். உன் மேல டாக்டரேகூட இரக்கப்பட மாட்டார். இருந்தாலும், ஒரு ட்ரஸ்ட் மூலமா குணப்படுத்தறதுக்கு ஏற்பாடு பண்ணி இருக்கேன். உன்னோட ரவுடித் தொழிலை விட்டுட்டு, நாலு பேருக்கு நல்லது செய். உடம்புல தைரியம் இருக்கு, வேலை செஞ்சி குடும்பத்தைக் காப்பாத்து. வேலைக்கு நான் எற்பாடு பண்றேன்'' என்று பரத்தின் அப்பா சொல்லச் சொல்ல பக்கிரி கண்ணீர் விட்டான். ''அய்யா நீங்க எனக்கு தெய்வம்யா'' என்று கும்பிட்டான். மறு நாளிலிருந்து மார்க்கெட்டுக்கு வரும் சரக்குகளை ஏற்றி இறக்கும் பணியில் இறங்கினான். மார்க்கெட்டே அவனை வியப்பாகப் பார்த்தது.

     -பி.ஆர்.ஸ்ருதி, செய்யாறு.

 சரத்... பரத்... பக்கிரி படக் காட்சிக்குப் பொருத் தமான 'நறுக் சுருக்’ கதைகளை, சுட்டிகள் அனுப்பி அசத்தினார்கள். சூப்பரான 6 கதைகளைத் தேர்ந்தெடுத்தோம். அவற்றில் மூன்று சென்ற இதழில் இடம்பெற்றன. மீதி இந்த இதழில்...

நியூ இயர் ஸ்பெஷல் - சரத்... பரத்... பக்கிரி !

''சரத், அங்கே பாரு பீடி பக்கிரி வர்றான்'' என்றான் பரத். கடை வீதிக்கு நண்பனுடன் வந்திருந்த சரத் திரும்பிப் பார்த்தான். பக்கிரி, கையில் உருட்டுக் கட்டையுடன் வந்து கொண்டிருந்தான். மக்கள் பயத்துடன் வேகவேகமாக அந்த இடத்தைவிட்டு நகர்ந்தார்கள்.

'பீடி பக்கிரி சாதாரணமா வந்தாலே, வம்பு ஏற்பட்டு, அடிதடியில முடியும். இன்னிக்கு கையில கட்டையுடன் வருகிறான் என்றால் எவனுக்கோ அடி நிச்சயம்’ என்று நினைத்தான் சரத். அதையேதான் பரத்தும் நினைத்து இருப்பான் போல... ''அந்தக் கண்றாவியப் பார்க்க வேண்டாம்டா. வா போய்டலாம்'' என்று சொன்னான்.

''இப்படியே எல்லோரும் ஒதுங்கினா என்னதான்டா முடிவு?'' என்றான் சரத். ''சினிமா ஹீரோ மாதிரி சண்டை போடச் சொல்றியா? நீ வேணும்னா போடு. நான் கிளம்பறேன்'' என்றபடி ஓட ஆரம்பித்தான் பரத். 'என்ன நடக்கப் போகுதோ?’ பதற்றத்துடன் சுவர் ஓரமாக நின்றுவிட்டான் சரத்.

நினைத்தபடியே நடந்தது. கடை வீதியில் இளநீர் விற்றுக் கொண்டிருந்த ஒருவனை நெருங்கி என்னவோ பேசினான் பக்கிரி. சில நிமிடங்களில் வாய் வார்த்தை சண்டையானது. பக்கிரி உருட்டுக்கட்டையால் அடித்தான். அந்த இளநீர் வியாபாரி கோபமாகி, வெட்டுக் கத்தியால் பக்கிரியின் காலில் வெட்டிவிட்டு ஓடினான். பக்கிரி 'ஆ!’ என்றபடி கீழே விழுந்து துடித்தான். பக்கிரியைத் தூக்கி நிறுத்தக்கூட யாரும் வரவில்லை. அவனே மெதுவாக எழுந்து நொண்டியபடி சென்றான்.

நாட்கள் கழிந்தது. காலில் வெட்டுப் பட்டதும் மருத்துவமனைக்கு உடனடியாக செல்லாமல் காலம் தாழ்த்திச் சென்றதால், பக்கிரியின் ஒரு காலை எடுக்கும்படி ஆனது என்று சரத் கேள்விப்பட்டான். முன்பு அவனுக்கு பயந்த மக்கள் இப்போது அவனை  மதிப்பதும் இல்லை.

நியூ இயர் ஸ்பெஷல் - சரத்... பரத்... பக்கிரி !

அன்று பள்ளி மைதானத்தில்  மதிய உணவு உண்ண, சரத்தும் பரத்தும் அமர்ந்தார்கள். பக்கிரி அந்த வழியாகச் சென்றான். ''பக்கிரி அண்ணே, இங்கே வாங்க!'' அழைத்தான் சரத். பக்கிரி வந்து அமர்ந்தான். பரத் டிபன் பாக்ஸை பக்கிரிக்குத் திறந்து கொடுத்தான். பக்கிரி சாப்பிட ஆரம்பித்தான்.

''பக்கிரி அண்ணே! நான் ஒரு விஷயம் சொல்வேன். கேட்பீங்களா? இன்று மாலை பள்ளி விட்டதும் நாங்க இங்கே வர்றோம். நீங்களும் வாங்க. உங்களுக்கு எழுதப் படிக்க கற்றுத் தருகிறோம். ஏதோ சின்னதா ஒரு வேலையில சேர அது உதவியா இருக்கும்'' என்றான் சரத். மாலை பள்ளி முடிந்து இவர்கள் வந்தபோது, குளித்து 'பளிச்’ என பள்ளி மாணவன் போல் வந்திருந்தான் பக்கிரி.

   -வீ.அப்துல் ஹகீம், வேலூர்.

 ஜனவரி 26-2011: குடியரசு தின பரிசளிப்பு விழா மேடை. 'வீரச் சிறுவனுக்கான விருது, கல்லுப்பட்டி சரத்துக்கு’ என மைக்கில் அறிவிக்க, மேடையை நோக்கிச் சென்றவாறு மனதில் அசை போட்டான் சரத்.

நியூ இயர் ஸ்பெஷல் - சரத்... பரத்... பக்கிரி !

  நவம்பர்-15-2010: கல்லுப்பட்டி சந்தையில் பழம் வாங்க வந்தனர் சரத்தும் நண்பன் பரத்தும். அப்போது அங்கே, அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் கண்ணன் பழம் வாங்கிக் கொண்டு இருந்தார். பணி முடிந்து இருந்ததால் சாதாரண உடையில் இருந்தார். ''வணக்கம் சார்'' என்றான் சரத். அவர் புன்னகையுடன் வணக்கம் சொன்னார். கண்ணன் வீரத்துக்கும் நேர்மைக்கும் உதாரணமாக இருப்பவர். அவரைப் பற்றிப் பேசாதவர்களே இல்லை. சரத்துக்கும் ரோல் மாடலாகிவிட்டார். அவர் இங்கே மாற்றலாகி வந்ததில் இருந்து குற்றங்கள் குறைந்து போனது. சரத்தும் பரத்தும் பழம் வாங்கிக் கொண்டு திரும்பி நடக்கும்போது... ரவுடி பீடி பக்கிரி, அடியாட்களுடன் வருவதைப் பார்த்தார்கள். பக்கிரி கையில் உருட்டுக் கட்டை! ''சரத் வந்துடு'' என்றபடி பரத் ஓட ஆரம்பித்தான். சரத்தும் சுவர் ஓரம் நின்றான். மனதில் கிலி. 'இவன் எதற்கு வருகிறான்?’ என்று கவனித்தான். பக்கிரி சத்தம் காட்டாமல் கண்ணனைப் பின்னால் நெருங்குவதைக் கண்டதும் நடக்கப்போகும் அபாயத்தை யூகித்துவிட்டான். சிறிது நேரத்தில் அவன் அடியாட்களும் கண்ணனைச் சூழ்ந்து கொள்ள, எங்கிருந்தோ போலீஸ் விசில் சத்தமும், போலீஸ் வண்டியின் சைரன் ஒலியும் கேட்டது. அவ்வளவுதான்! பக்கிரியும் அவனுடைய ஆட்களும் தலைதெறிக்க தப்பி ஓடினர். 'எங்கிருந்து சத்தம் வந்தது? நம்மைக் காப்பாற்றியது யார்?’ என்று சுற்றுமுற்றும் பார்த்தார் கண்ணன். அப்போது சரத்தும், பரத்தும் அவரை நெருங்கினார்கள். ''சார்! நான் நன்றாக மிமிக்ரி செய்வேன். நான்தான் விசில் சத்தம் கொடுத்தேன். என் ஐடியா ஒர்க் அவுட் ஆயிடுச்சு!'' என்றான்.

''சபாஷ் சரத்! உடல் பலத்தால் மோதுவது மட்டும் வீரமல்ல. சமயோஜிதமாக அறிவைப் பயன்படுத்தறதும் வீரம்தான்'' என்றார் கண்ணன்.

ஜனவரி 26: மேடை அருகில் சரத் வந்ததும் கரகோஷம் விண்ணைப் பிளந்தது. விருதினை வாங்கியபடி, திரும்பிப் பார்த்தான். கீழே நின்றிருந்த இன்ஸ்பெக்டர் கண்ணன் கட்டை விரலை உயர்த்தி, 'சபாஷ்!’ என்றார்.

-எஸ்.ஜெ.நந்தேஷ்,கோம்பை,தேனி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு