Published:Updated:

கொல்லிமலைப் புதையல் !

வேணு சீனிவாசன், ஸ்யாம்

கொல்லிமலைப் புதையல் !

வேணு சீனிவாசன், ஸ்யாம்

Published:Updated:
##~##

''இங்கே வாங்க, வாசு விழுந்து கிடக்கிறான்!'' என்று அலறிக்கொண்டே அருகில் சென்று புதர்களை விலக்கிப் பார்த்தான் ஆறுமுகம்.

மூச்சுப்பேச்சு இல்லாமல் மண்ணில் கிடந்தான் வாசு. அவனை உலுக்கிய ஆறுமுகம், ''வாசு... வாசு!'' என்று உரத்த குரலில் கூப்பிட்டான். வாசுவிடம் அசைவே இல்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கொல்லிமலைப் புதையல் !

ஆறுமுகத்தின் அலறலைக் கேட்டு ''என்ன ஆச்சு?'' என்று பதறி ஓடிவந்தாள் மைதிலி. தம்பிக்கு அருகே உட்கார்ந்து, கன்னத்தில் லேசாகத் தட்டி, சுயநினைவுக்குக் கொண்டுவர முயற்சிசெய்தாள். தாத்தாவும் மைதிலிக்குப் பின்னால் வந்துசேர்ந்தார். 'பாம்பு கடிச்சு இருக்குமோ?’ என்ற சந்தேகம் தாத்தாவுக்கு. 'ஏதாவது ஆகிவிட்டால், இவனுடைய பெற்றோருக்கு என்ன பதில் சொல்வது? இதுபோன்ற இடத்துக்கு அழைத்துவந்து தவறு செய்துவிட்டோமோ’ என்று அவரது மனம் வருந்தியது.

வாசுவைத் தோளில் தூக்கிக்கொண்டு மூசோ தாத்தாவின் குடிசையை நோக்கி ஓடினான் ஆறுமுகம். மைதிலியுடன் சேர்ந்து தாத்தாவும் பின்தொடர்ந்தார்.

அவர்கள் குடிசையை அடைந்தார்கள். மூசோ தாத்தா வாசுவைக் கூர்ந்து கவனித்தார். ''இவனைப் பாம்பு கடிக்கலே, மயக்க இலையை முகர்ந்து இருக்கான், அவ்வளவுதான். மாத்து மருந்து தர்றேன்'' என்றார்.

ஒரு பானைக்குள் இருந்து ஒரு மரத்தின் பட்டையை எடுத்தார். அதைச் சிம்னி விளக்கின் தீயில் சுட்டார். புகை வந்தது. அந்தப் பட்டையை வாசுவின் மூக்கின் அருகே பிடித்தார்.

கொல்லிமலைப் புதையல் !

சில நொடிகளில் 'ஹச்’ என்று பலமாகத் தும்மல் ஒன்று போட்டவாறு வாசு படக்கென்று எழுந்து உட்கார்ந்தான். 'திருதிரு’ என விழித்தபடி சுற்றிலும் பார்த்தான். எல்லோர் முகங்களிலும் தொலைந்துபோன சந்தோஷம் திரும்ப வந்தது.

''மயக்க இலையை முகர்ந்து இருக்கான்னு எப்படி தாத்தா கண்டுபிடிச்சே?'' ஆச்சரியமாகக் கேட்டான் ஆறுமுகம்.

''பையனுடைய கையைப் பார். ஒரு இலை இருக்குதா? அது மயக்கம் வரவழைக்கிற இலை. அதைக் கிள்ளி முகர்ந்து இருக்கான். அந்தக் காலத்தில் கிராமத்தில் சித்த வைத்தியருங்க நோயாளிக்கு அறுவைசிகிச்சை செய்ய, இந்த இலையை மயக்க மருந்தா உபயோகிப்பாங்க. இப்போ, கிராமங்கள் மாறிப்போச்சு. இங்கிலீஷ் படிச்ச டாக்டருங்க வந்துட்டாங்க. மருந்து, மாத்திரைனு ஆயிட்டுது. யாருக்குமே கொல்லிமலையில் இதைப் போல மூலிகைகள் இருப்பது தெரியாது. தெரிஞ்சாலும் இதுதான் அந்தச் செடினு அடையாளம் காட்ட ஆளு இல்லே'' என்றார் மூசோ. அவர் குரலில் வருத்தம்.

''ஆங்கில மருத்துவம் உடனடி நிவாரணம் தருவது உண்மைதான். ஆனால், அதனால் நாம் எத்தனை அரிய வகை மூலிகைகளை இழந்துநிற்கிறோம்'' என்றார் வாசுவின் தாத்தா.

''டேய் வாலு, ஏன்டா அந்தச் செடியைத் தேடிப்போய் முகர்ந்து பார்த்தே?'' என்று திட்டினாள் மைதிலி.

''எனக்கு எப்படித் தெரியும்? அந்தச் செடி ரொம்ப வித்தியாசமாக மூக்குத்தி மாதிரி இருந்துச்சு. அதான் வாசனை பார்த்தேன்'' என்றான் வாசு.

''சரி, இருட்டுற நேரம் ஆச்சு. வாங்க குடிசைக்குப் போகலாம்'' என்றான் ஆறுமுகம்.

மூசோவுக்கு நன்றி தெரிவித்துவிட்டு, அனைவரும் தங்கள் குடிசைக்குத் திரும்பினர். பழங்கள், தேன் என்று இரவு உணவு வித்தியாசமாக இருந்தது. சாப்பிட்டுவிட்டு படுத்துக்கொண்டனர். ஒரு லாந்தர் விளக்கை ஆறுமுகம் எரியவிட்டான். அதில் இருந்து மெலிதான வெளிச்சம் வந்தது.

இருட்டு அடர்த்தியாகக் கத்தியால் கிழிக்கலாம் போலக் கனமாக இருந்தது. வெளியே குளிர்காற்று வீசியது. குளிர் உடலை உலுக்கியது. தரையில் பாய் விரித்துப் படுத்து இருந்த மைதிலிக்கும், வாசுவுக்கும் தூக்கமே வரவில்லை. கட்டில் மீது சொகுசு மெத்தையில் படுத்துப் பழக்கப்பட்ட அவர்களுக்குத் தரையில், பாயில் படுத்தது உறுத்தியது. குளிர் வேறு தாங்க முடியாத அளவுக்கு

கொல்லிமலைப் புதையல் !

இருந்தது. சில போர்வைகளை அவர்கள் கொண்டுவந்து இருந்தனர். அதனால் ஓரளவுக்கு சமாளிக்க முடிந்தது. சில்வண்டுகளின் ரீங்காரம் கேட்டது. தொலைவில் எங்கோ நரிகளின் ஊளை அவ்வப்போது அந்த மலைப் பகுதியின் அமைதியைக் குலைத்தது.

வாசுவும் மைதிலியும் எப்போது தூங்கினார்களோ தெரியாது. திடீரென்று ஏதோ சத்தம் கேட்டது. யாரோ கதவைப் பிராண்டும் சத்தம். அந்தச் சத்தம் கேட்டதும் மைதிலி முதலில் விழித்துக்கொண்டாள்.

குடிசைக்குள் இருட்டாக இருந்தது. விளக்கு அணைந்து போயிருக்க வேண்டும். போர்வையை விலக்கியவாறு எழுந்து அமர்ந்தாள் மைதிலி. அவர்கள் படுத்து இருந்த குடிசைக்கு மூங்கிலால் ஆன கதவு இருந்தது. அதன்மீது கோணிப்  பைகளை மறைப்புக்காக வைத்துத் தைத்து இருந்தனர். அந்தக் கதவை யாரோ பிராண்டும் சத்தம்.

'காட்டு மிருகமாக இருக்குமோ?’ இந்தச் சந்தேகம் வந்ததும் அந்தக் குளிரிலும் மைதிலிக்கு  வியர்த்தது.

கதவைத் திறப்பதற்கும் பயம். வெளியே என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளவும் ஆர்வம். சில நிமிடங்கள் அப்படியே அமர்ந்து இருந்தாள். பிறகு மெதுவாக எழுந்து கதவை நோக்கிச் சென்றாள்.

''கதவைத் திறக்காதே மைதிலி!'' என்ற ஆறுமுகத்தின் குரல் மெதுவாக ஒலித்தது.

'அட... ஆறுமுகம் விழித்துகொண்டுதான் இருக்கிறாரா?’ என நினைத்த மைதிலிக்குத் தைரியம் அதிகரித்தது. ''அண்ணா, வெளியே எதுவோ சத்தம்'' என்றாள்.

''காட்டில் இது மாதிரி சத்தம் எத்தனையோ இருக்கும். அதை எல்லாம் கவனிச்சுக்கிட்டு இருந்தாத் தூங்க முடியாது'' என்றபடி விளக்கை ஏற்றினான் ஆறுமுகம்.

இப்போது 'சரக் சரக்’ என்று எதையோ கூர்தீட்டுவதைப் போல அந்தச் சத்தம் அதிகரித்தது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.

ஆறுமுகம் கதவின் அருகே சென்று, கோணிப்படுதாவைக் கொஞ்சமாக விலக்கி, மெதுவாக வெளியே நோட்டம்விட்டான். அவன் பார்த்த காட்சி திடுக்கிடவைத்தது!      

                            (தொடரும்)