Published:Updated:

துர்கா

துர்கா

துர்கா

துர்கா

Published:Updated:
துர்கா
##~##

''என்னடா ஆனந்த் இது? நீயா சுதாவை கடத்தினே? எதுக்கு? நீ தெளிவா இருக்கியே? எப்படி? அம்மாவுக்கு நீ இங்க இருக்கறது எப்படி தெரியும்? என்னடா நடக்குது இங்கே?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 - கல்பனா குழம்பிப் போய் கூச்சலிட்டாள்.

என்ன நடக்கிறது..?! 'துர்கா’ தொடரை எப்படி முடிக்கலாம்..?! என்று கடந்த எபிசோட் முடிவில் கேட்கப்பட்டிருந்தது.

மயிலாப்பூர் - ப்ரீத்தா ரங்கசாமி, ஊஞ்சலூர் - ஆர்.வாசுகி, திருநின்றவூர் - குப்பிபாய், அயனாவரம் - ப்ரியா, ஹைதராபாத் -  கோமதி கிருஷ்ணமூர்த்தி, கோவை - ஜோஸ்பின்... புதிது புதிதாக யோசித்து நிறைய கதைகளைச் சொல்கிறார்கள் இந்தத் தோழிகள். ஆனால், நாம்தான் க்ளைமாக்ஸை நெருங்கிவிட்டோமே!

கோவங்குடி - நிர்மலா, கூடுவாஞ்சேரி - செல்லம், பெசன்ட் நகர் - கல்பகம் லஷ்மண், கூடுவாஞ்சேரி - லாவண்யா.... இந்த நால்வரும், 'ஆனந்த் - ராஜம் கூட்டணி' என்று கதையை நகர்த்துகிறார்கள்.

கும்பகோணம் - சித்ரா,  முகப்பேர் கிழக்கு - சுபா... 'ஆனந்த் திருந்தி, பிராயசித்தம் தேடுவதாக’ இந்த சகோதரிகள் பாதை போடுகிறார்கள்!

அசோக் நகர் - சுமதி ரகு... 'எல்லாமே, ஆனந்த் மூலமாக துர்கா செய்யும் ஏற்பாடுகள்' என்று பயணிக்கிறார் இந்த வாசகி.

வளசரவாக்கம் - ராஜி... 'ஆனந்த் - ராஜிம்மாவின் ஊழியன்' என்று திருப்பத்தை ஏற்படுத்தப் பார்க்கிறார் இந்த சிநேகிதி!

திருவான்மியூர் - ஜெயா சங்கரன்... இந்த சகோதரி கதாபாத்திரங்களுக்கு அழகான, நிறைவான 'ஃபினிஷிங் டச்' கொடுத்து, 'துர்கா’ க்ளைமாக்ஸை தெளிவாக நிறைவு செய்து, இயக்குநர் நாற்காலியில் 'ஜம்’ என்று உட்கார்கிறார். வாழ்த்துக்கள்!

''என்ன நடக்குது இங்கே? அம்மா மயக்கம்னு நடிச்சு, ஆட்டோவைத் திருப்பறாங்க. வழியில செல்போன்ல பேசறாங்க. இங்கே வந்து பார்த்தா, கடத்தப்பட்ட சுதா நிக்கறா. பைத்தியமா இருந்த ஆனந்த், சுதாவைக் கொண்டு வந்திருக்கான். எல்லாரும் என்ன செய்யறீங்க? துர்காவுக்கு துரோகம் பண்றீங்களா? குடும்பமே கூட்டு சேர்ந்து ஒரு நல்லவளுக்கு எதிரா நிக்கறீங்களா? என்னையும் உடந்தை ஆக்கப் பாக்கறீங்களா?''

- மூச்சுவிடாமல் கேட்டு, கல்பனா கூச்சலிட்டாள்.

''இரு கல்பனா... பதற்றப்படாதே. என்னைப் பேசவிடு...'' என்றான் ஆனந்த்.

''இல்லை... உங்க யாரையும் நான் நம்ப மாட்டேன்...''

''விடுங்க. நீங்க யாரும் பேச வேண்டாம். கல்பனாகிட்ட நான் பேசறேன்.''

குரல் கேட்டு கல்பனா திரும்ப, தீபிகா நின்றாள்!

''நீயா?''

''நானேதான்! முதல்ல இப்படி வந்து உட்காருங்க... நிறைய பேசணும், வாங்க.''

தீபிகா, கல்பனாவை இழுத்துப் பிடித்து பலவந்தமாக உட்கார வைத்தாள்.

''நான் சொல்றதைப் பொறுமையா கேளுங்க. அப்புறமா நீங்க பேசுங்க.''

கல்பனா மிரள மிரள விழித்தாள்.

''உங்க தம்பி ஆனந்த்துக்கு பைத்தியமே இல்லை. அவர் அப்படி நடிச்சார்.''

''எதுக்கு?''

''அம்மாகூட சேர்ந்து துர்காவுக்கு எதிரா நிறைய பாவங்களை, துரோகத்தை செஞ்சுட்டார். ஒரு கட்டத்துல எல்லாம் விளங்க, தெளிஞ்சுட்டார். தான் செஞ்ச பாவத்துக்கு பரிகாரம், துர்காவை விட்டு விலகறதுதான்னு முடிவுக்கு வந்து, தான் பைத்தியம்னு நடிப்பைத் தொடர்ந்தார். அதுக்கு டாக்டர் நாதமுனியும் ஒத்துழைப்பு கொடுத்தார். அதைப் புரிஞ்சுகிட்டு, ஆனந்தை ஏர்வாடியில சேர்த்து விடறதா டாக்டர் மூலம் சொல்ல வெச்சு, என்கூட கூட்டிட்டு வந்துட்டேன். அவருக்கு என் கம்பெனில ஒரு வேலை கொடுத்து, வீட்லயே ஒரு ஆபீஸை நிர்மாணிச்சு அவரை செயல்பட வெச்சேன்.''

''இதெல்லாம் எதுக்கு?''

''இருங்க கல்பனா... என்னைப் பேச விடுங்க. ஆனந்த் ஒதுங்கி இருக்கத்தான் நெனச்சார். ஆனா, அவரைக் குடும்பத்தோட சேர்த்து வைக்க நான் ஆசைப்பட்டேன். தொடர்ந்து உங்க குடும்பத்தை கண்காணிக்கத் தொடங்கினேன். பல விபரீதங்கள் அங்கே அரங்கேறிட்டு வர்றதை அதிர்ச்சியோட பார்த்தேன்.''

கல்பனா நிமிர்ந்தாள்.

துர்கா

''முதல்ல காண்டீபன் ஆளா இருந்த சதீஷ், அப்புறமா தனிச்சு இயங்கி, துர்காவை மோசம் பண்ணி பல கோடிகளை அடைய திட்டம் போட்டு அவங்க கம்பெனியில சேர்ந்ததைப் பார்த்தேன். இதை செந்தில் கடுமையா எதிர்க்க, செந்தில் - சுதாவை வாழவிடாம தடுக்க சதீஷ் எல்லா வேலைகளையும் செஞ்சான். ராஜேஸ்வரினு ஒரு தங்கமான பெண்மணி. அவ புருஷன் ராம்மோகனை சதியால் சாகடிச்சு தலைதூக்கின ரெண்டு பாவிகள் தனசேகரும், காண்டீபனும். அதுல தனசேகர்தான் இப்ப துர்காவோட பாஸ்.''

''எனக்குக் குழப்பமா இருக்கு தீபிகா...''

''எந்தக் குழப்பமும் இல்லை. ராஜிம்மாவை சதீஷ் கொல்லப் பார்த்தான். அவங்க உயிருக்குப் போராடற நிலையில ஆஸ்பத்திரில அட்மிட் ஆனப்பத்தான் எல்லா விவரங்களையும் ஆனந்த்கிட்ட நான் சொன்னேன். அவங்க பிழைச்சு, வீட்டுக்கு வர்றதுக்கு முன்னால ஒரு நாள் ஆஸ்பத்திரிக்கு போய் நானும், ஆனந்தும் பார்த்தோம். அப்ப செந்தில் மட்டும் இருந்தார்!''

ராஜம் தொடர்ந்தாள்...

''ஆனந்த் தெளிவா இருக்கறதைப் பார்த்து நான் பூரிச்சுப் போனேன். ஆரம்பத்துல ஆனந்த் - துர்காவை பிரிச்சு துரோகம் செஞ்ச பாவி நான். எப்படியாவது அவங்களை சேர்த்து வைக்கணும்னு துடிச்சேன்.''

தீபிகா பேசினாள்...

''அவசரப்படாதீங்க! அவங்க இணைய இது நேரமில்லை. அதுக்குள்ளே களையெடுக்க வேண்டியது நிறைய இருக்கு. துர்காவைச் சுற்றி என்ன நடக்குதுனு எங்களுக்கு வீட்ல இருந்தபடியே தகவலை கொடுங்கனு அம்மாகிட்ட இந்த செல்போனை கொடுத்தோம். சதீஷோட நடவடிக்கைகளை அவ்வப்போது எங்களுக்குத் தெரிவிச்சது அவனோட அம்மா சாரதாம்மா. ராஜிம்மா எங்களுக்கு பிஸினஸ் பார்ட்னர். துர்காவுக்கு மட்டும் இந்த விவரங்கள் தெரியாம, தகவல்களை நாங்க சேகரிச்சுட்டே வந்தோம்.''

கல்பனா பிரமித்தாள்!

''கடைசியா சுதாவைக் கடத்திச் செல்ல திட்டம் போட்டான் சதீஷ். பழியை செந்தில் அல்லது அன்வர் மேல போடறதா எண்ணம். இந்த நேரம் தனசேகரோட வெளிநாட்டு பிஸினஸ் உச்சகட்டத்துக்கு வந்தாச்சு. ராஜிம்மா கூடச் சேர்ந்து நானும் ஆனந்தும் ஆலோசனை நடத்தினோம். சுதாவை ஆட்களை வெச்சு நாங்க கொண்டு வந்துட்டோம். சுதாவும் நீங்களும் வெளியில போற நேரத்தை ராஜிம்மா எங்களுக்குத் தெரிவிச்சாங்க.''

''இது எதுக்கு?''

''பழியை சதீஷ் மேல போட்டு அவனை உள்ளே தள்ள. காரணம், முக்கிய ஃபார்முலா வர்ற நேரத்துல சதீஷ் வெளியே இருக்கக் கூடாது. அவன் உள்ளே போனா, காண்டீபனை சுலபமா இழுத்துடலாம். நாங்க நெனச்சபடியே எல்லாம் நடக்குது!''

ஆனந்த் குறுக்கிட்டான்.

''பாக்கியிருக்கற ஒரே எதிரி தனசேகர்தான்.''

''அவனை துர்கா பாத்துப்பா. ஏர்போர்ட்டுக்கு ஷ்யாம் கூடவே போறானே..! இப்ப அது நடந்துகிட்டிருக்கும். அன்வர் மூலமா செந்திலுக்கு தகவல் போயாச்சு.''

கல்பனாவுக்கு வியப்பு மாளவில்லை!

அதேநேரம் விமான நிலையத்தில் துர்காவும், ஷ்யாமும் இருக்க, அந்த வெளிநாட்டு ஆட்கள் 'சி’ ஃபார்முலாவுடன் வந்து சேர்ந்தார்கள். துர்காவின் கைக்கு அது மாறியது. துர்கா அதை பரிசோதித்து ஊர்ஜிதம் செய்துகொண்டாள்.

''போகலாமா ஷ்யாம்?''

''சரி துர்கா...''

''எங்க போறீங்க ரெண்டு பேரும்?''

குரல் கேட்டு துர்கா திரும்ப, தனசேகர் தன் ஆட்களுடன் நின்றார்! துர்கா இதை எதிர்பார்க்கவில்லை!

''நம்ம ஆபீஸுக்குத்தான் சார்.''

''அப்ப என்கூட வண்டில ஏறு.''

''இல்லை, நான் என் கார்ல வர்றேனே...''

''வேண்டாமே... ரெண்டு பேரும் ஒண்ணாவே போகலாம் துர்கா. கமான்.''

ஷ்யாம் மிரண்டு போனான்.

''அவனை அந்த வண்டியில ஏத்துங்கடா. வா துர்கா.''

தனசேகருடன் துர்கா காரில் ஏற, கார் ஓடத் தொடங்கியது.

''துர்கா... நீ ராஜேஸ்வரிக்குக் கூட்டாளினு எனக்குத் தெரியும். இதைக் கூட நான் தெரிஞ்சுக்கலைனா, இந்த பிஸினஸ் உலகத்துல இருக்க முடியுமா? ஆனானப்பட்ட ராம்மோகனையே சரிச்சவன் நான். ராஜி கூடச் சேர்ந்து என்னை கவிழ்க்கப் பாக்கறியா? காண்டீபனும், சதீஷ§ம் சொத்தைங்களா இருக்கலாம். ஆனா, தனசேகர் புத்திசாலிம்மா! அந்த 'சி’ பார்முலா, கோட் எல்லாத்தையும் இப்பிடி குடு. உன்னை உயிரோட விட்டாத்தானே பிரச்னை... உன் கதையை முடிச்சுட்டுத்தான் ஆபீஸுக்கே போகப் போறேன்!''

