Published:Updated:

காட்டில் ஒரு பாலம் !

சூ.ஜூலியட் மரியலில்லி சூர்யா

காட்டில் ஒரு பாலம் !

சூ.ஜூலியட் மரியலில்லி சூர்யா

Published:Updated:
##~##

அது ஒரு பெரிய காடு. அந்தக் காட்டின் நடுவே ஓர் ஆறு ஓடிக்கொண்டிருந்தது. மழைக் காலத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும்போது, விலங்குகளால் அந்த ஆற்றைக் கடக்க முடியவில்லை. எனவே, எல்லா விலங்குகளும் ஒன்றுசேர்ந்து, ஆற்றின் குறுக்கே ஒரு பாலத்தைக் கட்ட முடிவுசெய்தன.

''அதை எப்படிச் செய்யப்போகிறோம்?'' என்று கேட்டது கரடி. ஆற்றைத் தாண்டிய காட்டுப் பகுதியில் நிறைய மரங்களில் தேனடைகள் இருக்கின்றன. எனவே, ஆற்றைத் தாண்ட பாலம் இருந்தால் நல்லது என்று கரடி எண்ணியது.

புலி தீவிரமாக யோசித்து, ''இந்தக் காட்டின் பொருளாளர் என்கிற முறையில் சொல்கிறேன். பாலம் கட்ட நிறைய மரங்கள், கற்கள் தேவை. எல்லா விலங்குகளும் மரக்கட்டைகளைக் கொண்டுவந்தால் வேலை நடக்கும்'' என்றது.

''அதுவும் சரிதான். இந்தப் பொறுப்பை யானைகிட்டே ஒப்படைக்கிறேன். எல்லோரும் இன்னியிலேர்ந்து யானை என்ன சொல்லுதோ, அதன்படி செய்யணும்'' என்று கட்டளையிட்டது சிங்கம்.

யானை எழுந்து எல்லோரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, ''ஒவ்வொரு விலங்கும் ஒரு மரக்கட்டையும் ஒரு கல்லும் கொண்டுவந்து ஆற்றோரம் போடணும். தேவையான கல்லும் கட்டையும் சேர்ந்ததும் பாலம் கட்டலாம். இன்னியிலேர்ந்து மூணு நாளுக்குள்ளே கல், கட்டையைக் கொண்டாந்து போட்டுட்டு கையெழுத்துப் போடணும். இந்த வேலையைச் செய்யாதவங்களுக்குக் கடுமையான தண்டனை கிடைக்கும்'' என்றது. இதைச் சிங்கமும் ஆமோதிக்க, கூட்டம் கலைந்தது.

இந்தத் தீர்மானம் சோம்பேறி நரிக்கு மட்டும் பிடிக்கவேயில்லை. 'யார் கல், கட்டை சுமப்பது? இன்னும் மூன்று நாள் இருக்கிறதே... பார்த்துக்கொள்ளலாம்’ என்று அசட்டையாக இருந்தது.

காட்டில் ஒரு பாலம் !

முதல் நாளே காட்டில் உள்ள பாதி விலங்குகள் கட்டைகளையும் கற்களையும் கொண்டுவந்து அடுக்கிவிட்டன. யானை கவனமாக அவற்றிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டது. இரண்டாம் நாள் ஆற்றங்கரையில் கற்களும், கட்டைகளும் மலைபோல் குவிந்தன.

நரிக்கு லேசாகப் பயம்வந்தது. 'கடைசியில் சிங்கம் எல்லோரின் கையெழுத்தையும் செக் பண்ணினால், தான் மாட்டிக்கொள்வோமே’ என நினைத்தது.

மூன்றாம் நாள், நரி என்ன செய்வதென்று யோசனையோடு மரத்தடியில் அமர்ந்தது. வயதான மான் ஒன்றும் சிரமப்பட்டு கல்லைத் தூக்கிக்கொண்டு போவதைப் பார்த்தது. 'மரத்தில் ஏறி ஒரு கிளையை வெட்டுவதென்றால் சும்மாவா? ஒரு பெரிய கல்லைத் தேடி எடுத்து, தூக்கிச் செல்வது சாதாரண வேலையா?’ என நினைத்தது.

அப்போது, ஒரு குரங்கு கையில் கத்தியுடன் அங்கே வந்தது. ''ஏய்... இங்கே என்ன பண்ணப்போறே?'' என்று கேட்டது நரி.

''ரெண்டு நாளா நான் ஊரில் இல்லை. சொந்தக்காரங்க விசேஷத்துக்குப் போயிருந்தேன். இன்னிக்குக் கடைசி நாளாச்சே. அதான் கட்டை வெட்ட வந்திருக்கேன்'' என்றபடி ஒரு கருவேலம் கிளையைப் பார்த்து வெட்டத் துவங்கியது.

''எல்லாருமே ஆஜர் கொடுத்தாச்சா?'' சந்தேகத்துடன் கேட்டது நரி.

காட்டில் ஒரு பாலம் !

''யானைதான் என்னைக் கூப்பிட்டுச் சொன்னது. இன்னும் ரெண்டு பேருதான் வரலைனு. அதான் அவசர அவசரமா மரம் வெட்டுறேன்'' - குரங்கு சொன்னதும் நரிக்கு அந்த இன்னொரு நபர் தான்தான் என்று தெளிவாகப் புரிந்துவிட்டது.

கிளையை வெட்டி, வசதியான கட்டையாக செதுக்கிப் போட்ட குரங்கு, பிறகு எங்கிருந்தோ ஒரு கல்லையும் புரட்டிவந்து, அருகே போட்டுவிட்டுக் களைப்புடன் கல்லின் மீது உட்கார்ந்துகொண்டது.

''ரொம்பக் களைச்சுட்டியே... வேணும்னா கொஞ்சநேரம் படுத்துக்கோ'' - பரிவோடு சொன்னது நரி.

''வேணாம்... இதையெல்லாம் யானைகிட்டே கொண்டுசேர்க்கணும்'' என்றது குரங்கு.

''அட... இதை நான் செய்ய மாட்டேனா? நீ ஓய்வெடு. நான் யானைகிட்டே ரெண்டையும் ஒப்படைக்கிறேன். நீ பொறுமையா வந்து கையெழுத்துப் போடு'' என்றது.

''ஆமா, நீ கட்டையும் கல்லும் கொடுத்துட்டியா?'' என்று சந்தேகத்துடன் கேட்டது குரங்கு.

''முதல் நாளே... முதல் ஆளாக் கொடுத்ததே நான்தான். பாவம், நீ கஷ்டப்படுறியேனு உதவ நினைச்சேன். எனக்கென்ன, நான் கிளம்புறேன்'' என்று கிளம்ப முற்பட்டது நரி.

''இரு... இரு... உன்னை நம்புறேன்'' என்றது குரங்கு.

''சரி, நான் கல்லைத் தூக்கிட்டுப்போறேன். திரும்பி வரும்வரைக்கும் ஓய்வெடு'' என்ற நரி கல்லுடன் கிளம்பவும், குரங்கு படுத்துக்கொண்டது. அசதியில் உடனே தூங்கியும்விட்டது.

நரி ஜோராக யானையிடம் சென்று கல்லைப் போட்டது. ''அப்பாடா... யானையாரே நோட்டைக்கொடு, கையெழுத்துப் போடுறேன்'' என்றது.

''கட்டையையும் கொண்டுவா, பிறகு போடலாம்'' என்றது யானை.

நரி மீண்டும் திரும்பியது. தூங்கிக்கொண்டிருந்த குரங்கைத் தொந்தரவு செய்யாமல், கட்டையைக் கிளப்பிக்கொண்டு தூக்க முடியாமல் தூக்கிவந்தது. ''ச்சே... சின்னக் கட்டையாக வெட்டியிருக்கக் கூடாதா அந்தக் குரங்கு'' என்று முணுமுணுத்தவாறு யானையிடம் வந்தது. ''என் வேலை முடிஞ்சுது. நோட்டு எங்கே?''

''இன்னும் அந்தக் குரங்கு மட்டும்தான் பாக்கி'' என்றபடி நோட்டைத் தள்ளியது யானை.

''அட... நான் கஷ்டப்பட்டு மரம்வெட்டிகிட்டு இருக்கேன். அந்தக் குரங்கு மரத்தடியில் தூங்குது'' என்று போட்டுக்கொடுத்தது நரி.

''அப்படியா? நாளைக்கு சிங்கத்துக்கிட்டே சொல்றேன்'' என்றது யானை.

மறுநாள் காலை. எல்லா விலங்குகளும் ஒன்றுசேர்ந்தன.

''எல்லாரும் சரியா வேலை செஞ்சாங் களா? யாராவது வேலை செய்யாமல் இருக்காங்களா?'' என்று சிங்கம் விசாரித்தது.

யானை நோட்டை எடுத்துக்கொடுத்து, ''நரியைத் தவிர எல்லார் பேரும் இருக்கு'' என்றது.

நரிக்குத் தலையில் இடி விழுந்தாற்போல் ஆகிவிட்டது. ''என்ன உளர்றீங்க யானையாரே? நல்லாப் பாருங்க. கடைசியா எம் பேருதான் இருக்கும்'' என்று படபடத்தது.

''நீயே பாரு... குரங்குதான் கடைசிப் பேரு'' - நோட்டைக் காட்டியது யானை.

அதைப் பார்த்த நரிக்கு உலகமே சுற்றியது. குரங்கின் நினைவாகவே இருந்த நரி, தன் கையால் நோட்டுப் புத்தகத்தில் குரங்கு என்று எழுதியிருந்தது. ''யானையாரே... நீங்கதான் பார்த்தீங்களே. நான் கல்லும் கட்டையும் கொண்டுவந்து போட்டேனே'' என்று அழாத குறையாகச் சொன்னது குரங்கு.

''இதென்ன குழப்பம்? யானையே... உண்மையிலேயே கல்லும் கட்டையும் கொண்டுவந்து போட்டது யாரு?'' என்று கர்ஜித்தது சிங்கம்.

''தலைவரே... கொண்டுவந்தது நரின்னே வெச்சுக்கிட்டாலும் அதைக் கஷ்டப்பட்டுச் சேகரம் பண்ணியது குரங்குதான்'' என்றது யானை.

''ஐயோ! நான்தான் கொண்டுவந்தேன்... நம்புங்க'' என்று நரி பதறியது.

''அப்படின்னா நீ கொண்டுவந்த கல்லும் கட்டையும் நீ போட்ட இடத்திலேயே கிடக்கு. எடுத்துக்கொடு'' என்றது யானை.

நரிக்குத் தலை சுற்றியது. 'இந்தக் குவியலில் எப்படிக் கண்டுபிடிப்பது? எல்லாக் கல்லும் ஒரே மாதிரி இருக்கு.’

குரங்கு முன்னால் வந்தது. ''தலைவரே, நான் எடுக்கிறேன். இதோ வெள்ளைக் கல் பாறை. ஒரு மூலையில் மொக்கையா இருக்கும். இதைக் குன்றின் மேலிருந்து எடுத்தேன். இதோ நான் வெட்டின மரக்கட்டை. கருவேல மரத்தில் வெட்டினேன். கட்டையில் குரங்குனு பேர் வெட்டியிருக்கேன் பாருங்க. உதவி செய்றேன்னு நரி என்னை ஏமாத்திக் கொண்டுவந்துருச்சு'' என்றது குரங்கு.

''பார்த்தீங்களா... எப்படி ஏமாத்தினாலும் கடைசியில் உண்மையான உழைப்பு காட்டிக்கொடுத்திருச்சு'' என்றது யானை.

பாலம் விரைவில் கட்டப்பட்டது. எல்லா விலங்குகளும் சிரமம் இன்றி அதில் நடந்து சென்றன. ஆனால், நரிதான் எங்கோ ஓடிவிட்டது.