Published:Updated:

பரீட்சையே வா...வா...!

விஸ்வம் படங்கள் : கண்ணா

பிரீமியம் ஸ்டோரி
##~##

''டிபன் ரெடியாயிருச்சாம்மா, பசிக்குது?''

''டிபன் ஒண்ணும் இன்னிக்குப் பண்ணலைடி. ஃப்ரிஜ்ல பிரெட் இருக்கு. சாஸ் போட்டுச் சாப்பிடு.''

''போம்மா... இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமைதானே? வாய்க்கு ருசியா பூரிக் கிழங்கோ, இல்லைன்னா அட்லீஸ்ட் நூடுல்ஸாவது பண்ணியிருக்கலாமே?''

''இன்னைக்கு ஒருநாள்தான் எனக்கு ரெஸ்ட் கிடைக்குது. அதையும் கிச்சன் சூட்டுல வெந்து அவஸ்தைப்படச் சொல்றியா? போட்டதைத் தின்னு பழகிக்க. நாக்கு வளர்ந்தா, மூளை வளராது'' - அம்மா வழக்கம்போல் அறிவுரைகளை அடுக்க ஆரம்பித்தாள்.

பவித்ரா முகத்தைச் சுருக்கி, அங்கிருந்து நகர்ந்தாள். குளித்து வந்து டிரெஸைத் தேடினாள். ''அம்மா, என்னோட பிங்க் கலர் சுடிதார் பார்த்தியா?''

''மாடியில இருக்கும். நேத்துக் காலையில போட்டது. போய் எல்லாத் துணியையும் எடுத்துக்கிட்டு வா.''

''அயர்ன் பண்ணலியா?''

''அயர்ன் எதுக்குடி... ஸ்கூல்தான் லீவு விட்டாச்சே?''

ஃப்ரிஜைத் திறந்து பிரெட்டை எடுத்து, 'டொப்’பென்று டைனிங் டேபிள் மேல் வைத்தாள் பவித்ரா. ஞாயிறு காலையில் இப்படியரு டிபன். வேண்டாவெறுப்பாகக் கால் வயிறு சாப்பிட்டு எழுந்தாள்.

''கூல்டிரிங்க்ஸ் ஏதாவது இருக்காம்மா?''

''ஒண்ணும் இல்ல. நாக்கை வளர்க்காதேனு இப்பதானே சொன்னேன்.''

''நான் ரம்யா வீட்டுக்குக் கிளம்புறேன். அவளுக்கு இன்னைக்கு பர்த் டே. 200 ரூபா கொடு. எதாச்சும்  கிஃப்ட் வாங்கணும்.''

பரீட்சையே வா...வா...!

''எதுக்கு 200 ரூபா? 50 ரூபா போதும்.''

''அம்மா, அவ வீட்டுக்கு ஆட்டோல போகணும். நாங்க எல்லாம் சேர்ந்து ஹோட்டல்ல சாப்பிடப் போலாம்னு பிளான் பண்ணியிருக்கோம்.''

''100 ரூபா எடுத்துக்க. அதுக்கு மேல தொடக் கூடாது. உன் எக்ஸாமுக்கு வாங்கின நாலு பேனாவுல யூஸ் பண்ணாத ஒண்ணை எடுத்துக் கவர்ல போட்டு கிஃப்ட்டாக் கொடுத்துரு.''

பவித்ராவுக்குக் கண்ணீர் பொங்கியது. அடக்கிக்கொண்டாள். அவள் மனம் ஒரு மாதம் பின் நோக்கிச் சென்றது.

''பவி, ஸ்நாக்ஸ் பாக்ஸ்ல பிஸ்தா, பாதாம் வெச்சிருக்கேன். டப்பர் வேர்ல ஆரஞ்சு க்ரஷ் இருக்கு.''

''லஞ்சுக்கு என்னம்மா?''

''பூரிக் கிழங்கு இருக்கு. ஒரு குட்டி டப்பாவுல நூடுல்ஸ் வெச்சிருக்கேன்.''

''யூனிஃபார்ம் எங்கேம்மா?''

''உன் ரேக்ல அயர்ன் பண்ணி  வெச்சிருக்கேன்.''

''அம்மா, செலவுக்குக் காசு வேணும்.''

''ஒரு நிமிஷம் இரு'' என்றவாறு உள்ளே சென்ற அம்மா 100 ரூபாய் நோட்டுடன் வந்தாள்.

சாயங்காலம்...

''அம்மா, ஒரே தலைவலி.'' - முனகியபடியே உள்ளே நுழைந்தாள் பவித்ரா.

''இன்னைக்கு ஸ்போர்ட்ஸ் வகுப்பு இருந்திருக்கும். ஓடியாடி இருப்பே. கை கால் கழுவிட்டு வா, மருந்து தடவிவிடுறேன்.''

அம்மா தனது மடியில் சாய்த்துக்கொண்டு, கை கால் பிடித்துவிடும்போது அத்தனை சுகமாக இருந்தது. தூக்கம் சொக்கியது.

''தூங்கிடாதே பவி, பரீட்சைக்கு ஒரு மாசம்தான் இருக்கு. ரொம்ப உடம்பு வலி இருந்தா, ஒரு தலைவலி மாத்திரை போட்டுக்கிட்டுப் படி.''

அங்கே சுற்றி, இங்கே சுற்றி பரீட்சை என்ற விஷயத்துக்கு வந்துவிடுவாள் அம்மா. என்ன யோசித்தாலும், என்ன பேசினாலும், என்ன செய்தாலும் அது   பரீட்சையில் போய்தான் முடியும்.

அம்மாவுக்குப் பிறப்பது, வாழ்வது எல்லாமே பரீட்சைக்காகத்தான். பரீட்சை முடிந்துபோனால், எல்லாம் முடிந்துவிடும். பிறகு, கஞ்சியோ, காபித் தண்ணியோ, பழைய சோறோ போதும்.

ஸ்நாக்ஸ் கேட்டால், அதிகபட்சம் பிஸ்கட். முந்திரி, திராட்சையும் 100 ரூபாய் சலவை நோட்டுகளும் எங்கேதான் மறைந்து போகுமோ தெரியாது.

அதிலும் பவித்ராவுக்கு 10-ம் வகுப்புப் பரீட்சை என்பதால், கடந்த ஆறு மாதங்களாகப் பார்த்துப் பார்த்து பணிவிடை செய்தாள் அம்மா. திரும்பிப் பார்த்தால் ஆப்பிளும் ஆரஞ்சும் நீட்டுவாள் அம்மா.

''பவி... நீ குண்டாகிட்டே போறே. ஆறு மாசத்துல 10 கிலோ ஏறிட்டேனு நினைக்கிறேன்'' - பள்ளியில் ரம்யா கிண்டலடித்தாள்.

''அவளுக்கு என்னடி... நாளரு மேனி, பொழுதொரு வண்ணம் வளர்கிறாள்'' என்றாள் அபர்ணா.

''ஏன்டி பவியைக் கிண்டல் பண்றீங்க? நாளையில இருந்து நீ பெருசா திருஷ்டிப் போட்டு வெச்சுக்க பவி'' - வழக்கம்போல் அம்ருதாவும் கிண்டலடித்தாள்.

எல்லாம் முடிந்து ஒரு மாசம் ஆகிவிட்டது. பிரெட் துண்டு தொண்டையை அடைத்தது. 'இனி, அடுத்த பரீட்சை எப்போது வரும்? எப்போது மீண்டும் மகாராணி ஆகப்போகிறோம்?’

பரீட்சைக்கு ஏங்கினாள் பவித்ரா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு