Published:Updated:

வெள்ளை முயலும் கொள்ளை நரியும் !

வெள்ளை முயலும் கொள்ளை நரியும் !

பிரீமியம் ஸ்டோரி
##~##

வருடா வருடம் காட்டு விலங்குகள் வனதேவதைக்கு விழாக் கொண்டாடுவது வழக்கம். அந்த வருடமும் மதுவனத்தில் விழாக் கொண்டாட ஏற்பாடுகள் நடந்தன.

வனதேவதைக் கோயிலுக்கு வரும் முன்பக்க வழி ஓரளவு சுத்தமாக இருக்கும். ஆனால், பின்பக்கம் செடிகொடிகள் மண்டிக்கிடந்தன.  அதனால், ஆலயத்தைச் சுத்தம் செய்யும் பணி நடைபெற ஆரம்பித்தது. பெரும்பாலான பிராணிகள் கோயிலின் முன்பக்கத்தைச் சுத்தம் செய்துவிட்டு நடையைக் கட்டின. மண்டிக்கிடக்கும் புதர்களைக் கண்டு, பல பிராணிகள் கோயிலின் பின்பக்கமே வரவில்லை.

'இப்படியே விட்டால், அடுத்த ஆண்டு இந்த இடத்தில் முள்செடிகள் மரமாக வளர்ந்துவிடும்.’ என்று தனக்குள் கூறிக்கொண்ட வெள்ளை முயல், தானாகவே அந்த இடத்தைச் சுத்தம் செய்ய ஆரம்பித்தது. மூன்று நாட்களாக தூய்மைப் பணி நடந்தது.

நான்காவது நாள் கதிரவன் மறையும் சமயம். கடைசியாக இருந்த முள்செடி அருகில் சென்று  வெட்டிவிட்டு, தரையைச் சமன் செய்தபோது மண்வெட்டி எதன் மீதோ மோதியது. உடனே அந்த இடத்தை ஆழமாகத் தோண்டியது முயல். மண்ணுக்கு அடியில் ஒரு சிறு பானை இருந்தது. வெளியே எடுத்துப் பார்த்தபோது, அதில் பொற்காசுகள் இருந்தன. வெள்ளை முயலுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.

'இன்னும் வீட்டுக்குப் போகாமல் வெள்ளை முயல் என்ன செய்கிறது?’ என்று அந்தப் பக்கம் வந்த நரி, இதைப் பார்த்துவிட்டது. நரி மெதுவாக முயலின் அருகில் வந்தது. ''நீ புதையலை எடுத்ததை நான் பார்த்துவிட்டேன். புதையலை சிங்க ராஜாவிடம் கொடுக்க வேண்டும் என்ற சட்டம் நம் காட்டில் இல்லை. அதனால், ஆளுக்குப் பாதி எடுத்துக்கொள்வோம்'' என்றது.

வெள்ளை முயலும் கொள்ளை நரியும் !

'நான்கு நாட்களாக நான்தான் கஷ்டப்பட்டுப் புதர்களை அகற்றி, இடத்தைச் சுத்தம் செய்தேன். புதையல் எனக்குத்தான் சொந்தம் என்று சொன்னால் நரி சம்மதிக்காது. புதையலைப் பிடுங்கிக்கொண்டு, என்னைத் துரத்திவிடும். எனவே நரியின் சொல்படியே நடப்போம்’ என்று நினைத்த வெள்ளை முயல், ''சரி'' என்றது.

''தேங்க்யூ வெள்ளை முயலே. இப்போது புதையல் பானையோடு வீடு திரும்பினால், வழியில் பார்க்கும் விலங்குகள் தனக்கும் பங்கு கேட்கும். அதனால் இங்கேயே புதைத்து வைத்து மூடிவிடுவோம். திருவிழா முடிந்து எடுத்துக்கொள்வோம்'' என்றது நரி. அதற்கும் முயல் சம்மதித்தது.

மறுநாள் காலை ஆசையோடு முயல் வந்து பார்த்தபோது, புதையல் பானை அந்த இடத்தில் இல்லை. தூக்கிவாரிப்போட்டது. நேராக நரியின் வீட்டுக்குச் சென்று கேட்டது. 'தான் புதையலை எடுக்கவில்லை’ என்று அடித்துக் கூறிவிட்டது நரி.

வெள்ளை முயலும் கொள்ளை நரியும் !

வெள்ளை முயல், நீதிபதிக் கரடியிடம் சென்றது. நடந்ததை அப்படியே கூறியது. நரியை அழைத்து விசாரித்தபோது, ''புதையலா..? அதைப் பத்தி எனக்கு எதுவுமே தெரியாது. முயல் தூக்கத்திலே ஏதாவது கனவு கண்டு உளறுகிறது'' என்றது.

வெள்ளை முயலுக்கு அழுகை அழுகையாக வந்தது. அது வருத்தத்தோடு வீடு திரும்பி விட்டது.

'நரி பொய் சொல்கிறது’ என்று தெரிந்துகொண்ட கரடி, எப்படியாவது புதையலைக் கண்டுபிடிக்க முடிவெடுத்தது. பெருச்சாளியையும், அணிலையும் தன் இருப்பிடத்துக்கு வரச் சொல்லி, ஒரு திட்டத்தைச் சொன்னது.

இரண்டே நாட்களில், நரியை அதற்குத் தெரியாமல் பின்தொடர்ந்த பெருச்சாளியும், அணிலும் நரி வீட்டு மல்லிகைப் பந்தலுக்கு அடியில் இருந்த புதையலைக் கண்டுபிடித்துவிட்டன. அதை நரிக்குத் தெரியாமல் எடுத்துவந்து கரடியிடம் கொடுத்தன. கரடியும் வெள்ளை முயலை அழைத்து புதையல் பானையைக் கொடுத்து, ''உன் உழைப்புக்கு வனதேவதை கொடுத்த பரிசாக இதை வைத்துக்கொள்'' என்றது.

மகிழ்ந்த முயல், கோயில் விழாவுக்கு வருபவர்கள் அனைவருக்கும் சாப்பாடு போடும்படி கை நிறைய பொற்காசுகளை அள்ளிக் கரடியிடம் கொடுத்தது.

இரண்டு நாட்கள் கழித்து மல்லிகைப் பந்தலின் அடியில் தோண்டிப் பார்த்த நரி, புதையலைக் காணாது திடுக்கிட்டது. ' ஒழுங்காக பாதிப் பங்கைப் பிரித்துக்கொண்டு இருக்கலாம். இப்போது திருடனுக்குத் தேள் கொட்டியது போல் ஆகிவிட்டதே’ என்று தனக்குள் புலம்பிக்கொண்டது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு