Published:Updated:

கொல்லிமலைப் புதையல் !

வேணு சீனிவாசன்,ஸ்யாம்

கொல்லிமலைப் புதையல் !

வேணு சீனிவாசன்,ஸ்யாம்

Published:Updated:
 ##~##

100 வயதைக் கடந்த மூசோ தாத்தாவின் குடிசைக்கு அவரது எதிரிகள் தீ வைத்ததைச் சொன்ன ஆறுமுகம், ''உள்ளே மாட்டிக்கிட்ட தாத்தாவை எங்க அப்பாதான் காப்பாத்தினார். ஆனா, தாத்தா வெச்சு இருந்த பல மந்திர ஓலைச் சுவடிகள் நெருப்பில் எரிஞ்சுபோச்சாம். வெறுத்துப்போன தாத்தா, ஊருக்கு வெளியே ஒரு தோட்டத்தில் குடிசை போட்டுத் தனியா வாழறார்'' என்றான் ஆறுமுகம்.

''அவருக்குத்தான் கொல்லிமலைப் புதையல் ரகசியம் தெரியுமா?'' என்று கேட்டான் வாசு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ஆமா. அதோ, அதுதான் மூசோ தோட்டம்'' என்றான் ஆறுமுகம்.

அடர்த்தியான மரங்கள், செடி கொடிகள் மண்டிக்கிடந்தன. பலா மரங்களில் கைக்கு எட்டும் உயரத்தில் பழங்கள் தொங்கின. கிளிகளும் குருவிகளும் கொத்தித் தின்றதால், அந்த இடத்தில் பலாச்சுளையின் மணம் கமகமத்தது. தாய்க் குரங்கு ஒன்று பழுத்து வெடித்த பலாப்பழத்தில் கையைவிட்டு சுளைகளை எடுத்து, குட்டிகளுக்கு ஊட்டிக்கொண்டு இருந்தது.

சில நிமிடங்களில் அந்தக் குடிசையை அடைந்தார்கள். ஆறுமுகம் மட்டும் உள்ளே சென்று, 10 நிமிடங்களுக்குப் பிறகு வந்து அவர்களை அழைத்தான்.

கொல்லிமலைப் புதையல் !

மூசோ தாத்தா ஒரு மரப்பெட்டியின் மீது உட்கார்ந்து இருந்தார். கறுப்பு நிறப் போர்வையைப் போர்த்தி இருந்தார். பழுத்த பழம்போல காணப்பட்டார். எல்லோரும் அறிமுகம் செய்துகொண்ட பின், ஆறுமுகம் யானையின் நோயைப் பற்றித் தெரிவித்து, ஓடைப்பொன்னை எடுக்க வந்ததாகச் சொன்னான்.

சுருங்கிப்போன கண்களோடு நிமிர்ந்த மூசோ தாத்தா, ''நீ சொல்றது சரிதான். குகைக்குள்ளே இருக்கிற புதையலை எடுத்தாத்தான் நெற்றிப் பட்டம் கிடைக்கும். அங்கே, பொன் தாமரைப்பூவும் பொன்மாலையும்கூட இருக்கும்'' என்றார்.

''இது என்ன தாத்தா புதுசா சொல்றே? பொன்பூவும் சங்கிலியும்கூட  இருக்கா?'' என்று வாயைப் பிளந்தான் ஆறுமுகம்.

''ஆயிரம், ரெண்டாயிரம் வருஷத்துக்கு முன்னால், நம்ம முன்னோர்கள் கிணைப்பறைங்கிற மேளத்தை அடிச்சுக்கிட்டு விடிகாலையில் ராஜாவின் அரண்மனை முன்னாடி நின்னு பாடுவாங்க. இனிமையான பாட்டுச் சத்தம் கேட்டுக்கிட்டே ராஜா எழுந்து வருவார். பாட்டுப் பாடினவங் களையும், மேளம் அடிச்சவங்களையும் கூப்பிட்டுத்  துணிமணிகளைக் கொடுப்பார். எல்லாருக்கும் கறிசோறு போடுவார். அதோடு, ஆண்களுக்குப் பொன்னால் செஞ்ச தாமரைப் பூவையும் பெண்களுக்குப் பொற்காசு மாலையையும் தருவாராம். காட்டு யானையைப் பிடிச்சுப் பழக்கும் ஆம்பளைங்களுக்கு, போரில் தான் ஜெயிச்ச ராஜாவின் யானையின் நெற்றிப் பட்டத்தைப் பரிசாத் தந்து கௌரவம் செய்வார்'' என்றார் மூசோ தாத்தா.

''அந்தக் காலத்துல நம்ம ஆளுங்க இவ்வளவு மதிப்போடு இருந்தாங்களா?'' என்று வியந்தான் ஆறுமுகம்.

''புறநானூறு பாடலில்கூட இந்த விஷயங்களைப் புலவர்கள் பதிவுசெஞ்சு இருக்காங்க'' என்றார் வாசுவின் தாத்தா.

''அப்போ எல்லாம் பேங்க் ஏது? இப்படிக் கிடைக்கும் தங்க நகைகளைச் சில குடும்பங்கள் ஒண்ணாச் சேர்ந்து குகையில் பத்திரப்படுத்துவாங்க'' என்றார் மூசோ தாத்தா.

''மலை உச்சியில் நிறையக் குகைங்க இருக்கு. வாங்க உடனே அங்கே போகலாம்'' என்று பரபரத்தான் ஆறுமுகம்.

கொல்லிமலைப் புதையல் !

''பொறுமையா இரு. மலை உச்சிக்கு சுலபமாப் போக முடியாது. வண்டுகளும், விஷப் பூச்சிகளும் தொல்லை கொடுக்கும். இதுக்கு எல்லாம் தப்பி மேலே போனால், ஒரு மலை அருவி வரும். அங்கே, பல சின்னச் சின்ன குகைகள் இருக்குது. ஒவ்வொரு குகைக்கு உள்ளேயும் விஷப் பாம்புகள், ரத்தம் குடிக்கும் வெளவால்கள் எல்லாம் இருக்கு. அதனால், நிறையப் பேர் பாதியிலே திரும்பிட்டாங்க. தைரியமாப் போனவங்க செத்துப்போய்ட்டாங்க'' என்றார் மூசோ தாத்தா.

''என்ன தாத்தா பயமுறுத்துறே? புதையலை எடுக்க என்னதான் வழி?'' என்று கெஞ்சினான் ஆறுமுகம்.

''வழியை நாளைக்குச் சொல்றேன். அதோ தெரியுதே குடிசை, அங்கே போய் ஓய்வு எடுத்துக்கங்க'' என்று விஷயத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார் மூசோ தாத்தா.

அந்தக் குடிசைக்கு அனைவரும் வந்தனர். தாங்கள் கொண்டுவந்த பைகளை வைத்துவிட்டு அமர்ந்தனர். மண்தரை சில்லென்று இருந்தது. தரையில் கால் நீட்டி அமர்ந்தது, கால் வலிக்கு இதமாக இருந்தது. ''சாப்பிட ஏதாவது கொண்டுவர்றேன்'' என்ற ஆறுமுகம்,  கிளம்பினான்.

காற்று சிலுசிலுவென்று வீசியது.  ''ஏசி-யில் இருக்கிற மாதிரி குளிருது'' என்ற வாசு, வெளியே பார்த்தான். செடி கொடிகள், பல வகையான நிறங்களில் பூக்கள், வண்ணத்துப் பூச்சிகள், தும்பிகள், பெயர் தெரியாத பூச்சிகள் பலவும் பறந்தன.

ஒரு தும்பியைப் பிடிக்க ஓடினான் வாசு. ''வாசு, ரொம்பத் தூரம் போகாதே'' என்று குரல் கொடுத்தார் தாத்தா.

''பல விதமான விலங்குகள், பறவைகளை நேரில் பார்க்கிறது சந்தோஷமாக இருக்கு. எங்க வகுப்பில் பயணக் கட்டுரை எழுதச் சொல்வாங்க. நான் அருமையான கட்டுரை எழுதி முதல் மார்க் வாங்குவேன்'' என்றாள் மைதிலி.

சிறிது நேரத்தில் ஆறுமுகம், பழங்கள், தேன், தினைமாவு ஆகியவற்றை எடுத்துவந்தான். மைதிலி தம்பியைக் கூப்பிட்டாள். பதில் இல்லை.வெளியே வந்து, ''வாசு... வாசு'' என்று கத்தினாள். அவள் குரல் மலையில் மோதி எதிரொலித்தது.

''நான் பார்த்துட்டு வர்றேன்'' என்று ஆறுமுகம் கிளம்பினான்.

''அப்பவே சொன்னேன், ரொம்பத் தொலைவு போகாதேனு. கேட்க மாட்டானே'' என்றார் தாத்தா.

ஆறுமுகம் காட்டுப் பாதையில் வாசுவைத் தேடிக்கொண்டு சென்றான். சிறிது தொலைவில் புதர்களுக்கு நடுவே ஒரு கால் தெரிந்தது. அது வாசுவின் கால். புதர்களின் மறைவில் வாசு விழுந்துகிடந்தான். அவன் உடலில் அசைவு இல்லை.

(தொடரும்...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism