தொடர்கள்
Published:Updated:

கொல்லிமலைப் புதையல் !

வேணு சீனிவாசன், ஸ்யாம்

##~##

குகையை நோக்கி நெருப்புப் பந்து ஒன்று திகுதிகுவென உருண்டுவருவதைக் கண்ட ஆறுமுகம், 'ஐயோ, கொள்ளிவாய்ப் பிசாசு’ என்று கத்தினான். இதே நேரத்தில் வெளியே யாரோ ஓடும் சத்தம் கேட்டது.

இருட்டில் யார் ஓடுகிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. 'நெருப்புப் பந்து குகை வாசலில் இருக்கும் தேன் கூட்டைக் கலைத்துவிட்டால் ஆபத்து. இதில் இருந்து எப்படித் தப்புவது?’ என்று தாத்தா யோசித்தபோது, நெருப்புப் பந்து வேறு பக்கமாகச் சென்றுவிட்டது.

''ஐயா, இதுதாங்க கொள்ளிவாய்ப் பிசாசு. ஆளை அடிச்சுடும். யார் செஞ்ச புண்ணியமோ மனசை மாத்திக்கிட்டு திரும்பிப் போயிருச்சு'' என்றான் ஆறுமுகம்.

''எல்லோரும் படுத்துத் தூங்குங்க. இதைப் பத்தி காலையில் பேசிக்கலாம்'' என்றார் தாத்தா.

கொல்லிமலைப் புதையல் !

காலையில் வாசுவும் மைதிலியும் கண்விழித்து எழுந்தபோது, சூரிய வெளிச்சம் பளீர் என்று அடித்தது. ஆறுமுகமும் தாத்தாவும் குகைக்கு வெளியே பேசிக்கொண்டு இருந்தனர். இருவரும் அங்கே சென்றார்கள். ''தாத்தா, நாம ராத்திரி பார்த்தது கொள்ளிவாய்ப் பிசாசு இல்லையா?'' என்று கேட்டான் வாசு.

''இல்லே, காட்டில் சதுப்பு நிலத்திலும் கால்நடைகளின் சாணம் கிடக்கும் இடத்திலும் மீத்தேன் என்ற ஒரு வாயு உற்பத்தியாகும். அது தானாகத் தீப்பிடித்து, வாயு இருக்கிற வரை எரிஞ்சுட்டு அணைந்துவிடும். இதைத்தான் கொள்ளிவாய்ப் பிசாசுனு சொல்றாங்க. அங்கே பாருங்க. மான்கள், காட்டு எருதுகளோட சாணம் இருக்கு. அதில் இருந்து உற்பத்தியான எரிவாயுதான் தீப்பிடிச்சு இருக்கு'' என்றார் தாத்தா.

கொல்லிமலைப் புதையல் !

இத்தனை சொல்லியும் அவரை நம்பாமல் பார்த்தான் ஆறுமுகம். அதற்கு மேல் தாத்தா யாரையும் பேசவிடாமல், ''சீக்கிரமாக் கிளம்புங்க.'' என்றார்.

அவர்கள் கொஞ்சம் தொலைவு மலைப்பாதையில் ஏறியதும், யாரோ முனகும் சத்தம் கேட்டது. ஒருவன் மலைச்சரிவில் உள்ள பாறை இடுக்கில் மாட்டிக்கொண்டு வெளியே வர முடியாமல் தவித்தான். ''டேய் யாரு நீ? இங்கே எப்படி விழுந்தே?'' என்று கேட்டான் ஆறுமுகம்.

''என் பேரு காடன். நான் கொல்லிமலையில் இருக்கிறவன். என்னை மேலே தூக்குங்க. விவரத்தை அப்பறமாச் சொல்றேன்'' என்றான் அவன்.

கயிற்றின் ஒரு முனையை மரத்தில் கட்டி, மற்றொரு முனையைப் பள்ளத்தில்  வீசிய ஆறுமுகம் ''இதைப் பிடிச்சிக்கிட்டு வா'' என்றான்.

அவன் மெதுவாக மேலே வந்தான். இருபது வயது இருக்கலாம். கட்டான உடல், கருத்த உருவம், காட்டு வேலைகளைச் செய்து உரமேறிய கைகள். மைதிலி, அவனுக்குத் தண்ணீர் கொடுத்தாள். அவன் கால்களிலும், கைகளிலும் சிராய்ப்புகள். முதல் உதவிப்பெட்டியில் இருந்து பஞ்சு, மருந்தை எடுத்த வாசு, காயத்தைத் துடைத்தான்.

கொல்லிமலைப் புதையல் !

''நீ எப்படி இங்கே வந்து மாட்டிக்கிட்டே?'' என்று கேட்டார் தாத்தா.

''ஐயா, என்னை மன்னிச்சுடுங்க. நான் உங்களைக் கொல்லிமலையில் இருந்து விரட்டத்தான் வந்தேன். அம்பினால் அடிச்சேன்.'' என்றான் காடன்.

''ராத்திரி குகைக்கு வெளியே ஓடியது நீங்கதானா?'' என்றாள் மைதிலி.

''ஆமாம்.'' என்றான் காடன்.

''எதுக்காக எங்களை விரட்டுறே?'' என்று கேட்டான் ஆறுமுகம்.

''கொல்லிமலைக்கு வரும் நிறையப் பேர் இங்கே இருக்கும் மூலிகைகளைப் பிடுங்கிட்டுப் போயிடுறாங்க. பழங்குடி மக்களுக்குத் தொல்லை ஏற்படுத்துறாங்க. விலங்குகளை விஷம் வெச்சுக் கொன்னுடுறாங்க. அதனால், மலையில் ஒரு எல்லைக்கு மேலே யாரு ஏறினாலும் நானும் நண்பர்களும் இப்படிப் பயமுறுத்துவோம்'' என்றான் காடன்.

''உண்மைதான். மனுஷங்க காலடி படாதவரை இயற்கை அழகாக இருக்கு. அவன் நுழைஞ்சுட்டா மரத்தை வெட்டுவான். காட்டை அழிப்பான். விலங்குகளின் வாழிடங்களைச் சுருக்குவான்'' என்றார் தாத்தா.

''சரியாச் சொன்னீங்க தாத்தா. உங்களைத் தொடர்ந்து வந்த நான், நேத்து ராத்திரி கொள்ளிவாய்ப் பிசாசைப் பார்த்து ஓடினப்ப சரிவில் விழுந்துட்டேன். நீங்க எங்கே போறீங்க பாதாள குகைக்கா?'' என்று கேட்டான்.

''இல்லே'' என்று அவசரமாக மறுத்தான் ஆறுமுகம்.

''எனக்கு எல்லாம் தெரியும். உங்க பின்னாலேயே வந்ததால், நீங்க அப்பப்ப பேசுறதை வெச்சுப் புரிஞ்சுக்கிட்டேன். உன்னோட யானைக்கு எதுவோ வியாதி. அதைப் போக்கணும்னா நெற்றிப் பட்டத்தைப் போடணும். நீங்க அதை எடுக்கிறதில் எனக்கு ஆட்சேபணை இல்லே. நீங்க விரும்பினா நான் உங்களுக்கு உதவுறேன்.'' என்றான் காடன்.

அவனுடைய பேச்சு உண்மை என்று உணர்ந்தார்கள். ஆகவே, தாத்தா அவனிடம் சில விவரங்களைத் தெரிவித்தார். ''வாங்க, நான் உங்களை அருவி இருக்கிற இடத்துக்குக் கூட்டிட்டுப் போறேன்'' என்றான் காடன்.

கொல்லிமலைப் புதையல் !

எல்லோரும் பயணத்தைத் தொடர்ந்தனர். காடன் பேசிக்கொண்டே முன்னால் நடந்தான். ''நாங்க காட்டில் இருக்கிற மரங்களை வெட்டாமல்,  காயோ, பழமோ பலனை மட்டுமே எடுத்துக்குவோம். அதனால் செடி, கொடிகள் அழிவது இல்லே.'' என்றான்.

''அதோ ஒரு குளம்'' என்றான் வாசு. அவர்கள் குளத்தின் கரையை அடைந்தனர். ''பொரி இருந்தா போட்டுப் பாருங்க நூற்றுக்கணக்கான மீன்கள் வரும்'' என்றான் காடன்.

''இதுக்காகத்தான் மூசோ தாத்தா பொரி கடலையை வாங்கிட்டுப்போகச் சொன்னாரா?'' என்றாள் மைதிலி.

பொரி கடலையைத் தண்ணீரில் தூவியதும் ஏராளமான மீன்கள் வந்தன. ''கொல்லிமலையில் இருக்கிற அறப்பளீஸ்வரர், மீன் வடிவத்தில் இருப்பதாக நம்பிக்கை. அதனால், கோயிலுக்குப் போறவங்க மீன்களுக்கு முதலில் பொரி கடலை, சாதம், தின்பண்டங்களைக் கொடுத்துட்டுதான் சாமி கும்பிடப்போவாங்க'' என்றான் காடன்.

வாசு, பாதையில் இருந்து கொஞ்சம் விலகிக் காட்டுக்குள் இரண்டு அடிகள் வைத்தான், ''அங்கே போகாதே'' என்றான் காடன்.

அதற்குள் ''ஐயோ... பாம்பு பாம்பு'' என்று கத்திக்கொண்டே காலை உதறினான் வாசு. அவன் காலைக் கறுப்பாக எதுவோ கிறுகிறுவென்று சுற்றிக்கொண்டது. இடுப்பில் இருந்த சின்னக் கத்தியைக் கையில் எடுத்துக்கொண்டு அவனை நோக்கி ஓடினான் காடன்.

        (தொடரும்)