Published:Updated:

வெண்புறாவின் விருப்பம் !

டி.ஜானகி,சூர்யா

வெண்புறாவின் விருப்பம் !

டி.ஜானகி,சூர்யா

Published:Updated:
##~##

மன்னர் மகுடேஸ்வரன் அரண்மனைத் தோட்டத்தில் ஓர் அழகான வெண்புறா வசித்து வந்தது. எல்லோருக்கும் நன்மையே செய்ய வேண்டும் என்ற உயர்ந்த பண்பு அதனிடம் இருந்தது.

ஒரு நாள் மகுடேஸ்வரன் தன் மந்திரியிடம், ''புவனகிரி மன்னன் நம் மீது படையெடுக்க ஆயத்தம் செய்வதாக அறிந்தேன். நாம் போரில் ஜெயிக்க ஏற்பாடுகளைச் செய்யுங்கள்'' என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதைக் கேட்ட புறாவின் மனம் வருந்தியது. மனிதர்கள் பாஷை தனக்குப் பேச வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்தது. தவ வலிமை மிக்க முனிவர் ஒருவரைச் சந்தித்து தன் விருப்பத்தைக் கூறியது.

''புறாவே!  மனித பாஷையில் பேச விரும்பும் காரணம் என்ன?'' என்று முனிவர் கேட்டார்.

''முனிவரே!  இந்த நாட்டு மன்னரும் புவனகிரி மன்னரும் சண்டையிடப் போகிறார்கள். போரில் ஆயிரக் கணக்கான உயிர்கள் மடிவதை நான் விரும்பவில்லை. மன்னர்களிடம் பேசி இதைத் தடுக்க நினைக்கிறேன்'' என்றது.

ஒரு நொடி யோசித்த முனிவர், ''புறாவே, உனக்கு மூன்று நாட்களுக்கு மட்டும் பேசும் சக்தியை வழங்குகிறேன். உன் உயர்ந்த எண்ணம் நிறைவேற என் ஆசிகள்'' என்றார்.

புறாவுக்கு பேசும் சக்தி வந்துவிட்டது. முனிவரை வணங்கி நன்றி தெரிவித்துவிட்டு அரண்மனைக்குத் திரும்பியது. 'அறிவுரை சொன்னால், மன்னர் ஏற்றுக்கொள்ள மாட்டார். பொய் சொல்லித்தான் மனதை மாற்ற வேண்டும்.’ என்று நினைத்தது.

மறுநாள், மன்னர் அரண்மனைத் தோட்டத்துக்கு வந்ததும் அவரை நெருங்கியது. ''மன்னா வணக்கம். புவனகிரி நாட்டுடன் சண்டைப் போட்டால், போரில் நீங்கள் தோற்றுவிடுவீர்கள். உங்கள் அருமை மகளின் வாழ்க்கையும் பாழாகிவிடும். அதற்கு மாறாக, உங்கள் மகளை புவனகிரி இளவரசனுக்குத் திருமணம் செய்துகொடுங்கள். இதனால் உங்களுக்கு நன்மையே கிடைக்கும்'' என்றது.

வெண்புறாவின் விருப்பம் !

மகுடேஸ்வரன் உடனே மந்திரியை வரவழைத்து, புறா கூறியதைத் தெரிவித்தார்.

''அரசரே, புறா நம் மொழியில் பேசியது வியப்பாக இருக்கிறது. அது கூறியபடியே நடப்போம். இந்தத் திருமணத்தின் மூலம் இரண்டு நாடுகளும் நட்போடு வாழும். இந்தச் செய்தியைப் புறாவின் காலில் கட்டி அனுப்புவோம்'' என்றார்.

மந்திரி கூறியபடி மன்னர் செய்தார். புறா ஓலையுடன் விண்ணில் பறந்தது. அப்போது ஒரு பெரிய பருந்து புறாவின் அருகில் வந்து அதைப் பிடித்தது. ''என் பசிக்கு உன்னை இரையாக்கிக்கொள்ளப் போகிறேன்'' என்றது.

''பருந்தாரே, ஒரு முக்கியமான வேலையாக நான் புவனகிரி நாட்டுக்குச் செல்கிறேன். அந்த வேலை முடிந்து இதே வழியில்தான் வருவேன். அப்போது என்னை நீ தின்னலாம்'' என்று புறா உறுதிமொழி கொடுக்கவே, பருந்தும் சம்மதித்தது.

புறா தன் பயணத்தைத் தொடர்ந்தது. சில மணி நேரங்களில் புவனகிரியை அடைந்தது. அங்கே உலைக்களங்களில் கொல்லர்கள் ஆயுதங்கள் செய்வதையும், படை வீரர்கள் மும்முரமாகப் பயிற்சியில் ஈடுபடுவதையும் பார்த்தது.

'மன்னர் மகுடேஸ்வரன் கொடுத்த ஓலையின்படி இந்த நாட்டு மன்னர் நடக்காமல் சண்டைக்குக் கிளம்பினால் என்ன செய்வது?’ என்று வருந்திய புறா, ஓலையைப் பத்திரமான இடத்தில் ஒளித்துவைத்தது. அங்கே இருந்த சாம்பலில் விழுந்து புரண்டது. பார்ப்பதற்கு சாம்பல் வண்ணப் புறா மாதிரி தன் தோற்றத்தை மாற்றிக் கொண்டு அரண்மனைக்குச் சென்றது.

வெண்புறாவின் விருப்பம் !

அரண்மனைத் தோட்டத்தில் மன்னரும் அவர் மந்திரியும் இருந்தனர். ''புவனகிரி மன்னருக்கு வணக்கம்'' என்று கூற, மனிதர் பாஷையைப் பேசும் புறாவைப் பார்த்துத் திடுக்கிட்டார். ''என்ன திகைக்கிறீர்கள்? ஆண்டவன் அருளால் பேசும் சக்தியைப் பெற்றிருக்கிறேன். மன்னர் மகுடேஸ்வரனோடு நீங்கள் போர் செய்தால், கட்டாயம் தோற்றுவிடுவீர்கள். உங்கள் அருமை மகனின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும். கூடிய விரைவில் அந்த மன்னரிடம் இருந்து ஓலை வரும். அதில் கூறியபடி நடந்தால், இரண்டு நாடுகளும் முன்னேறும்'' என்று கூறிவிட்டுப் பறந்து சென்றது.

மறுநாள், புறா தன் இயற்கையான தோற்றத்தில் ஓலையோடு அரண்மனைக்கு வந்தது.

செய்தியைப் படித்த மன்னர் புவனேந்திரன், பேசும் புறா கூறியது முற்றிலும் உண்மைதான் என்று உணர்ந்தார். தன் மகனின் எதிர்காலம் ஒளிமயமாக அமையும் என்ற நம்பிக்கை உண்டாயிற்று. உடனே மந்திரியிடம், ''என் மகனுக்கு மகுடேஸ்வரன் மகளைத் திருமணம் செய்துகொள்வதாக வீரர் மூலம் செய்தி அனுப்புங்கள்'' என்றார். இதைக் கேட்ட புறாவும் மகிழ்ச்சியோடு வானில் பறந்தது. தொலைவில் தன் வருகையை எதிர்பார்த்துக் கொண்டு இருந்த பருந்தைப் பார்த்துவிட்ட புறா, அதன் அருகில் சென்றது.

''பருந்து அண்ணே, நான் சென்ற வேலை வெற்றிகரமாக முடிந்தது. இனி நீ என்னைச் சாப்பிடலாம்'' என்று விஷயத்தைச் சொன்னது.

''புறாவே, உன் செயலை நான் மிகவும் பாராட்டுகிறேன். வாக்குக் கொடுத்தபடி நீ நடந்துகொண்டது என் மனதைத் தொட்டு விட்டது. உன்னை இரையாக்கிக்கொள்ள நான் விரும்பவில்லை'' என்றபடி பருந்து பறக்க ஆரம்பித்தது.

பிறகு, புறா முனிவரைச் சந்தித்து நடந்ததைக் கூறியது. ''புறாவே, உன் உயிரையே பணயம் வைத்து நீ ஆற்றிய சேவையைப் பாராட்டுகிறேன். இன்று முதல் உங்கள் இனத்தைச் சமாதானச் சின்னமாக மக்கள் ஏற்றுக்கொள்ளும்படி ஆசீர்வதிக்கிறேன்'' என்றார்.

புறாவின் உள்ளம் மகிழ்ந்தது.