Published:Updated:

கொல்லிமலைப் புதையல் !

வேணு சீனிவாசன் ஸ்யாம்

பிரீமியம் ஸ்டோரி
##~##

இருட்டில் தங்களை நோக்கி வந்த நெருப்புப் புள்ளிகளைப் பார்த்த வாசு, ''தாத்தா, எதுவோ நம்மளை நோக்கி வருது'' என்று கத்தினான்.

அந்தச் சத்தத்தைக் கேட்டு எல்லோருமே விழித்துவிட்டனர். ''ரத்தம் குடிக்கும் வெளவால்களின் கண்கள்தான் அது. கூரையில் தலைகீழாகத் தொங்கிக்கிட்டு நம்ம மேலே பாயுறதுக்குத் தயாராகுது'' என்றான் காடன்.

வெளவால்கள் படபட சத்தத்துடன் அவர்களை நோக்கி வேகமாக வந்தன. அருகில் வந்ததும் சடாரென்று திரும்பி மறைந்துவிட்டன. '' இந்த வெளவாலுங்க காட்டெருமைகளோட ரத்தத்தையே ஒரு ராத்திரிக்குள்ளே உறிஞ்சுக் குடிச்சுரும். நாம மாட்டிக்கிட்டா அவ்வளவுதான்'' என்றான் காடன்.

''இதுங்களை விரட்டுற வழி எனக்குத் தெரியும்'' என்ற தாத்தா, ஒரு கட்டிச் சாம்பிராணியை எடுத்து, ''ஆறுமுகம் இதைக் கொளுத்து'' என்றார்.

அவன் கொளுத்தினான். சாம்பிராணிப் புகை சுழன்று கிளம்பி, அந்த இடத்தை வாசனையால் மூழ்கடித்தது. அடுத்த நொடியே வெளவால்கள் குகையைவிட்டு வெளியே பறந்தன.

கொல்லிமலைப் புதையல் !

வெளவாலுக்கு சாம்பிராணிப் புகை  பிடிக்காது என்ற விஷயம் தாத்தாவுக்கு தெரிந்திருந்ததால் அவர்கள் தப்பினர். மூசோ தாத்தா சாம்பிராணியை ஏன் கொண்டுபோகச் சொன்னார் என்பது இப்போது விளங்கியது. அவரது அனுபவ அறிவைத் தாத்தா பாராட்டினார்.

சிறிது நேரத்துக்குப் பிறகு, மறுபடியும் அவர்கள் தூங்கிவிட்டனர். மைதிலி மீண்டும் கண்விழித்துப் பார்த்தபோது அங்கே லேசான வெளிச்சம் இருந்தது. தெப்பம் நகரவில்லை. மற்றவர்களை எழுப்பினாள்.  ''இங்கே ஒரு இரும்புத்தூண் இருக்கு. அதுதான் தெப்பத்தைத் தடுக்குது'' என்றான் காடன்.

''அதோ ஒரு மேடையும் இருக்குது'' என்றான் வாசு.

''மேடையின் பக்கத்தில் சின்னதா ஒரு குகை வழி தெரியுது. அந்த வழியாப் போகணும்'' என்றான் காடன்.

அவர்கள் தெப்பத்தைவிட்டு இறங்கி, அந்தச் சிறிய குகை வழியின் அருகே வந்தனர். ''ரொம்பச் சின்னதா இருக்கே. இதில் தவழ்ந்துதான் போகணும்'' என்றார் தாத்தா.

''வாங்க, நேரத்தை வீணாக்க வேண்டாம்'' என்ற காடன், ஒரு பந்தத்தைக் கொளுத்திக்கொண்டு குகைக்குள் மெதுவாகத் தவழ்ந்து போனான்.

அவனைத் தொடர்ந்து மற்றவர்களும் சென்றனர். வழி நீண்டுகொண்டே சென்றது. மிகப் பெரிய இரும்புக் குழாய்க்குள் தவழ்ந்து செல்வதைப் போலத் தோன்றியது. ''உள்ளங்கை எரியுது. உள்ளே ஆபத்து வந்தாக்கூட சட்டுனு திரும்பிப்போக முடியாது'' என்றாள் மைதிலி.

''வழி இதோடு முடியுது. உள்ளே போக படிகள் இருக்கு'' என்ற காடன், அவன் படிகளில் இறங்கி நடக்க,  மற்றவர்கள் பின்தொடர்ந்தனர்.

படிகள் விசாலமான கூடத்தில் முடிந்தன. அங்கே ஒரு அறையைப் போல் குகை குடையப்பட்டு இருந்தது. அறையின் நடுவே ஒரு வெந்நீர் ஊற்று  இருந்தது. அது குளிருக்கு இதமாக இருந்தது.

''இந்த இடத்துக்கு கோரக்கர் குண்டம்னு பேரு'' என்றான் காடன்.

''ஓ... அந்த இடம் இதுதானா? இந்தக் கொல்லிமலையில் எத்தனையோ சித்தர்கள் குகையில் தங்கித் தவம் செய்திருக்காங்க. பல ஆயிரம் வருஷங்களாக கோரக்கர் என்ற சித்தர் இங்கே வாழ்ந்து வர்றதா நம்பிக்கை இருக்கு. அவர், பல உயிர்காக்கும் மருந்துகளையும், மூலிகை மருந்துகளையும், குளிகைகளையும் தயாரிச்சு இருக்கார்.'' என்றார் தாத்தா.

கொல்லிமலைப் புதையல் !

'' 'குளிகை’னா என்ன தாத்தா?'' என்று கேட்டான் வாசு.

''குளிகைனா தாயத்து. அதில் மந்திரசக்தி அடங்கி இருக்கும்கிறது நம்பிக்கை. அதோடு, தியான சக்தியால் தெரிஞ்சுக்கிட்ட தேவ ரகசியங்களைக் கோரக்கர் ஓலைச் சுவடிகளில் எழுதி, ஏழு பெட்டிகளில் வைத்து, குகையில் மண்ணுக்கு அடியில் புதைச்சு வெச்சுருக்கார்'' என்றார் தாத்தா.

அவர் சொல்லி முடிக்கும் முன்பாகவே, ''இங்கே பாருங்க பெட்டி இருக்கு. இதுக்குள்ளேதான் நாம தேடிவந்த புதையல் இருக்கணும்'' என்று கத்தினான் ஆறுமுகம். காடன் அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்தான். அதில் ஏராளமான ஓலைச்சுவடிகள் காணப்பட்டன.

கொல்லிமலைப் புதையல் !

''ஒவ்வொரு பெட்டியிலும் வெவ்வேறு நோய்களுக்கான மூலிகைகள், மருந்துகள், பொடிகள் இருக்கிறதாச் சொல்வாங்க.  மனிதர்களைச் சாகாமல் காக்கும் சஞ்சீவினி மூலிகையும் இருக்கிறதாப் படிச்சிருக்கேன். நாம் பார்க்கிறது அதில் ஒரு பெட்டியைத்தான். அதை அப்படியே வெச்சுருங்க'' என்றார் தாத்தா.

பயபக்தியோடு அவர்கள் அந்தப் பெட்டியைக் கும்பிட்டனர். அதை இருந்த இடத்திலேயே வைத்துவிட்டு நடந்தனர். சிறிது தொலைவில் ஒரு பல்லக்கு இருப்பதைப் பார்த்தனர். ஆறுமுகம் உடனே அதன் அருகில் ஓடினான். புதையல் எங்காவது இருக்கிறதா என்று தேடினான்.

''குகைச் சுவரில் இருந்து ஈரம் கசியுது. இங்கே ரொம்பக் குளிருது'' என்றாள் மைதிலி.

தாத்தா பார்வையைக் கூர்மையாக்கி, சுவரை அங்குலம் அங்குலமாக ஆராய்ந்தார். சுவரில் குமிழோ, கைப்பிடியோ இல்லை. வாசு பல்லக்கை இப்படியும் அப்படியும் அசைத்துப் பார்த்தான். ஒருவர் மட்டுமே உட்காரும் சிறிய பல்லக்கு அது. முத்துமாலைகளும் பட்டுத்துணிகளும் பல்லக்கை அலங்கரித்து இருந்தன. ஆறுமுகம் தீப்பந்தத்தை உயர்த்திப் பிடித்து பல்லக்கின் உள்ளே ஆராய்ந்தான். ''சே! எதுவுமே இல்லை'' என்றான். இத்தனைத் தொலைவு கஷ்டப்பட்டு வந்ததுக்குப் பலன் எதுவும் கிடைக்காமல் போய்விடுமோ என்ற எரிச்சல் அவனுக்கு.

அவர்கள் குகைச் சுவர்களைத் தட்டிப் பார்த்தனர். பல்லக்கை அசைத்தனர். சதுரமான கற்களை அழுத்தினர். எங்காவது ஒரு ரகசிய அறை திறக்காதா என்று ஏங்கினர். நேரம் ஓடிக்கொண்டு இருந்தது. ஈரம் கசியும் குகைச் சுவரில் மறைவாக ஒரு வளையம் இருந்தது. காட்டுச் செடிகளின் வேர்கள் அதைப் பார்வையில் படாமல் மறைத்திருந்தன. ''இங்கே ஒரு வளையம் இருக்கு'' என்றாள் மைதிலி.

தாத்தா அந்த வளையத்தை மெதுவாக இழுத்தார். ஒரு ரகசிய அறையின் கதவு கடகடவென்ற சத்தத்தோடு திறந்தது. வளையத்துக்குப் பக்கத்தில் இருந்த சதுரக் கல் இடம் பெயர்ந்து உள்ளே சென்றது. அடுத்த நிமிடம், அதன் வழியாக தண்ணீர் குபு குபு என்று அறைக்குள் கொட்ட ஆரம்பித்தது.

தண்ணீர் கொட்டும் வேகத்தைப் பார்த்தால், அரை மணி நேரத்துக்குள் அவர்கள் மூழ்குவது நிச்சயம். ''வெளியே ஓடுங்க... இங்கேயே இருந்தா ஜலசமாதிதான்'' என்று கத்தினான் ஆறுமுகம்.

   (தொடரும்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு