Published:Updated:

வெளிச்சம் பரவட்டும் !

செல்வ கதிரவன் கண்ணா

பிரீமியம் ஸ்டோரி
##~##

இரவு ஒன்பது மணி இருக்கலாம். வெண்ணிலா வெளிச்சத்தை வாரி வழங்கிக்கொண்டு இருந்தது. வேப்பமரத்து இயற்கைக் காற்று, இதமாக வருடி சுகம் தந்தது.

அந்தக் குடிசை வீட்டு வாசலில் பாயை விரித்துப் படுத்திருந்தான் ராமு. அவனுக்கு இடது, வலது பக்கங்களில் அம்மாவும் அப்பாவும் படுத்திருந்தார்கள்.

ராமுவுக்குத் தூக்கமே வரவில்லை.பள்ளிக்கூடத்தில் வகுப்புத் தோழன் பாலா கேட்ட கேள்விகள் அவனைச் சங்கடப்படுத்தின. எவ்வளவோ முயன்றும் அதில் இருந்த கேலியை மறக்க முடியவில்லை.

'எப்படிடா மின் விளக்கு இல்லாமல் இருக்கீங்க? மின் விசிறி இல்லாமல்  தூங்க முடியுதா?'

'டேய் ராமு, ஒங்க வீட்டை நினைச்சா ஒரு பக்கம் சிரிப்பு வருது. இன்னொரு பக்கம் பாவமா இருக்கு'

இப்படியாக வகுப்பில் பல பேருக்கு முன்பாகப் பேசிவிட்டான். 'பாலா உண்மையில் என்னை நினைத்து கவலைப்படவில்லை. வசதிக் குறைவைக் கிண்டல் செய்கிறான்’ என்றே ராமுவுக்குத் தோன்றியது. அவனால் பாலாவுக்குப் பதில் சொல்ல இயலவில்லை.

ராமுவின் அப்பா ஒரு விவசாயத் தொழிலாளி. தினக் கூலியாக வேலைக்குப்போய் குடும்பத்தை நடத்தி வருபவர். சாப்பாட்டுக்கே பெரும்பாடு.அதனால், வீட்டுக்கு மின் இணைப்பை வாங்கவில்லை. எண்ணெய் விளக்குதான் அவன் வீட்டில்.

ராமு ஏதோ கவலையில் இருக்கிறான் என்பதை அருகில் படுத்திருந்த அப்பா உணர்ந்தார். 'என்ன ராமு ஒரு மாதிரியா இருக்கே? டீச்சர் அடிச்சாங்களா?' என்று கேட்டார்.

'இல்லப்பா, என்கூடப் படிக்கிற பாலா அடிக்கடி கேலி செய்றான்'' என்றான்.

''என்ன கேலி?'' என்று கேட்டவாறு அம்மாவும் அவன் பக்கம் திரும்பினாள்.

''உங்க வீட்டில் மின்சாரம் இல்லாமல், மின் விசிறி இல்லாமல் எப்படி இருக்கீங்கனு கேட்கிறான்' என்றான் ராமு.

'நம்ம நிலைமை உனக்குத் தெரியும்தானே ராமு. இந்த இடம் நம்ம பரம்பரைச் சொத்து. வருஷத்துக்கு ஒருமுறை குடிசை ஓலையை மாத்துறதுக்கே கஷ்டமா இருக்கு. கூலிக்கு ஆட்களைக்கூட வைக்காமல் அப்பாவே ஓலையை மாத்திடுவார். மின் இணைப்பு வாங்கணும்னா, முன்பணம் கட்டணுமாம். அது முடியாமல்தான் அப்பா சும்மா இருக்கார்'' என்றாள் அம்மா.

வெளிச்சம் பரவட்டும் !

'எனக்குத் தெரியுதும்மா. பாலா இப்படி அடிக்கடிக் கிண்டல் பண்றப்பவும் எனக்கு அப்பா மேலே கோபம் வரலை. அவனுக்கு எப்படி பதிலடி கொடுக்கிறதுனுதான் யோசிக்கிறேன்'' என்றான் ராமு.

அப்பா ராமுவை லேசாக அணைத்துக்கொண்டார். ''இதுக்கா கவலைப்படுறே? உனக்கு ஒண்ணைக் காட்டுறேன் வா'' என்று வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். அம்மாவும் பின்னாலே சென்றாள்.

அவர்களிடம் இரண்டு எண்ணெய் விளக்குகள் இருந்தன. அதில் ஒன்று இப்போது வீட்டின் மையப் பகுதியில்  எரிந்துகொண்டு இருந்தது. இன்னொரு விளக்கு மாடத்தில் சும்மா இருந்தது.

அந்த விளக்கை எடுத்த அப்பா, அதில் கொஞ்சம் எண்ணெயை ஊற்றி, திரியை நனைத்தார். பிறகு அதை எடுத்துவந்து ஏற்கெனவே எரிந்துகொண்டு இருந்த விளக்கின் அருகே காட்டினார். இப்போது அந்த விளக்கும் எரிந்தது. வீடு இன்னும் பிரகாசமாக மாறியது.

ராமு பக்கம் திரும்பிய அப்பா, ''ராமு, அவங்க வீட்டில் எத்தனையோ குழல் விளக்குகள் இருக்கலாம். அந்த விளக்குகளால் இப்போ நான் செஞ்ச மாதிரி இன்னொரு விளக்கை எரியவைக்க முடியுமானு கேளு. நாம பிரகாசமா, சந்தோஷமா இருக்கிறது மட்டும் பெரிய விஷயம் கிடையாது. நம்ம பிரகாசம் அடுத்தவங்களுக்கும் பரவணும். நம்ம சந்தோஷம் அடுத்தவங்களுக்கும் கிடைக்கணும். நெனச்சுப் பாரு. மின்சாரம் இல்லாமல் அவங்களால் தூங்க முடியுமா?  இந்த வேப்பமரத்துக் காத்து எப்படி ஜில்லுனு அடிக்குது. படுத்த பத்தாவது நிமிஷத்தில் தூங்கிடுறோம். நம்ம முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்கூட எண்ணெய் விளக்கில் படிச்சவர்னு நீயே ஒருமுறை சொல்லியிருக்கே' என்றார்.

''அப்பா, பாலாவுக்குச் சொல்றதுக்கு மட்டுமில்லே, எனக்கும் நிறையப் பதில்கள் கிடைச்சுருச்சு, நன்றிப்பா'' என்றான் ராமு.

அடுத்த நாள் பள்ளிக்குக் கிளம்பிய ராமுவின் முகத்தில் வழக்கத்தைவிட அதிகமான பிரகாசம் இருந்தது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு