Published:Updated:

இதயம் இல்லாதவன் !

இதயம் இல்லாதவன் !

இதயம் இல்லாதவன் !

இதயம் இல்லாதவன் !

Published:Updated:
##~##

வான் வழியே ஒரு தேவதை பறந்து சென்றுகொண்டு இருந்தாள். அப்போது, கீழே  இருந்து மக்களின் அவலக் குரல் அவள் காதுகளைத் தீண்டியது.  குனிந்து பார்த்தாள். சிதையில் கிடத்தப்பட்டு இருந்த ஓர் உடலைச் சூழ்ந்துகொண்டு, மக்கள் கண்ணீர்விட்டுக் கதறுவது தெரிந்தது.

உடனே, தேவதை மனிதப் பெண்போல் உருவம்கொண்டு, மக்கள் கூட்டத்தோடு தானும் ஒருத்தியாய்க் கலந்தாள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இறந்துபோனவன் அந்த மக்களின் ஒப்பற்ற தலைவன். நாட்டிலே கொடுங்கோல் ஆட்சி புரிந்து, மக்களைத் துன்புறுத்திய பிங்களன் என்ற அரக்கனை எதிர்த்த மக்கள் போராளி. தன்னலமற்ற அந்தத் தலைவனை அமைதிப் பேச்சுக்கு வருமாறு அழைத்து இருக்கிறான் பிங்களன். அதை நம்பிச் சென்றான் அந்தத் தலைவன். பாம்பினும் கொடியவனான பிங்களன், வஞ்சகமாய் உணவிலே நஞ்சைக் கலந்து தலைவனைக் கொன்றுவிட்டான்.

இந்தச் செய்திகளை மக்களிடம் உரையாடித் தெரிந்துகொண்டாள் தேவதை. பிங்கள அரக்கன் அந்த நாட்டு மக்களுக்கு இழைத்துவரும் கொடுமைகளைக் கேட்டு அறிந்த தேவதையின் விழிகளும் கண்ணீரைச் சொரிந்தன.

தலைவனின் உடல் விறகுகளால் மூடப்பட்டு எரியூட்டப்பட்டது. மக்கள் கொஞ்சம் கொஞ்சமாய்க் கலைந்தார்கள். இறுதியில் தேவதை மட்டுமே எஞ்சி நின்றாள்.

சிதையின் நெருப்பு அணைந்து அடங்கியது. எஞ்சி இருந்த சாம்பல் குவியலின் நடுவே, அந்தத் தலைவனின் இதயம் மட்டும் எரியாமல் இருப்பதைத் தேவதை கண்ணுற்றாள். பெரு வியப்புக்கொண்ட தேவதை, நெருங்கிச் சென்று அந்த இதயத்தைக் கையில் எடுத்தாள். அடுத்த நொடியே, அந்த இதயம் பொன் நிறமாக மாறியது. 'லப்டப்... லப்டப்’ என்று துடிக்கவும்செய்தது.

தேவதை எத்தனையோ விந்தைகளைக் கண்டவள். கணக்கில் அடங்கா விந்தைகளை அவளே நிகழ்த்திக்காட்டியவள். ஆனால், இப்படி ஒரு விந்தையை அவள் கண்டது இல்லை. தன் மக்களுக்காக இறந்த பின்னும் துடித்துக்கொண்டு இருக்கும் தலைவனின் ஒப்பற்ற இதயத்தை எடுத்துக்கொண்டாள் தேவதை. தன் சிறகுகளை விரித்து விண்ணிலே பறந்தாள்.

அவள் மனமோ கனத்துக்கிடந்தது. தேவதை நினைத்தால், அந்த அரக்கனை சில நிமிடங்களில் கொன்றுவிட முடியும். ஆனால், அதில் அவளுக்கு விருப்பம் இல்லை.

இதயம் இல்லாதவன் !

சில நாட்களுக்குப் பிறகு...

அன்று பிங்கள அரக்கனின் பிறந்த நாள். கப்பம் கட்டும் சிற்றரசர்களும், நட்புப் பாராட்டும் பேரரசுகளின் தூதுவர்களும் தலைநகரிலே குழுமி இருந்தார்கள். அரக்கனைப் போற்றிப் புகழ்ந்து பரிசுகளை அளித்தார்கள். நம் தேவதையும் கையிலே ஓர் அழகிய தந்தப் பேழையுடன் பெண் புலவர் போல் அரண்மனைக்கு வந்தாள். பிங்கள அரக்கனைச் சந்தித்தாள்.

''பார் போற்றும் வேந்தே, யாம் விந்தியப் பேரரசின் தூதுவராய் வந்துள்ளோம். எம் பேரரசர் உம்மை வாழ்த்துகிறார். குறிப்பாக, கலகக்காரர்களின் தலைவனைப் பேச்சுக்கு அழைத்து, நஞ்சுகொடுத்துக் கொன்ற உம் அறிவையும் திறமையையும் அவர் மெச்சிப் பாராட்டுகிறார். உரிமை கேட்கும் மக்களை அடக்கி நசுக்குவதுதான் எம் நாட்டின் கொள்கையும். அந்த வகையிலே எம் பேரரசர் உம்மைப் பாராட்டி மகிழ்கிறார்.'' என்றாள்.

தேவதையின் புகழ்ச்சியைக் கேட்டு அரக்கன் புன்னகையோடு தலையசைத்துக்கொண்டான். தேவதை மேலும் தொடர்ந்தாள்.

''அரசே, தாங்கள் ஒரு விந்தையான உடல் அமைப்பைக்கொண்டவர் என்பதை நாடு அறியும். தங்களுக்கு இதயம் என்ற உறுப்பே கிடையாது. இத்தகைய தனித்தன்மை உள்ள மந்திர ஆற்றல் மிக்க உம்மை, அறியாமையில் மூழ்கிக் கிடக்கும் மக்கள், 'இதயம் இல்லாதவன்’ என்று தூற்றுவதைக் கேள்விப்பட்டு, எம் பேரரசர் பெரிதும் மனம் வருந்தினார். இதயம் இல்லை என்ற குற்றச்சாட்டை நீக்கும் வண்ணமாகப் பொன்னால் ஆன ஓர் இதயத்தை உமக்குப் பரிசாகக்கொடுத்து அனுப்பி உள்ளார். இந்தப் பொன் இதயத்தைத் தாங்கள் அணிந்துகொள்ள வேண்டும். இது தங்கள் நட்பை விரும்பும் விந்தியப் பேரரசரின் அன்புப் பரிசு.''

இவ்வாறு கூறிய தேவதை, கையில் இருந்த தந்தப் பேழையைத் திறந்தாள். துடித்துக்கொண்டு இருந்த தலைவனின் இதயத்தை வெளியே எடுத்தாள். அதன் கண்கூசும் ஒளியையும் அழகையும் கண்டு அவையோர் திகைத்தார்கள். பிங்கள அரக்கன் அகமகிழ்ந்தான்.

ஆவலுடன் அதை வாங்கி, ஒரு விருது போல் தன் இடது மார்பிலே பொருத்திக்கொண்டான். அடுத்த நொடியே ஒரு பெரிய மாற்றம் ஏற்படுவதை உணர்ந்தான்.

ஆம். தலைவனின் ஒப்பற்ற இதயம் கொடுங்கோலனை மாற்றியது. அந்தத் தலைவனின் குணம் அத்தனையும் பிங்களனுக்கு வந்தது.அவன் நல்மனம் கொண்டவனாய் மாறினான்.

தேவதை மனநிறைவுடன் தன் வான் வழிப் பயணத்தைத் தொடர்ந்தாள்.