தொடர்கள்
Published:Updated:

டியர் தம்பிப் பாப்பா !

டியர் தம்பிப் பாப்பா !

##~##

விக்னேஷ் அம்மா விமலாவுக்கு வருத்தமாக இருந்தது. காரணம், மூத்த பையன் விக்னேஷ். ஒன்றாம் வகுப்புப் படிக்கிறான். அவன் தன் தம்பி தினேஷை அடிக்கடி அடித்துவிடுகிறான். தினேஷ் எட்டு மாதக் குழந்தை. ஏதாவது கை வேலை என்று சென்றுவிட்டு வந்துபார்த்தால், தினேஷ் வீறிட்டு அழுதுகொண்டு இருப்பான். விக்னேஷ் சத்தம் இல்லாமல் அவனைக் கிள்ளியோ, அடித்தோ இருப்பான்.

''விக்னேஷ், தம்பியைக் கிள்ளக் கூடாது. அவனை நாமதான் பத்திரமாகப் பாத்துக்கணும்!'' என்று விமலா அன்புடன் பல முறை சொல்லிப்பார்த்தார். ஒரு முறை அப்பா அடித்தும் பார்த்துவிட்டார். அவன் மசிவதாக இல்லை. இதில் கை சூப்புவது வேறு புதிதாய்ப் பழகி இருந்தான்.

விமலாவின் தங்கை ரஞ்சிதா, ஒரு நாள் குழந்தையைப் பார்க்க வந்தாள். அவள் சைக்காலஜி படித்தவள். கவுன்சிலிங் மையம் ஒன்றில் பணிபுரிகிறாள். அவளிடம் விமலா தன் பிரச்னையைச் சொன்னாள். அதற்கு ரஞ்சிதா, ''எல்லாக் குழந்தைகளுக்கும் 'நம் அம்மா நம்மளைத்தான் நல்லாக் கவனிக்கணும். நம்மளைத்தான் கொஞ்சணும்’ என்கிற எண்ணம் இருக்கும்.  ஆரம்பத்தில் நீ விக்னேஷைக் கவனிச்சு இருப்பே. தம்பிப் பாப்பா பிறந்தவுடனே உன் கவனம் திரும்பி இருக்கும். அம்மா நம்மளை முன்ன மாதிரி கவனிக்கவில்லை என்கிற ஏக்கம், அவனுக்குத் தம்பி மேல கோபமா மாறுது. கை சூப்பும் பழக்கமும் ஏக்கத்தில் வந்ததுதான்'' என்றவள், விக்னேஷை வழிக்குக் கொண்டுவர சில யுக்திகளைச் சொல்லிவிட்டுச் சென்றார்.

டியர் தம்பிப் பாப்பா !

அன்று சனிக்கிழமை, பள்ளி விடுமுறை. விக்னேஷ் வீட்டில் இருந்தான். விமலா தினேஷைக் குளிப்பாட்டிப் படுக்கையில் கிடத்தினாள். ''விக்னேஷ், அம்மாவுக்கு ஒரு உதவி பண்றியா? தம்பிப் பாப்பாவுக்கு பால் கலந்து எடுத்துட்டு வர்றேன். நீ அவனுக்கு பவுடர் போட்டுவிடுறியா?'' என்றார்.

சோபாவில் உட்கார்ந்து கை சூப்பிக்கொண்டு இருந்த விக்னேஷ் ''நான் எப்படி பவுடர் போட்டுவிடுறது?'' என்று கேட்டான்.

''டின்னில் இருக்கிற பவுடரை இந்த டப்பாவில் கொட்டிக்கோ. பஃபை வெச்சு கழுத்துக்குக் கீழே மெதுவாப் போட்டுவிடு'' என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

உண்மையில் விமலா தினேஷைக் குளிப்பாட்ட எடுத்துச்சென்றபோதே, ஃபீடிங் பாட்டில் தயார்செய்துவிட்டார். வேண்டுமென்றேதான் விக்னேஷிடம் அப்படிச் சொன்னார். அடுக்களைக்குச் சென்று அங்கே இருந்தபடி கவனித்தார்.  தம்பிப் பாப்பாவுக்கு விக்னேஷ் பவுடர் போட முயன்றான். பாப்பா உதைத்துக் குதித்ததில் டப்பா எகிறிப் போய் விழுந்தது.

''அம்மா, தம்பி பவுடர் போட்டுக்க மாட்டேங்குறான்'' என்று விக்னேஷ் குரல் கொடுத்தான்.

''பரவாயில்லை, திரும்ப முயற்சி பண்ணு!'' என்றார் விமலா.

ஒரு வழியாக அங்கே இங்கே திட்டுத்திட்டாய் பவுடரை அப்பினான் விக்னேஷ். வந்து பார்த்த விமலா, ''வெரிகுட். ரொம்ப அழகா போட்டுவிட்டுருக்க'' என்றார். விக்னேஷ் முகத்தில் பெருமிதம்.

சில நாட்களில்... ''கண்ணா, அம்மா கை வேலையா இருக்கேன். தம்பியோட துவைச்ச துணிகளை மடிச்சு ரேக்கில் வெக்கிறியா?'' என்பார். விக்னேஷ§ம் 'சரிம்மா’ என்றபடி தம்பியின் துணிகளை தனக்குத் தெரிந்தவகையில் மடித்து ரேக்கில் திணிப்பான்.

''கண்ணா, அம்மா டயர்டா இருக்கேன். இந்த ஃபீடிங் பாட்டிலை எடுத்துவெச்சுடுறியா?'' என்பார். இவனும் 'சரிம்மா’ என்றபடி எடுத்து வைப்பான்.

''ஷாப்பிங் கிளம்ப லேட்டாயிட்டே இருக்கு. தினேஷூக்கு என்ன வேணும்னு லிஸ்ட் எழுத மறந்து போச்சு. நீ எழுதறியா?'' என்பார். ஒரு பேப்பரும் பேனாவும் எடுத்து, 'பேபி ஆயில், பேபி சோப்’ என்று மழலை மொழியில் தனக்கும் ரெண்டு பொருளைச் சேர்த்து லிஸ்ட் போடுவான் விக்னேஷ்.

இப்படிக் கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பிலும் விமலா விக்னேஷை சிறுசிறு வேலைகளில் ஈடுபடுத்தினார். தினேஷை வளர்ப்பது தொடர்பாக விக்னேஷ§க்கு எழும் சந்தேகங் களுக்குப் பொறுமையாய்ப் பதில் சொன்னார். தன்னால் முடிந்த சின்னச் சின்ன உதவிகளை அம்மாவுக்குச் செய்ய முடிந்ததில் விக்னேஷ§க்கும் சந்தோஷம். அதைப் பாராட்டும் விதமாய் அம்மா தந்த அன்பு முத்தங்களும் அவனுக்கு  மகிழ்ச்சியைத் தந்தன.

கைக்குழந்தைகளைப் பராமரிப்பதில் இருந்த சிரமங்கள் அவனுடைய சின்னஞ்சிறு மூளைக்கு எட்டியது. சிறுவயதில் தன்னையும் அம்மா இப்படித்தான் கவனித்திருப்பார் என்பதும் புரிந்தது. தம்பிப் பாப்பாவை கவனிப்பதில் தனக்கும் பொறுப்பு இருப்பதாக உணர ஆரம்பித்தான். இப்போது எல்லாம் தினேஷ் லேசாகச் சிணுங்கினால்கூட கவனிக்கும் முதல் ஆள் விக்னேஷ்தான். அது மட்டுமா? கை சூப்பும் பழக்கத்தையும் விக்னேஷ் விட்டுவிட்டான்.