Published:Updated:

துர்கா

துர்கா

துர்கா

துர்கா

Published:Updated:
##~##

'நீ, சாதிக்கலைனா, உயிரோட இருக்கமாட்டே!''

 - சொன்ன அந்தத் தேன்குரலுக்குச் சொந்தமான பெண், தன் முகத்தை கம்ப்யூட்டர் திரையில் காட்ட, காண்டீபன் அலறிவிட்டார்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

யாரது?!’ - கடந்த எபிசோட் இப்படி முடிந்திருந்தது.

வழக்கம் போலவே, இம்முறையும் ஏராளமான வாசகிகள்... ஆவேசமாக களத்தில் இறங்கியிருக்கிறீர்கள். அதிலும் இம்முறை, பெரும்பாலானவர்கள் அருமையாகக் கதை புனைய முயன்று... ஆனந்தத் திணறல் தந்துவிட்டீர்கள்!

துர்கா

பெங்களூரு - ராஜலக்ஷ்மி, அசோக் நகர் - வைபவி, தர்மபுரி - ஸ்ரீகலா, மதுரை - பாக்கியலட்சுமி, மௌலிவாக்கம் - கோப்பெருந்தேவி, ஆழ்வார்திருநகர் - ராதாநாயகம், கப்பலூர் - ஜெயசித்ரா, மணப்பாக்கம் - நித்யா பாலாஜி, கோவை - ஜோஸ்பின், ஆவடி - உஷாபிரியா, மாதவரம் - தமிழ்ச்செல்வி... இவர்கள் பதினோரு பேரும்... ''அந்தப் பெண், காண்டீபனின் முன்னாள் மனைவி'' என்கிறார்கள்!

தூத்துக்குடி - அட்சயா, சங்கரன்கோவில் - சுகுணா ரவி, பெசன்ட்நகர் - கல்பகம் லஷ்மணன், சிவகாசி - சுதந்திரதேவி, திருச்சி - கமலா, மேற்கு மாம்பலம் - பத்மா குமார்... இந்த ஆறு சகோதரிகளும்... ''அது, பழைய தீபிகா'' என்கிறார்கள்!

திருப்பூர் - அஜந்தா, மயிலாப்பூர் - ஜானகி ரங்கநாதன், மதுரை - மீனாட்சி பட்டாபிராமன், மதுரை - சந்திரா மாணிக்கம்... ''அந்தப் பெண், உறவுக்குள் ஒருத்தி'' என்கிறார்கள் இந்தத் தோழிகள்!

திருச்சி - லஷ்மி ஐயர், மயிலாப்பூர் - எஸ்.காயத்ரி, கும்பகோணம் - ஜெயலட்சுமி... இந்த மூவரும், ''அந்த எதிரி, பழைய பி.ஏ'’ என்று புள்ளி குத்துகிறார்கள்!

கோயம்புத்தூர் - கல்யாணி, மயிலாப்பூர் - ப்ரீத்தா ரங்கசாமி... ''காண்டீபனால் பழிவாங்கப்பட்ட பெண்'' என வேறு கோணத்தில் யோசித்திருக்கிறார்கள்!

சிட்லபாக்கம் - வத்சலா சதாசிவன்... 'பழைய காதலி' என்று திகில் கிளப்புகிறார்!

கே.கே.நகர் - மீனாட்சி... அழகான கதை சொல்லும் ஆற்றலால் ஒரு புது கதைக் களத்துக்குள் நுழைந்து, வெற்றியைக் கைப்பற்றுகிறார். இந்தச் சகோதரிக்கு வாழ்த்துக்கள்!

''ஏன் சார் அதிர்ச்சி ஆயிட்டீங்க? யாரது?''

- அந்த அதிகாரி கேட்க, காண்டீபன் எதுவும் பேசாமல் வீடியோ படத்தையே பார்த்தார். அந்தப் பெண்ணின் முகம் நெருக்கத்தில்.

''ராஜேஸ்வரி...''

- காண்டீபனின் உதடுகள் முணுமுணுத்தன.

''யாரு சார்... ராஜேஸ்வரி?''

'இவ கூடத்தான் சதீஷ் கூட்டு சேர்ந்திருக்கானா..? பைத்தியமா இருந்தாளே? எப்பத் தெளிஞ்சா? இன்னும் உயிரோடதான் இருக்காளா?’

- காண்டீபனுக்குள் ஏராளமான கேள்விகள்!

''சார்... சதீஷ் உங்ககிட்ட அக்ரிமென்ட்ல கையெழுத்து போட்டுட்டு, இந்த மாதிரி துரோகம் பண்றானே?''

''அவனை இப்பக்கூட வரவழைச்சு போட்டுத் தள்ளலாம். ஆனா, விட்டுப் புடிக்கணும். என்ன செஞ்சு வெச்சுருக்கான்னு தெரியல. நீங்க ஒண்ணு பண்ணுங்க. இந்தக் காட்சியை துர்கா பார்க்கணும். ஏற்பாடு செய்யுங்க.''

''துர்கா கைக்கு கிடைக்கற மாதிரி ஒரு பென்டிரைவை இப்பவே அனுப்பறேன்.''

''உடனே செய்யுங்க. அதுமட்டுமில்லை... சதீஷோட ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்கணும். எனக்கு உடனடியா தகவல் வரணும்.''

காண்டீபன் தனியாக வந்து உட்கார்ந்தார். ராஜேஸ்வரியின் முகம் திரும்பத் திரும்ப கண்களுக்குள் வந்து நின்றது. அதிர்ச்சியைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை.

துர்கா, வெளியில் வேலைகளை முடித்துக் கொண்டு, அலுவலகம் திரும்பிவிட்டாள். சதீஷ் காத்திருந்தான். கொஞ்சம் அச்சமாகக்கூட இருந்தது.

''வாங்க சதீஷ்... நிறைய வேலை இருக்கு.''

''துர்கா... அத்தைக்கு அம்னீஷியானு அம்மா சொன்னாங்க.''

''ஆமாம். அந்த விபத்து இந்த நிலைக்கு அவங்களைக் கொண்டு வந்திருக்கு.''

''ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் யாரையாவது பாக்கலாமா?''

''நிச்சயம் பார்க்கணும். அத்தை குணமாகி பேசணும். பல உண்மைகள் வெளியில வரணும்.''

சதீஷ் முகம் மாறியது!

''சரி... வேலைகளைப் பாருங்க சதீஷ்.''

சேர்மன் அழைக்க, துர்கா உள்ளே போனாள். சதீஷ் உள்ளே போகத் திரும்ப, காண்டீபனின் அந்த அதிகாரி அனுப்பின நபர், பென்டிரைவுடன் வந்தார்.

துர்கா

''துர்கா மேடத்தை பார்க்கணும்...''

''உள்ளே பிஸியா இருக்காங்க. என்ன வேணும்?''

''இந்த பென்டிரைவை அவங்ககிட்டக் கொடுக்கணும்.''

''யாரு கொடுத்தாங்க?''

''சந்திரசேகர்.''

''அப்படியா, கொடுங்க... நானே கொடுத்துடறேன். நீங்க காத்திருக்க வேணாம். அவங்க வர்றதுக்கு ரொம்ப நேரம் ஆகும்.''

பென்டிரைவ் கை மாறியது. யார் கைக்கு போகக் கூடாதோ, அதே கையில் மாட்டியது.

'இதுல என்ன இருக்கு?’

சிஸ்டம் இருக்கும் அறைக்குள் நுழைந்து சதீஷ் அமர்ந்தான். பென்டிரைவை செருகி, இயக்கினான். சேர்மன் அறையிலிருந்து வெளியே வந்த துர்கா, அந்த அறைக்குள் நுழைய, திரையில் வெளிச்சம் வர,

''சதீஷ்... என்ன பார்க்கறீங்க?''

சதீஷ் ஒரு நொடி தடுமாறிப் போனான்!

''சந்திரசேகர்னு ஒருத்தர் உங்ககிட்ட ஒப்படைக்கச் சொல்லி, ஒரு பென்டிரைவ் கொடுத்தார். அதைப் பார்க்கறேன்.''

''எனக்கு வந்ததை நீங்க ஏன் பாக்கறீங்க?''

''துர்கா...''

''போய் மற்ற வேலைகளைப் பாருங்க.''

சதீஷ் முகம் மாறி, அறையைவிட்டு வெளியேற, துர்கா சிஸ்டத்தின் முன்பு அமர்ந்தாள். இயக்கினாள். படக்கென்ற ஓசையுடன் மின்சாரம் கண்களை மூடியது.

'ஓ... பவர்கட்! சரி, அப்புறமா பாத்துக்கலாம்’

- வெளியே வந்தாள். செல்போன் அடித்தது.

''துர்கா மேடம்... நான் ஷ்யாம் சுந்தர் பேசறேன்.''

''ஆங்... சொல்லுங்க ஷ்யாம்...''

''உங்களுக்காக காத்துக்கிட்டிருக்காங்க. எப்ப வர்றீங்க?''

''ஓ... ஸாரி! இருக்கற டென்ஷன்ல, உங்களுக்குக் கொடுத்த அப்பாயின்ட்மென்ட்டை மறந்துட்டேன். அரை மணி நேரத்துல வந்துடுவேன்.''

''வெளியில் கிளம்புகிறேன்'' என்று சேர்மனிடம் சொல்லிவிட்டு, துர்கா புறப்பட்டாள். சதீஷ் தன்னுடைய ரகசிய ஃபைல்களை வெளியே எடுத்தான். மின்சாரம் வந்துவிட்டது. கம்ப்யூட்டர் அறைக்குள் வேகமாக நுழைந்தான்.

திரையை மீண்டும் ஒளிர விட்டான். அந்த நொடியில் கதவு தட்டப்பட்டு சேர்மன் உள்ளே நுழைந்தார்.

''எனக்குக் கொஞ்சம் இங்கே வேலை இருக்கு. நீங்க வெளியில இருங்க சதீஷ்.''

''சரி சார். இதுல ஒரு பென்டிரைவ் இருக்கு சார். நான் எடுத்துக்கறேன்.''

''என்ன அதுல?''

''பர்சனல் மேட்டர்.''

''கம்பெனியில பர்சனல் மேட்டரைப் பார்க்கக் கூடாது. அப்புறமா எடுத்துக்குங்க. வெளியில இருங்க.''

''சரி சார்.''

அவன் போனதும் சேர்மன் உட்கார்ந்தார். 'சதீஷ் பர்சனல் என்று சொல்லும் பென்டிரைவில் என்ன இருக்கு? செந்தில் சொன்னது போல நமக்கெதிரா இவன் சதி செய்றானா?’

சிஸ்டத்தை இயக்கினார். திரை ஒளிர, அதே காட்சி! சதீஷ் உள்ளே வருகிறான்!

''எல்லாம் சரியா நடக்குதா சதீஷ்?'' - பெண் குரல்.

''நடக்குது மேடம். ரெண்டு பக்கமும் கண் களைக் கட்டியாச்சு. வேலை தொடங்கியாச்சு.''

''சேர்மன், காண்டீபன் ரெண்டு பேரும் இழக்கணும். பழி துர்கா மேல வரணும்.''

''வரும் மேடம்!''

''நீ சாதிக்கலைனா, உயிரோட இருக்க மாட்டே!''

தேன்குரலுக்குச் சொந்தமான அந்தப் பெண், தன் முகத்தை திரையில் காட்டினாள். காண்டீபனைவிட அதிகமான அதிர்ச்சிக்கு ஆளானார் சேர்மன்!

'ராஜேஸ்வரி? பைத்தியமா இருந்தாளே... எப்பத் தெளிஞ்சா? இன்னும் உயிரோடதான் இருக்காளா? சதீஷ் இவ கூடக் கூட்டு சேர்ந்திருக்கானா?’

காண்டீபனுக்குள் எழுந்த அதே கேள்விகள் சேர்மனுக்கும். பென்டிரைவை பத்திரப்படுத்தினார். வேறு ஒரு டெக்னிக்கல் பென்டிரைவை அந்த இடத்தில் வைத்தார்.

'நல்ல காலம்... இதை துர்கா பார்க்கல. பார்த்தாலும் சதீஷ் மேல்தான் ஆத்திரம் கூடும். சதீஷை துர்கா இன்னும் நம்புறாளா?’

- சேர்மன் கேள்விகளுடன் வெளியே வந்தார்.

''சதீஷ்... நீங்க போகலாம்.''

''சரி சார்.''

சதீஷ் உள்ளே வந்து அவசரமாக பென்டிரைவை இயக்க, ஏமாற்றம். உருப்படியான தகவல் எதுவும் இல்லை.

துர்கா

அடுத்த முக்கால் மணி நேரத்தில் துர்காவின் கார் புறநகர் பகுதியில் இருந்தது. ஒரு தனி பங்களா வாசலில் கார் ஒலியெழுப்ப, பெரிய கேட்டை திறந்தார் காவலாளி. உள்ளே நுழைந்து கார் நிற்க, ஒருவர் ஓடி வந்தார்.

''குட்மார்னிங் ஷ்யாம்! ஸாரி, லேட்டாயிடுச்சு!''

''பரவாயில்ல... நாங்க காத்துக்கிட்டிருக்கோம் துர்கா. உள்ளே வாங்க.''

ஷ்யாமுடன் துர்கா உள்ளே நடந்தாள்.

''உங்க மாமியார் இப்ப எப்படி இருக்காங்க?''

''ஓ.கே ஷ்யாம்.''

''சரி, அக்காவைப் பாக்கலாமா துர்கா?''

இருவரும் மாடி ஏறி உள்ளே வந்தார்கள். ஷ்யாம் கதவைத் தட்ட, ''வரலாம்!'' என்றது பெண் குரல். இருவரும் உள்ளே நுழைந்தார்கள்.

''வணக்கம் மேடம்!''

படக்கென அந்தப் பெண் திரும்பினாள்.

''எதுக்கு இந்த மேடமெல்லாம்? நீ நம்ம வீட்டுப் பொண்ணு. உன் விருப்பம்போல ராஜிம்மானே கூப்பிடு!''

''சரி ராஜிம்மா!''

''சாப்பிட்டியா துர்கா?''

''வரவர சாப்பாடு, தூக்கம் எல்லாமே ரெண்டாம் பட்சமாயாச்சு.''

''அப்படி கூடாது. நீ சின்னப் பொண்ணு. ஒரு பெண் குழந்தை இருக்கு. உன்னை ஆட்டி வெச்ச புகுந்த வீடு... இன்னிக்கு உன் தயவை நாடி நிக்குது. அன்வர், செந்தில் மாதிரி நல்ல தம்பிகள். உன்னை மாதிரி ஒரு நல்ல பெண் ஆரோக்கியமா இருக்கணும் துர்கா.''

''சரி ராஜிம்மா.''

''உன் தயவு எங்களுக்கும் வேணும் துர்கா.''

''என்ன நீங்க? பெரிய வார்த்தைகளைப் பேசலாமா?''

''நிச்சயமா! பேசித்தானே ஆகணும்? இந்த ராஜேஸ்வரி பைத்தியமா இருந்தேன். என்னை மீட்டுக் கொண்டு வந்ததே நீதானே துர்கா?'' - ராஜேஸ்வரி கண் கலங்கி னாள். காண்டீபனும், சேர்மனும் 'பென் டிரைவ்’வில் முகம் பார்த்து அதிர்ந்துபோன அதே ராஜேஸ் வரி! சதீஷ் சமீபத்தில் கூட்டு சேர்ந்து தகவல்களை சொல்லிக் கொண்டிருக் கும் அதே ராஜேஸ்வரி!

ஜூஸ் வந்தது. மூன்று பேரும் பருகினார்கள்.

''இதப்பாரு துர்கா... புது புராஜெக்ட் மூலமா பல கோடிகளைப் பார்க்கணும்னு உன் சேர்மன் தனசேகர் காத்துக்கிட்டிருக்கார். அதை கவ்விப் பிடிக்க காண்டீபன் ஒரு பக்கம் வலை விரிக்கறான். ரெண்டு பேருக்கும் அல்வா குடுத்துட்டு, தான் சம்பாதிக்க சதீஷ் என்கூட கூட்டுச் சேர்ந்திருந்தான். சதீஷ் என்னையும் ஏமாத்துவான். அவன் ஒரு பக்கா சுயநலக்காரன். நடுவுல நீ என்ன செய்யப் போறே துர்கா?''

''ராஜிம்மா... என்னைப் படிக்க வெச்சு ஆளாக்கின ராம்மோகன் அங்கிள் - அதான் உங்க கணவர் - இப்ப உயிரோட இல்லை. என்னை தன் மகள் போல பார்த்துக்கிட்டவர். அவருடைய குடும்பத்துக்கு நான் நன்றிக் கடன் பட்டிருக்கேன். அவருக்குக் கீழே வேலை பார்த்த ஊழியர்கள் இந்த தனசேகரும், காண்டீபனும். பாவிகள் ஆளுக்கொரு பக்கமா அவரைச் சுரண்டி, நம்பிக்கை துரோகம் செஞ்சு, அவர் சாகறதுக்கு காரணமா இருந்ததை மறந்துட முடியுமா? அந்த அதிர்ச்சில நீங்க ஏழு வருஷம் மன நோயாளியா இருந்ததைத்தான் மறக்க முடியுமா? அந்த நேரத்துல, என்னோட படிச்ச உங்க தம்பி ஷ்யாம் சுந்தர் பட்டபாடு கொஞ்சமா? உங்களை குணமாக்க ஷ்யாம் சுந்தர் எத்தனை கஷ்டப்பட்டிருக்கார்!''

''நீயும்தானே துர்கா!''

- ஷ்யாம் சேர்ந்து சொன்னார்.  

''நான் நன்றிக் கடனை செலுத்திட்டிருக்கேன் ஷ்யாம். ராஜிம்மா குணமாக அவங்க செஞ்ச தான, தர்மங்களும், சேகரிச்ச புண்ணியமும்தான் காரணம்!''

''எப்படியோ துர்கா... எங்க சொத்துக்கள் மொத்தத்தையும் சுரண்டிக் கொழுத்த பாவிகள் ரெண்டு பேரையும் நான் சும்மா விடமாட்டேன். என் கணவரோட சாவுக்கு அவங்கதான் காரணம். அவங்களை ஒண்ணுமில்லாம செய்யணும் துர்கா.''

- ராஜேஸ்வரியின் குரலில் வெறி கூத்தாடியது.

''அதுக்குத்தானே மேடம் தனசேகர்கூட நான் சேர்ந்து, அவரை முழுமையா நம்ப வெச்சு, இப்ப அவரோட வலது கையா இருக்கேன். சதீஷ் ஒரு துருப்புச் சீட்டு. அவனை வெச்சுத்தான் ரெண்டு பேரையும் அழிக்கணும். சதீஷை மறைமுகமா உங்ககிட்ட சேர்த்தது நான்தான்னு சதீஷ§க்கே தெரியாது.''

''நீ என்ன செய்யப்போறே துர்கா?''

''இந்த புராஜெக்ட்ல தனசேகர் பல கோடிகளை முதலீடு செஞ்சாச்சு. அது திரும்ப வராது. காண்டீபன் சட்டத்துக்கு புறம்பா இதுல பல காரியங்களை செஞ்சாச்சு. ரெண்டுக்கும் மத்தியில சதீஷ்.''

ஷ்யாம் சுந்தர் குறுக்கே வந்தார்.

துர்கா
துர்கா

''அந்த புராஜெக்டை அடைஞ்சு பல கோடிகளை அனுபவிக்கணும்னு அக்காவுக்கோ, எனக்கோ ஆசையில்லை துர்கா! பெரிய ஆஸ்பத்திரி - முதியோர் இல்லம் - குழந்தைகள் காப்பகம் - பள்ளிக்கூடம்னு இலவசமா இயங்கக் கூடிய ஸ்தாபனங்களை மாமா ராம்மோகன் பேர்ல உருவாக்கணும்னு அக்கா ஆசைப்படறாங்க. அதுல அத்தனை வசதிகளும் இருக்கணும்.''

''புரியுது ஷ்யாம். இந்த புராஜெக்ட் ராஜிம்மா கைக்கு வரணும். அதன் மூலம் கிடைக்கக் கூடிய கோடிக்கணக்கான தொகை இதுக்கு உபயோகப்படணும். அதானே?''

''ஆமாம் துர்கா!''

''நிச்சயமா வரும். அதுக்கு நான் உத்தரவாதம். தொண்டுள்ளம் படைச்ச ஒரு நல்ல மனிதரைச் சுரண்டி அவரோட அழிவுக்குக் காரணமான பாவிகளை விடக்கூடாது. இழந்ததை மீட்டு... நினைச்சதை சாதிக்கணும்!''

''துர்கா... இது ஒரு தர்ம யுத்தம். இதுல உனக்குப் பக்கபலமா நானும், ஷ்யாம் சுந்தரும் கண்டிப்பா இருப்போம். ஆனா, நம்மைச் சுற்றியிருக்கற தனசேகர், காண்டீபன், சதீஷ் மூணு பேரும் கொலைவெறி புடிச்சவங்க. எதுக்கும் துணிஞ்சவங்க. நீ ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்.''

''கவலையேபடாதீங்க... குருக்ஷேத்ரம் நடக்கும் போது ஆபத்துகள் இருக்கத்தான் செய்யும்.''

''இருக்கலாம்... அவரையும் இழந்த நான் அழியலாம். ஆனா, நீ வாழணும் துர்கா. உனக்கு ஒரு கஷ்டமும் வரக்கூடாது. புரியுதா?''

''நீங்க இருக்கும்போது வராது ராஜிம்மா. அங்கிள் தெய்வமா இருந்து ரட்சிப்பார்.''

''சரி, உன் முயற்சிகள் தொடரட்டும். சதீஷ் இப்ப என்னைச் சுற்றி வர்றான்.''

''வரட்டும். எல்லா பக்கமும் தொடர்பு வெச்சுகிட்டு அழியப் போறவன் அவன்தான்.''

''இரு... சாப்பிட்டுப் போகலாம். ஷ்யாம்... சாப் பாட்டுக்கு ஏற்பாடு செய். துர்காகூட உட்கார்ந்து சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு. அடுத்த மாசம் அவரோட நினைவு நாள் வருது துர்கா...''

''அந்த நாள்ல உங்க கைக்கு எல்லாம் வந்திருக் கும் ராஜிம்மா. தமிழ் புத்தாண்டுல உங்க தொண்டு நிறுவனங்களுக்கு அடிக்கல் நாட்டிடலாம்!''

ராஜேஸ்வரி, ஷ்யாம் சுந்தருடன் உட்கார்ந்து சாப்பிட்டாள் துர்கா. மனதுக்கு நிறைவாக இருந்தது.

''சரி நான் புறப்படறேன் ராஜிம்மா...''

''ஷ்யாம்... நம்ம ஆட்கள் நாலு பேர் எப்பவும் துர்காவோட பாதுகாப்புக்கு இருக்கட்டும். அது வேற யாருக்கும் தெரிய வேண்டாம். புரியுதா?''

''சரிக்கா.''

மனோகர் ஓடி வந்தார்.

''மேடம்... உங்களைப் பார்க்க சதீஷ்னு ஒருத்தர் வந்திருக்கார்.''

துர்கா முகம் மாறியது.

''ஷ்யாம்... வாசல்ல கார் நிக்குதே? சதீஷ் பார்த்திருந்தா, பிரச்னையாச்சே?''

''நீ கவலைப்படாதே துர்கா. அதை ஷெட்டுக் குள்ள போட்டாச்சு. நான் உஷாராத்தான் இருக் கேன். நீ புறப்படு. பின் வழியில் போயிடலாம்.''

ஷ்யாம் சுந்தருடன், துர்கா புறப்பட்டு வேறு வழியாகப் போக, ராஜேஸ்வரியைப் பார்க்க சதீஷ் நுழைந்தான்!

துர்கா நேராக அலுவலகம் வந்து முக்கிய வேலைகளைக் கவனித்தாள். தான் மட்டுமே இயக்கக் கூடிய கம்ப்யூட்டரில் சில முக்கியத் தகவல்களை சேகரித்தாள். அதைத் தனியாகப் பத்திரப்படுத்திக் கொண்டாள். ஆபீஸ் பாய் வந்தான்.

''மேடம்... உங்க மாமனார் வந்திருக்கார்.''

துர்கா வெளியே வந்தாள்.

''என்ன மாமா? ஏதாவது பிரச்னையா? போன் பண்ணினா, நானே வந்திருப்பேனே!''

''வீட்ல பேச முடியாது துர்கா. அதான் இங்கேயே நான் வந்துட்டேன்.''

''சொல்லுங்க மாமா!''

''ராஜம் அம்னீஷியா வந்த மாதிரி நடிக்கறானு தோணுது துர்கா...''

''அதுதான் உண்மை மாமா! அப்படி அத்தையை நடிக்கச் சொன்னது செந்தில்!''

''எதுக்குமா இந்த நாடகம்?''

''நல்லதுக்குத்தான். அத்தை தெளிவா இருந்தா, அவங்க உடம்புல உயிர் இருக்காது மாமா. செந்தில் நல்லதுக்குத்தான் இதைச் செய்யறார். நீங்க பயப்பட வேண்டாம்.''

''அந்த சதீஷை இப்பவும் நீ நம்பறியா துர்கா?''

''மாமா... உங்களுக்கு மட்டும் சில உண்மைகளை நான் சொல்றேன். நீங்க உணர்ச்சிவசப்பட்டு அதை வெளிய சொல்லிடக்கூடாது. இனி உங்க கிட்ட மறைச்சு லாபமில்லை. உள்ளே வாங்க!''

இருவரும் நடக்க, துர்காவின் செல்போன் அழைத்தது. எடுத்தால், கல்பனாவின் பதறும் குரல்!

''துர்கா... நானும் சுதாவும் கறிகாய் வாங்க வெளியில வந்தோம். திடீர்னு ஒரு ஆட்டோ வந்து, சுதாவை பலவந்தமா இழுத்து உள்ளே போட்டுட்டு போயிட்டாங்க. யாரதுனு தெரியல. நான் கூச்சல் போட்டு, ஆட்கள் ஓடி வர்றதுக் குள்ளே ஆட்டோ போயிடுச்சு துர்கா!''

துர்கா பதறி விட்டாள்!

''என்னம்மா?''

''சுதாவை யாரோ கடத்திட்டாங்க! செந்திலுக்கு உடனே தகவலை கொடுக்கணும்!''

போன் கால்கள் பறந்தன.

சுதாவைக் கடத்தியது யார்?!

- தொடருங்கள் தோழிகளே...

ஆடைகள் உதவி: பி.எம்.சில்க்ஸ், மயிலாப்பூர், சென்னை 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism