Published:Updated:

துர்கா !

துர்கா !

துர்கா !

துர்கா !

Published:Updated:
 ##~##

'சதீஷின் முன்னாள் முதலாளி காண்டீபனுக்கு வந்த போன், அவர் முகத்தை இருளச் செய்தது. அது என்ன தகவல்?!' என கடந்த எபிசோட் முடிந்திருந்தது.

அதிலிருந்து நூல்பிடித்து அடுத்த எபிசோட் இயக்குநர் நாற்காலியைப் பிடிக்கும் போட்டியில், தூள் கிளப்பியிருக்கிறார்கள் வாசகிகள்!

பெங்களூரு - ஆர்.பிருந்தா, மகாதானபுரம் - கிருஷ்ணவேணி, கப்பலூர் - ஜெயசித்ரா... இவர்கள் மூன்று பேரும், நிறைய சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அதுவே அவர்களை ஏகத்துக்கும் குழப்பிவிட்டிருப்பது போலத் தெரிகிறது. 'தடக் தடக்’ என்று தடம் மாறுகிறார்கள். தொடர்ந்து முயற்சியுங்கள் தோழிகளே!

பாளையங்கோட்டை - அல்போன்ஸ்... இவர், புது கேரக்டரை அறிமுகப்படுத்துகிறார். ஆனால், கதையை விட்டு வெகுதூரம் விலகிப் போகிறதே!

அசோக்நகர் - சுமதி ரகு... இந்தத் தோழி, சதீஷை திருத்தப் பார்க்கிறார். சதீஷாவது... திருந்துவதாவது! கதை முடிய வேண்டுமா சகோதரி?!

பெசன்ட் நகர் - கல்பகம் லட்சுமணன்... காண்டீபனுடைய செகரெட்டரி தலையிட்டு, அந்த சி.டி-யைக் கைப்பற்றுவதாக கதையைத் திருப்பப் பார்க்கிறார். மைனர் கேரக்டருக்கு இத்தனை முக்கியத்துவமா?

'காண்டீபன் ஆபீஸில் சி.பி.ஐ ரெய்டு!' என ஒரு சின்ன டிவிஸ்ட், அதையடுத்து பெரிய பெரிய டிவிஸ்ட் என்று பிரமாதப்படுத்துகிறார் மயிலாப்பூர் - என்.உஷா. இதன் மூலம், அடுத்த எபிசோட் இயக்குநர் நாற்காலியைப் பிடித்தேவிட்டார். வாழ்த்துக்கள்!

துர்கா !

போனில் வந்த தகவல், காண்டீபனை கலங்கடிக்க... பதறி எழுந்தார்.

''என்ன சார் பிரச்னை?'' என்றான் சதீஷ்.

''அடப் போய்யா. நீயா தீர்த்து வைக்கப் போறே? என் ஆபீஸ்ல சி.பி.ஐ ரெய்டு. வீட்டுக்கும் அதிகாரிகள் வந்து முற்றுகை இட்டாச்சாம். இதை நான் எதிர்பாக்கல. பல டாக்குமென்ட்டுகள் மாட்டிக்கும். இருக்கற நஷ்டம் போதாதுனு இது வேற.''

''சார்...''

''பேசாதே சதீஷ். நான் கொலைகாரனா மாறிடுவேன்.''

நட்சத்திர ஓட்டலைவிட்டு வேகமாக வெளியே வந்தவர், தன் காருக்குள் நுழைந்து, படுவேகமாக இயக்கினார்.

ஓட்டலின் உள்ளே... என்ன செய்வதென்று தெரியாமல் நின்றான் சதீஷ். 'ஏற்கெனவே விமான நிலையத்துக்குச் சென்றும், நினைத்தது நடக்கவில்லை. ராஜம் பேசத் தொடங்கி, உண்மைகள் வெளியே வந்துவிட்டால், நான் மாட்டுவேன். அந்த சேர்மனும் நடவடிக்கை எடுப்பான். காண்டீபனும் மதிக்க மாட்டான். செந்தில் விடமாட்டான். நான் தப்புவது எப்படி?’

- கேள்விகளாக குடைந்தன.

'பாஸ்போர்ட் முதலான முக்கிய சங்கதிகளை எடுத்துக் கொண்டு, இவர்கள் பிடிப்பதற்குள் விமானத்தில் ஏறிவிட வேண்டும்.'

சரக்கென வெளியே வந்தான்.

அதேநேரம் ஆஸ்பத்திரியில் நடேசன், கல்பனா இருவரும் ஐ.சி.யு-வுக்கு வெளியே இருந்தார்கள்.

''துர்கா பதட்டமாப் போயிருக்கா. ஆபீஸ்ல பிரச்னைமா.''

''பாவி சதீஷ் பலமா வலை விரிச்சுருக்கான். துர்கா மாட்டிக்கப் போறா. அளவுக்கு மீறி அவனுக்கு இடம் கொடுத்தா...''

''ரொம்பக் கவலையா இருக்கு. ராஜத்துக்கு அம்னீஷியா. எல்லாம் மறந்து போச்சு. துர்காவுக்கு கெட்ட பேரு. ஆனந்த் நம்மை விட்டுப் பிரிஞ்சாச்சு. சுதா - செந்தில் கல்யாணம் நடக்குமானு தெரியல. நமக்கு மட்டும் ஏம்மா இத்தனை சோதனைகள்?''

- நடேசன் அழுதேவிட்டார்.

''அப்பா... நாம யாருக்கும் ஒரு பாவமும் செய்யல. எல்லாம் சரியாகும், கவலைப்படாதீங்க.''

ஐ.சி.யூ அறையில் உட்கார்ந்திருந்தான் செந்தில். ராஜம் கட்டிலில் உட்கார்ந்திருந்தாள். அந்த முகத்தில் மிரட்சி.

''மாப்ள... எதுக்காக அம்னீஷியா வந்த மாதிரி என்னை நடிக்கச் சொல்றீங்க? எல்லா உண்மைகளையும் சொல்லி, அந்த சதீஷ் தோலை உரிக்க என்ன தடை?''

துர்கா !

''அத்தே... அவசரப்படாதீங்க. ராத்திரி என்ன நடந்துச்சு?''

''எனக்கு நினைவு வந்துடுச்சு. அந்த நேரத்துலதான் அந்த டாக்டர் உள்ளே வந்தார். கண்மூடிப் படுத்திருந்தேன். என்னை நெருங்கினார். சத்தமே இல்லை. லேசா கண் திறந்தா... கழுத்தை நெரிக்க வந்தார். செல்போன் கூப்பிட அவர் அதை, எடுக்க, அதிர்ச்சியில் எழுந்து உட்கார்ந்தேன். அதே பயத்துல துர்கா, சாரதாம்மா வந்தப்பக்கூட ஏதேதோ உளறி மயக்கமாயிட்டேன்.''

''பயத்துல நீங்க உளறினது இப்ப நமக்கு சாதகமாயிடுச்சு அத்தே. மறுபடியும் நீங்க முழிச்சப்ப, நான் உள்ளே வந்துட்டேன். அம்னீஷியானு நடிங்கனு சொன்னேன்.''

''எதுக்கு?''

''சதீஷ் ராத்திரி எங்கிட்டேயிருந்து தப்பிச்சிட்டான். இப்ப துர்கா அக்காவுக்கு பெரிய ஒரு பிரச்னையை உண்டாக்கியிருக்கான்.''

''அய்யோ!''

''அந்தப் பாவிகிட்ட மனுஷங்களும் மாட்டக் கூடாது, கம்பெனி தொடர்பான டாக்குமென்டுகளும் மாட்டக் கூடாது. அவனைப் புடிச்சு உள்ளே போடறது கஷ்டமில்லை. ஆனா, அந்த காண்டீபன் வெளியில இருக்கான். அவன் முழிச்சுக்கிட்டா? எது நடந் தாலும், துர்கா அக்காவுக்குத் தான் பிரச்னை. இவங்க எல்லாருமே புத்திசாலி கிரிமினல்கள். ஆதாரத்தோட, கூண்டோட புடிக்கணும் அத்தே. அக்காவுக்கும் கஷ்டம் வரக்கூடாது, கல்யாணமும் நடக்கணும், குற்றவாளிகளும் மாட்டணும். இதெல்லாம் நடக்கணும்னா, அவனை நடமாட விட்டுப் புடிக்கணும். அதுக்குத் தான் அம்னீஷியா. புரியுதா?''

''அவன் உஷாராக மாட்டானா?''

''இந்நேரம் ஆகியிருப்பான் அத்தே. நாங்களும் அதைவிட உஷார். நேரம் வரும்போது உங்களுக்கே தெரியும். உங்க நடிப்பைத் தொடருங்க!''

''டாக்டர் கண்டுபுடிக்க மாட்டாரா?''

''டாக்டர் எங்க ஆள்தான்''

''மாப்ளை... எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க. நான் பாவி. துர்காவுக்கு இழைச்ச கொடுமைகளுக்கு நான் பரிகாரம் தேடணும்.''

''நீங்க திருந்தியாச்சு. இதுவே பரிகாரம்தான். உணர்ச்சிவசப்பட்டு நடிப்பை விட்ராதீங்க!''

''சரி மாப்ளை!''

செந்தில் வெளியே வந்த நேரம், சதீஷ் தன் வீட்டு வாசலில் இருந்தான். பூட்டு இல்லை.

'உள்ளே அம்மா இருக்காங்களா... தப்பிக்க முடியாதா... ஆபீஸ் வேலை என்று பொய் சொல்லி, உடனே புறப்பட வேண்டியதுதான்!’

பெல்லை அடிக்க, சாரதா வந்து திறந்தாள்.

''அம்மா! நீ எப்ப வந்தே?''

''ஆஸ்பத்திரிலேருந்து இப்பத்தான் வர்றேன்டா.''

ஒரு கணம் திடுக்கிட்டவன், ''சரி, நான் அவசரமா மும்பை போகணும்...''

வேகமாக உள்ளே வந்து தன் துணிமணிகள், பாஸ்போர்ட், தேவையான பணம், பொருட்கள் என பெட்டியில் அடுக்க, கதவோரம் நின்று சாரதா பார்த்தாள்.

''சதீஷ்... நான் ஏன் ராத்திரி ஆஸ்பத்திரில இருந்தேன்னு நீ கேக்கலையே?''

படக்கென திரும்பினான்!

''அம்மா!''

''உன்னைக் காப்பாற்றத்தான்!''

''என்ன சொல்றே?''

துர்கா !

''ராஜத்துக்கு நினைவு திரும்பினா, உண்மைகள் பேசுவா, உன்னைத் தூக்கி உள்ளே வைப்பாங்கனு பயந்து, கொலைக்கு ஏற்பாடு செஞ்சே...''

சதீஷ் ஆடிப் போனான்!

''அவ பிழைச்சிட்டானு தகவல் வந்த காரணமா, ஊரைவிட்டே ஓடிப்போக இப்ப தயாராயிட்டே. இல்லையா?''

''என்ன உளர்றே?''

''உளறலடா... நீ ஓட வேண்டிய அவசியம் இல்லைனு சொல்ல வந்தேன்!''

''அப்படீனா?''

''பிழைச்ச ராஜத்துக்கு பழைய நினைவுகள் எதுவுமே இல்லை. அம்னீஷியா. அவ உன்னைக் காட்டிக் கொடுக்க வாய்ப்பில்லை. நீ ஏற்பாடு செஞ்ச போலி டாக்டரும், தப்பிச்சாச்சு. எதுக்கு நீ ஊரைவிட்டு ஓடறே சதீஷ்?''

சதீஷ§க்கு தலை சுழன்றது! 'அத்தனை சங்கதிகளையும் இந்த அம்மா புட்டுப்புட்டு வைக்கிறாளே...?

சாரதா, அவன் தோளில் கை பதித்தாள்.

''அம்மா!''

''இதப்பாரப்பா... ஆட்டோல அடிபட்ட ராஜத்தை நான் காப்பாற்றினது தெய்வச் செயல். அப்ப முழிச்சுகிட்ட நான்... யோசிக்கத் தொடங்கினேன். உஷாராயிட்டேன். உன் அம்மாடா நான். நீ எந்த திசையில பயணம் செய்வேனு தெரியாதா? துர்காகிட்ட தோற்றுப் போனாலும், அவகிட்டயே வேலைக்குச் சேர்ந்தது ஏன்..?''

''அம்மா!''

''ஜெயிக்கணும்னு நீ எந்த எல்லைக்கும் போவேனு பக்கத்துல இருந்து பார்த்தவ நான். இதப்பாருடா... நீ கிரிமினலா இருக்கலாம். ஆனா, எனக்குப் பிள்ளைடா. ராஜத்தைக் கொல்ல நீ முயற்சி செய்வேனு எனக்குத் தெரியும்டா. அது விபரீதமா முடிஞ்சிடக் கூடாதேனுதான் முன்கூட்டியே ஆஸ்பத்திரிக்கு வந்து காவல் கிடந்தேன். ராஜத்து மேல அக்கறை இருக்கிற மாதிரி நடிச்சேன். போலீஸ்கார செந்தில் கிட்ட உருகினேன். துர்காவும், என் மேல அளவு கடந்த நம்பிக்கை வெச்சுருக்கா. போதாதா?''

துர்கா !

''அம்மா!''

''சதீஷ்... நீ வாழணும்டா. எனக்கு இந்த உலகத்துல உன்னை விட்டா என்னடா இருக்கு? நீ தப்பி ஓட நினைச்சதுல தப்பில்லை. ஆனா, இந்த அம்மாவை அனாதையா விட்டுட்டுப் போக எப்படீப்பா மனசு வந்துச்சு?''

சாரதா அழுதுவிட்டாள்.

''என்னை மன்னிச்சிடும்மா. நான் இதையெல்லாம் கொஞ்சம்கூட எதிர்பாக்கல.''

''பிள்ளை எப்படி இருந்தாலும், அம்மாவுக்கு அவன் ஒருத்தன்தான்டா. ராஜம் பேசற நிலையில இல்லை. அதனால உண்மைகள் உடையாது. கொலை முயற்சியை நீ கை விடு. உண்மைகள் வெளில வரலைனா, உன் மேல துர்காவுக்கு சந்தேகம் வராது.''

''அப்படியா சொல்ற? தொடர்ந்து துர்காகிட்ட வேலை பார்க்க முடியுமா?''

''வேண்டாம்டா. அது அபாயம். விட்ரு!''

''முடியாதும்மா... காண்டீபன் விடமாட்டான். என் மேல ஏகக் கடுப்புல இருக்கான். இந்த புராஜக்ட்ல பல கோடிகளுக்கு என்னை பங்குதாரரா சேர்த்து அக்ரிமென்ட் போட்டுட்டான். நான் செஞ்சு குடுக்கலைனா, என்னைப் போட்டுத் தள்ளிடுவான்.''

''அதனால?''

''துர்காகிட்ட நான் வேலை பார்த்து, ஜெயிக்கணும். அது முடியும்னு நம்பறேன்!''

''எனக்கு பயமா இருக்குடா...''

''இல்லைம்மா... எனக்கு இத்தனை உதவிகளை மறைமுகமா செஞ்சு, இப்பவும் என் பக்கம் பேசற ஒரு நபர் நீதான்...''

''அது என் கடமைடா.''

''அதை தொடரும்மா. துர்கா உன் மேல அளவு கடந்த மதிப்பும், பாசமும் வெச்சிருக்கறத எனக்கு சாதகமா உபயோகப்படுத்து. நான் சொல்லித் தர்ற மாதிரி தொடர்ந்து நீ செயல்பட்டா, துர்காவை வீழ்த்திட்டு, பல கோடிகளுக்கு நான் சொந்தக்காரன்!''

''உயிரைக் குடுக்கவும் இந்த அம்மா தயார். ஆனா... இந்த அம்மாவை விட்டுப் பிரியாதே.''

'' ஒரே வருஷம்... நீயும் நானும் வெளிநாட்டுக்கு பறந்துடலாம் பல கோடிகளோட! சரியா?''

சாரதா மெள்ள சிரித்தாள்.

அதேநேரம் கம்பெனியில் சேர்மனின் எதிரே துர்கா இருந்தாள்!

''ஒக்காரும்மா.''

''சார்... சி.டி-க்கள் கிடைச்சாச்சா?''

''பத்திரமா கிடைச்சாச்சு. நடுவுல என்ன பிரச்னை? நான்கூட உன்னை திட்டிட்டேன்!''

''சார்... நான் புறப்படும்போது விமானம் தாமதம்னு எஸ்.எம்.எஸ் தகவல் கிடைச்சுது.''

''சரி.''

''இதுல ஒரு சதி வலை இருக்கு சார்!''

''என்னம்மா சொல்றே?''

''அதை விடுங்க... என் தம்பி வெளியில நிக்கறான், கூப்பிடட்டுமா?''

''கூப்பிடு.''

அன்வர் உள்ளே வந்தான்.

துர்கா !

''என் தம்பி அன்வர். இவன்கிட்ட ஆதாரப்பூர்வமான லெட்டரை கொடுத்து, விமான நிலையத்துக்கு அனுப்பினேன். டெலிகேட்ஸ், குறிப்பிட்ட ஃப்ளைட்டுக்கு முந்தைய ஃப்ளைட்டுலயே வந்தாச்சு. இதெல்லாம் நாங்க போட்ட திட்டம்!''

''எதுக்கு?''

''கம்பெனி ரகசியங்களைக் காப்பாற்ற. அன்வர் சி.டி-க்களை வாங்கிட்டு, அவங்கள வேறொரு இடத்துல பத்திரமா தங்க வெச்சுட்டு, என்கிட்ட ரிப்போர்ட் பண்ணியாச்சு. அப்புறம்தான் உங்க போன் வந்துச்சு.''

''துர்கா, யூ ஆர் கிரேட்! சரி, அதென்ன சதி?''

''வேண்டாம். இப்ப நீங்க எதுவுமே தெரிஞ்சுக்க வேண்டாம்.''

''ஏன்?''

''இது பெரிய புராஜெக்ட். நாளைக்கு உங்களுக்கு ஆபத்து வரலாம். புராஜெக்டையும், உங்களையும் காப்பாத்தணும் சார். புரியுதா?''

''எதுக்கு துர்கா பிரச்னை? கிரிமினல்ஸ் குறுக்கே புகுந்தா, சட்டத்தை நாடலாமே?''

''சட்டத்தோட கண்களைக்கூட இங்கே உள்ள சதிகள் மூடிடும் சார். 24 மணி நேரமும் நான் விழிப்பாத்தான் இருக்கேன். என்னை நம்பி, ஒரு பொறுப்பை ஒப்படைச்சா, நான் உயிரைக் கொடுத்தாவது நிறைவேற்றுவேன் சார்.''

சேர்மன் சிலிர்ப்புடன் பார்த்தார்.

''துர்கா... ஒரே ஒரு கேள்வி...''

''என்ன சார்?''

''போலீஸ் ஆபீஸர் செந்தில் - உங்க உறவுக்காரர் - சதீஷை சந்தேகப்படறார். என்னை எச்சரிக்கறார். என்ன செய்யலாம்?''

''சந்தேகப்படறது போலீஸோட உரிமை சார். தப்பில்லை. சதீஷ§ம் வேலையில தொடரட்டும்...''

''சரிம்மா!''

துர்கா, அன்வர் வெளியே வந்தனர்.

''அக்கா... எங்கே போகணும்?''

''ஆஸ்பத்திரிக்கு. ரெண்டு நாள் பாத்துட்டு, அத்தையை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயிடலாம்.''

''அவங்க அம்னீஷியா எப்ப குணமாகும்?''

''அவங்களுக்கு அம்னீஷியாவே இல்லை அன்வர். அப்படி நடிக்கறாங்க!''

அன்வர் அதிர்ந்தான்!

''எதுக்குக்கா?''

பதில் சொல்லாமல் மெதுவாகச் சிரித்தாள்.

''நம்மை சுற்றி என்னக்கா நடக்குது? யார் நல்லவங்க, யார் கெட்டவங்க?''

''அதைக் காலம் தீர்மானிக்கட்டும் அன்வர். என்னை ஆஸ்பத்திரியில விட்டுட்டு, நான் சொல்ற வேலையைச் செய்.''

காதோடு ஏதோ சொன்னாள். அவனை வெளியே நிற்க வைத்துவிட்டு, மாஸ்டர் கம்ப்யூட்டர் அறைக்குள் நுழைந்தாள். உள்ளே யாருமில்லை. 15 நிமிடங்கள் அங்குள்ள எந்திரங்களுடன் செயல்பட்டு திரும்பினாள்.

''போகலாம் அன்வர்!''

இருவரும் புறப்பட்ட நேரம், காண்டீபன் தன் அலுவலகத்தில் இருந்தார். எந்த ரெய்டும் இல்லை. ஒரு வகையில் நிம்மதி. ஆனால், இந்தப் புரளியைக் கிளப்பிவிட்டது யார்... பதற்றப்பட வைத்தது யார்? தன் செகரெட்டரி உட்பட அத்தனை பேரையும் குடைந்து எடுத்துக் கொண்டிருந்தார். ஒரே ஒரு அதிகாரி மட்டும் பேசவில்லை. அனைவரும் போன பிறகும் அவர் நின்றிருந்தார்.

''சார்... தன் ஆள் மூலம் புரளி கிளப்பினது யாருமில்லை... சதீஷ்!''

''என்ன உளர்றே?''

''சதீஷ், துர்காவுக்கும் சாதகமில்லை, உங்களுக்கும் விசுவாசமா இல்லை. கம்பெனி ரகசியங்களை கைப்பற்றி, உங்க ரெண்டு பேருக்கும் அல்வா கொடுத்துட்டு, தனியா பிஸினஸ் நடத்தி, எல்லாத்துக்கும் சொந்தமாக திட்டம் போட்டுட்டான்!''

''என்ன உளர்றே?''

''இதோ வீடியோ ஆதாரம்...''

ஒரு பென் டிரைவை, அங்குள்ள சிஸ்டத்தில் அவர் செருக, சதீஷ் ஓர் அறைக்குள் நுழையும் காட்சி! பவ்யமாக சதீஷ் வணங்குகிறான்.

''எல்லாம் சரியா நடக்குதா சதீஷ்?''

''நடக்குது மேடம். ரெண்டு பக்கமும் கண்களை கட்டியாச்சு. வேலை தொடங்கியாச்சு!''

''சேர்மன், காண்டீபன் ரெண்டு பேரும் இழக்கணும். பழி துர்கா மேல வரணும்!''

''வரும் மேடம்!''

''நீ சாதிக்கலைனா, உயிரோட இருக்கமாட்டே!''

- சொன்ன அந்தத் தேன் குரலுக்குச் சொந்தமான பெண், தன் முகத்தை திரையில் காட்ட, காண்டீபன் அலறி விட்டார்!

யாரது?!

- தொடருங்கள் தோழிகளே...
ஆடைகள் உதவி: பி.எம்.சில்க்ஸ்,
மயிலாப்பூர், சென்னை