Published:Updated:

சொல்வனம்!

படம்: பொன்.காசிராஜன்

சொல்வனம்!

படம்: பொன்.காசிராஜன்

Published:Updated:
##~##

விடைகளற்றவை

ரண வீடுகளில்
பூக்களுக்கு
எப்படித்தான் வருகிறதோ
வேறு மணம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திருமணம் ஆன பிறகு
பெண்களுக்கு
எப்படித்தான் வருகிறதோ
பெரியமனுஷித்தனம்

நாள்காட்டியில்
இல்லாவிட்டாலும்
சிறுவர்களுக்கு
எப்படித்தான் தெரிகிறதோ
பம்பர சீசனும்
கோலி சீசனும்

எல்லா பேருந்தின்
முன் இருக்கைகளிலும்
அமர
எங்கிருந்துதான்
வருகிறார்களோ
சில அழகிகள்!

                                   - அ.நிலாதரன்

சொல்வனம்!


நடுகல்

நாகம்போல் நெளிந்து
சென்ற
மாமதுரை வழித்தடத்தில்
நிழல்வனமாய் நின்றதொரு
நெடுங்கால ஆலமரம்

காக்கை குருவிகளின்
கூட்டுக் குடியிருப்பு

இளையோரின் உள்ளரங்க
விளையாட்டு மைதானம்
ஊர்கூடும் மாமன்றம்
முதியோரின் ஆசிரமம்

உச்சிவெயிற் பொழுதில்
உழைத்தோர், களைத்தோர்க்கு
ஓய்வில்லம்
தினக்கூலித் தாயின்
கைக் குழந்தைக்கு
விழுதிறங்கும் தூளி

பவளமணிகளா...
பழங்களா எனக் குழம்பிக்
கொத்துகிற கிளிக்கூட்டம்
கீச்சொலிகள் சங்கீதம்
உதிரும் பழம்பொறுக்க
உள்ளூர்ச் சிறார்க் கூட்டம்

பொழுதடைந்த பின்னால்
காதலர்க்கு நந்தவனம்
இருந்த இடத்தில் இன்று
காங்க்ரீட்டில் கைகாட்டி
'ஆலங்குடி’ என்று
அடையாளம் காட்டி

சினை ஆட்டை விழுங்கித்
திணறி நகரும் ஒரு
மலைப்பாம்பாய்ப் போகிறது
நான்கு வழிச்சாலை!

                                                      - நவஜீவன்


பரிச்சியம்

முரட்டு மீசையுடன்
முறைத்துக்கொண்டிருந்த
முண்டாசு நபரின்
கறுப்பு-வெள்ளைப்
புகைப்படம் காட்டியபோது
நீண்ட யோசனைக்குப் பின்
பாரதிதாசன் என்றான்
என் முகக் குறிப்பு உணர்ந்து
இல்லையில்லை
பகத்சிங் என்று
திருவாய் மலர்ந்தான்
உ.வே.சா-வை
வ.உ.சி. என்றோ
மா.பொ.சி-யை
கி.வா.ஜா. என்றோ
துணிச்சலாய்
அடையாளப்படுத்துவான்.
கம்பராமாயணம் படைத்தது
கண்ணதாசன் என்றும்
சிலப்பதிகாரம் எழுதியது
காளிதாசன் என்றும்
சந்தேகமின்றிச் சாற்றுவான்.
ஒருமுறை
ராமகிருஷ்ண பரமஹம்சரை
திருவள்ளுவரென்று சொல்லி
மிரள வைத்தான்.
இதனால் உண்டாகும்
மன உளைச்சல்கள் தவிர்த்து
சின்னத்திரை நடிகன்
முதற்கொண்டு
குத்துப்பாட்டு நடிகை வரை
அத்தனை பேர்களும்
என் பிள்ளைக்கு அத்துபடி!

                                                      - கல்லை. சிறி.ப.வில்லியம்ஸ்

உங்கள் கவிதைகளை, 'சொல்வனம்’, ஆனந்த விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2 என்ற முகவரிக்கு, அல்லது solvanam@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு எண்ணுடன் அனுப்புங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism