Published:Updated:

கொல்லிமலைப் புதையல் !

வேணு சீனிவாசன், ஸ்யாம்

கொல்லிமலைப் புதையல் !

வேணு சீனிவாசன், ஸ்யாம்

Published:Updated:
##~##

கோயில் யானையின் துயரை நீக்க ஓடைப்பொன்னை சார்த்த வேண்டும் என்ற ஆறுமுகத்தின் பேச்சை நம்பி, அவனுடன் கொல்லிமலைக்கு வந்தார்கள் மைதிலி, வாசு மற்றும் அவர்களின் தாத்தா. காட்டின் அருகே இருக்கும் குடிசையில் தங்கியவர்களுக்கு நள்ளிரவில் யாரோ வாசல் கதவைத் தட்டுவதுபோன்ற சத்தம் கேட்கிறது.  ஆறுமுகம் கதவைத் திறக்கிறான்.

அவர்கள் இருந்த குடிசையின் எதிரே இருந்தது ஒரு பலா மரம். அதில் பழங்கள் பழுத்து இருந்தன. அவற்றை ஒரு பெரிய கரடியும் அதன் இரண்டு சிறிய குட்டிகளும் பழங்களுக்குள் கையைவிட்டுச் சுளைகளை எடுத்துத் தின்றுக்கொண்டு இருந்தன. பலாப் பழங்களைத் தன்னுடைய நகத்தினாலேயே பிளந்து, குட்டிகளுக்குத் தின்னக் கொடுத்தது அந்தத் தாய்க் கரடி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அந்தப் பெரிய கரடி, அவ்வப்போது தனது விரல் நகங்களை மரத்தின் பட்டையில் வைத்துக் கூர் தீட்டிக்கொண்டு இருந்தது. அந்தச் சத்தம்தான் கதவைத் தட்டுவதுபோல் கேட்டு இருக்கிறது. 'அடேங்கப்பா, அந்த நகம் மட்டும் மனித உடலைக் கிழித்தால் என்ன ஆகும்?’ நினைக்கவே உடல் உதறியது. காடும் காட்டு விலங்குகளும் தொலைக்காட்சியில் பார்க்கும்போது சந்தோஷம் தருகின்றன. ஆனால், நேரடியாகப் பார்க்கும்போது உயிர் பயம் ஆட்டிப்படைக்கிறது என்ற உண்மையை இரண்டு சம்பவங்கள் மூலம் மைதிலி உணர்ந்துகொண்டாள்.

கொல்லிமலைப் புதையல் !

முதல் சம்பவம், வாசு ஓர் இலையைக் கிள்ளி முகர்ந்து பார்த்து, மயக்கம் அடைந்தது. இரண்டாவது, பலாப் பழங்களைக் கபளீகரம் செய்யும் கரடிக் குடும்பம். 'படித்தாலோ, கேட்டாலோ கிடைக்கும் இன்பம், நேரில் பார்க்கும்போது இல்லை’ என்று நினைத்தபடியே அவள் கரடிக் குட்டிகளைப் பார்த்தாள்.

அவை மிக அழகாக ஒன்றோடு ஒன்று மெல்லிய குரலில் சண்டையிட்டபடியே பழத்தின் சுளைகளைச் சாப்பிட்டன. அடிக்கடி அம்மாவிடம் வந்து, அது தின்னும் சுளைகளைப் பிடுங்கித் தின்றன. 'உங்களுக்குத்தான் தனியாகவே பெரிய பழத்தைக் கொடுத்து இருக்கேனே அதைத் தின்னுங்க’ என்று சொல்வது போல தாய்க் கரடி உறுமி, குட்டிகளை விரட்டியது. ஏராளமான சுளைகளைக் கீழே இறைத்துவிட்டு, அவ்வப்போது ஒன்று, இரண்டு சுளைகளை மட்டுமே குட்டிகள் தின்பதைப் பார்த்து மைதிலி சிரித்துக்கொண்டாள்.

அரை மணி நேரத்துக்கும் மேலாக மைதிலியும், ஆறுமுகமும் இந்தக் காட்சியைப் பார்த்தனர். மைதிலிக்குத் தூக்கம் கண்களைச் சுழற்றியது. ஆகவே, இருவரும் படுத்துக்கொண்டனர். சிறிது நேரத்தில் தூங்கிவிட்டனர்.

மறுநாள். காடு விழித்துக்கொண்டது. மரங்களில் தூங்கிய சிறிய பறவைகள், 'ட்வீட்! ட்வீட்!’ என்று குரல் கொடுத்தன. எல்லோரும் தூக்கம் கலைந்து வெளியே வந்தனர். மரங்களில் பனித் துளிகள் சொட்டின. குளிர் இதமாக இருந்தது. சூரிய வெளிச்சம் இரவு நடந்த பயங்கரங்களை அழித்துவிட்டு, மனதுக்கு இதம் அளித்தது.

மஞ்சள், சிவப்பு, ஊதா, வெள்ளை என்று பலவிதமான நிறங்களில் காட்டுப் பூக்கள் பூத்திருந்தன. அந்த இடமே மிகப் பெரிய மலர்த் தோட்டமாகக் காட்சி அளித்தது. பனியில் நனைந்த பூக்கள், காலை வெயிலில் புன்னகை சிந்தி அவர்களை வரவேற்றன.

காலைக் கடன்களை முடித்துக்கொண்டு மூசோ தாத்தாவை அவர்கள் சந்தித்தனர். அவர்களுக்கு அவர் மூலிகைக் கஷாயம் கொடுத்துக் குடிக்கச் சொன்னார். மிகக் கசப்பாக இருக்குமோ என்று பயந்தனர். ஆனால், ருசியாகவே இருந்தது. அதைக் குடித்த பிறகு உடலுக்குப் புத்துணர்ச்சி ஏற்பட்டது.

''பூச்சி, பூரான் ஆகியவை கடித்தால் ஏற்படும் விஷத்தை இது முறித்துவிடும். காட்டுக்குள்ளே போகும் உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி முக்கியம்'' என்றார் மூசோ.

''சரி தாத்தா, புதையலை எடுக்க வழி சொல்லு'' என்றான் ஆறுமுகம்.

''மலைக்கு மேலே அருவிக்கரை ஓரமாக ஏராளமான குகைகள் இருக்கும். அதில் எல்லாம் தேட வேண்டாம். அங்கே நிறைய விஷப் பூச்சிகள் இருக்கும். உள்ளே போன பலர் திரும்பியே வரலை. நீங்க அங்கே இருக்கிற பாதாள அருவிக்குப் போங்க. அந்த அருவி ரொம்பத் தொலைவு மலைக்குள்ளே ஓடுது. ஒரு பரிசிலில் ஏறி, அந்த அருவி போகிற போக்குலயே போங்க. போகும்போது கயிறு, சாம்பிராணி, தீப்பந்தம், தீப்பெட்டி, பொரிகடலை எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு போகணும்'' என்றார் மூசோ.

கொல்லிமலைப் புதையல் !

''நாங்க புதையல் எடுக்கப்போறமா, இல்ல ஆயுதபூசை கும்பிடப் போறமா?'' என்றான் ஆறுமுகம் கிண்டலாக.

''புதையல் கிடைக்கணும்னா நான் சொன்னதைச் செய்'' என்றார் மூசோ கோபமாக. கருநாகம் சீறுவதைப் போல இருந்தது அவரது வார்த்தைகள்.

மைதிலியும் வாசுவும் அதிர்ச்சி அடைந்துவிட்டனர். தலையைக் குனிந்துகொண்டு ''சரி தாத்தா'' என்றான் ஆறுமுகம்.

''அது எல்லாம் எதுக்கு?'' என்று கேட்டார் வாசுவின் தாத்தா.

''போகும்போது தெரிஞ்சுக்குவீங்க. பரிசிலில் ஏறி, பாதாளக் குகைக்கு உள்ளே நுழைஞ்சு போங்க. குகை ரொம்ப இருட்டாக இருக்கும். பரிசிலில் போகிறவரை தீப்பந்தம் கொளுத்தக் கூடாது. பரிசில் நின்னதுக்கு அப்புறமாதான் பந்தத்தைக் கொளுத்தணும்'' என்றார் மூசோ.

அவர் பேசுவது விடுகதையைப் போல இருந்தது. புரியாவிட்டாலும் அவரை எதிர்த்துக் கேள்வி கேட்க யாருக்கும் துணிவு இல்லை. தலையை ஆட்டினார்கள்.

''இந்த விபூதியை உடம்பில் தடவிக்கிட்டு காட்டுக்குள்ளே போங்க. இது உங்களை விஷப் பூச்சிங்ககிட்டே இருந்து காப்பாத்தும்'' என்று சொல்லி, ஓர் இலைப் பொட்டலத்தை  நீட்டினார் மூசோ தாத்தா.

வாசு அதை வாங்கிக்கொண்டான். மூசோ தாத்தாவை வணங்கிவிட்டு வெளியே வந்தார்கள். இதுவரையில் அவர்களுக்கும், மூசோவுக்கும் நடந்த உரையாடலைப் பாறையின் மறைவில் இருந்து ஓர் உருவம் கேட்டுக்கொண்டு இருந்தது. அவர்கள் வெளியே வருவதை அறிந்ததும் 'சரசர’ எனச் சாரைப் பாம்பு போல் புதருக்குள் இறங்கி மறைந்தது.

வரப்போகும் ஆபத்தை அறியாமல், அவர்கள் தேவைப்பட்ட பொருட்களைச் சேகரிப்பதற்காக கடைத்தெருவை நோக்கி உற்சாகமாக நடந்தனர்.

(தொடரும்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism