Published:Updated:

விக்கி சைலா ஜீபா

விக்கி சைலா ஜீபா

விக்கி சைலா ஜீபா

விக்கி சைலா ஜீபா

Published:Updated:

தாரிக்

மேப்பைப் பார்த்து விக்கி கத்தினான். ''வெயிட்! வெயிட்! நாம தப்பா வந்துட்டோம். கொஞ்சம் பின்னாடி போயி அந்த ரைட்லே திரும்பணும்'' என்றவன் தலையில் தட்டி, ''நீதானே வழி சொல்லிட்டு வர்றே. ஒழுங்கா முன்னாடியே சொல்ல வேண்டியது தானே?'' என்றாள் சைலா. வண்டியை ஓட்டி வந்த ஜீபா, ''விடு சைலா! நாம வர்ற வேகத்துக்கு உடனுக்கு உடன் மேப்பைப் பார்த்துச் சொல்றது ஈஸி இல்லைதான்'' என்றது.

விக்கி சைலா ஜீபா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##
காடு மாதிரி இருந்த ஒரு மலை அடிவாரத்தில் மூவரும் ஒரு ஜீப்பில் போய்க்கொண்டு இருந் தார்கள். ''ஹூம்! விடியற்காலைலே கிளம்பியது... மணி எட்டரை ஆகுது. பயங்கர பசி... எங்காவது வண்டிய நிறுத்திட்டு சாப்பிடுவோமா?'' என்று கேட்டாள் சைலா. ''ஆமா! வண்டிக்கும் ரெஸ்ட் கொடுக்கணும்'' என்றபடி வண்டியை நிறுத்திய ஜீபா, ''பிரேக்! எங்கேயும் போயிடாதீங்க... ஃபாஸ்டா முடிங்க உங்க பிரேக் பாஸ்ட்டை!'' என்றது.

''அடா... அடா... அடா! இந்த டென்ஷனிலும் எப்படி ஜீபா ரைமிங்கா அடிக்கறே?'' என்றாள் சைலா. ''தோடா! இதே நாங்க கவிதை சொன்னா, எல்லாரும் நம்மள இக்னோர் பண்ணுவீங்க. ஜீபா சொன்னா ரசிக்கறீங்க. என்ன உலகமப்பா!'' என்றான் விக்கி.

''அப்படி இல்லைடா விக்கி, கொண்டு வந்திருக்கிற பிரட்ல பட்டர், ஜாமை தடவிக் கொடுக்கிற வேலைய ஜீபாகிட்டே கொடுக்க நினைச்சேன்... அதான்!'' என்று கண்ணடித்தாள் சைலா. ''ஓயெஸ்!'' என்றபடி ஜீபா, பிரட் பட்டர் ஜாமை ரெடி செய்துகொடுக்க, மூவரும் சாப்பிட்டு முடித்தார்கள்.

''சைலா, உன் லேப் டாப்பில் அந்த வீடியோ ஃபைலை ஓப்பன் பண்ணு... இன்னொரு தடவை பார்க்கணும்'' என்றது ஜீபா. முந்தைய நாள் மதியம் அவர்களுக்கு பிரதீப் அங்கிள் அந்த வீடியோ ஃபைலை மெயில் அனுப்பி இருந்தார். பிரதீப், ஒரு பத்திரிகை நிருபர். பல மர்மமான  விஷயங்களைத் துப்பறிந்து வெளியிடுவதில் கில்லாடி. சமீபத்தில் ஒரு தீவிரவாத கும்பல் வடக்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய ஒரு இடத்தில் பதுங்கி இருப்பதாக அவருக்குத் தகவல் வந்திருந்தது. தனி ஆளாகப்போனால்  தான் இதைக் கண்டு பிடிக்க முடியும் என்பதால் போட்டோகிராபர் கூட இல்லாமல், தனியாகக் கிளம்பிவிட்டதாக அந்த மெயிலில் குறிப்பிட்டிருந்தார் பிரதீப் அங்கிள்.

போகிற வழி, கண்ணில் படுகிற சந்தேகப்படும்படியான விஷயங்கள் என எல்லாவற்றையும் வீடியோவில் பதிவு செய்து உடனுக்கு உடன் ஜீபாவுக்கு மெயில் அனுப்பிக் கொண்டிருந்தார். விக்கி, சைலா, ஜீபா மூவருமே அவருடைய கட்டுரைகளைத் தொடர்ந்து படித்துவருபவர்கள். பிரதீப் அங்கிள், அடிக்கடி ஜீபாவிடம் ஆலோசனைகள் பெறுவதும் உண்டு. அவர் செய்யும் துப்பறியும் செய்திகளில் இதுவும் ஒன்று என ஆரம்பத்தில் கொஞ்சம் அசட்டையாக இருந்துவிட்டார்கள் மூவரும்.

விக்கி சைலா ஜீபா

வீடியோ ஃபைலை ஓப்பன் செய்தாள் சைலா. பிரதீப் அங்கிள் அதில் பேசினார். ''நான் இப்போ அவங்க இருக்கிற இடத்தை ரொம்பவே நெருங்கி வந்துட்டேன். என்னோட யூகம் சரியா இருந்தா... அதோ தெரியுதே (வீடியோவில் தூரத்தில் ஒரு சிறிய மலை காட்டப்படுகிறது) அந்த மலை முழுசும் அவங்க கன்ட்ரோல்ல இருக்கறதா எனக்குப் படுது. பைனாகுலர்ல பாத்தா அங்கங்கே முகமூடி போட்ட ஆளுங்க நடமாட்டம் தெரியுது'' என்று பிரதீப்பின் குரல் ஒலித்துக்கொண்டு இருக்க, விக்கி பக்கத்தில் இருந்த மலையைக் காட்டி, ''இதுதான் அந்த மலை... நாமும் நெருங்கிட்டோம்!'' என்றான்.

பிரதீப் குரல் தொடர்ந்தது... ''இந்த மரப் பாலம் வழியாதான் நாம அந்த மலைக்குப் போக முடியும். இன்னும் சொல்லப் போனா இந்தப் பாலம்தான் ஒரே வழி. கீழே அதல பாதாளம். கரடு முரடான பாறைங்க... விஷப் பூச்சிங்க நிறைய இருக்குன்னு சொல்றாங்க. நடந்து போறது எல்லாம் முடியாத காரியம்! (வீடியோவில் அந்த மரப் பாலமும் அதல பாதாளமும் படமாக ஓடுகிறது) சரி, நான் இப்ப உள்ளே போறேன்... மற்றதை அடுத்த மெயிலில் சொல்றேன்... பை ஃபார் நவ்!'' என்றதும் வீடியோ ஃபைல் முடிகிறது.

உள்ளே சென்ற பிரதீப் அங்கிளிடம் இருந்து அதன் பிறகு எந்த மெயிலும் வரவில்லை. அவருக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை. நள்ளிரவில் ஒரு எஸ்.எம்.எஸ் மட்டும் வந்தது. 'ஐ யம் இன் டேஞ்சர்... ப்ளீஸ் ஹெல்ப்!’ என்று மொட்டையாக இருந்தது தகவல்.

ஆபத்து என்று தெரிய வந்ததுமே விக்கி, சைலா, ஜீபா மூவரும் கிளம்பிவிட்டார்கள். பிரதீப் அங்கிள் அனுப்பிய மெயில்களையும், அவர் சொன்ன வழி, அடையாளங் களையும் வைத்து இவ்வளவு தூரம் வந்துவிட்டார்கள்.

''இங்கிருந்து இன்னும் நாலு கிலோ மீட்டர்லே அந்த மரப் பாலம் வருது'' என்றான் விக்கி. ''சரி, போவோம்'' என்று ஜீபா சொல்ல, மூவரும் கிளம்பினார்கள். அடுத்த சில நிமிடங்களில் மரப் பாலத்தை அடைந்தார்கள். வீடியோவில் பார்த்த அந்த இடங்கள் நேரில் காட்சி தந்தன. ''இனிதான் ரொம்ப ஜாக்கிரதையா மூவ் பண்ணணும்'' என்றாள் சைலா. ''ஒருவேளை பிரதீப் அங்கிள் அவங்க பிடியிலே இருந்தா நிச்சயம் நம்மை அவங்க எதிர்பார்த்துதான் இருப்பாங்க. திருட்டுத்தனமா போறதுதான் இப்போ ஆபாத்தா முடியும். அவங்களுக்குத் தெரியற மாதிரியே போவோம்!'' என்றது ஜீபா. ''ஆமாம்! ரொம்ப கரெக்ட்!'' என்று விக்கியும் சைலாவும் ஆமோதித்தார்கள். ஜீப் மெள்ள அந்த மரப் பாலத்தில் ஊர்ந்து சென்றது.

அந்த மரப் பாலம் முடிவடைகிற இடத்தில் தொடங்கி, அந்தக் குட்டி மலை முழுக்க அடர்ந்த மரங்களும், புதர்களும் நிறைந்து இருந்தன. அந்தச் சூழலே ஒரு மர்மமான இடத்துக்குள் போகிறோம் என்பதை உணர்த்தியது. தூரத்தில் ஆங்காங்கே பல முகமூடித் தலைகள் தங்களை நோட்டம் இடுகிறார்கள் என்பதை ஜீபா கவனிக்கத் தவறவில்லை. அந்தப் பாதை சற்றே மேல்நோக்கி உயர்ந்தது. அங்கே ஒரு செக்போஸ்ட் போல கேட் போடப்பட்டு இருந்தது. கமாண்டோ மாதிரி உடை அணிந்த இரண்டு முகமூடிகள், ஜீபா டீம் சென்ற ஜீப்பை வழிமறித்து நிறுத்தியது. ஜீப் நின்றதும், அருகில் வந்தான் ஒருவன். முகமூடிக்கு நடுவே தெரிந்த அவனது பார்வையே மிரட்டும்படியாக இருந்தது. 'யார்? என்ன வேண்டும்?’ என்பது போல புருவத்தை உயர்த்தி கண்களாலேயே கேட்டான். அவனது நெஞ்சுப் பகுதியில் ஒரு மானிட்டர் இருந்தது. அதிலும் 'யார் நீங்கள்? தமிழ்நாட்டிலிருந்து இங்கே எதற்கு வந்திருக்கிறீர்கள்?’ என்ற வரிகள் இருந்தன.

''நம்ம வண்டியோட ரிஜிஸ்ட்ரேஷன் நம்பரைப் பார்த்துப் பேசறான்'' என்றான் விக்கி ரகசியமாக. ''குரல் தெரியக்கூடாதுன்னு மானிட்டர் மூலமா பேசறான். அவன் நினைக்கறது டைப் செய்யாமலே மானிட்டரில் வந்து விழுது'' என்றாள் சைலா பதிலுக்கு.

ஜீபா அவனிடம், ''எங்கள் நண்பர் இந்தப் பகுதிக்கு ஒரு வேலையாக வந்திருந்தார். அவர் ஒருவேளை இந்தப் பகுதிக்குள் வந்திருப்பாரோ என்ற சந்தேகத்தில் அவரைத் தேடி வந்திருக்கிறோம்'' என்று தூய தமிழில் சொன்னது. பிறகு விக்கி, சைலா பக்கம் திரும்பி, ''இவங்க வேற மொழி பேசறவங்க. நான் பேசறதை அவனிடம் இருக்கும் ஒரு சென்ஸார் அப்படியே அவனுக்கு மொழிபெயர்த்துச் சொல்லிவிடும். அவன் நினைக்கறதை நம்ம மொழிக்கு இந்த மானிட்டர் மூலமா தமிழ்லே கம்யூனிகேட் செய்றாங்க... இது ரொம்ப லேட்டஸ்ட் டெக்னாலஜியா இருக்கு'' என்றது ஜீபா. வேண்டுமென்றே அந்த முகமூடிக்காரனை கவனிக்காமல், ரொம்ப கேஷ§வலாக இருப்பதாக காட்டிக்கொண்டே இந்தத் தகவலைச் சொல்லி பேச்சை வளர்த்தது. அந்த முகமூடிக்காரன், ஜீப்பின் கதவைத் தட்டி ஜீபாவை அழைத்தான். ஜீபா திரும்பிப் பார்த்து, ''யெஸ்...'' என்றது. 'நீங்கள் எங்கள் தலைமை அதிகாரியின் அனுமதியைப் பெற வேண்டும். ஜீப்பை இங்கேயே விட்டுவிட்டு எங்களுடன் வாருங்கள்’ என்றது அவனது மானிட்டர்.

''ஓயெஸ்!'' என்றபடி ஜீப்பை ஓரமாக விட்டுவிட்டு கீழே இறங்கியது ஜீபா. விக்கியும் சைலாவும் உடன் இறங்கி நின்றார்கள். அந்த முகமூடி பக்கத்தில் நின்றிருந்த முகமூடிக்காரனிடம் ''குரிக்கேலிஸ் தரப்தூ... பரத்சோ ப்ரீக்கார்லி'' என்றான். அவனது குரல் கரகரப்புடன் மிரட்டலாக இருந்தது. ''சரஸ்தோ... சரஸ்தோ...'' என்றபடி தலையை ஆட்டி சல்யூட் அடித்தான் அந்த இரண்டாவது முகமூடி.

சற்று நேரத்தில் பேட்டரி வேன் ஒன்று வந்தது. அதிலிருந்து மூன்று முகமூடிகள் இறங்கினார்கள். ஜீபா, விக்கி, சைலா மூவரையும் அந்த வேனைக் காட்டி உள்ளே ஏறச் சொல்லி சைகை செய்தான் அவர்களில் ஒருவன். மூவரும் அதில் ஏறிக்கொண்டார்கள். அவர்களோடு அந்த மூன்று முகமூடிகளும் ஏறிக்கொள்ள, அந்த மலைப்பாதையில் மேல் நோக்கி சத்தமே இல்லாமல் பயணித்தது அந்த பேட்டரி வேன்.

உடன் இருந்த மூன்று பேருமே கறுப்பு உடை அணிந்து இருந்தார்கள். நிஞ்சாக்கள் மாதிரி கண்களை மட்டும் விட்டு, தலை முழுக்க கறுப்புத் துணியால் சுற்றி இருந்தார்கள். 'நம்மை அவர்களுடைய தலைவனிடத்தில் அழைத்துச் செல்கிறார்கள்’ என்பதை யூகித்தது ஜீபா. வழியில் ஓர் இடத்தில் வண்டி நின்றது. வெளியே இருந்த டெலிபோன் பூத் மாதிரியான இடத்தில் உள்ளே போன ஒருவன், அங்கே சில பட்டன்களைத் தட்டினான். அடுத்த நிமிஷம், அங்கே இருந்த சில மரங்கள் கடகடவென நகர்ந்து அவர்களுக்கு வழி விட்டது. அங்கே ஒரு பெரிய சைஸ் வாசல் இருந்தது. அதனுள்ளே வேன் நுழைந்தது. வாசலுக்கு உள்ளே நிறைய அறைகள். எல்லாவற்றிலும் சின்னதும் பெரியதுமாக இயந்திரங்கள். நிஞ்சா உடையில் ஆட்கள் அவற்றை இயக்கிக் கொண்டு இருந்தார்கள். சில அறைகளில் ராக்கெட் லாஞ்ச்சர் நிறுத்திவைக்கப்பட்டு, அதை சிலர் சரி செய்துகொண்டு இருந்தார்கள். வேன் நகர்ந்துகொண்டே இருந்தது. சற்றுத் தள்ளி ஒரு நீண்ட அறையில் சிலரை அடைத்து வைத்து இருந்தார்கள். அவர்கள் இடுப்பில் மட்டும் சிறு துணி கட்டி இருந்தார்கள். உடம்பு முழுக்க காயங்கள் இருந்தன. 'பிடிபட்டவர்களை இங்கே அடைத்து சித்ரவதை செய்கிறார்கள்’ என்பதை மூவரும் புரிந்துகொண்டார்கள்.

மெல்லிய குரலில் ஜீபா சொன்னது, ''இங்கே பெரிய அளவில் ஏதோ விபரீதங்கள் நடந்துட்டு இருக்கு. இவ்வளவு டெக்னாலஜியோடு அதிநவீன கருவிகளை வெச்சுக்கிட்டு இயங்கிட்டு இருக்காங்க. எனக்கென்னவோ இந்த மலைக்கு வர்ற வழி அந்த மரப் பாலம் மட்டும்தான்ங்கறது ஏத்துக்கற மாதிரி இல்லை. இவங்களுக்கு வேற ஏதோ ஒரு வழி இருக்கு. அதை நாம கண்டுபிடிக்கணும். அதுவரைக்கும் நாம எந்த ஆக்ஷனிலும் இறங்க முடியாது. அப்பிராணியா இருக்க வேண்டியதுதான்'' என்றது. விக்கியும் சைலாவும் 'ஆமாம்’ என்பது போல தலையை ஆட்டினார்கள். பேட்டரி வேன் மேலும் முன்னேறியபடி இருந்தது.

(தொடரும்...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism