Published:Updated:

தேவதைக் கதைகள்

ஆலைத் தொழிலாளியும் பூனை உலகமும்கே.முரளிதரன் ஹாசிப் கான்

பிரீமியம் ஸ்டோரி
##~##

பல நூறு வருடங்களுக்கு முன்பு நடந்த கதை. ஒருவர் மாவு ஆலை வைத்திருந்தார். அவருக்கு மனைவி, குழந்தைகள் என யாரும் கிடையாது. மூன்று பேர் அவரிடம் வேலை பார்த்துவந்தார்கள். இப்படியே பல வருடங்கள் கழிந்தன. ஒருநாள் அவர்கள் எல்லோரையும் அழைத்த முதலாளி, 'எனக்கு வயதாகிவிட்டது. நான் ஒய்வுபெற விரும்புகிறேன். இந்த ஆலையை உங்களில் ஒருவருக்குக் கொடுக்க நினைக்கிறேன். யார் இருப்பதிலேயே சிறந்த குதிரையைக் கொண்டுவருகிறார்களோ, அவருக்கு ஆலையைக் கொடுப்பேன்' என்றார்.

மூன்று பேரில் ஒருவன் ஹன்ஸ். மற்ற இருவருக்கும் உதவியாக இருப்பவன். அவன், ஆலையை உரிமையாக்கிக்கொள்ளும் அளவுக்குத் தகுதி இல்லாதவன் என்று மற்ற இருவரும் நினைத்தார்கள். ஹன்ஸ் கூட ஆலையைப் பெற விரும்பவில்லை. ஆனாலும், இருவருடனும் சேர்ந்து சென்றான். அவர்கள் ஒரு கிராமத்தை அடைந்தனர். 'நீ சாகும் வரை முயற்சித்தாலும் உன்னால் ஒரு சிறந்த குதிரையைக் கொண்டுவர முடியாது' என்று மற்ற இருவரும் ஹன்ஸைக் கிண்டல் செய்தார்கள்.

இரவு, ஒரு குகையைக் கண்டடைந்து அங்கே படுத்துக்கொண்டார்கள். ஹன்ஸை எப்படியாவது விட்டுவிட்டுப் போய்விட நினைத்த இருவரும், அவன் தூங்கியவுடன் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். விடிந்ததும் தன் தோழர்கள் இல்லாததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தான் ஹன்ஸ். யோசித்தபடியே காட்டுக்குள் நடக்க ஆரம்பித்தான். அப்போது ஒரு குட்டிப் பூனை குறுக்கிட்டது. அதன் உடல் முழுவதும் சின்னச் சின்னப் புள்ளிகள். அந்தப் பூனை ஹன்ஸிடம் நட்பு உணர்வுடன் பேசியது.

'எங்கே போகிறாய் ஹன்ஸ்?'

'எதற்காகக் கேட்கிறாய்? உன்னால் எனக்கு உதவ முடியாது' என்றான் ஹன்ஸ்.

தேவதைக் கதைகள்

'நீ எதைத் தேடிச் செல்கிறாய் என்பது எனக்குத் தெரியும். என்னுடன் வந்து, ஏழு வருடங்களுக்கு விசுவாசமான வேலைக்காரனாக இருந்தால், சிறந்த குதிரையைக் கொடுப்பேன்' என்றது பூனை.

அந்தப் பூனை உண்மையைத்தான் சொல்கிறதா என்று பார்க்க நினைத்த ஹன்ஸ் சம்மதித்தான். பூனை அவனைத் தன்னுடைய கோட்டைக்கு அழைத்துச் சென்றது. அங்கே எல்லாமே பூனைகள்தான். மாலையில் அவர்கள் சாப்பிட உட்கார்ந்தபோது, ஒவ்வொரு பூனையும் ஒவ்வொரு வாத்தியத்தை வாசித்தன. பிறகு, அந்தப் பூனை ஹன்ஸிடம், 'வா, வந்து என்னுடன் ஆடு' என்றது.

'முடியாது. நான் இது வரை பூனைகளோடு ஆடியதில்லை' என்றான் ஹன்ஸ்.

'சரி, இவனைப் படுக்கைக்கு அழைத்துச் செல்லுங்கள்' என்று ஆணையிட்டது பூனை.

ஒரு பூனை விளைக்கை ஏற்றிப் படுக்கைக்கு வழி காட்டியது. மற்றொரு பூனை, அவன் படுத்ததும் விளக்கை அணைத்தது.

தேவதைக் கதைகள்

அடுத்த நாள் காலையில், இதே போல் பூனைகள் அவனுக்கு சேவகம் செய்தன. இப்போது, ஹன்ஸ் பூனைக்காக வேலை பார்க்க வேண்டிய நேரம். தினமும் விறகு வெட்டி வர வேண்டியது அவனுடைய வேலை. இந்த வேலைக்காக அவனுக்கு வெள்ளிக் கோடரி, ரம்பம், உளி, தாமிரத்தால் ஆன சுத்தியல் ஆகியவற்றைக் கொடுத்தது பூனை. அவனும் மரத்தை வெட்டி எடுத்துவந்தான். கோட்டையில் ஓய்வெடுக்கவும் நேரம் இருந்தது. ஆனால், அந்தக் கோட்டையில் பூனைகளைத் தவிர வேறு யாரும் இல்லை.

ஒருநாள் அவனைக் கூப்பிட்ட பூனை, ''போய் என் புல்வெளியை அறுத்து, வைக்கோல் தயார்செய்'' என்றது. வெள்ளியாலான அரிவாள், தங்கத்தாலான கத்தி ஆகியவற்றை அவனிடம் கொடுத்து, ''வேலை முடிந்ததும் எல்லாவற்றையும் பத்திரமாகத் திருப்பிக் கொடுக்க வேண்டும்'' என்றது.

ஹன்ஸ் வைக்கோலை அறுத்த பிறகு, பூனை கூறியபடியே எல்லாவற்றையும் திருப்பிக் கொடுத்தான். ''இப்போதாவது தன் உழைப்புக்கு ஊதியம் கிடைக்குமா?'' என்று கேட்டான்.

'இல்லை. இங்கே வெள்ளி மரம், கோடரி என உனக்குத் தேவைப்படும் எல்லாமே வெள்ளியில் இருக்கின்றன. எனக்காகச் சிறிய வீடு ஒன்றைக் கட்டித் தர வேண்டும்' என்றது.

ஹன்ஸ் வீட்டைக் கட்டினான். முடித்த பிறகு, பூனையிடம் சென்று விஷயத்தைச் சொன்னான். ஏழு வருடங்கள் அவன் அங்கே வேலை பார்த்திருந்தாலும் அது, ஆறு மாதத்தைப் போலத்தான் தோன்றியது.

''இப்போது குதிரைகளைப் பார்க்கலாம்'' எனக் கூறி அழைத்துச் சென்றது பூனை. அங்கே 12 அற்புதமான குதிரைகள் இருந்தன. அவற்றின்மீது இருந்த துணிகள் தகதகவென மின்னின. ஹன்ஸின் உள்ளம் மகிழ்ச்சியில் துள்ளியது. 'நீ வீடு திரும்பும் நேரம் வந்துவிட்டது. ஆனால், இப்போது குதிரையைக் கொடுக்க மாட்டேன். மூன்று நாட்களில் நானே உன்னைத் தேடி வருகிறேன்' என்றது பூனை.

பிறகு, வெளியில் வந்து ஆலைக்கு வழி காட்டியது. ஹன்ஸ் ஆலைக்குச் சென்றான். பூனை அவனுக்கு புதிய உடைகள் ஏதும் கொடுக்கவில்லை என்பதால், பல ஆண்டுகளாக அவன் ஒரே ஆடையைத்தான் அணிந்திருந்தான். அவை கிழிந்திருந்தன. அவன் வீட்டை அடைந்தபோது, அவனது சகாக்கள் இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் தங்களுடன் ஒரு குதிரையைக் கொண்டுவந்திருந்தனர். ஆனால், ஒரு குதிரைக்குக் கண் தெரியாது. மற்றொருவனுடையது முடமான குதிரை.

'வந்துவிட்டாயா? எங்கே உன்னுடைய குதிரை?' என்று கேட்டனர்.

'மூன்று நாட்களில் வரும்' என்றான் ஹன்ஸ்.

இருவரும் சிரித்தார்கள். 'உனக்கெல்லாம் எங்கே குதிரை கிடைக்கப்போகிறது? எங்களுக்குக் கிடைத்ததே இந்த லட்சணத்தில் இருக்கு' என்றனர்.

மூன்று பேரும் முதலாளியின் வீட்டுக்குப் போனார்கள். எழுந்து உட்காரும் அளவுக்கு  உடம்பில் பலம் இல்லாமல், மோசமான நிலையில் இருந்தார் முதலாளி. யாரைப் பார்த்தாலும் எரிந்துவிழுந்தார். அதனால், அவர்கள் வெளியே வந்துவிட்டார்கள். ஹன்ஸுக்குச் சாப்பாடு கொடுத்தாலும் இரவில் படுப்பதற்குப் படுக்கை கொடுக்க இரண்டு பேரும் மறுத்துவிட்டனர். அதனால், ஹன்ஸ் வாத்துகளை அடைக்கும் கொட்டகையில் படுத்தான். பூனையிடம் கடுமையாக வேலை செய்த அசதியில் அவன் தூங்கி எழுந்தபோது, மூன்று நாட்கள் முடிந்திருந்தன.

தேவதைக் கதைகள்

பதறி எழுந்த ஹன்ஸ், ஆலையை நோக்கி ஓடிவந்தான். அப்போது, ஆறு குதிரைகள் பூட்டப்பட்ட ஒரு கோச் வண்டி ஆலைக்கு அருகில் வந்து நின்றது. அந்தக் குதிரைகள் சூரிய ஒளியில் தகதகத்தன. பிறகு, ஏழாவதாக ஒரு குதிரையை ஒரு பணியாளன் ஓட்டிவந்தான். கோச் வண்டியிலிருந்து இளவரசியைப் போல் தோற்றமுடைய அழகான பெண் இறங்கி, ஆலைக்குள் சென்றாள்.

அந்த இளவரசி வேறு யாருமல்ல. எந்தப் பூனையிடம் ஏழு ஆண்டுகள் ஹன்ஸ் வேலை பார்த்தானோ, அந்தப் பூனைதான் இளவரசியாக மாறியிருந்தாள். ஹன்ஸ் எங்கே என முதலாளியிடம் கேட்டாள்.

'அவன் ரொம்பவும் அழுக்காக இருந்ததால், ஆலைக்குள் தூங்க விடவில்லை. அந்த வாத்துக் கொட்டகையில் இருக்கிறான்' என்றார் முதலாளி.

உடனடியாக ஹன்ஸ் தூக்கிவரப்பட்டான். அலங்கோலமான ஆடைகளுடன் இளவரசியின் முன்பு நிற்பதற்கு அவனுக்கு வெட்கமாக இருந்தது. உடனடியாக அவனுக்கு அற்புதமான ஆடைகள் கொண்டுவந்து கொடுக்கப்பட்டன. அவனைக் குளிப்பாட்டி, நல்ல ஆடைகளை அணிவித்தார்கள். ஹன்ஸ் ஒரு இளவரசனைப் போல் அழகாக மிளிர்ந்தான். பிறகு, பணியாளனை அனுப்பி ஏழாவது குதிரையைக் கொண்டுவரச் சொன்னாள்.  

'இந்தக் குதிரை ஹன்ஸுக்கு' என்றாள்.

முதலாளி அதற்கு முன்பு அவ்வளவு அற்புதமான குதிரையைப் பார்த்ததே இல்லை. 'இந்த ஆலையை அவனுக்குக் கொடுத்துவிடுகிறேன்' என்றார்.

ஆனால், ''வேண்டாம். ஆலையையும் குதிரையையும் நீங்களே வைத்துக்கொள்ளலாம். உங்கள் உடல்நிலையும் முழுமையாகக் குணமடையும்'' என்றாள் இளவரசி.

அடுத்த நொடியே, முதலாளி நோய் நீங்கி எழுந்தார். இளவரசிக்கும் ஹன்ஸுக்கும் நன்றி சொன்னார்.

பிறகு, தனக்கு இத்தனை ஆண்டு காலமாக விசுவாசமாக இருந்த ஹன்ஸின் கையைப் பிடித்து அழைத்துச் சென்று கோச் வண்டியில் ஏற்றினாள் இளவரசி. வண்டி கிளம்பியது.

ஹன்ஸ், பூனைக்காக வெள்ளித் தளவாடங்களால் கட்டிய மாளிகைக்குச் சென்றது கோச். அதற்குப் பிறகு ஹன்ஸை அந்த இளவரசி கல்யாணம் செய்துகொண்டாள். இருவரும் பல ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு