தொடர்கள்
Published:Updated:

கடலை...கடலை...

கீர்த்தி ஓவியம் : சூர்யா

##~##

கூத்தும் கும்மாளமும் நிரம்பி வழிந்த அந்தக் காட்டில் இரண்டு நாட்களாக குரங்குகள் வருத்தத்தோடு இருந்தன.

அந்தக் குரங்குக் கூட்டத்தில் படுசுட்டியாகத் திரிந்த மணி, இப்போது இல்லை. பாவம் மணிக் குரங்கு. இப்போது சங்கிலியால் கட்டப்பட்டு, வீட்டுக்கு வீடு சென்று கர்ணம் அடித்துக்கொண்டு இருக்கும்.

அந்தக் காட்டுக்கு அடிக்கடி சில மனிதர்கள்  வருவார்கள். வாய் குறுகிய சொம்புகளில் கடலைப் பருப்புகளைப் போட்டுத் தரையில்வைத்துவிட்டு, மறைந்துகொள்வார்கள்.

பசியோடு இருக்கும் குரங்குகள் ஓடிவந்து சொம்புக்குள் கையைவிட்டு, கடலைப் பருப்புகளைக் கைநிறைய அள்ளும். அந்த நேரத்தில் மனிதர்கள் தடியோடு ஓடிவருவார்கள். எடுத்த கடலைகளைச் சொம்புக்குள் போட மனம் இல்லாத குரங்குகள், கையில் இருக்கும் கடலையோடு கையை வெளியே எடுக்கப் பார்க்கும். வாய் குறுகிய சொம்பில் இருந்து கை வெளியே வராது. ஓடவும் முடியாமல் மரத்தில் ஏறவும் முடியாமல் அந்தக் குரங்குகள் மனிதர்களின் கையில் அகப்பட்டுவிடும்.

இப்படி மனிதர்கள் அவ்வப்போது தங்கள் இனத்தவரைப் பிடித்துப்போவதைப் பார்த்து மற்ற குரங்குகள் தவித்தன. எல்லோருக்கும் செல்லப் பிள்ளையான மணியை, மனிதர்கள் பிடித்துக்கொண்டு போனதில் இருந்து, 'இந்தக் கொடுமை தீர ஏதேனும் வழி கண்டுபிடித்தே ஆக வேண்டும்’ என்று குரங்குகள் உறுதி எடுத்தன. இரவில் அதற்கான ஆலோசனைக் கூட்டமும் நடைபெறப்போவதாக அறிவிக்கப்பட்டது.

அன்று இரவு, குரங்குகளின் தலைவர் மூக்கன் நடுநாயகமாக ஒரு கல்லின் மீது அமர்ந்து இருந்தது. ஒவ்வொரு குரங்கும் தங்கள் இனம் மனிதர்களிடம் பிடிபட்டு அடிமையாக மாறுவதைச் சொல்லி வருத்தம் தெரிவித்தன.

கடலை...கடலை...

''இப்படியே போனால், மனிதர்கள் நம் இனத்தையே அழித்துவிடுவார்கள்'' என்று ஒரு குரங்கு சொன்னது.

''நம் பலவீனத்தைப் பயன்படுத்தி நம்மைப் பிடித்து அடிமையாக்குகிறார்கள்'' - இது இன்னொரு குரங்கின் ஆதங்கம்.

''மனிதர்களுக்கு நாம் என்ன தீங்கு செய்தோம்? ஏன் இப்படிச் செய்கிறார்கள்?'' என வருத்தத்தோடு கேட்டது ஒரு குட்டிக் குரங்கு.

''ஆளாளுக்கு இப்படிப் பேசிக்கொண்டு இருந்தால் இதற்கு என்னதான் தீர்வு? அதைப்பற்றி யோசிப்போம்!'' அந்தக் கூட்டத்தின் துணைத் தலைவர் சற்று உரத்த குரலில் சொன்னது.

''மனிதர்கள் செம்பில் கடலைகளைப் போட்டு வைக்கிறார்கள். நாம் ஆர்வத்தோடு கடலைகளைக் கையில் எடுக்கிறோம். பிறகு அவர்கள் ஓடிவரும்போது கடலைகளைப் போட்டுவிட நமக்கு மனம் வருவதில்லை. இனி நாம் கடலையே தின்னக் கூடாது என்று வைராக்கியம் எடுத்துக்கொள்வோம்'' என்றது ஒரு பெண் குரங்கு.

''ஐயோ... என்னால் அப்படி வைராக்கியம் எடுத்துக்கொள்ள முடியாது'' எனப் பதறியது ஒரு தடிக் குரங்கு.

''நீ ஒரு தின்னிமாடன். இப்படித்தான் சொல்வாய். உனக்கு கடலைதான் வேண்டும் என்றால், மனிதர்களிடம் அகப்பட்டு அடிமையாகக் கிட''  எனக் கோபத்துடன் சொன்னது பெண் குரங்கு.

கடலை...கடலை...

இப்படி ஒவ்வொரு குரங்கும் பேச, சற்று நேரத்தில் அங்கே ஒரே கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. ''எல்லோரும் கொஞ்சம் வாயை மூடுகிறீர்களா?'' என்று அதட்டியது தலைவன் குரங்கு.

அவ்வளவுதான்... எல்லாக் குரங்குகளும் வாயை மூடிக்கொண்டன. சற்று நேரம் அமைதியாகக் கழிந்தது. ''நம் குரங்கு இனத்துக்குக் கடலை என்றால் மிகவும் பிடிக்கும். அப்படி இருக்க, நாம் ஏன் கடலையைத் தியாகம் செய்ய வேண்டும். மனிதர்களின் சூழ்ச்சியை நாமும் சூழ்ச்சியால் ஜெயிக்க வேண்டும்'' என்றது.

பிறகு திடீரென்று 'ஐடியா வந்துவிட்டது!’ என்று விரலைச் சொடுக்கியது.

சில நாட்கள் கழிந்தன. அன்று வழக்கம்போல் அந்தக் காட்டுக்குள் மனிதர்கள் வந்தார்கள். அவர்களைக் கண்டதும் குரங்குகள் ஒன்றையன்று பார்த்துக் கண்ணடித்துக்கொண்டன.

மனிதர்கள் பல சொம்புகளில் கடலையைப் போட்டு, குரங்குகளின் பார்வையில் படும்படி வைத்துவிட்டு, புதர்களின் பின்னால் மறைந்துகொண்டார்கள். இதுதான் சமயம் என்று குரங்குகள் மரத்தில் இருந்து கீழே குதித்து, சொம்புகளை நோக்கி ஓடிவந்தன. கண்சிமிட்டும் நேரத்தில், ஒவ்வொரு குரங்கும் ஒவ்வொரு சொம்பைத் தூக்கிக்கொண்டு ஒரே ஓட்டமாகக் காட்டுக்குள் ஓடி மறைந்தன.

குரங்குகளின் செய்கையைக் கண்ட மனிதர்கள் திகைத்தார்கள். 'நம் சூழ்ச்சியை இந்தக் குரங்குகள் புரிந்துகொண்டன. குரங்குகளைப் பிடிக்கவந்து கடலையும் போச்சு, சொம்பும் போச்சே’ என்று புலம்பியபடியே கிளம்பினார்கள்.

அன்று இரவு நடந்த குரங்குகளின் கூட்டத்தில்...

''பார்த்தீர்களா? எப்போதும் சூழ்ச்சியை சூழ்ச்சியால்தான் வெல்ல வேண்டும். பல 100 ஆண்டுகளாக மனிதர்கள் நம்மைப் பிடிக்க இந்த வழியைத்தான் பின்பற்றினார்கள். இனி அவர்கள் வேறு திட்டம் யோசிக்கப் பல காலம் ஆகும். அது வரை நாம் சந்தோஷமாக இருக்கலாம். எல்லோரும் போய் ஆடிப்பாடி இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடுங்கள்'' என்றது தலைவன் குரங்கு.

பல நாட்களுக்குப் பிறகு, அங்கே ஆட்டமும் பாட்டமும் அரங்கேறத் தொடங்கியது. ஒவ்வொரு குரங்கின் கையிலும் கடலை ஜொலித்தது!