Published:Updated:

துர்கா !

துர்கா !

துர்கா !

துர்கா !

Published:Updated:
 ##~##
ஐ.சி
.யூ-வில் அயர்ந்து படுத்திருக்கும் ராஜத்தை அந்த டாக்டர் நெருங்கினார். உறை போடப்பட்டிருந்த அவருடைய கை, ராஜத்தின் கழுத்தில் பதிந்தது. யார் அந்த டாக்டர்... என்ன நடக்கப் போகிறது?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- கடந்த எபிசோட் இப்படி முடிந்திருக்க... அந்த திகில் நிமிடங்களை நூல் பிடித்து அடுத்த எபிசோடை படபடக்க வைக்க, இங்கே பாய்ச்சல் காட்டுகிறார்கள் வாசக தோழிகள்...

அசோக்நகர் - தமயந்தி, சேலம் - சுபா தியாகராஜன், அருப்புக்கோட்டை - ராஜேஸ்வரி, கூடுவாஞ்சேரி - லாவண்யா... இந்த சகோதரிகள், ''சதீஷின் பழைய முதலாளி காண்டீபன்தான் அந்தக் கொலைகாரன்'' என்று முடிச்சு போடுகிறார்கள்!

போத்தனூர் - லலிதா, மயிலாப்பூர் - ஜானகி, தஞ்சாவூர் - ராஜேஸ்வரி, மகாதானபுரம் - கிருஷ்ணவேணி... இந்த நான்கு வாசகிகளும் ''அம்மாவைக் கொல்ல வந்தவன்... ஆனந்த்'' என சற்றே கொடூரமாக சிந்தித்து திடுக்கிட வைக்கிறார்கள்!

கோபிசெட்டிபாளையம் - சுமதி, ''ராஜத்தின் மீது ஆட்டோ ஏற்றி கொல்லப் பார்த்த அதே டிரைவர்தான், டாக்டர் வேடத்தில்'' என திருப்புமுனை ஏற்படுத்தப் பார்க்கிறார் இந்தத் தோழி!

திருவான்மியூர் - ஜெயா சங்கரன், பெங்களூரு - ஆர்.அம்பிகா, மதுரை - ஜெயசித்ரா, திருச்சி - இந்திரா சந்திரன், நெய்வேலி - கஸ்தூரி மீனாட்சி... இந்தத் தோழிகள் ஐந்து பேரும், ''சதீஷால் ஏற்பாடு செய்யப்பட்ட உள்ளூர் டாக்டர்'' என்கிறார்கள்.

வேலூர் - ஜானகி ஸ்ரீதரன், உண்மை உடைந்து... ராஜத்தின் உயிர் போனால், கதையின் பல திருப்பங்கள் அடிபடும் என கணித்து, ராஜத்தை விழிக்க வைத்து, புதிய திருப்பத்தை தருகிறார். அதனால் இந்தச் சகோதரிதான் இந்த எபிசோட் இயக்குநர். பாராட்டுக்கள்!

துர்கா !

சதீஷ் தன் பைக்கை எடுத்துவிட்டான்; அது வேகம் பிடித்தது. செந்திலும் விடவில்லை. அதே வேகத்தில் சதீஷை சாலையில் பின் தொடர்ந்தான். நேரம் இரவு பத்தரை மணி. ஏறத்தாழ மூன்று கிலோ மீட்டர் பயணித்த பிறகு, சதீஷ் ஒரு சந்தில் புகுந்து பைக்கை நிறுத்தினான். செல்போனை எடுத்தான். டயல் செய்தான்.

அந்த நேரம்தான் கையில் உறையோடு அந்த டாக்டர்... மூடிய கதவுக்குள், படுத்துக் கிடந்த ராஜத்தின் கழுத்தில் கைகளை அழுத்தமாகப் பதிக்க, அவருடைய செல்போன் ஒலித்தது. படக்கென கைகளை எடுத்துவிட்டு, செல்போனை கையில் எடுக்க...

''நான் சதீஷ் பேசறேன். வேலை நடக்குதா?''

''இன்னும் சில நொடிகள்ல முடிச் சுட்டு நானே திரும்ப கூப்பிடறேன்.''

சதீஷ் இணைப்பைத் துண்டிக்க, வராண்டாவில் போனில் பேசி முடித்த துர்கா, வேகமாக ஐ.சி.யூ-வை நோக்கி நடக்க, சாரதாம்மா அரைத் தூக்கத்தில் இருக்க, துர்கா நெருங்கி விட்டாள். டாக்டர், ராஜத்தின் பக்கம் திரும்ப... அதிர்ச்சி தாக்கியது. கட்டிலில் எழுந்து உட்கார்ந்திருந்த ராஜத்தின் கண்கள், அந்த டாக்டரையே வெறித்தபடி பார்க்க, அவருக்கு நொடி நேரம் மூச்சே நின்றுவிட்டது.

'கழுத்தை நெறிக்கப் போகும் நேரம் சதீஷின் அழைப்பு. ஒரு நொடி கவனச் சிதறல். மீண்டு வந்தால், இப்படியா? இவள் எப்படி எழுந்து உட்கார்ந்தாள்? பார்வையில் ஒரு வெறி. எதுவும் நடக்கலாம்!’

அதற்குள் ரவுண்ட்ஸ் வந்த டியூட்டி டாக்டர், கதவைத் திறந்து கொண்டு உள்ளே வர, இந்த போலி டாக்டருக்கு அடுத்த அதிர்ச்சி.

''என்னாச்சு? பேஷன்ட் எப்படி எழுந்து உட்கார்ந்தாங்க?''

''அதைப் பார்த்துத்தான் டாக்டர் நானும் உள்ளே வந்தேன்'' என்றான் போலி. ஆனால், டியூட்டி டாக்டரின் கவனம் முழுக்க ராஜத்தின் பக்கம் திருப்ப, சரக்கென போலி வெளியே நழுவ, டியூட்டி டாக்டர், ராஜத்தை அவசரமாகப் பரிசோதித்தார். மூச்சு நன்றாக வந்தது. கண்கள் விழித்திருந்தது. ஏதோ சொல்லத் துடித்த உதடுகள். இதயத்துடிப்பு, நாடித்துடிப்பு சகலமும் சீராக இருக்க, டாக் டர் வேகமாக வெளியே வந்தார்.

''அவங்களுக்கு நினைவு திரும்பிருச்சு. உள்ளே வாங்க...'' என டாக்டர் அழைக்க, துர்கா அதிசயப்பட்டாள். சாரதாம்மா விசுக்கென எழுந்து வந்தார்.

''அம்மா... இங்கே பாருங்க...''

ராஜம் விழிகளை உருட்டிப் பார்த்தாள்.

''நான்... நான் ஏன் இங்கே இருக்கேன்?''

''வெரிகுட். பேசறாங்க. ஒரு சின்ன விபத்து. இங்கே வந்திருக்கீங்க. உங்க மருமகள் வந்திருக்காங்க பாருங்க...''

துர்கா அருகில் வந்தாள்.

''அத்தே... நான் துர்கா...''

ராஜம் நிமிர்ந்து பார்த்தாள்.

''அத்தே... உங்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை. நீங்க உயிர் பிழைச்சாச்சு. துர்கா வந்திருக்கேன்.''

''துர்காவா?''

''ஆமாம் அத்தே... உங்க மருமக துர்கா...''

''மருமகளா... துர்காவா... அப்படி யாரையும் தெரியலியே! நீங்க யாரு?''

துர்கா ஆடிப்போனாள்!

''என்ன டாக்டர் இது?''

''இருங்க... அந்தம்மாவைக் கூப்பிடுங்க...''

சாரதா அழைக்கப்பட்டார்.

''என்னைத் தெரியுதா? சாரதா. சதீஷோட அம்மா.''

''யாரு சதீஷ்?''

மாறி மாறிக் கேட்டும் எதுவும் புரியவில்லை. கண்கள் மூட, மறுபடியும் மயக்கம். டாக்டர் அவசரமாகப் பரிசோதித்தார்.

''சாதாரண மயக்கம்தான் ரெண்டு பேரும் வெளியில வாங்க'' இருவரும் வர,

''எதுவுமே ஞாபகம் இல்லை. யாரையும் தெரியலை. வேற ஏதோ பிரச்னை. ஆனா, பிழைச்சிட்டாங்க. பெரிய டாக்டர் வரணும்.''

துர்கா மிரண்டு போனாள்.

துர்கா !

''பிழைச்சதுக்காக சந்தோஷப்படுங்க. அதேநேரம் எனக்கொரு பெரிய சந்தேகம். இந்த ஏரியால நான் மட்டும்தான் டியூட்டி டாக்டர். உள்ளே நான் வரும்போது இன்னொரு டாக்டர் எப்படி? அவர் எங்கே போனார்? ஏதோ ஒரு தப்பு நடக்க இருந்திருக்கு!''

''டாக்டர்!'' என்று துர்கா பதற, சாரதாவின் முகம் இருண்டு கிடந்தது. செந்தில் மூச்சிரைக்க அங்கு வந்தான்.

''செந்தில் எங்கே போயிட்டீங்க?''

''அவசர அழைப்பு வந்துச்சுக்கா.''

துர்கா விவரத்தைச் சொன்னாள்.

''இனி நான் பார்த்துக்கறேன். எங்க கான்ஸ்டபிள் உங்க ரெண்டு பேரையும் வீட்ல கொண்டு போய் விட்டுடுவார். நான் போன் பண்றேன்.''

துர்கா கவலையுடன் டாக்டரை நெருங்க, சாரதாவிடம் வந்தான் செந்தில்.

''உங்க பையன் சதீஷ் ஏதோ ஒரு கொலை முயற்சிக்காக வந்திருக்கான். நான் விரட்டினேன். தப்பிச்சிட்டான்.''

''தம்பி... உள்ளே ஏற்கெனவே ஒரு டாக்டர் இருந்திருக்கார். இந்த டாக்டர் சந்தேகப்படறார். என்னவோ நடக்குது தம்பி. பயம்மா இருக்கு!''

''எதுவும் நடக்காது. நடக்க விடமாட் டோம்.''

இவர்கள் பேசும் நேரம், அந்த போலி அழகாக வெளியே வந்துவிட்டான். டாக்டர் உடையில் இருந்தவனை செக்யூரிட்டியும் கேள்வி கேட்கவில்லை. வெளியே வந்தவன் பைக்கை உருவினான்.

''சார் எங்கே இருக்கீங்க?''

''வேலை முடிஞ்சுதா?'' - சதீஷின் ஆர்வக் குரல்.

''நீங்க கெடுத்துட்டீங்க. உங்ககிட்ட பேசி முடிச்சுட்டு திரும்பினா, அந்த பொம்பளை எழுந்து ஒக்காந்திருக்கு. நான் தப்பிச்சதே புண்ணியம். பேசின பணத்தை எங்கே வந்து வாங்கட்டும்?''

''அடப் போய்யா... அவ முழிச்சா, என் தலைக்கும் கல்லு. எல்லாம் பேசுவாளே!''

''அது உங்க பிரச்னை. பணத்தைக் கொடுங்க.''

''காலையில வாய்யா...''

சதீஷ் நொந்து போய் நின்றான்.

'இனி, துர்காவுக்கு எல்லாம் தெரிஞ்சிடும். பத்தரை மணி வரை நான் ஆஸ்பத்திரியில இருந்தது செந்திலுக்குத் தெரியும். ராஜமும் சகல உண்மைகளையும் கக்கிடுவா. என்ன செய்யப் போறேன்?’ அடி வயிறு சுருண்டது சதீஷ§க்கு.

அதேநேரம் வீட்டுக்கு வந்துவிட்டார்கள் துர்கா வும், சாரதாவும். அஞ்சுவுக்கு ஊசி போட்டு, பாலாஜி, சுதா திரும்பிவிட, துர்கா சகலமும் சொன்னாள்.

''அத்தைக்கு நிச்சயமா ஆபத்து இருந்திருக்கு.''

''போலீஸ் குடைஞ்சா, உண்மை வெளில வந்துடும் துர்கா. செந்தில் கூட இருக்காரே... விடமாட்டார்'' என்று பாலாஜி சொல்ல, சாரதா முகம் மாறியது.

''துர்கா... உன் மாமியார் பிழைச்சாச்சு. அது போதும்.''

''ஆனா, அவங்களுக்கு என்னையே அடையாளம் தெரியலியேம்மா...''

''நினைவுகள் மங்கியிருக்கும். நாளைக்குக் காலையில பேசுவாங்க... நீ கவலைப்படாதே.  ஜோசியரை பார்த்து பரிகாரம் தேடிடலாம்.''

''சரிம்மா. பின்னணியில ஏதோ நடக்குது. அதை முதல்ல கண்டுபிடிக்கணும்.''

அனைவரும் படுத்தபோது பின்னிரவு இரண்டு மணி. துர்காவுக்கு உறக்கமே வரவில்லை.

ஆஸ்பத்திரியில் டாக்டரிடம் பேசிக் கொண்டிருந்தான் செந்தில்.

துர்கா !

''இப்ப எப்படி இருக்காங்க?''

''மயக்கம்தான். ஆனா, முழுமையா பிழைச் சிட்டாங்க. காலையில மருத்துவப் பரிசோதனை கள் நடத்தினா விவரம் தெரிஞ்சுடும்.''

செந்தில் ஸ்டேஷனுக்கு போன் செய்தான்.

''நாளைக்குக் காலை நடேசன் சாரை ரிலீஸ் பண்ணிடுங்க. நான் வண்டி அனுப்பறேன். அவரை வீட்ல கொண்டுபோய் விட்ருங்க.''

''சரிங்க சார்!''

மறுநாள் விடியலுக்காக பல பேர் ஆவலுடன் காத்திருந்தார்கள்.

அதே பின்னிரவு நேரத்தில் அந்த நட்சத்திர ஓட்டல் அறையில், காண்டீபன் எதிரே சதீஷ் கொதிநிலையில் இருந்தான்.

''காலையில ராஜம் எப்படியும் பேசிடுவா. அத்தனை உண்மைகளும் வெளியில வந்துடும். எனக்கு சங்குதான்.''

''ஊரை விட்டே ஓடிடு. விடியறதுக்குள்ளே நீ ஆந்திர எல்லைக்குப் போயிடலாம்.''

''பிரச்னை எனக்கு மட்டும் இல்லை. செந்தில் கிண்டிக் கிளறுவான். வேர் நீங்கதான்னு தெரிஞ்சு, உங்களுக்கும் இருக்கு!''

காண்டீபன் நிமிர்ந்து உட்கார்ந்தார்.

''ஒண்ணு செய். இப்ப கவனம் முழுக்க ராஜம் எப்ப, என்ன பேசப் போறானுதான் இருக்கும். அதுக்குள்ள நம்மால சாதிக்க முடியும்!''

''எதை? எப்படி?''

''புது புராஜெக்டோட அடிப்படை சங்கதிகள் இருக்கில்லையா? அதைக் கொண்டு வந்துடு!''

''அத்தனையும் துர்காவோட சிஸ்டத்துல இருக்கு.''

''நீ முயற்சி பண்ணினா, எடுக்க முடியாதா?''

''சேர்மன் ஆபீஸுக்கு வருவாரே. துர்காவோட நெருக்கமான ஆட்கள் அங்கே யார் யாரோ... அங்கே என்ன பொறி இருக்கோ... அவசரப்பட்டு மாட்டிக்கக் கூடாதில்லையா?''

''இதப் பாரு... அதிரடியா செயல்பட்டு ரிஸ்க் எடுத்து, செய். சும்மா இல்லை... பல கோடிகள் பெறுமானமுள்ள புராஜெக்ட்.''

காண்டீபனிடம் சில யோசனைகளைச் சொல்லிவிட்டு, சதீஷ் அங்கிருந்து புறப்பட்ட போது மணி அதிகாலை நான்கு.

துர்கா உறங்கவேயில்லை. காலை நாலரைக்கு எழுந்து குளித்துவிட்டாள். குடும்பமே விழித்துக் கொண்டுதான் இருந்தது. ஆறு மணிக்கே துர்கா புறப்பட்டுவிட்டாள்.

''ஆஸ்பத்திரிக்கு நானும் வர்றேன் துர்கா!''   - சாரதாம்மா சொல்ல,

''இல்லைம்மா. ஏர்போர்ட்டுக்கு போகணும். உங்களை கல்பனா கூட்டிட்டுப் போவாங்க.''

''சரிம்மா.''

துர்காவின் செல்போன் கூப்பிட, எடுத்தாள். சேர்மன், ஏர்போர்ட் சங்கதியை ஞாபகப் படுத்தினார்.

''அங்கேதான் சார் போயிட்டு இருக்கேன்.''

''துர்கா... அவர் கொண்டு வர்றது முக்கியமான சி.டி-க்கள். ஜாக்கிரதையா உங்க பராமரிப்புல வெச்சுக்குங்க.''

''சரி சார்.''

துர்கா புறப்பட்டு விட்டாள். காரில் போகும் போதே 'விமானம் இரண்டு மணி நேரம் தாமதம்' எனத் தகவல் வந்தது. சரி, ஆஸ்பத்திரிக்குப் போய்விடலாம் எனக் காரைத் திருப்பி விட்டாள். செந்தில் அங்கே இருந்தான்.

''நீங்க போகலையா?''

''எப்படீக்கா? ராத்திரி அத்தையைக் கொல்லத்தான் முயற்சி நடந்திருக்கு. வந்தவன் போலி டாக்டர், தப்பிச்சிட்டான். ஆனா, சில தடயங்கள் கிடைச்சிருக்கு. விடமாட்டோம்.''

''அத்தை எப்படி இருக்காங்க?''

''காலையில கண் முழிச்சாங்க. சில டெஸ்ட்டு களை டாக்டர் எடுத்தாச்சு.''

டாக்டரின் அறைக்குள் இருவரும் அனுமதி பெற்று நுழைய, ''வாங்க துர்கா. அவங்களுக்கு விபத்து நடந்ததுகூட நினைவில்லை. தெளிவா பேசறாங்க. ஆனா, எதுவுமே புரியல.''

''அப்படீனா?''

''நான் யாரு, எதுக்காக இங்கே இருக்கேன்னு கேக்கறாங்க. அடிபட்டதுல எல்லாம் மறந்திருக்கு. அம்னீஷியா மாதிரி தோணுது துர்கா.''

''டாக்டர்?''

''இதயமும் பலவீனமா இருக்கு. ஜாக்கிரதையாதான் கையாளணும்.''

''மாமா வருவார். அடையாளம் தெரியுதானு பாக்கலாம் டாக்டர்.''

துர்காவும், செந்திலும் வெளியே வந்தார்கள்.

''அக்கா... அவங்க முழிச்சு, பழைய நினைவுகளோட தெளிவா இருந்திருந்தா, இன்னிக்கு பல உண்மைகள் வெளியே வந்திருக்கும். கடவுள்கூட நம்ம பக்கம் இல்லையா?''

அரை மணி நேரத்தில் நடேசன் ஆஸ்பத்திரிக்கு வந்துவிட்டார். ஏற்கெனவே அன்வர், கல்பனா வந்து கேட் அருகே நின்றார்கள். செந்தில் மூலம் சகல விவரமும் அறிந்திருந்தார் நடேசன். அவரும், துர்காவும் டாக்டரின் அனுமதி பெற்று ராஜத்தைப் பார்க்க உள்ளே வந்தார்கள். ராஜம் உட்கார்ந்திருந்தாள்.

''எப்படி இருக்கே ராஜம்?''

துர்கா !

''நீங்க யாரு?''

''என்ன ராஜம் இப்பிடி கேக்கற? நான் உன் புருஷன் - நடேசன்! இது துர்கா, உன் மருமகள். நல்லா பாரும்மா...''

''எனக்கு யாரையும் தெரியலை. யார், யாரோ என்னெல்லாமோ சொல்றீங்களே... எனக்கு ரொம்ப பயமா இருக்கு!''

- கலவரத்துடன் ராஜம் அழத் தொடங்க, இருவரும் வெளியே வந்து விட்டார்கள்.

''துர்கா... இது அம்னீஷியாதான். ரெண்டு நாள் எங்க பராமரிப்புல இருக்கட்டும். பிறகு, வீட்டுக்கு கூட்டிட்டுப் போலாம்.''

''குணப்படுத்த முடியாதா டாக்டர்?''

''பயப்படாதீங்க... மனோதத்துவ ரீதியா அப்ரோச் பண்ண வேண்டியிருக்கும். மற்ற டாக் டர்களை கலந்துட்டு உங்ககிட்ட வர்றோம்''

- டாக்டர் விடைபெற்றார்.

''ராஜம் செஞ்ச பாவங்களுக்கு கடவுள் இப்பிடியா தண்டிக்கணும்?''

''ப்ளீஸ் மாமா... அப்படிச் சொல்லாதீங்க!''

துர்காவின் செல்போன் அடித்தது. சேர்மன்.

''சொல்லுங்க சார்.''

''ஏர்போர்ட்டுக்கு நீங்க போகலையா?''

''கிளம்பிட்டேன் சார். விமானம், ரெண்டு மணி நேரம் லேட்னு எஸ்.எம்.எஸ் வந்தது.''

''இல்லை துர்கா. யார் உங்களுக்குச் சொன்னது? சரியான நேரத்துக்கு ஃப்ளைட் வந்தாச்சு.''

துர்கா ஆடிப்போனாள்!

''உங்களை யாரோ திசை திருப்பி விட்டிருக் காங்க. என்ன துர்கா இப்படி பொறுப்பில்லாம இருக்கீங்க?''

''சார்... நான் இப்பவே போறேன்.''

''எங்கே? வர்ற டெலிகேட்ஸ் தவிச்சிருப்பாங்க. நீங்கதானே அவங்களை ரிசீவ் பண்ணி ஸ்டார் ஓட்டலுக்கு கூட்டிட்டுப் போயிருக்கணும்? கெட்ட பேராயிடுச்சே. முக்கியமான சி.டி-க்கள் வேற. ஏதாவது செய்ங்க. பெரிய பிஸினஸ் துர்கா... உங்களை நம்பித்தான் நான் இருக்கேன்!''

''சரி சார்!''

துர்கா முகம் சிவந்து உடம்பில் ஒரு நடுக்கமே பரவிவிட்டது.

''என்னம்மா?'' - நடேசன்.

''நீங்க வீட்டுக்குப் போங்க. நான் பெரிய பிரச்னையில மாட்டியிருக்கேன் மாமா.''

பதற்றமாக துர்கா புறப்பட, செந்தில் பின்னால் ஓடி வந்தான்.

''அக்கா... என்ன பிரச்னை? என் உதவி தேவைப்படுமா உங்களுக்கு?''

''இல்லை செந்தில். என்னை தனியா விடுங்க!'' - விருட்டென்று காரில் ஏறினாள்.

அதேநேரம் காண்டீபன் ஆர்வத்துடன் காத்திருந்தார். அறைக்குள் வேகமாக நடந்தார். செல்போன் அடிக்க, பாய்ந்து எடுத்தார். ராங் கால். அடுத்த பத்தாவது நிமிடம் மறுபடியும் போன் வந்தது.

''சொல்லு சதீஷ்! ஏர்போர்ட்லேருந்து பேசறியா?''

''நான் நேர்ல வர்றேன்... பேசணும்.''

சில நிமிடங்களில் சதீஷ் வந்துவிட்டான்.

''சொல்லு... ஆட்களை மடக்கி சி.டி-க்களை வாங்கிட்டியா?''

''இல்லை சார்... நாமதான் ஃப்ளைட் ரெண்டு மணி நேரம் லேட்னு துர்காவுக்கு தப்பான தகவல் கொடுத்தோம். நான் சரியான நேரத்துக்கு ஏர்போர்ட்டுக்கு போயிட்டேன்.''

''அப்புறமென்ன?''

''அந்த ஆட்கள் வரல.''

''அவங்க யார்னு உனக்குத் தெரியுமா?''

''நல்லா தெரியும். என் கண்ல படவே இல்லை. அப்புறமா உள்ளே போய், வந்தவங்க பட்டியல தேடினா, அவங்க வந்துட்டதா தெரியுது. நான் எப்படி தவறவிட்டேன்னு தெரியல!''

''அடப்பாவி! நல்ல வாய்ப்பை விட்டுட்டியே!''

''அவங்களை நான் தேடிப் புடிச்சு எப்படியாவது வாங்கிடறேன்...''

காண்டீபனுக்கு ஒரு போன் வந்தது. வந்த தகவல் காண்டீபன் முகத்தை இருள வைத்தது!

அது என்ன தகவல்?!

- தொடருங்கள் தோழிகளே...
ஆடைகள் உதவி: பி.எம்.சில்க்ஸ்,
மயிலாப்பூர், சென்னை

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism