Published:Updated:

பரீட்சைத் தாயத்து !

பரீட்சைத் தாயத்து !

பரீட்சைத் தாயத்து !

பரீட்சைத் தாயத்து !

Published:Updated:

யுவா

'ஜிக் ஜிக்’ விலங்குகள் மேல்நிலைப் பள்ளி, ரொம்பப் பிரபலமான பள்ளி. அங்கே படிக்கிற எல்லோருமே படிப்பிலே கெட்டிதான். அதிலும் சூப்பர் கெட்டிகள்... கரடி கிரணும் மான் மிஷானும்!

இதுல யார் முதல் மார்க் எடுக்கறதுன்னு ரெண்டு பேருக்கும் எப்பவும் போட்டிதான். ஒருதடவை கிரண் முதல் ரேங்க் வந்தா, அடுத்த தடவை அடிச்சுப் புடிச்சு, மிஷான் வந்துடுவான். ஆரம்பத்துல ரெண்டு பேரும் நண்பர்களாத்தான் இருந்தாங்க. அப்புறம் கிரணை விட்டு மிஷான் விலகினான்.  கிரண் வலியப் போய் பேசினாலும் மிஷான் முகத்தைத் திருப்பிக்குவான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பரீட்சைத் தாயத்து !
##~##

அன்று கிரண் வகுப்பறையில் நுழைஞ்சப்ப,  மிஷானைச் சுத்திலும் கூட்டம். மிஷான் கழுத்துல ஒரு தாயத்து! அதைத் தொட்டுப் பார்த்து மத்த விலங்குகள் என்னமோ கேட்க, மிஷான் உற்சாகத்தோடு என்னமோ சொல்லிட்டு இருந்தான். கிரண், தன்னோட இடத்துல உட்கார்ந்து புத்தகத்தைப் படிக்க ஆரம்பிச்சான்.  

'டிங்...டிங்...டிங்’ என வகுப்பு ஆரம்பிக்கும் மணி அடிச்சது. கிரண் பக்கத்துல வந்து அமர்ந்தான் முயல் முகேஷ். ''என்னடா விஷயம்?'' என்று கேட்டான் கிரண்.

''நேத்து மிஷானின் தாத்தா ஒரு சாமியாரைப் பார்த்தாராம். அவர் மந்திரம் பண்ணி தாயத்தைக் கொடுத்தாராம். அதைக் கட்டிக்கிட்டா நல்லா மார்க் எடுக்கலாமாம். 'பார்த்துட்டே இருங்க ஆன்வல் எக்ஸாமுல ஐயாதான் ஸ்கூல் ஃபஸ்ட்டா வரப் போறேன்’ அப்படின்னு பீத்திக்கறான்'' என்றான் முகேஷ்.

அப்போது கணக்கு ஆசிரியர் புலி வந்து பாடம் நடத்த ஆரம்பிச்சார். கிரணின் கவனமோ அங்கே இல்லை. இந்த பத்தாம் வகுப்பில் யார் முதலில் வருகிறார்களோ... அதுதான் உண்மையான போட்டி. அப்படி வந்து, பள்ளிக்குப் பெருமை தரப் போறது யார் என்று எல்லோரும் காத்திருக்காங்க. இந்த நிலையில மிஷான் ஏதோ தாயத்து, மந்திரம்னு சொல்றது கிரணுக்குக் கொஞ்சம் பயத்தை ஏற்படுத்திச்சு.

ஒரு வாரம் கழிச்சு மன்த்லி டெஸ்ட் நடந்தது. அதுல மிஷானே முதலிடம். ''மிஷான், நிஜமாவே இது சக்தியுள்ள தாயத்துதான். அந்தச் சாமியார் எங்கே இருக்கார்னு சொல்லுடா... நாங்களும் போறோம்'' என்று நண்பர்கள் கேட்டார்கள்.

''ஸாரி! என் தாத்தா யார்கிட்டேயும் சொல்லக் கூடாதுன்னு கண்டிஷன் போட்டிருக்கார்'' என்று சொல்லிட்டான் மிஷான்.

பரீட்சைத் தாயத்து !

சில நாட்கள் கழித்து... கிரணின் வீடு. காலை எட்டு மணி ஆகியும் படுக்கையை விட்டு இன்னும் எழுந்துக்கலை. 'கொஞ்ச நாளா சோர்வாவே இருக்கானே... இவனுக்கு என்ன ஆச்சு?’ என்று நினைச்சார் கிரணின் அப்பா. பக்கத்துல போய் நெற்றியைத் தொட்டுப் பார்த்து, ''என்ன ஆச்சு?  ஏன் டல்லா இருக்கே?'' என்று கேட்டார்.

''இந்தமுறை நான் ஸ்கூல் ஃபஸ்ட்டா வர நினைச்சேன்ப்பா. அது நடக்குமான்னு சந்தேகமா இருக்கு'' என்ற கிரண், தாயத்து விஷயத்தைச் சொன்னான்.

அப்பா சில நிமிஷம் யோசிச்சார். பிறகு, ''இதுதான் உன் கவலையா? எனக்கும் ஒரு சாமியாரைத் தெரியும். நாளைக்கு அவரைப் போய்ப் பார்க்கறேன்.  அவர்கிட்ட இதுக்கு ஒரு வழி கேட்கறேன்'' என்றார்.

கிரண் முகம் மலர்ந்தது, ''மறக்காமப் போய் பாருங்கப்பா'' என்றான்.

மறுநாள்... அப்பா திரும்பி வந்தார். அவரிடம் ஒரு தாயத்து இருந்தது. ''கிரண்... அந்த சாமியாரைப் பார்த்தேன். ரொம்ப நேரம் பூஜை பண்ணி இந்தத் தாயத்தைத் தயார்செய்தார். ரொம்ப சக்தி வாய்ந்ததாம். இதைக் கட்டிக்க. இதோ! இந்த மந்திரத்தைத் தினமும் காலைல கிழக்குப் பார்த்து உட்கார்ந்து, பத்து முறை மனசுக்குள்ளே சொல்லிட்டு, அப்புறம் பாடங்களைப் படி!'' என்று கூறி, ஒரு ஓலைச் சுவடியைத் தந்தார்.

கிரண் குஷியில் ஒரு குதி குதிச்சான். தினமும் காலையில் எழுந்து அப்படியே செய்தான். பொதுத் தேர்வுகளில் கிரண் படிச்சது எல்லாமே  வந்து இருந்தது. அடிஷனல் பேப்பரா வாங்கி எழுதித் தள்ளினான். கொஞ்ச நாளில் தேர்வு முடிவுகள் வந்தன. பள்ளியில் மட்டுமில்லாம, அந்தக் காட்டிலேயே முதலாவதா வந்திருந்தான் கிரண். எல்லோரும் பாராட்டினாங்க.  

  ''வாங்கப்பா... அந்தச் சாமியாரைப் பார்த்து தேங்க்ஸ் சொல்லலாம்'' என்றான் கிரண்.

அப்பா சிரிச்சார், ''அந்த தேங்க்ஸை எனக்குச் சொல்லு. ஏன்னா, நான்தான் அந்தச் சாமியார்! இந்தத் தாயத்தைத் தயார் செய்ததும் நான்தான். இதுக்குள்ளே இருக்கறது வெறும் மண்ணுதான். உழைப்பு இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது. மந்திரம், அதிர்ஷ்டம்னு சொல்றது எல்லாம் மனசுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தவே. நீயும் மிஷானும் சாதாரணமாவே நல்லா படிக்கிறவங்க. நீ பலமுறை முதல் மார்க் எடுத்த மாதிரி அவனும் எடுத்திருக்கான். அப்ப எல்லாம் நீ கவலைப் படலை. கடைசி டெஸ்ட்ல அவள் அதிக மார்க் எடுத்ததும் கவலைப்பட்டே. காரணம், அந்தத் தாயத்துன்னு உன் மனசுல உறுதியா நம்ப ஆரம்பிச்சே. அந்த நேரத்துல நான் என்ன சமாதானம் சொன்னாலும் நீ அரை மனசோடே படிச்சு இருப்பே. அதனால தாயத்து, மந்திரம்னு உன் வழிக்கே வந்தேன். நீயும் நம்பிக்கையோடு படிச்சே... ஜெயிச்சே!'' என்றார்.

''ஸாரிப்பா! ப்ளஸ் டூல பாருங்க... அகில காட்டுக்கே ஃபஸ்ட்டா வந்து காட்டறேன்'' என்று சொல்லி அப்பாவை அணைத்துக் கொண்டான் கிரண்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism