Published:Updated:

கொல்லிமலைப் புதையல் !

வேணு சீனிவாசன் ஸ்யாம்

கொல்லிமலைப் புதையல் !

வேணு சீனிவாசன் ஸ்யாம்

Published:Updated:
##~##

அம்பு குறி தவறியதால் மரத்தில் பாய்ந்தது. இல்லை என்றால், ஆறுமுகத்தின் இடுப்பில் குத்தி இருக்கும். இதை நினைத்துப் பார்த்த அவனுக்குக் கை கால்கள் நடுங்கின. அம்பு எங்கே இருந்து வந்தது என்பதை தாத்தா ஆராய்ந்தார். அவர்கள் இருந்த இடத்துக்கு நேர் எதிரே பாறைகள் காணப்பட்டன. பாறை மறைவில் யாரோ இருக்கிறார்கள். அவ்வளவு கிட்டத்தில் இருந்து விட்ட அம்பு, குறி தவறுவதற்கு வாய்ப்பு இல்லை. அவர்கள் நினைத்தால், ஆறுமுகத்தைத் தீர்த்துக்கட்டி இருக்கலாம். அவர்களுடைய குறிக்கோள் ஆறுமுகத்தைக் கொல்வது இல்லை, பயமுறுத்துவதுதான் என்பதைத் தாத்தா புரிந்துகொண்டார்.

அதற்குப் பிறகு வேறு அம்புகள் வரவில்லை. ''ஆறுமுகம் அண்ணா... இப்போ புரியுதா சூரிய வெளிச்சம் இருக்கும்போதே, பாதுகாப்பான இடத்துக்குப் போயிடணும்னு மூசோ தாத்தா ஏன் சொன்னார்?'' என்றான் வாசு குறும்பாக.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''நல்லாப் புரியுது சாமி. இனிமே அவரைக் கிண்டல் பண்ண மாட்டேன்'' என்றான் ஆறுமுகம்.

அவர்கள் அருகில் இருந்த குகை ஒன்றைப் பார்த்தனர். குகையின் வாசலில் மிகப்பெரிய தேன்கூடு தொங்கிக்கொண்டு இருந்தது. ''மலைத் தேனீ கொட்டினா, செத்தே போயிடுவோம்'' என்றான் ஆறுமுகம் பயத்தோடு.

கொல்லிமலைப் புதையல் !

''அதுக்குத் தொந்தரவு தந்தாத்தான் கொட்டும். நாம சத்தம் செய்யாம அந்தக் குகைக்குள்ளே போயிடுவோம். தேனீக்களை மீறி எந்த மிருகமும் குகைக்குள்ளே வராது'' என்றார் தாத்தா.

''சூப்பர் ஐடியா தாத்தா'' என்றாள் மைதிலி.

தேனீக்கள் 'ஸ்ஸ்ஸ்ஸ்’ என்ற ரீங்காரம் செய்தபடி கூட்டை மொய்த்தன. அந்தச் சத்தம் குகைக்குள் மோதி, எதிரொலி செய்தது. தேனீக்களைத் தொந்தரவு செய்யாமல் குகைக்குள் நுழைந்தனர். தரை, மேடும் பள்ளமுமாக இருந்தது. கொண்டுவந்த பொருட்களை ஓர் ஓரமாக வைத்துவிட்டு அனைவரும் அமர்ந்தனர். மூசோ கொடுத்த விபூதியை எடுத்து, தங்கள் உடம்பில் பூசிக்கொண்டனர். அது ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி, விஷப்பூச்சிகளிடம் இருந்து காப்பாற்றும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஏற்பட்டுவிட்டது.

குகையில் இருட்டு பரவியது. டார்ச் விளக்கின் ஸ்விட்சை இயக்கி தாத்தா குகையின் தரையை ஆராய்ந்தார். ஓரங்களை உன்னிப்பாகக் கவனித்தார். விஷப்பூச்சிகளோ, பாம்போ இல்லை. மேற்கூரையில் மட்டும் பெரிய சிலந்திகள் காணப்பட்டன. ''இந்தக் குகை, கடுமையான குளிரில் இருந்து நமக்குப் பாதுகாப்புத் தரும். கொடிய விலங்குகளும் இங்கே வராது'' என்று அவர் சொல்லும் போதே, ஒரு மூலையில் சத்தம்.

கொல்லிமலைப் புதையல் !

தாத்தா டார்ச்சைத் திருப்பினார். அங்கே ஒரு காட்டு எலி ஓடியது. ''அதனோட இடத்துக்கு நாம வந்துட்டோம். அதான் பயந்து ஓடுது'' என்றான் வாசு.

''இன்னிக்கு ராத்திரி இங்கே தங்கிட்டு, நாளைக்குக் காலையில் மேலே இருக்கிற குகைகளைப் பார்க்கணும். அங்கே பாதாள அருவி குகைக்குள் ஓடும்னு மூசோ சொல்லி இருக்கார். அங்கே போறதுக்கு ஒரு பரிசல் தயார் பண்ணணும். தேவையான பொருட்களை எடுத்துக்கிட்டு அதில் போகணும். இவ்வளவுதான் நாம் செய்ய வேண்டியது'' என்றார் தாத்தா.

வெளியே திடீர் என்று மின்னல் வெட்டியது. அது குகைக்குள் டியூப் லைட் போட்டதைப் போல் வெளிச்சத்தை ஒரு வினாடி வாரி இறைத்தது.

அப்போது அவர்கள் இருந்த குகைக்கு வெளியே யாரோ ஓடி மறைந்ததை மைதிலி கவனித்தாள். திடுக்கிட்ட அவள் உடனே ரகசியக் குரலில், ''தாத்தா, யாரோ நம்மைக் கண்காணிக்கிறாங்க'' என்றாள்.

''புதையலுக்காக எப்பவுமே ஒரு கூட்டம் இந்த மாதிரி இடத்தில் அலைஞ்சுக்கிட்டுதான் இருக்கும். அதனால், நாம் ஜாக்கிரதையா இருக்கணும்'' என்றார் தாத்தா.

வெளியே சடசடவென மழை பொழிய ஆரம்பித்து, குளிர்ந்த காற்று வீசியது. டார்ச் விளக்கு வெளிச்சத்தில் பழங்களைச் சாப்பிட்டனர்.

கொல்லிமலைப் புதையல் !

காட்டின்ஒலிகள் அடங்கிப்போன அந்த இரவில், குகையின் வாசலில் தேனீக்களின் ரீங்காரம் அதிகமாகக் கேட்டது.  'இதுவும் ஒரு வித்தியாசமான அனுபவம்தான்’ என்ற எண்ணம் தாத்தாவின் மனதில் ஓடியது.

''நமக்கு காடு ஓர் இடம் மட்டும் தான். ஆனா, விலங்குகளுக்கு அது வீடு. அதுங்களோட வீடுகளை அழிச்சுட்டா, அதுங்க எங்கே போகும்? அதனாலதான் காட்டைவிட்டு நாம் இருக்கும் இடங்களைத் தேடி வருதுங்க.  'யானைகள் ஊருக்குள்ளே புகுந்தன,  கரும்புத்தோட்டத்தை அழித்தன’ அப்படின்னு பத்திரிகையில் படிக்கிறோம். உண்மையில் நாம்தான் அவற்றுக்குத் தொந்தரவு அளிக்கிறோம்'' என்றார் தாத்தா.

''நம் நாட்டின் பாலூட்டிகளில் நீலகிரி மந்தி, தங்கநிற மந்தி, சிங்கவால் குரங்கு, வெள்ளைப் புருவ குரங்கு, ஒல்லித் தேவாங்கு, பெரிய தேவாங்கு போன்ற இனங்கள் அழியும் நிலையில் இருக்கிறதாப் படிச்சு இருக்கேன்'' என்றாள் மைதிலி.

இப்படிநீண்டநேரம் பேசிக்கொண்டு இருந்தார்கள். இரவு ஏற ஏற ஒவ்வொருவராகத் தூக்கத்தின் பிடியில் விழுந்தனர். எவ்வளவு நேரம் தூங்கினார்களோ தெரியாது. ஒரு பெரிய சத்தம் கேட்டு தாத்தா விழித்துக்கொண்டார்.

இருட்டில்கண்களைக் கூர்மையாக்கிக் கவனித்தார். குகைக்கு வெளியே யாரோ நடமாடும் சத்தம்.

அதே நேரம் மைதிலியும் தூக்கம் கலைந்து எழுந்தாள். ''தாத்தா, அது என்ன சத்தம்?'' என்றாள் சற்றுப் பயத்தோடு.

''யாரும் லைட் அடிக்காதீங்க'' என்றார் தாத்தா மெல்லிய குரலில்.

குகைக்கு வெளியே இருப்பது மனிதரா அல்லது மிருகமா என்று தெரியவில்லை.எப்படி அறிந்துகொள்வது?

அவருக்கு வழி எதுவும் தெரியவில்லை. சிறிது நேரம் எந்தச் சத்தமும் கேட்கவில்லை. ஆகவே, காட்டு விலங்கு ஏதாவது அந்த வழியாகப் போயிருக்கலாம் என்ற முடிவுக்கு வந்த தாத்தா, ''படுங்க, காலையில் பார்த்துக்கலாம்'' என்றார்.

அப்போது குகையின் வாசலுக்கு சிறிது தொலைவில், நெருப்புப் பந்து ஒன்று குபீர் என்று கிளம்பியது. அது மெதுவாக குகையை நோக்கி உருண்டு வர ஆரம்பித்தது.

(தொடரும்)