Published:Updated:

சொல்வனம்

ஓவியங்கள்:ஹரன்

அப்பா குழந்தை விளையாட்டு

சொல்வனம்

ப்பா குழந்தையாகவும்
குழந்தை அப்பாவாகவும்
நடிக்கிற நாடக விளையாட்டு
ஆரம்பமானது
குழந்தை தன்னை
அப்பாவாகக் காட்டிக்கொள்ள
மீசை வரைந்துகொண்டதுபோல
விரல் சூப்பத் தொடங்கினான்
அப்பா.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சமையற்கட்டிலிருந்து வந்த
அம்மாவைக் கட்டிக்கொண்டு
முத்தமிட்டது
அப்பாவாகிய குழந்தை.
தானும் அணைக்க முயன்ற
அப்பாவியாகிய குழந்தை கண்டு
'ஐயோ... குழந்தை பார்க்கிறது...’ எனத்
தள்ளிவிட்டாள்
பாத்திரமறியாத அம்மா!

- நாவிஷ் செந்தில்குமார்

தீர்ப்பு

சொல்வனம்

அவர்கள்
சந்தித்துக்கொள்வதாக
ஏற்பாடாயிற்று

அவள் சார்பாகச் சிலர்
இவன் சார்பாகச் சிலர்

பேசித் தீர்க்கவியலா
பிரச்னை எதுவுமில்லையென
நம்பினார்கள்... பேசினார்கள்

பேச்சு தோல்வியுற்றபோது
குழந்தை யாரிடமிருப்பதென்பது
பேச்சாக மாறியது

குழந்தையிடமே கேட்பதாக
முடிவாயிற்று

தீர்ப்பை வழங்கும் முன்,
அழுதுகொண்டிருந்த ஆயாவைக்
கண்ணுற்ற குழந்தை...

அழத் தொடங்கியது!

- பா.ராஜாராம்

சொல்வனம்

சந்ததி

ப்பாவுக்கு
தாத்தா சொன்னது
அப்பா சொன்னது எனக்கு
நான் சொல்கிறேன்
என் மகனிடம்
'பாப்பா எப்டி வந்திச்சு?’
கேள்விக்கான பதிலை...
'காக்கா தூக்கிட்டு வந்துச்சு!’

- நீரை.மகேந்திரன்

சலனமற்ற இயக்கம்!

சொல்வனம்

'அரசியல்வாதிகளின்
ஊழல் பணத்தை மீட்டால்
ஐந்தாண்டுகளுக்குத் துண்டு விழாத
பட்ஜெட் போட முடியும்’
என்ற குறுஞ்செய்தி வருகிறது
என் கைபேசிக்குத் தினமும்.

'அரசியல்வாதிகளின் பாதுகாப்பு
செலவைக் குறைத்தால்
அனைவருக்கும் கல்வி
இலவசமாக வழங்க முடியும்’
எனச் செய்தி அனுப்புகிறது
ஒரு சீர்திருத்த இயக்கம்.

'ஊழலை மட்டும் ஒழித்துவிட்டால்
உலகில் வல்லரசு நாம்தான்’
எனச் செய்தி அனுப்புகிறார்கள்
நண்பர்கள் பலரும்.

'வெளிநாட்டில் பதுக்கியிருக்கும்
பணத்தைப் பறிமுதல் செய்தால்
வறுமைக்கோடு என்பதே இருக்காது’
என்று செய்தி அனுப்புகிறார்கள் சிலர்.

எல்லோரையும் போலவே
எனக்கு வரும் செய்திகளை
நண்பர்களுக்கு
ஃபார்வர்டு செய்துவிட்டு
எப்போதும்போல்
அமைதியாக இருக்கிறேன் நான்!

- ஆதலையூர் சூரியகுமார்

சொல்வனம்