துர்கா எதுவும் பேசவில்லை. இவளுடன் பேசிக்கொண்டே வந்த தனசேகர் கார் போகும் பாதையைக் கவனிக்கவில்லை.

''கொடு அந்த பேக்கை!''

''இரு தனசேகர்... போய்ச் சேர வேண்டிய இடத்துக்குப் போன பிறகு கொடுக்க வேண்டியவங்ககிட்ட நான் கொடுக்கறேன்!''

''என்ன சொல்ற? டிரைவர்... கார் எங்கே போகுது?''

டிரைவர் இருக்கையில் இருந்த அன்வர் மெதுவாகத் திரும்பி கண்ணடிக்க, தனசேகர் ஆடிப் போக, அதற்குள் கார் ராஜேஸ்வரியின் பங்களாவுக்குள் நுழைந்து நின்றது! தனசேகர் துப்பாக்கியை உருவ, காரிலிருந்து தனசேகர் இழுத்து வெளியே போடப்பட, செந்திலும், போலீஸ் அதிகாரிகளும் வந்து நின்றார்கள்.

ஷ்யாம் ஏற்றப்பட்ட மற்றொரு காரும் அங்கே வந்து சேர்ந்தது. அதில் ராஜிம்மாவின் ஆட்களும் இருந்தனர்!

ராஜேஸ்வரி வெளியே வந்தாள். தனசேகரைச் சுற்றி போலீஸ் பட்டாலியன்.

''அம்மா, இந்தாங்க 'சி’ பார்முலா, கோட் அடங்கின ப்ராஜெக்ட் பேக்கேஜ்!''

ராஜேஸ்வரி பிரமிப்பு பரவசத்துடன் துர்காவை கட்டியணைத்து முத்தமிட்டாள்!

''இதுக்காக நீ போராடின போராட்டம் கொஞ்சமா நஞ்சமா? உன்னை எப்படி நான் பாராட்டுவேன்?''

ஷ்யாம் அருகில் வந்தான்.

''அக்கா... இந்த துரோகியை முதல்ல வழியனுப்பலாம்.''

ராஜேஸ்வரி திரும்பினாள். தனசேகரைச் சுற்றி போலீஸ். செந்தில் அருகில் வந்தான்.

''மேடம்... இந்த ஆளை வளைச்சுப் புடிக்க ஏகப்பட்ட வழக்குகள் இருக்கு. காண்டீபன், சதீஷ் ஏற்கெனவே உள்ளே இருக்காங்க. இந்த ஜென்மத்துல இவங்க மூணு பேருமே வெளிய வர முடியாது. சட்டம் அவங்களை வரவிடாது. நீங்க கவலையேபடாதீங்க!''

''பாவிங்க... என் புருஷனை சாகடிச்சு, என்னைப் பைத்தியமாக்கி செஞ்ச பாதகங்கள் கொஞ்சமா? துர்கா மட்டும் இல்லைனா, இந்த துரோகிகளை மடக்கியே இருக்க முடியாது.''

தனசேகர் ஜீப்பில் ஏற்றப்பட, செந்தில் அன்வருக்கு நன்றி சொல்ல, ஜீப் புறப்பட்டது!

''துர்கா... இந்த பேக்கேஜை வெச்சு கோடிக்கணக்கான பிஸினஸ் நமக்கு வரப் போகுது. எல்லாத்தையும் நிர்வகிக்கப் போறது இனிமே நீதான்!''

''ஐயோ ராஜிம்மா... எனக்கெதுக்கு?''

''அதுக்குத் தகுதியானவள் நீதான். இந்த பிஸினஸ் கை கூடினதும், அவர் ஆசைப்பட்ட மாதிரி, பெரிய ஒரு ஆஸ்பத்திரி, பள்ளிக்கூடம், கல்லூரி, முதியோர் இல்லம், குழந்தைகள் காப்பகம்னு எல்லாம் ஆரம்பிக்கணும். அதுக்கான திட்டங்களை ஷ்யாம் போட்டு வெச்சுருக்கான். அதுமட்டுமில்லை துர்கா... ஒரு பக்கம் இதுக்கெல்லாம் நீ ஒத்துழைப்பு கொடுத்திருக்கே. இன்னொரு பக்கம் எதிரிகளைப் பிடிக்க உதவினது யாரு தெரியுமா?''

''யாரு மேடம்?''

''உன் புருஷன் ஆனந்த்! உதவி தீபிகா!''

''என்ன சொல்றீங்க?''

''சுதா, ஆனந்த்கிட்ட பத்திரமா இருக்கா. நீ உங்க வீட்டுக்குப் போனா, எல்லாரும் இருப்பாங்க.''

''அக்கா, நாமும் அங்கே போகலாம்!'' என்று ஷ்யாம் சொல்ல, அனைவரும் புறப்பட்டனர்.

துர்கா ஒரு மாதிரி பிரமிப்பில் மிதந்தாள்! காரில் மூவரும் ஏறினார்கள்! துர்காவின் வீட்டை கார் அடைய, வாசலில் தீபிகாவின் கார் நின்றது!

''வந்துட்டாங்க அவங்க!''

துர்கா முதலில் உள்ளே நுழைய, ராஜிம்மாவும், ஷ்யாமும் பின்னே சென்றார்கள்.

''வாங்க துர்கா!''

தீபிகா அழைக்க, ராஜம் ஓடி வந்து துர்காவின் கைகளைப் பிடித்துக் கொண்டாள்!

''உங்க வீட்டுக்கு நாங்க வந்து, உங்களை 'வாங்கனு’ கூப்பிடறோம்!'' என்று தீபிகா சிரித்தபடி சொல்ல, ராஜேஸ்வரியை துர்கா உட்கார வைத்தாள்.

''தீபிகா... எதிரிகளை மடக்கி புடிச்சு, செந்தில் உள்ளே தள்ளியாச்சு. அன்வர் உதவியை மறக்க முடியாது. 'சி’ பார்முலா பத்திரமா என் கைக்கு வந்தாச்சு. நீயும் ஆனந்த்தும் செஞ்ச உதவிகளை என்னால மறக்க முடியாது!'' என்றார் ராஜிம்மா.

துர்கா

''நாங்க அணில்தான் - ராமருக்கு பாலம் கட்ட உதவின அணில் மாதிரி. துர்கா எடுத்த ரிஸ்க்தான் அதிகம்!''

ராஜம் பக்கத்தில் வந்தாள். கண் கலங்க துர்கா எதிரில் நின்றாள். நடேசன் நெருங்கினார்!

''துர்காவுக்கு இந்தக் குடும்பம் ஆரம்பத்துல செஞ்ச துரோகம் கொஞ்சமா? மாமியார், புருஷன், கல்பனா, சுதா யாருமே துர்காவுக்கு ஆதரவா இல்லையே? எல்லாரும் அவளை எதிர்த்து ஓட ஓட விரட்டினாங்களே!''

கல்பனா அருகில் வந்தாள்.

''ஆரம்பம் முதலே அப்பா மட்டும்தான் துர்காவுக்கு ஆதரவு. அன்வர், பாலாஜி, வராகன், கடைசியா செந்தில் அத்தனை பேரும் இந்த சகோதரியை புரிஞ்சுகிட்ட உத்தமமான ஆண்கள். பெண்களே, இந்த நல்லவளுக்கு எதிரியா இருந்தாங்க. ஆனா, துர்கா கலங்கல. யாரையும் வெறுக்கல.''

ராஜம் கதறிவிட்டாள்!

''ஒவ்வொரு பொண்ணுக்கும் புருஷன் ஆதரவு இருந்தாத்தான் நல்ல வாழ்க்கை. ஆனா, துர்காவுக்கு அதுவே கிடைக்கல. ஆனாலும் புகுந்த வீட்டை நேசிச்ச ஒரே பெண் துர்காதான். இவளுக்கு நான் செஞ்ச துரோகத்துக்கு இன்னும் பல ஜென்மங்கள் எடுத்து பாவத்தைக் கழுவணும்!''

ராஜம், துர்காவின் காலில் விழப்போக, துர்கா பதறிவிட்டாள்!

''அத்தே... என்ன காரியம் செஞ்சீங்க?''

ராஜி எழுந்து வந்தாள்!

''சரி! ஆனந்த் எங்கே?''

''உள்ளே இருக்கான்!'' என்றாள் ராஜம்.

''எதுக்கு? செஞ்ச பாவங்களுக்கு ஆனந்த் நிறைய பரிகாரம் தேடியாச்சே! எதுக்காக உள்ளே இருக்கணும்? சுதா... உங்கண்ணனை கூட்டிட்டு வா!''

''இரு சுதா! நானே போறேன்!''

துர்கா உள்ளே வர, ஜன்னலோரம் ஆனந்த் திரும்பி நின்றான். துர்கா மெள்ள அவன் தோளில் கை பதிக்க, ஆனந்த் திரும்பினான்! அதுவரை அடக்கி வைத்திருந்த கண்ணீர் உடைப்பெடுத்துக் கொண்டு பெருக, ஆனந்த் கதறிவிட்டான்! அவன் அழுது முடியட்டும் என துர்கா காத்திருந்தாள்!

''துர்கா... என் பாவங்கள், இந்த கண்ணீர்ல கரைஞ்சதானு எனக்குத் தெரியல!''

''அப்படியெல்லாம் சொல்லாதீங்க... வெளியில கம்பீரமா வாங்க!''

அவன் கைகளைப் பிடித்து துர்கா அழைத்து வர, அப்போதுதான் பள்ளிக்கூடம் முடிந்து உள்ளே நுழைந்த அஞ்சு, ''ஹய்! அப்பா!'' என்று ஓடி வந்தது! அதை அப்படியே தூக்கி, இறுக அணைத்து ஆனந்த் மாறி மாறி முத்தமிட்டான்!

''சரி அத்தே! இன்னும் ரெண்டே நாள்ல சுதா - செந்திலுக்கு கல்யாணம். கடைசி கட்ட ஏற்பாடுகளை கவனிக்கணும். மாமா ரெடியா இருங்க'' என்று துர்கா சொல்ல... ஆளாளுக்கு பரபரக்க ஆரம்பித்துவிட்டனர்.

''ஆனந்த், நீங்க போய் சாரதாம்மாவைக் கூட்டிட்டு வந்துடுங்க. பெத்த பிள்ளைனு கூட பாக்காம சதீஷ§க்கு எதிரா செயல்பட்ட புண்ணியவதி அவங்க. இனிமே அவங்க நம்ம பராமரிப்புலதான் இருக்கணும்!''

அடுத்த இரண்டு நாட்களில் செந்தில் - சுதா கல்யாணம் கோலாகலமாக நடந்து முடிய, செந்திலின் வீட்டுக்குப் புறப்பட்டாள் சுதா.

''கல்பனா, நீ புறப்படு. நம்ம வீட்டுக்குப் போகலாம்!''

- வராகன் முடுக்கினான்.

துர்கா

பாலாஜி தன் குழந்தையுடன் புறப்பட்டுவிட்டான். அன்வர் தன் பணிகளை கவனிக்கத் தொடங்கினான். தனசேகர், காண்டீபன் நடத்திய கம்பெனி நிர்வாகம் மொத்தமும் ராஜிம்மாவின் பராமரிப்பில் வந்துவிட, ஒட்டுமொத்தமாக மேனேஜிங் டைரக்டர் பதவியை துர்கா ஏற்றுக்கொண்டாள். வலது கையாக ஆனந்த் ஒரு பக்கமும், ஷ்யாம் மறுபக்கமுமாக செயல்படத் தொடங்க, பிஸினஸ் களைகட்ட, ராஜிம்மா கம்பெனிகளின் சேர்மன் பதவியை ஏற்றுக்கொண்டாள்!

முதலில் திறக்கப்பட்டது முதியோர் இல்லம். திறந்து வைத்தது நடேசன். ராஜம் முன்னதாகவே சொல்லிவிட்டாள்!

''துர்கா... நானும் உங்க மாமாவும் இனி முழுமையா முதியோர் இல்லத்துல தங்கி, அதோட நிர்வாகப் பொறுப்பை ஏத்துக்கப் போறோம்!''

''எதுக்கு அத்தே?''

''அதுல எங்களுக்கு ஒரு ஆத்ம திருப்தி இருக்கம்மா!''

''ஆமாம் துர்கா! அதுதான் சரி!''

துர்கா - ஆனந்த், குழந்தை அஞ்சு என அற்புதமான ஒரு தனிக் குடித்தனம் தொடங்கிவிட்டது!

எந்த இடத்திலும் பதறாமல், சிதறாமல், யாரையும் எதிரியாக கருதாமல், எல்லாரையும் எப்போதும் நேசிக்க முடியும் என்ற நம்பிக்கையில், பொறுமையில் ஒரு பூமி தேவியாக வாழ்ந்த துர்கா என்ற அற்புதமான ஒரு பெண்ணின் வாழ்வில் ஒரு புது அத்தியாயம் தொடங்கியது!

நிறைவடைந்தது

ஆடைகள் உதவி: பி.எம்.சில்க்ஸ், மயிலாப்பூர், சென்னை