பிரீமியம் ஸ்டோரி

தாரிக்

விக்கி சைலா ஜீபா '

அடுத்த நாள் நடக்க இருக்கும் ஒரு டெஸ்ட்டுக்காக சைலா படித்துக் கொண்டு இருந்தாள். விக்கி வெளியே தன் நண்பர்கள் விஷால், கௌதம், பிரேம் ஆகியோருடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தான். ஜீபா தனக்கு வந்திருந்த 'மை டியர் ஜீபா’ கேள்விகளைப் பார்த்துக் கொண்டிருந்தது. அப்போது சரியாக காலை பதினோரு மணி இருக்கும். டெலிபோன் மணி ஒலித்தது. சைலா எழுந்துவந்து போனை எடுத்தாள். எதிர் முனையில், ''ஹலோ, சைலாக்கா... விக்கி, ஜீபா  இருக்காங்களா?'' என்று கேட்டான் ஒரு சுட்டி. அவன் குரலில் ஏதோ ஒரு பதற்றம் இருக்கவே, ''எல்லாரும் இங்கேதான் இருக்கோம். போனை ஸ்பீக்கர் மோடுல போட்டு இருக்கேன். நீ யாரு? என்ன பிரச்னை? விஷயத்தைச் சொல்லு'' என்று தைரிய மூட்டினாள் சைலா.

'அக்கா! என் பேரு கதிரவன். பக்கத்திலே சிறுகாரனூர் கிராமத்தில் கவர்மென்ட் ஸ்கூல்லே படிக்கறேன். என் அப்பா ஒரு பொற் கொல்லர். நகைகள் செய்றது, பாலீஷ் பண்ணிக் கொடுக்கறது மாதிரியான வேலைகள் செய்வாரு. முந்தா நேத்து ரெண்டு பேர் ஒரு பை நிறைய பழங்கால நகைகளோடு வந்து,   பாலீஷ் பண்ணிக் கொடுக்கச் சொன்னாங்க.  எல்லாமே பழுப்பேறின நகையா இருந்துச்சு. தவிர, அது எல்லாம் இப்போதைய நகைகளே இல்லை. பல நூற்றாண்டுக்கு முந்தைய நகைன்னு அப்பா கண்டுபிடிச்சுட்டாரு'' என்று நிறுத்தினான்.

##~##

ஸ்பீக்கரில் கதிரவனின் பேச்சைக் கேட்டபடியே லெட்டர்ஸை எல்லாம் எடுத்து வைத்துவிட்டு, போன் அருகில் வந்து நின்றது ஜீபா. விக்கியும் விளையாட்டை முடித்துக்கொண்டு வந்திருந்தான்.

''ம்ம்... அப்புறம் என்னாச்சு?'' என்று பேச்சைத் தொடர்ந்தாள் சைலா. ''எதுக்கும் இருக்கட்டுமேன்னு எங்க அப்பா ரெவின்யூ இன்ஸ்பெக்டர் கிட்டே ஒரு தகவலா சொல்லி வெச்சாரு. ஆனா, அந்த  அதிகாரி நாலஞ்சு போலீஸோடு வந்து எங்க அப்பாவை புடிச்சுட்டுப் போயிட்டார்'' என்றான் கதிரவன்.

''நகை எல்லாம் இப்ப எங்கே இருக்கு?'' என்று கேட்டது ஜீபா. ''எல்லா நகைகளையும் அதே பையிலே போட்டு ரெவின்யூ இன்ஸ்பெக்டர் எடுத்துட்டுப் போயிட்டாரு'' என்றான். ''அங்கேயே இரு கதிர். நாங்க உடனே வர்றோம்'' என்றாள் சைலா. மூவரும் கிளம்பினார்கள்.

சிறுகாரனூர் கிராமம்...

விக்கி சைலா ஜீபா '

மெயின் ரோட்டில் இருந்து கிராமத்துக்குச் செல்லும் கூட்டுரோடின் ஆரம்பத்திலேயே கதிரவன் நின்றிருந்தான். விக்கி, சைலா, ஜீபா மூவரையும் அழைத் துக்கொண்டு ஊருக்குள் சென்றான். மொத்தமே நூறுக்கும் குறைவான வீடுகள் இருக்கிற சின்ன கிராமம். பக்கத்தில் உள்ள டவுனில்தான் இங்கு இருக்கும் மக்கள் தங்கள் வியாபாரத்தைச் செய்கிறார்கள். ''அப்பாவும் அப்படித்தான். சிட்டியிலே இருக்கிற ஒரு நகைக் கடைக்கு நகை செஞ்சு தருவாரு'' என்றான் கதிரவன். வீடு வந்தது. வீட்டில் அவனது அம்மா, தங்கை இருவரும் வரவேற்றார்கள். கவலையாக இருந்தார்கள். அவர்களை சமாதானப்படுத்தினாள் சைலா. அந்தச் சின்ன வீட்டில் ஒரு மூலையை கதிரவனின் அப்பா நகை வேலைகளைச் செய்ய ஒதுக்கி இருந்தார்.

''அந்தப் பையிலே இருந்த ஒரு நகை மட்டும் இங்கே இருக்கு... அப்பா டெஸ்ட்டுக்காக வெளியே எடுத்தது!'' என்றபடி எடுத்து ஜீபாவிடம் கொடுத்தான் கதிர்.

ஜீபாவின் கூர்மையான கண்கள் அந்த நகையின் ஒவ்வொரு மைக்ரோ மில்லி மீட்டர் ஏரியாவையும் ஊடுருவி ஆராய்ந்தது. ''இது இப்போதைய நகையே இல்லை... மொகலாயர்கள் காலத்துக்கு முந்தையது'' என்றது.

''இது புதையலா கிடைச்சிருக்கும். அப்படியே அமுக்கப் பார்த்திருப்பாங்க. இந்த நகை பத்தி கதிர் அப்பா சொன்னது அவங்களுக்கு இடைஞ்சலா போயிடுச்சு'' என்றான் விக்கி. ''ஆனா, ரெவின்யூ இன்ஸ்பெக்டர் ஏன் இதைச் செய்யணும். அவருக்கும் இதுலே கூட்டு இருக்குமோ?'' என்று கேட்டாள் சைலா.

''அந்த ரெவின்யூ இன்ஸ்பெக்டரோடு வந்த போலீஸ்காரங்க மரியாதையாவே நடந்துக் கலை. ரவுடிங்க மாதிரி எல்லாத்தையும் அடிச்சு உடைச்சாங்க'' என்றார் கதிரவனின் அம்மா.

''ஓகே கதிர், நீ எங்களோடு வா'' என்ற ஜீபா, அவனது அம்மா, தங்கை இருவரிடமும், ''கவலைப்படாதீங்க... அவருக்கு எதுவும் ஆகாது. பத்திரமா நாங்க கூட்டிட்டு வர்றோம்'' என்றது. நான்கு பேரும் கிளம்பினார்கள்.

''அடுத்து எங்கே ஜீபா போகப் போறோம்?'' என்று கேட்டான் விக்கி. ''அந்த நகைகளை இந்த சுற்று வட்டாரத்துலதான் எங்கேயோ எடுத்து இருக்காங்க. அதைக் கண்டுபிடிக்கணும்'' என்றது ஜீபா. ''அதெப்படி அவ்வளவு கரெக்டா சொல்றே ஜீபா. வந்தவங்க வெளியூரா கூட இருக்கலாமே?'' என்றாள் சைலா.

''அந்த நகை மேலே படிஞ்சிருந்த மண்ணைக் கவனிச்சேன். அது இந்த ஏரியாலே இருக்கிற மண்ணுதான். அதே மண்ணு வீட்டு வாசல்ல சில கால் தடங்கள்லேயும் பார்த்தேன். அது களிமண்ணா இருந்ததாலே அந்த இடம் ஒருவேளை பக்கத்தில் ஏதும் குட்டை அல்லது ஏரியாக் கூட இருக்கலாம்'' என்றது ஜீபா.

''மண்ணு இந்த ஏரியா... அதுவும் ஒரு ஏரியா? போவோம் அங்கே வாரியா... பொளந்து கட்ட போறீயா... '' என்று பாட்டுப் பாடினான் விக்கி. எல்லோரும் டென்ஷனில் இருந்ததால் யாரும் அதை ரசிக்கவில்லை.

''ஏரின்னா... பக்கத்துக் கிராமத்துலே ஒண்ணு இருக்கு. தண்ணி வத்தி பல வருஷமாச்சு. அதை வேலி போட்டு மறிச்சு வெச்சிருக்காங்க.யாரும் அங்கே போறது இல்லை'' என்றான் கதிர். ஜீபா தலையை ஆட்ட, எல்லோரும் அங்கே போனார்கள். போகிற வழி முழுக்க காட்டுச் செடிகளும் அடர்ந்த புதருமாக இருந்தது. அந்த ஏரிக்கு சற்று முன்பாகவே  மூவரையும் நிறுத்தி, ''ஒரு நிமிஷம் இங்கேயே இருங்க, இதோ வந்துடறேன்'' என்றபடி ஜீபா, சற்று முன்னேறி ஒரு புதருக்குள் மறைந்தது.

விக்கி சைலா ஜீபா '

அங்கிருந்தே ஏரியை நோட்டம் இட்டது. ஜீபா நினைத்தது சரியாக இருந்தது. வேலி போட்டு மறிக்கப்பட்ட அந்த ஏரியில் பெரிய பெரிய பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது. அங்கிருந்த படியே ஸ்கேனிங் டெக்னிக்கில் ஆராய்ந்தது. ஏரி மண்ணும், தான் பார்த்த மண்ணும் ஒத்துப் போனது. புதையல் எடுத்திருக்கிறார்கள் என்பதை உறுதி செய்தது. ஏரிக்கு சற்று தள்ளி ஒரு சின்ன பங்களா. அதுவும் இந்த வேலிக்குள்ளேயே இருந்ததால், அதையும் ஜீபா ஸ்கேன் செய்து பார்த்தது. உள்ளே நான்கைந்து பேர் கையில் ஆயுதங்களோடு நிற்பது தெரிந்தது. 'எதற்கு இங்கே இவர்கள் இருக்கிறார்கள்? ஒருவேளை கதிர் அப்பாவை இங்கே வெச்சிருப்பாங்களோ?’ என்று யோசித்தபடியே பங்களாவை இன்னும் தீவிரமாக ஆராய்ந்தது. அப்போது...

''எங்களை விடுங்க! எங்களை விடுங்க!'' என்ற கத்தல் அந்தப் பகுதியையே அதிரவைத்தது. ''இது விக்கி குரலாச்சே!'' என்று ஜீபா சுதாரித்துத் திரும்பியது. தொடர்ந்து, ''நாங்க மூணு பேரும் சும்மா சுத்திப் பாக்கதான் வந்தோம். வழி தெரியாம இங்கே வந்துட்டோம். எங்களை எங்கே புடிச்சுட்டுப் போறீங்க?'' என்று கத்தினான். தனக்கு கேட்க வேண்டும் என்பதற்காகத்தான் விக்கி இவ்வளவு உரக்கக் கத்துகிறான் என்பதை ஜீபா புரிந்துகொண்டது. அப்படியே பதுங்கி, நடப்பதைக் கவனித்தது.

நான்கைந்து பேர் முகமூடி அணிந்திருந் தார்கள். விக்கி, சைலா, கதிரவன் மூவரையும் இழுத்தபடி பங்களாவை நோக்கி நடந்து கொண்டு இருந்தார்கள். அதில் ஒருவன் சொன்னான், ''இவன் அந்த 'பாலீஷ்’ பண்றவனோட பையன். வீட்டுக்குப் போனப்போ பார்த்தேன்'' என்றான். ''சுத்திப் பாக்க வந்தேன்... கோடாரி பாக்க வந்தேன்னு சொல்றது எல்லாம் பொய்யி! இவங்களையும் புடிச்சு அந்தக் கூட்டத்தோடு கட்டுங்க!'' என்றான் மற்றொருவன்.

பங்களா உள்ளே சென்றார்கள். உள்ளே ஐந்து பேரை கயிற்றால் கட்டி, வாயில் பிளாஸ்த்திரி ஒட்டி இருந்தார்கள். அதில் கதிரவனின் அப்பாவும் ஒருவர். கதிரவனிடம் விக்கி ரகசியமாக, ''கதிர், இதுலே உங்க அப்பா இருக்காரா பார்த்துச் சொல்லு'' என்று கேட்டான். ''ம்ம்... இருக்காரு. அதோ, கட்டம் போட்ட சட்டை. மத்தவங்க எல்லாரும்தான் யாருன்னு தெரியலை'' என்றான் கதிரவன்.

''அவங்க கவர்மென்ட் உப்பைத் தின்னும் தடியனுங்க... ஹாஹ் ஹாஹ் ஹா!'' என்று சிரித்தான் ஒரு முகமூடி. கதிரவன் அருகில் வந்து முகமூடியைக் கழட்டி, ''என்னைத் தெரியுதா?'' என்று கேட்டான். கதிரவன் பயத்தில் நடுங்கியபடி, ''ம்ம்... தெரியுது! ரெவின்யூ இன்ஸ்பெக்டர்!'' என்று அலறினான்.

கோபமாக கண்களை உருட்டிய ரெவின்யூ இன்ஸ்பெக்டர், விக்கி சைலாவைப் பார்த்து, ''ம்ம்... சொல்லுங்க, நீங்க எல்லாம் யாரு?'' என்று கேட்டான்.

''அது என் கூடவே இருக்கிற பொடியனுங்க. ஹாஹ் ஹாஹ் ஹா!'' என்று கம்பீரமான பதில் வர... குரல் வந்த திசையில் எல்லோரும் பார்த்தார்கள். ஜீபா நின்றிருந்தது. ''யார் நீ?'' என்று மிரட்டினான் ரெவின்யூ இன்ஸ்பெக்டர். ''இரு இரு... நீ யாருன்னு முதல்லே சொல்றேன். கேட்டுக்கோ! நீ ரெவின்யூ இன்ஸ்பெக்டரே இல்லை... போலீஸாலே பல வருஷங்களா தேடப்படும் கிரிமினல் குற்றவாளி 'டெம்போ’ கருணா. இங்கேயும் சும்மா இல்லாம ஊர்லே இருக்கிற கோயில் நகையை எல்லாம் திருடி... புதையல் நகைகளை எல்லாம் அபகறிச்சு... ஏழைங்க, இந்த வழியா போறவங்க எல்லார் கிட்டேயும் வழிப்பறி பண்ணி, அந்த நகைகளை எல்லாம் இந்த ஏரிக்குள்ளே புதைச்சு வெச்சிருந்தே. அவசரத் தேவைக்கு நீயே இந்த நகைகளை உன் ஆளுங்ககிட்டே கொடுத்தனுப்பி பாலீஷ் போடச் சொன்னே. உன் நல்ல நேரம்... கதிரோட அப்பா உன்கிட்டேயே விஷயத்தைச் சொல்லிட்டாரு. உன்னோட கெட்ட நேரம்...  அவரு என்கிட்டேயும் விஷயத்தைச் சொல்லிட்டாரு. நானும் போலீஸுக்கு இன்ஃபார்ம் பண்ணிட்டேன். இன்னும் கொஞ்ச நேரத்துலே நீ கம்பி எண்ணப் போறே! இந்த டீடெயில் போதுமா? இன்னும் டீடெயிலா வேணுமா?'' என்று டான்ஸ் ஆடியது ஜீபா. விக்கியும் சைலாவும் குலுங்கிக் குலுங்கி சிரித்தார்கள்.

கோபமான 'டெம்போ’ கருணா, ''என்னடா பாத்துட்டு நிக்கறீங்க... புடிச்சுக் கட்டுங்கடா!'' என்று கத்தினான்.

ரவுடிகள் சிலர் கையில் கயிற்றோடு பாய்ந் தார்கள். ஜீபா இங்கேயும் அங்கேயுமாக ஓடி ஆட்டம் காட்டியது. துப்பாக்கி வைத்திருந்த மற்ற ரவுடிகளும் ஓடி வந்தார்கள். ''சுட்டுத் தள்ளுங்க அதை!'' என்று கத்தினான் 'டெம்போ’ கருணா. எல்லோரும் ஜீபாவைக் குறி வைத்து சுடப் போனார்கள். ஆனால், அதற்கெல்லாம் ஜீபா அவகாசமே கொடுக்கவில்லை. ரவுடிகளிடம் இருந்த கயிற்றையே லாகவமாகப் பிடித்து, இங்கும் அங்குமாக திருப்பிப் போட்டு மின்னலாகச் செயல்பட்டது. எல்லா துப்பாக்கி களையும் ஒரே கொத்தாக அந்தக் கயிற்றால் அள்ளி இழுத்தது ஜீபா. எல்லா ரவுடிகளுமே அடுத்து என்ன செய்வது என்று ஒரு கணம் குழம்பினார்கள். ஜீபா வீசிய அடுத்த ரவுண்டு கயிற்றில் அவர்கள் எல்லோருமே சிக்கினார்கள்.

சைலாவும் கதிரவனும் ஓடிச்சென்று  கதிர் அப்பாவின் கட்டுகளை அவிழ்த்து, வாயில் ஒட்டியிருந்த பிளாஸ்த்திரியை எடுத்தார்கள். ''ரொம்ப நன்றிம்மா. இவங்க கட்டையும் அவிழ்க்கணும்'' என்றபடி அவரும் சைலாவோடு சேர்ந்து மற்ற நான்கு பேரின் கட்டுகளையும் அவிழ்த்தார். விக்கி அங்கே இருந்த மேஜையில் எதையோ உருட்டிக் கொண்டிருந்தான். அப்போது...

''டுமீல்!''

டெம்போ கருணாவின் கையில் துப்பாக்கி இருந்தது. சைலாவின் கழுத்தைத் தன் முழங்கையால் வளைத்துப் பிடித்திருந்தான். துப்பாக்கியை சைலாவின் நெற்றிப் பொட்டில் வைத்து, ''இப்ப நிறுத்தறீங்களா? ஒரு அடி நகர்ந்தாலும் இவ தலை சிதறிடும்!'' என்றான். ஜீபா கயிற்றை விடவில்லை. அடுத்து என்ன செய்யலாம் என்ற யோசனையில் இருந்தது. ''என்ன ஜீபா? உனக்கு சைலாவோட தலை முழுசா வேணாமா? ஒரே குண்டுல சிதறிடும்!'' என்று உறுமினான் கருணா.

''எப்படி முடியும்? அந்தத் துப்பாக்கிலதான் குண்டே இல்லையே!'' என்றான் விக்கி. எல்லோரும் அவனைப் பார்த்தார்கள். ''எத்தனை சினிமாலே பார்த்திருக்கேன். கடைசி சீன்லே வில்லன் டிராவைத் திறந்து துப்பாக்கியை எடுக் கறதும் ஹீரோயினைப் பிடிச்சு குறி வெச்சு மிரட்டறதும்... அதான், முன் கூட்டியே புல்லட்ஸை எடுத்துட்டேன். ஒண்ணே ஒண்ணு மட்டும் எடுக்க வரலையேன்னு கவலைப் பட்டேன். நோ ப்ராப்ளம்! அதை நீயே சுட்டுக் காலி பண்ணிட்டே!'' என்றான் தோட்டாக்களைக் காட்டியபடி. இந்த அவகாசம் போதாதா ஜீபாவுக்கு? ஒரே சுத்தாக டெம்போ கருணாவை பார்சல் செய்தது.

''ரொம்ப தாங்க்ஸ் ஜீபா!  நாங்க தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள். இந்த ஏரி பத்தி கேள்விப்பட்டு விசாரிக்க வந்தோம். இப்படி மாட்டிக்கிட்டோம்'' என்றார்கள் கதிர் அப்பாவுடன் கட்டப்பட்டவர்கள். ''அதோ, சினிமாவின் கடைசி சீனும் வந்தாச்சு. போலீஸ்!'' என்றாள் சைலா. எல்லோரும் சிரிக்க, குற்றவாளிகள் எல்லோரும் போலீஸ் வேனில் ஏற்றப்பட்டார்கள். கண்கலங்கி நன்றி சொன்னார்கள் கதிரும் அவனது அப்பாவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு