Published:Updated:

பூங்காவில் புது நண்பன் !

சுப்ரபாரதிமணியன் கண்ணா

பூங்காவில் புது நண்பன் !

சுப்ரபாரதிமணியன் கண்ணா

Published:Updated:
##~##

திலீபனின் அப்பா வெங்கடாசலம் இரு சக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டு போகும்போது, காற்று காதுகளில் நிறைந்தது. ''பிருந்தாவன் பூங்கா போனதில் இருந்து எப்பப் பாத்தாலும் பூங்கா இல்லேனா எங்காச்சும் போகலாம்னு நச்சரிப்பு'' என்றார் சற்றே எரிச்சலுடன்.

அம்மா ராஜாமணி திலீபனை இறுக அணைத்துக்கொண்டாள். 'நல்ல இடங்களைப் பார்க்க ஆசை வருவது நல்லதுதான்.’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வாரா வாரம் ஞாயிற்றுக்கிழமை மாலை, ''எங்காச்சும் பூங்கா போலாம்ப்பா'' என்பான் திலீபன்.

''நம்ம திருப்பூர்ல பூங்கா எங்கேடா இருக்கு? அஞ்சு லட்சம் பனியன் தொழிலாளிங்க இருக்காங்க. ஓய்வுனா சினிமாவுக்குத்தான் போகணும்.''

''பிருந்தாவன் பூங்கா?''

''அதுக்குத்தான் போயிட்டு வந்துட்டமே.''

''புகைவண்டி நிலையம் பக்கத்தில்...''

''அங்கே நெறையக் கட்டடங்க வந்துருச்சு.''

''அழகு மலை பசுமைப் பூங்கா?''

''அழகு மலை முருகனையும் தரிசிக்கலாம்'' என்றாள் ராஜாமணி. 'சேவ்’ அமைப்பு அந்த பசுமைப் பூங்காவை அமைத்து இருந்தது. ஆதரவற்ற ஏழைக் குழந்தைகள் அங்கே தங்கி, பெருந்தொழுவு பள்ளிக்குச் சென்று படிக்கிறார்கள்.

பூங்காவில் புது நண்பன் !

''திருமுருகன் பூண்டி பூங்கா?''

கோயில், முகப்பில் இருந்தது. குழந்தைகள் விளையாட இரண்டு ஊஞ்சல்கள். சறுக்கு மேடை. ஓடி விளையாட நல்ல விரிவான இடம். ஞாயிறு என்றால் கூட்டம் இருக்கும். ஊஞ்சல் விளையாட வரிசை இருக்கும். அப்படி வரிசையில் நின்றபோதுதான் அந்த  அறைகள் திலீபனின் கண்களில் பட்டன.

''அதெல்லாம் என்னப்பா?''

''கோயிலுக்கு வர்றவங்க தங்குறதுக்கு. மன நோயாளிகள் இங்கே தங்கி, கிணத்திலே குளிச்சா, நோய் விலகும்னு நம்பிக்கை. முருகன் சூரபத்மனைக் கொன்ற பிறகு இங்கே வந்திருக்கார். சிவன் இங்கே காத்துக்கிட்டு இருக்கச் சொல்லி இருக்கிறார். வந்து பார்த்தா, சிவன் எங்கே இருக்கார்னு தெரியலே. முருகனுக்குச் சித்தபிரமை பிடிச்சிருச்சு. சிவன் தேடிக் கண்டுபிடிச்சு அலைஞ்சு இருக்கார். அதுதான் முன்னாடி இருக்கிற அந்தக் கோயில்.''

அன்றைக்கு இவர்கள் செல்வதற்குள் ஏழு மணி ஆகிவிட்டது. பூங்கா வாயிலைப் பூட்டப்போவதாக சொன்ன காவலாளி, ''ஒரு கிலோ மீட்டர் தூரத்துல செம்மொழிப் பூங்கா இருக்கு. ஒன்பது வரைக்கும் தொறந்திருக்கும்'' என்றார்.

''அப்பா அங்கே போலாம்'' என்றான் திலீபன்.

மூவரும் கிளம்பினார்கள். பூங்கா மின் விளக்குகளால் பிரகாசித்துக்கொண்டு இருந்தது. நான்கு தூண்கள் இருந்தன. வழுக்கு மேடைகள். நடைபாதை மேடைகள். வர்ண விளக்குகள். உயரத்தில் நீரூற்று ஒன்று. சுற்றுச் சுவர்களில் திரு.வி.க., வள்ளலார், பாரதி, பாரதிதாசன், அம்பேத்கர், காந்தி, அப்துல் கலாம் ஓவியங்கள்.

இரண்டு முறை பூங்காவை வலம் வந்தனர்.  ''அம்மா, நீ தூரி விளையாட வாய்ப்பே இல்லை. நிறையக் குழந்தைகள் இருக்காங்க. அம்மாக்களும் காத்துக்கிட்டு இருக்காங்க'' என்றான் திலீபன்.

''மானத்தை வாங்காதே!'' என்று அம்மா சொல்ல, வெங்கடாசலம் உரக்கச் சிரித்தார்.

அம்மாவும் அப்பாவும் பேசிக்கொண்டு இருக்கட்டும் என்று திலீபன்  பூங்காவின் மூலையில் இருந்த ஒரு பாறை மீது உட்கார்ந்தான். பாறை குளுமையாக இருந்தது. தீப்பொறி ஒன்று காற்றில் பறந்து வந்தது போல், அவன் அருகில் அந்த மின்மினிப் பூச்சி வந்து உட்கார்ந்தது.

''இந்தப் பூங்காவுக்குப் புதுசா?'' என்று கேட்டது மின்மினி.

''ஆமா. நீ?''

''நானும்தான். இந்தப் பூங்காவுலதான் நாலு நாளா இருக்கேன்.''

''இதுக்கு முந்தி?''

''கல்லாறு பழத்தோட்டத்தில்.''

''எதுக்கு இங்கே வந்தே?'' என்று கேட்டான் திலீபன்.

''ஒரு கல்யாண விசேஷத்துக்காக வாழை மரம் வெட்டிக்கிட்டு வந்தாங்க. அதிலே நான் ஒட்டிக்கிட்டு வந்துட்டேன்.''

''இங்கே எத்தனை நாள் இருப்பே?''

''சீக்கிரம் போயிரணும். பூங்கா சூடா இருக்கு. மாலையில்தான் தண்ணி விடுறாங்க. இந்த சூட்டிலே என்னாலே இருக்க முடியாது. காத்து சுத்தமா இல்லே. மரங்களும் ரொம்பக் குறைவு.''

''பனியன் தொழில்ல பல கோடி ரூபா அந்நியச் செலவாணி வர்ற ஊர். ஆனா, தொழிலாளர்கள் விடுமுறையில் ஓய்வெடுக்க நல்ல பூங்காக்கள் இல்லை. இது நகரத்தைவிட்டு 10 கி.மீ. தாண்டி இருக்குது'' என்றான் திலீபன்.

''ஊரில் பூங்கா இருக்கிறதுக்குப் பதில் பூங்கா மாதிரி ஊர் இருக்கணும்'' என்றது மின்மினி.

''நல்லாச் சொன்னே. ஆமா, நீ  பகலில்கூட பளிச்னு இப்பிடியே இருப்பியா?''

''அது ரகசியம். உன் ஆசிரியர்கிட்ட கேள். பாடத்தில் என்னைப் பத்தித் தேடு'' என்று சொல்லிவிட்டு மேலே எழுந்தது.

''திலீபன்... திலீபன்...'' என்று அழைக்கும் குரல் கேட்டது.

''அம்மா, அப்பா என்னைத் தேடுறாங்க'' என்றபடி பாறையில் இருந்து மெதுவாகக் கீழே இறங்கினான் திலீபன்.

''என்னையும் கல்லாறு பழப் பண்ணை தேடுது'' என்றவாறு பறந்தது மின்மினி.

வெங்கடாசலமும் ராஜாமணியும் அவனை நெருங்கினர். ''என்னடா தனியா உட்கார்ந்துட்டே?'' என்றார் அப்பா.

''நீங்க ரெண்டு பேரும் சீரியஸாப் பேசிக்கிட்டு இருந்தீங்க, அதான். அடுத்த வாரம் கல்லாறு பழப் பண்ணைப் பூங்காவுக்குப் போலாம்ப்பா.''

''புதுப் பூங்காவைக் கண்டுபிடிச்சுட்டியா?''

''மின்மினி சொல்லுச்சு.''

''அது யார் மின்மினி?''

''ஃப்ரெண்டுப்பா'' என்றான் திலீபன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism