Published:Updated:

சிறுகதை

அனுக்ரஹம் !

சிறுகதை

அனுக்ரஹம் !

Published:Updated:

பெரியவர் அப்படிச் செய்வார் என்று யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை. எங்களுக்கானால் மலைப்பு; அச்சம்; தவிப்பு; இன்னதுதான் என்று சொல்லத் தெரியாத பதைபதைப்பு!

பெரியவர் இருந்த அந்த ஆத்திலே எல்லோரும் பதறிப்போய் வந்து பாதத்திலே விழுந்தும்... ஒரு எள்ளையும் புரட்ட முடியவில்லை.

சிறுகதை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##

போன வாரம்... ''உமாவின் ஜாதகத்துக்கு பத்துக்குப் பத்து பொருத்தம் வருகிற அயனான வரன்'' என்றபடி, என் அகத்துக்காரர் அனுப்பிய போட்டோவை இ-மெயிலில் பார்த்த மறுகணமே... நான் அதைத்தான் சொன்னேன், ''பெரியவரை கொஞ்சம் போய் பாத்துட்டு வந்துடலாமேண்ணா! அடுத்த ஃப்ளைட்டைப் பிடிச்சு வந்துடுங்களேன்!''

அவருக்கும் அதே மனமாகத்தான் இருந்தது, ''பின்னே? அவர் அனுக்ரஹம் இல்லாமலா!''

சொன்னாரே தவிர, ஒரு வாரமாக இப்போது... அப்போது... என்று தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. தொழில் நிமித்தமாக அமெரிக்கா போனவர், இன்றைக்கு... நாளைக்கு... என்று டிக்கெட்டை கேன்சல் செய்துகொண்டே இருந்தார்.

அதற்குள் பெரியவர் தங்கியிருக்கும் வீட்டுக்கு போன் மேல் போன் போட்டு, அகிலாண்டத்திடம் ஐந்தாறு தவணை வாங்கிவிட்டேன்.

''இப்போல்லாம் அத்தனை சுலபத் திலே பெரியவர் யாரையும் பார்க்க ஒப்புக்கறதில்லே. நாங்களும் எல்லாரையும் அண்ட விட்டுடறதுமில்லே!'' என்று குத்திக்காட்டக்கூட ஆரம்பித்து விட்டாள் கர்வத்தோடு. என்ன செய்வது? இவருக்குத்தான் கிளம்பவே முடியாமல் இருந்தது.

மாப்பிள்ளை சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட். இப்படி ஒரு வரன் கிடைத்தது நம் பாக்கியம் என்று கேட்டதுமே புரிந்து விட்டது எனக்கு. ஆனாலும், ஸ்தூலமாக எதிர்ப்படுபவை மட்டுந்தானே கண்ணுக்கும் புத்திக்கும் தென்படுகின்றன! முக்காலமும் உணர்ந்த பெரியவரைப் போன்றவர்களால்தானே ஜடத்தைத் துளைத்துக் கொண்டு, திருஷ்டியை செலுத்த முடிகிறது!

கல்யாணமாகி ஐந்தாறு வருஷங்கள் கர்ப்ப பாத்திரத்தில் ஓர் உயிர் உருவாகாமல் தவித்துக் கொண்டிருந்தபோதுதானே அகிலாண்டத்தின் வீட்டுக்குப் பெரியவர் எழுந்தருளியிருப்பது தெரிய வந்தது! அவரை முதன்முதலில் போய் பார்த்தபோது, எங்களை இன்னாரென்று தெரியாது... எதற்கு வந்திருக்கிறோம் என்று தெரியாது... பெரியவரின் வாக்கிலிருந்து வழிந்தது என்ன வார்த்தையா? வரம் அல்லவா அது!

''என்னத்துக்கு விசனம்? அம்பாள் பொறப்பொ! அவ பேரைத்தான் வெக்கப்போறே!''

- அவ்வார்த்தைகள் இந்த உயிர் போகும்போதுதான் என் காதுக்குள்ளிருந்து வெளியே போகக்கூடும்.அவர் வார்த்தை அப்படியே பலித்தது. அதற்குப் பிறகு புதிதாக எதைத் தொடங்குவதென்றாலும் சரி, ஒரு பயணம் போவதென்றாலும் சரி... இது இதற்குத்தான் என்றில்லாமல், பெரியவருக்கு நாங்கள் கொடுத்த தொல்லைகளையெல்லாம், சொந்தக் குழந்தைகளின் பிழைகளை ஏற்றுக்கொள்பவர் போல சகித்துக்கொண்டு, வழிகாட்டியாக, சகலத்துக்குமான மஹாகுருவாக இதுவரைக்கும் இருந்து வருவது அவர்தானே!

அந்த பங்களாவின் எல்லைக்குள்ளிருந்து அவர் வெளியே வந்ததே இல்லை. பெரும்பாலும் மாடியில் அவருக்கென்று ஒதுக்கப்பட்ட ஹாலிலும், தோட்டத்தைப் பார்க்கும் பால்கனியிலும் மட்டுமே வாசம். அவரது எழுந்தருளலால், அந்த பிராந்தியமே... வழிபடும் ஸ்தலமாக விரிந்து கிடக்கிறது.

இங்கு வருவதற்கு முன்... அம்பாசமுத்திரத்தில் மஹா பக்திமானான வேதசாஸ்திரிகள் ஒருவரின் பண்ணை வீட்டில் இருந்தார். அகிலாண்டத்தின் அகத்துக்காரர் கீர்த்திவாசன் அவரைப் பார்க்கப் போனபோது... என்ன தோன்றியதோ, அவரோடு காரில் ஏறி வந்து விட்டார். கிட்டத்தட்ட முப்பது, நாற்பது வருடங்கள் இருந்த அந்த வீட்டிலிருந்து ஒரே க்ஷணத்தில் புறப்பாடு! 'அந்த ஊருக்குச் செய்தது போதும்' என்று இருந்ததோ என்னமோ!

ஆகாரம்... பெரும்பாலும் கிடையாது. எப்போதாவது பழங்கள் மட்டும். மற்றபடி காற்றுதான் சகலமும். பஞ்சகச்சம், தளர்ந்த வெற்று மார்பில் பூணூல்கூட கிடையாது. முடியெல்லாம் வெளுத்து பெரும்பாலும் உதிர்ந்த தலை, பாழ் நெற்றி, எப்போதும் புன்னகை. எப்போதாவது செல்லமாகக் கோபம். இதுதான் பெரியவர்.

மாப்பிள்ளை வீட்டிலிருந்து ஐந்தாறு தடவை போன் வந்து விட்டது. ஒரு வழியாக என்னவரும் புறப்பட்டு வந்துவிட்டார். அதற்குள், அகிலாண்டம் ஏதோ சினிமா தியேட்டரில் 'இன்றே கடைசி' என்று போர்டு போடுவதைப் போல, 'கடைசி தவணை' என்று சொல்லாமல் சொல்லிவிட்டாள். 'யாரையும் பார்க்க மாட்டேன்' என்று பெரியவர் சொன்னதாக சரித்திரமே இல்லை. இவளாக கர்வத்தில் வரைந்து வைத்துக் கொண்ட சட்டம்தான் எல்லாம்.

வாசலிலேயே காரை நிறுத்திவிட்டு ஓட்டமும் நடையுமாக விரைந்தால், ஹாலில் விரிந்திருக்கும் சோஃபாவில் அத்தி பூத்தாற்போல உட்கார்ந்திருக்கிறார் பெரியவர்!

யாருக்கோ காத்திருப்பவர்போல வாசலையே பார்த்துக் கொண்டிருந்தார். அருகில் கையைக் கட்டிக்கொண்டு கீர்த்திவாசன். பின்னால் தோளைப் போர்த்திக் கொண்டு அகிலாண்டம். என்னைப் பார்த்ததும் ஒரு சம்பிரதாயப் புன்னகை பூத்தாள். அதையும் தாண்டி அவளது முகத்தில் ஒரு கலவரம்.

எங்களைப் பார்த்ததும் எழுந்து கொண்ட பெரியவர், ''ஆசீர்வாதத்தையெல்லாம் அங்கே போய் வெச்சுக்கலாம்!'' என்றபடியே  விறுவிறுவென வாசலுக்குப் போனார். அவசரமாக ஓடினால்... பெரியவர், எங்கள் காரில் உட்கார்ந்திருக்கிறார்.

பெரியவர் இவரைப் பார்த்து சொன்னார்... ''போலாம்!''

எங்கே என்று சொல்லவில்லை. ஏன் இந்த புறப்பாடு என்று தெரியவில்லை. நமஸ்காரம் பண்ண வந்தவனோடு பகவானே புறப்பட்டு வருகிறேன் என்று சொன்னால் பக்தனுக்கு கை ஓடுமா... கால் ஓடுமா?!

அகிலாண்டம் திக்பிரமை பிடித்தவள்போல அப்படியே சரிந்துவிட்டாள். கீர்த்திவாசன்தான் அவளைத் தேற்றிக் கொண்டிருந்தார்.

''அவ்வளவுதானா?'' என்கிற அவளது குரல் உடம்பினுள் எங்கோ பதுங்கியிருக்கும் உயிருக்குள்ளிருந்து வெளிவருவது போல இருந்தது.

''பெரியவர் என்ன நம்ம சொத்தா? காத்துப்போல இருக்கிற ஞானியை கட்டி வெச்சுடலாம்னு பாத்தியோ?'' என்றார் கீர்த்திவாசன்.

பெரியவர் திரும்பவும் இவரைப் பார்க்கிறார். இந்த முறை ஒரு உறுமல்!

''ம்ம்ம்!!!''

அவ்வளவுதான், டிரைவரை விலக்கி விட்டு இவரே டிரைவர் ஸீட்டில் உட்கார்ந்துவிட்டார்.

அடுத்ததாக என் பக்கமாக ஒரு பார்வை! நான் எப்போது காருக்குள் ஏறினேன் என்பது வழக்கம் போல எனக்கே தெரியவில்லை.

பெரியவர் சொன்னார், ''ம்!''

கார் காம்பவுண்டை விட்டு வெளியே வந்ததும் துணிச்சலைத் திரட்டிக்கொண்டு இவர் கேட்டார், ''எங்கே?''

''ம்?'' என்றபோது திரும்பவும் புன்னகை பூத்த முகம் வந்துவிட்டது.

பெரியவர் சொன்னார், ''எல்லாத்துக்கும் நான்தான் வழி சொல்லணுமோ - உன் வீட்டுக்குக் கூட!''

ஓவியம்: மணியம் செல்வன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism