Published:Updated:

ராட்சஸர்கள்

ராட்சஸர்கள்

ராட்சஸர்கள்

ராட்சஸர்கள்

Published:Updated:
ராட்சஸர்கள்

த்தை ஊஞ்சலில் ஒரு காலை மடித்து, இன்னொன்றைத் தொங்கவிட்டபடி அமர்ந்து இருந்தார்.

கைத்தறிப் புடைவை, வெள்ளை ரவிக்கை, கழுத்தில் ருத்திராட்ச மாலை, நெற்றியில் விபூதிக் கீற்று, அழுந்த வாரி கோடாலி முடிச்சாக முடியப்பட்ட வெள்ளைத் தலைமுடி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பார்வை மட்டும் வழக்கம்போலவே, பால்கனி வழியாகத் தெரிந்த வெட்டவெளியை வெறித்துக்கொண்டிருந்தது.

''அத்தே... நா கமலி வந்திருக்கேன்... என்னைப் பாருங்கோ... ரெண்டு நாள் முன்னாலதான் அமெரிக்காலேர்ந்து வந்தேன். என்னோட இவரும் லாவண்யாவும் வந்திருக்கா. கொழந்தையப் பாருங்கோ... எல்லாரும் இவ உங்க ஜாடையா இருக்கானு சொல்றா!''

நாலு வயசு லாவண்யாவை முன்னால் நிறுத்தி மீண்டும், ''பாருங்கோ அத்தே...'' என்றவள், குழந்தை முகத்தைத் தன்னைப் பார்க்கத் திருப்பி, ''உன்னோட பாட்டி, எங்க அத்தை... என்னை வளத்தது இந்தப் பாட்டிதான். உன் வயசிருக்கும்போது அத்தை மடியவிட்டு நான் எறங்கவே மாட்டேன். எத்தனை அழகா கதை சொல்லுவா தெரியுமா? பாட்டி மடி மேல ஏறி உக்காந்துண்டு கதை சொல்லச் சொல்லு...'' என்றவாறு குழந்தையை முன்னால் தள்ள, புது மனுஷியைப் பார்த்த கூச்சத்தில் லாவண்யா பின்னுக்கு நகர்ந்து அம்மாவிடம் ஒட்டிக்கொண்டாள்.

##~##

அத்தை மெள்ள பார்வையைத் திருப்பினார். எந்தச் சலனமும் இல்லாமல் வலது கையைத் தூக்கி குழந்தையின் தலை மேல் சில நொடி களுக்கு வைத்தவர், மீண்டும் வானத்தை வெறிக்க முற்பட்டார்.

'அடி என் கண்ணே...’ என்றவாறு குழந்தையை வாரி அணைத்துக்கொள்வார் என்று எதிர்பார்த்த கமலி, லேசாக அதிர்ந்தாள். அதே அதிர்ச்சியுடன், பக்கத்தில் நின்றிருந்த அக்கா பூரணியை ஏறிட்டாள்.

''என்ன பூரணி... அத்தை என்னைப் புரிஞ் சுண்டாளா இல்லியா?''

''புரிஞ்சுண்ட மாதிரிதான் தோண்றது. கொழந்தை தலைல கையவெச்சு ஆசீர்வாதம் பண்ணாளே. கிட்டத்தட்ட ஆறு மாசமா இப்படித்தான் இருக்கா. மொதல்ல, சாமிக்கு வெளக்கேத்தி ஸ்லோகம் சொல்றதை நிறுத் தினா. 'ஏன் அத்தே?’னு கேட்டப்போ, 'நா பண்ணியாச்சுடி, இனிமே நீங்கள்லாம் பண் ணுங்கோ... போறும்’னு பதில் சொன்னா. மேக்கொண்டு ரெண்டு மாசம் போறதுக்குள்ள, தானா பேசறத நிறுத்திட்டா. நாம கேள்வி கேட்டா, சின்னதாப் பதில் சொல்லுவா. அப்பறம் அதுவும் நின்னுபோச்சு!''

''டாக்டர் என்ன சொல்றார்?''

'' 'ஒடம்புக்கு ஒண்ணுமில்ல, ஆரோக்கியமாத்தான் இருக்கா... அவர் தனக்குள்ளயே ஒரு ஒலகத்தை சிருஷ்டி பண்ணிண்டு, அதுக் குள்ளயே வாழ்ந்துண்டிருக்கா. வயசாச்சு, அவர் போக்குக்கு விட்டுடுங்கோ’னு சொல்றார். தூங்கி எழுந்ததும், கிட்ட இருந்து குளிக்கவெச்சு, டிரெஸ் பண்ணி, கையப் புடிச்சு அழைச்சுண்டு வந்து ஊஞ்சல்ல ஒக்காரவெச்சுட்டா, நாள் பூரா இங்கயேதான் இருப்பா. தட்டுல சாப்பாட்டைப் போட்டுக் கையில குடுத்து 'சாப்பிடுங்கோ’னு சொன்னா, சாப்பிடுவா. நடுநடுவுல எழுப்பி பாத்ரூமுக்கு அழைச்சுண்டு போவோம். முதுகு வலிச்சா, ஊஞ்சல் லயே படுத்துப்பா. மத்தபடி, பேச்சு, எழுந்து நடக்கறதுனு ஒண்ணுமில்ல. 'சில வயசானவா இப்படி நடந்துக்கறது சகஜம்தான்... டிமென்ஷியாவாக்கூட இருக்க சான்ஸ் இருக்கு’னு டாக்டர் சொல்றார்.''

''டிமென்ஷியாவா? அப்படின்னா... ஷார்ட் டெர்ம் மெமரி லாஸா?''

''இருக்கலாம்னு சந்தேகப்படறாரே ஒழிய, அதான்னு தீர்மானமா சொல்லலை கமலி.''

''என்னிக்குமே அத்தை ரொம்பப் பேச மாட்டாதான். ஆனா, ரெண்டு வருஷம் முன்னால நா வந்தப்போ இப்படி இல்லியே பூரணி? போன்ல பேசினப்பகூட நீ இந்த மாதிரி இருக்கானு சொல் லலியே?''

''ஒடம்புக்கு முடியலைன்னா சொல்லலாம். இதைப்போயி என்னன்னு சொல்றது? அத்தை இப்படி இருக்கறது வருத்தமா இருந்தாலும், தொந்தரவு ஒண்ணுமில்ல. அவபாட்டுக்கு ஏதோஒரு ஒலகத்துல இருக்கா.''

கேட்ட செய்தி வருத்தம் தர, கமலி அத்தையை நெருங்கி இறுகத் தழுவிக்கொண்டாள்.

''உங்களைப் பாத்துப் பேசணும்னு ரொம்ப ஆசையா வந்தேன் அத்தே... இப்படி எதுவுமே பேச மாட்டேங்கறேளே!''

நிமிர்ந்தவள், எட்டி அக்காவின் கையைப் பற்றிக்கொண்டாள்.

ராட்சஸர்கள்

''நீயும் அத்திம்பேரும் பெத்த தாயைப் பாத்துக்கற மாதிரி கவனிக்கறேளே!''

''பாத்துக்காம? நம்ப ரெண்டு பேரையும் சின்ன வயசுலேந்து கல்யாணமாகிப் போறவரைக்கும் கண்ணுக்குள்ளவெச்சு அத்தைதானே வளத்தா. அம்மா அல்பாயுசுல போனப்பறம், நமக்கு அத்தைதானே எல்லாம். இப்ப இவளுக்கு முடியாதப்போ, நாம கவனிச்சுக்கறதுதானே நியாயம் கமலி?''

''நா எங்கயோ இருக்கேன்... என்னால எதுவுமே பிரயோஜனம் இல்லியே.''

''யார் பாத்துண்டா என்ன, கமலி? எனக்கு முடியறது, உனக்கு முடியலை. உள்ளூர்ல இருந்தா எனக்கு மேல நீயும் கவனிச்சுப்பே. சரி... வா... இப்படி வந்து உக்காரு. அமெரிக்காலேந்து வந்தவ, ஒரு மாசம் தங்கிட்டுப் போகக் கூடாதா? கால்ல வெந்நீரக் கொட்டிண்டு ஓடறியே! பதினஞ்சு நாள்ல திரும்பிடணும்னு நேத்து போன்ல சொன்னப்போ, எனக்கு ரொம்பக் கஷ்டமா இருந்துது.''

''ஆமா பூரணி... ரகுவுக்கு ஒரு முக்கியமான புராஜெக்ட் போயிண்டிருக்கு. ரெண்டு வாரம் விட்டுட்டு வர்றதே பெரிய விஷயம். நாத்தனார் புள்ளைக்குக் கல்யாணம்... விட முடியாது. அதான் எப்படியோ வந்தோம். அடுத்த வெள்ளிக்கிழமை கல்யாணம். அந்த ஞாயித்துக்கிழமை கிளம்பிடணும். நானும் இப்பத்தான் புது வேலைல சேந்திருக்கேன். பதினஞ்சு நாளுக்கு மேல லீவு எடுக்க முடியாது.''

பூரணி தன் தங்கையின் தலைமுடியை வாஞ்சையுடன் கோதினாள்.

''கல்யாணத்துக்கு இன்னும் எட்டு நாள் இருக்கு. நடுவுல நாலு நாள் என்னோட வந்து இரு. லவிக்குட்டியோட சேந்து இருந்த மாதிரி இருக்கும்.''

பூரணிக்குப் பிறந்தது இரண்டுமே பிள்ளைகள். பெண் குழந்தை இல்லை என்ற ஏக்கத்தை, லாவண்யாவைத் தன்னோடு வைத்துக்கொள்வதன் மூலம் தீர்த்துக்கொள்ள அக்கா விரும்பு வது அவளுக்கு நன்றாகவே புரிந்தது.

கமலி அக்காவைக் கெஞ்சலாக ஏறிட்டாள்.

''எனக்கும் ஆசையாத்தான் இருக்கு. ஆனா, கஷ்டம் பூரணி. என் மாமியார் ஆத்துக்கு முருகர் குலதெய்வம், தெரியுமில்லியா? போன வருஷம் ரகுவுக்கு ஓப்பன் ஹார்ட் சர்ஜரி நடந்தப்போ, 'ஒடம்பு சரியானதும் அறுபடை வீட்டுக்கு வந்து தரிசனம் பண்றோம்’னு வேண்டிண்டேன். அதனால, நாளைக்கு ரகுவும் நானும் புறப்பட்டு, மூணு நாள்ல ஆறு கோயி லுக்குக் கார்லயே போயிட்டுவரணும்னு திட்டம் போட்டிருக்கோம். வெயில்ல குழந்தைய அலைக் கழிக்க வாண்டாம்னு அவளை இங்க மாமியார் ஆத்துல விட்டுட்டுப்போறோம்.''

''குழந்தைய எங்காத்துல விட்டுட்டுப் போயேன். அவளையாவது மூணு நாள் வெச்சுக்கறேனே.''

கமலி முன்னால் சாய்ந்து அக்காவை அணைத் துக்கொண்டாள்.

''தப்பா எடுத்துக்காதே பூரணி... என் மாமியார் வருஷா வருஷம் ஆறு மாசம் அங்க வந்து எங்களோட இருந்துட்டுவர்றதால, லவிக்கு அவர்கிட்ட ரொம்ப ஒட்டுதல். நாங்க இல்லாட்டாலும், அவரோட சந்தோஷமா இருப்பா. அதோட, மாமியார் ஆத்துல பீகாரிப் பையன் ஒருத்தன் வீட்டோட தங்கிச் சமைக்கறான். கார் டிரைவர் வசதியும் இருக்கு. மாமியாரோட அண்ணா பேரன் அஷோக், அவாத்துல தங்கி காலேஜ் படிக்கறான். 'நாங்கள்லாம் லவிய நாளுக்கு ஒரு எடமாக் கூட்டிண்டுபோயி ஜாலியா இருக்கப்போறோம்’னு சொல்லிண்டிருக்கான். அப்படி இருக்கறச்சே, 'லவிய எங்க அக்கா ஆத்துல விடறேன்’னு சொன்னா, நன்னாயிருக்காது. ப்ளீஸ், புரிஞ்சுக்கோ.''

கமலியின் ஏமாற்றம் வெளிப்படையாகத் தெரிந்தது.

ராட்சஸர்கள்

''அதெல்லாம் சரிதான்... ஆனா, நீங்க கிளம் பறதுக்கு முன்னால ரெண்டு நாளாவது எங்க கூட வந்திருக்கணும், சொல்லிட்டேன்! சரி, எழுந்து வா... உள்ள போயி டிபன் சாப்பிடலாம். வேதம் மாமி அத்தைக்கு டிபன் குடுத்து கவனிச்சுப்பா.''

ருவரும் எழுந்து உள்ளே போக... மங்கிய நினைவுகளுக்கு மத்தியில் அத்தையின் நினைவுகள் பின்னோக்கிப் படர்ந்தது!  

அவளுக்கு அப்போது என்ன வயசு? நாலு இருக்குமா? இருக்கலாம்.

அப்பா வக்கீலாகக் கொழித்ததில், வருவோரும் போவோருமாக வீடு எப்போதும் கலகலப்பாக இருக்கும். அத்தனை வேலைகளுக்கும் தனித் தனியாக ஆட்கள்.

சமையல் வேலைகளைக் கவனிக்க முருகன் என்று ஒருவன். வயசு முப்பது முப்பத்தைந்து இருக்கும். வெடவெடவென்று சிவப்பாக, எண்ணெய் தடவி வாரிய கறுப்புக் கிராப்புடன், சிரித்த முகமாக வளையவருவான். பிரமாதமாகச் சமைப்பவன் என்பதோடு, இதமாகப் பழகுபவன் என்றரீதியிலும், எல்லோருக்கும் அவனைப் பிடிக்கும்.

ஒரு நாள் இரவு, வெளியே மழை கொட்டிக்கொண்டிருந்தது. வீட்டில் மின்சாரம் போய்விட்டது. அறைக்கு அறை மெழுகுவத்தி வெளிச்சம். அவளுக்குத் தூக்கம் வந்துவிட்டது. 'கதை சொல்லு’ என்று அம்மாவிடம் பிடிவாதம் பிடித்தபோது, 'நா சொல்றேன்... வா’ என்று முருகன் அவளைத் தூக்கிக்கொண்டு போய்ப் படுக்கவைத்தான். முகம் தெரியாத இருட்டு. அவள் இதுநாள் வரை கேட்காத கதையைச் சொல்லி முழுக் கவனத்தையும் ஈர்த்தவன், மெதுவாக அவளை எங்கெங்கோ தொட்டான், தொடச் செய்தான். கதையின் சுவாரஸ்யத்தில் அவளும் எதையும் பொருட்படுத்தாமல் இருந்தாள். திடுமென்று, கையில் இளஞ்சூட்டின் வழவழப்பு, குப்பென்று நாற்றம். கையை உதறு வதற்கும் கதை முடிவதற்கும் சரியாக இருக்க... முருகன் தன் வேட்டியில் அவள் கையைத் துடைத்தான். 'யார் கிட்டயும் எதுவும் சொல்லாம இருந்தா, நாளைக்கு இன்னும் பெரிய கதையா சொல்வேன்!’ என்றான் அடிக்குரலில்.

மறுநாள் விடிந்து பல் தேய்க்கும்போதும், சாப்பிடும்போதும், அந்த நாற்றம் கையிலிருந்து வீசுகிற மாதிரியே அவளுக்குத் தோன்றியது...

நல்லவேளையாக, அடுத்த நாள் முதல் என்ன காரணத்தாலோ அம்மா மறுபடியும் அவளைப் படுக்க முருகனோடு அனுப்பவேயில்லை. எதுவும் புரியாத அந்த வயசிலும் அவளுக்கு முருகனிடமிருந்து தள்ளியிருந்தது நிம்மதியாக இருக்க, நடந்ததை அதோடு முழுமையாக மறந்தேபோனாள்.

அவளுக்கு ஏழு வயசு. பள்ளிக்குத் தினமும் காரில்தான் சென்றுவருவாள். அம்மா கூடவந்து கொண்டுவிட்டு அழைத்துவருவாள்.

ஒருநாள் அம்மாவுக்கு நல்ல ஜுரம். பள்ளிக்கு அழைக்க வரவில்லை. காரை எடுத்துக்கொண்டு டிரைவர் மட்டும் வந்திருந்தான். 'பீச்சுக்குப் போலாமா, பாப்பா?’ என்று கேட்டுவிட்டு, கடற்கரைக்கு வண்டியைச் செலுத்தினான். தண்ணீரில் அளைவது அவளுக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனால், அம்மாவுக்குப் பிடிக்காது. 'ஜுரம் வந்துடும், வாண்டாம்’ என்று தடுத்துவிடுவாள். அன்று அவன் அவளைத் தண்ணீரில் உடை நனைய நனைய விளையாடவிட்டான். லேசாக இருட்டிக்கொண்டுவருகையில், ஒரு ஐஸ்க்ரீம் வாங்கி அவளிடம் தந்து சாப்பிடச் சொல்லிவிட்டு, காரை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் நிறுத்தினான். 'இங்க ரொம்ப ஈரமா இருக்கே? அங்க ரொம்ப நனைஞ்சிருக்கே?’ என்று சொல்லிக்கொண்டே கண்ட இடங்களில் தொட்டு... 'வீட்டுக்குப் போகணும்’ என்றவளிடம், 'சமத்தா இருந்தா, யாருக்கும் தெரியாம அப்பப்ப பீச்சுக்குக் கூட்டிட்டு வருவேன், ஐஸ்க்ரீம் வாங்கித்தருவேன்’ என்றபடி என்னென்னமோ செய்தான். ரொம்ப வலித்தது. அவள் அழத் துவங்க, 'யார்கிட்டயாச்சும் ஏதாச்சும் சொன்னீன்னா, அப்பால பீச்சுக்குக் கூட்டிட்டே வர மாட்டேன்!’ என்று மிரட்டிவிட்டு வண்டியைக் கிளப்பினான்.

அன்றிரவே அவளுக்குச் சரியான காய்ச்சல் கண்டுவிட்டது. டிரைவர் அதிகப்பிரசங்கித்தனமாக யாரிடமும் அனுமதி வாங்காமல் அவளை பீச்சுக்கு அழைத்துச் சென்றதோடு, தண்ணீரிலும் அளையவிட்டதுதான் காரணமென்று நினைத்த அப்பா, 'பாப்பாதாங்க தொந்தரவு பண்ணி போகச் சொல்லிச்சு’ என்று அவன் கூறியதைக் காதில் வாங்காமல், அன்றே அவனை வேலையைவிட்டு நிறுத்தினார்.

அவளுக்கு வயசு எட்டு. பள்ளி விடுமுறை. வழக்கத்துக்கு மாறாக, வீடு ஆள்நடமாட்டம் இல்லாமல் இருந்தது. இருந்த ஓரிரண்டு பெரியவர்களும், உணவு உண்ட களைப்பில் தூங்கச் சென்றுவிட்டனர். அவளுக்குப் போரடித்தது. ஊஞ்சலில் தனியாக அமர்ந்து ஆடிக்கொண்டிருக்கும்போது, குரு வந்தான். அப்பாவுக்கு உறவுப் பையன். டிகிரி முடித்துவிட்டு, அந்த வீட்டிலேயே தங்கி வேலை பார்த்துக்கொண்டிருந்தான். வந்தவனிடம், 'ஆபீஸ் இல்லியா, மாமா?’ என்றபோது, 'தலைவலி... லீவு சொல்லிட்டு வந்துட்டேன். எங்கே, ஆத்துல ஒருத்தரையும் காணும்?’ என்று கேட்டான். 'அப்பா - அம்மா காஞ்சீபுரத் துல துக்கம் கேக்கப் போயிருக்கா. சித்தி, மாமி உள்ள தூங்கறா...’ என்று பதில் சொன்னாள், ஊஞ்சலின் ஆட்டத்தை நிறுத்தாமலேயே.

ராட்சஸர்கள்

கண்களை இடுக்கிக்கொண்டு யோசித்தவன், சட்டென்று நிமிர்ந்தான். 'வெளிநாட்டு க்யூடெக்ஸ் வாங்கிவெச்சிருக்கேன்... வர்றியா, கை கால் நகத்துக்குப் போட்டுவிடறேன்?’ என்றான். நகப்பூச்சு ஆசையில் அவளும் குருவின் பின்னாலேயே போனாள். மாடியில் தன் படுக்கை அறைக்கு அழைத்துச் சென்றவன், கதவைச் சாத்தினான். 'சத்தம் போடாம இருந்தா போட்டுவிடு வேன்’ என்றவன், அலமாரியிலிருந்து பாலீஷை எடுத்து, 'எத்தன நாளா இப்படி ஒரு சந்தர்ப்பத்துக்குக் காத்துண்டிருக்கேன்!’ என்றவாறு அத்தனை விரல் நகங்களுக்கும் பூசிவிட்டான். 'கை, காலை அசைக்காம அப்படியே படுத்துக்கோ... இல்லாட்டா, ஈஷிக்கும்!’ என்றவன், ஒரு கையால் அவளை அழுந்தப் பிடித்துக்கொண்டு மேலே படர்ந்தான். 'நா போறேன்’ என்று முரண்டுபண்ணி, 'என்னை விட்டுடு’ என்று கெஞ்சியபோது, சத்தம் வெளியே வராமலிருக்க அவள் வாயைப் பொத்தினான். மூச்சுத் திணறியது. அடிவயிற்றைப் பிரட்டியது. அவன் எதையும் லட்சியம் பண்ணாமல், 'மொரண்டு பண்ணினா, கழுத்தை நெரிச்சுடுவேன்!’ என்று அதட்டினான். அதோடு நிற்காமல், 'பெரியவாகிட்ட ஏதாவது சொன்னீன்னா, 'மாமா, உங்க பொண்ணுதான் மோசமானவ... நா குளிக்கறச்சே, டிரெஸ் பண்ணிக்கறச்சே வந்து எட்டிப்பாக்கறா’னு சொல்லிடுவேன்! அப்பறம் உன் பாடுதான் கஷ்டம்!’ என்றும் பயமுறுத்தினான். ரொம்ப வலித்தது. பீறிட்டுக்கொண்டு அழுகை வந்தது. பயமா கவும் இருந்தது. திமிறிக்கொண்டு எழுந்தவள், 'என்னை விட்டுடு... விட்டுடு...’ என்று அழுதபடியே வேகமாக வெளியே ஓடினாள்.

அதன் பிறகு, பல இரவுகள் தூக்கத்தில் சட்டென்று விழிப்பு வரும். வயிற்றைக் குமட்டும். அழுகை வரும். ரொம்ப ரொம்பப் பயமாக இருக்கும். யாரிடமும் எதுவும் சொல்லத் தெரியாமல், தலகாணியில் முகத்தைப் பதித்துக்கொண்டு சத்தமில்லாமல் அழுவாள்.

அவளுக்கு வயசு பதினெட்டு. திருமணமாகி, அன்று முதலிரவு. மாலையிலிருந்தே விவரிக்க இயலாத சங்கடம். அறைக்குள் பால் செம்புடன் நுழைந்தபோது, கைகள் நடுங்கின. உள்ளங்கையில் வியர்த்தது. எதையும் கவனிக்காமல் அவள் கணவன் முரட்டுத்தன மாக அவளை இழுத்து வாயில் முத்தமிட்டு, உதட்டைக் கடித்தபோது, உதட்டில் ரத்தம் கசிந்து, மூச்சை அடைத்தது. அவன் அவளை முழுமையாக ஆக்கிரமித்தான். கொஞ்ச நேரம் சென்றதும், அதே இளஞ்சூட்டு வழவழப்பு, அதே நாற்றம் நெஞ்சில் அறைய... என்ன செய்கிறோம் என்று புரியாமல், 'ஆ... ஆ...’ என்று உரக்கக் கத்தினாள். மயக்கமடைந்து, மரக்கட்டை மாதிரி விழுந்துவிட்டாள். அன்று மட்டும் அல்ல, அடுத்து வந்த நாட்களிலும் அதே அவலம் தொடர்ந்தது. ஒரு மாசம் போவதற்குள், அப்பாவுக்கு ஆள் அனுப்பி, 'உங்க பொண்ணு பைத்தியம்... வியாதிக்காரிய எங்க தலைல கட்டிட்டேள்! இவ இனிமே இங்க இருக்க வாண்டாம்!’ என்று பிறந்த வீட்டுக்கே அனுப்பிவிட்டார்கள்.

அன்றிலிருந்து, அப்பா-அம்மாதான் அவளுக்கு உலகம். அவர்களுக்குப் பிறகு, அண்ணா, அவன் குடும்பம். முக்கியமாக, அவனது இரண்டு பெண்கள்.

''அத்தே, நா கிளம்பறேன். நாலு நாள் கழிச்சு வந்து உங்ககூடவே ஒருநாள் முழுக்க இருக்கேன்... சரியா?''

அத்தையை கமலி அணைத்துக்கொண்டாள். அருகில் நின்றிருந்த பூரணி, ''குழந்தைய எங்காத்துல விட்டுட்டுப் போன்னா, கேக்க மாட்டேங்கறே...'' என்றாள் ஏமாற்றத்துடன்.

''அதான் சொன்னேனே பூரணி, மாமியாராத்துல சமையக்காரன், டிரைவர், அஷோக் எல்லாரும் இருக்கா... அவா லவிய நன்னா பாத்துப்பா... கவலைப்படாதே! ஊருக்குப் போயிட்டு வந்து இங்க உங்ககூட கண்டிப்பா ஒரு நாள் தங்கறேன்... இப்ப கிளம்பட்டா?''

திரும்பி நடந்தவளின் கையை அத்தை சட்டென்று எட்டி, பதற்றத்துடன் கெட்டியாகப் பிடித்தார்.

''வாண்டாண்டீ... அவாள்லாம் ராட்சஸா... கொழந்தைய பிச்சுப்பிச்சுப் போட்டுடுவா! அவ வாழ்க்கையே நாசமாயிடுண்டீ!'' என்றார் சின்னக் குரலில்... ஆனால், தெளிவாக!