Published:Updated:

ஒரு காபி குடிக்கலாமா?

பட்டுக்கோட்டை பிரபாகர், ஓவியங்கள்: ம.செ.,நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு...

ஒரு காபி குடிக்கலாமா?

பட்டுக்கோட்டை பிரபாகர், ஓவியங்கள்: ம.செ.,நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு...

Published:Updated:
##~##

ழையின் தடயம் சாலையில் இருந்தது. ஈரம் காற்றில் இருந் தது. நடப்பது சுகமாக இருந்தாலும் ஷூவை சகதிக் குளியலி லிருந்து காப்பாற்ற சாகசம் செய்ய வேண்டியிருந்தது. ஒரு சைக்கிளை நகர்த்திவைத்து, மாட்டை செல்ல மாகத் தட்டி, கோலத்தை மிதிக்காமல் தாண்டி, குப்பைக் குவியலுக்குப் பதுங்கிப் பதுங்கி, அக்கா வீட்டை நெருங்கும் வரை ஒலித்த போனை எடுத்துப்பார்க்கத் தோதுப்பட வில்லை.

முதுகிலிருந்து பேக்கைக் கழற்றி திண் ணையில் வைத்துவிட்டு, போனை எடுத்துப் பார்த்தால்... ஸ்வேதா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அழைத்தேன்.

''அக்கா என்ன சொன்னாங்க ராஜ்?''

''இரு... இரு... ஜஸ்ட் இப்பதான் அக்கா வீட்டு வாசல்ல வந்து நிக்கிறேன். பஸ், மூணு மணி நேரம் லேட். அப்புறமா கூப்புடறேன்!''

பேச்சுக் குரல் கேட்டு அழைப்பு மணிக்கு அவசியம் இல்லாமல் கதவைத் திறந்த அக்கா, ''வாடா...'' என்று பேக்கை எடுத்துக் கொண்டாள்.

சாய்வு நாற்காலியில் அமர்ந்து டி.வி. பார்த்தபடி, விளம்பர இடைவேளையில் பேப்பர் படித்தபடி அக்காவின் மாமனார் நிமிர்ந்து, ''என்னப்பா ராஜேந்திரா, வழியில மழையா? பஸ் பிரேக்டவுனாமே...'' என்றார்.

ஒரு காபி குடிக்கலாமா?

இரண்டில் எந்தக் கேள்விக்கு முதலில் பதில் சொல்வது?

''ஆமா மாமா...'' என்றேன் ஷூ, சாக்ஸைக் கழற்றியபடி.

''எல்லா ஊர்லயும் மழை பெஞ்சாலும் உங்க சென்னையில மட்டும் மழையே பெய்ய மாட்டேங்குதே, ஏன்?''

''ரமணன் சாரைத்தான் கேட்கணும்.''

''பாவம் செய்றவங்க நிறையப் பேர் சென்னைலதான் இருக்காங்க'' ஜோக்காக நினைத்துச் சொல்லி, அவரே சிரித்துக் கொண்டார்.

'எல்லா ஊர்ல இருந்தும் வந்தவங்கதான் மாமா இப்ப சென்னையில அதிகமா இருக்காங்க’ என்று சொல்வதை விட அசட்டுத்தனமாகச் சிரிப்பதுதான், அக்காவுக்கு நல்லதுஎன்பதால் சிரித்தேன்.

''அப்புறம் குளிக்கலாம். பசியா இருப்பே. பல்லு மட்டும் தேச்சிட்டு வந்து டிபன் சாப் பிடு...'' என்ற அக்காவுக்காகத் தான் வந்து போகிறேன்.

''மாமா ஆபீஸ் போய்ட்டாராக்கா?''

''ஆபீஸ் விஷயமா திருவாரூர் போயிருக்கார். வர, ரெண்டு நாளாகும். உன்னைப் பாத்துட்டுதான்ஸ்கூலுக் குப் போவோம்னு ரெண்டு பசங்களும் அடம்பிடிச் சாங்க. சமாதானப்படுத்தி அனுப்பிவெச்சேன். தங்குறீல்ல?''

''இல்லக்கா. நைட்டு பஸ்ஸுக்கு டிக்கெட் வாங்கிருக்கேன். திட்டாதக்கா, ஆபீஸ்ல ரொம்ப பிரஷர்... முறைக்காதே!''

''பிரஷர், ஆபீஸ்ல இல்ல. உன் மைண்ட்லதான் இருக்கு.''

ஆனாலும் நான் குளித்துவிட்டே தோசை சாப்பிட்டேன். கண் கலங்கினேன்.

''வீட்டு தோசை சாப்பிட்டு ரொம்ப நாளாச் சிக்கா. இந்த டேஸ்ட் அப்படியே அம்மா செய்ற மாதிரியே...'' குரல் அடைத்து மிச்ச வார்த்தைகளை விழுங்கிவிட... உணர்வுகள் அக்காவையும் தொற்றி, என் தலையைத் தடவி, ''சாப்பிடுறா...'' என்றாள், ''இதுக்குத்தானே கல்யாணம் பண்ணிக் கச் சொல்றோம்?''

''அப்ப ரெண்டு பேருக்கும் ஹோட்டல்ல ஆர்டர் பண்ணணும். இல்ல இன்ஸ்டன்ட் மாவு வாங்கி ஊத்திக்கணும். ஃப்ரெண்ட்ஸ் வீட்லல் லாம் இப்படித்தான் நடக்குது.''

''உங்க சாஃப்ட்வேர் பசங்களோட லைஃப் ஸ்டைலே புரியலைடா. நல்லா சம்பாதிக்கிறீங்க. நல்லா செலவு பண்றீங்க. சந்தோஷமா இருக்கீங் களானுதான் தெரியல. இல்ல... சந்தோஷம்னா என்னன்னு உங்களுக்குத் தெரியல.''

''அக்கா... அக்கா... எல்லா டாக் ஷோஸ்லயும் எங்களை ரவுண்டு கட்டி அடிக்கிறது பத்தாதா? நீயுமா? அநாதை இல்லத்துக்குப் போய் சர்வீஸ் பண்றோம். ப்ளட் டொனேட் பண்றோம். கிரா மத்தைத் தத்து எடுக்குறோம். ஜெனரலைஸ் செய்யாதேக்கா... எல்லாரும் அப்படி இல்ல'' என்று கை கழுவ எழுந்தேன்.

துவைத்த பனியன், ஜட்டியை மொட்டை மாடியில் காயப்போட்டுவிட்டு எல்லாப் பக்கங் களிலும் தெரிந்த கோயில் கோபுரங்களைப் பார்த்தபடி நின்றேன். காபியை ஆற்றியபடி அக்கா வந்தாள்.

''ஏன்க்கா... நான் கீழ வர மாட்டேனா?''

''பரவாயில்லடா... இந்தா. இளைச்சிட் டேடா... கொஞ்சம் கறுத்தும்போய்ட்டே.''

''சோழிங்கநல்லூர்ல ஆபீஸ். நங்கநல்லூர்ல ரூம். தினம் பைக்ல போய்ட்டு வர்றேன்.ஃபேஸ் க்ரீம், எல்லாம் விளம்பரத்துல மட்டும்தான் வேலை செய்யுது.''

''யார்றா ஸ்வேதா?''

''அக்கா!'' என்றேன் ஆச்சர்யமாக.

ஒரு காபி குடிக்கலாமா?

''உன் செல்போன் அடிச்சுது. எடுக்கறதுக்குள்ளே நின்னுடுச்சு. ஸ்வேதா காலிங்னுபார்த் ததால கேட்டேன்.''

''அக்கா... ஆக்சுவலா அவளைப் பத்திப் பேசத்தான் உன்கிட்டே நான் வந்தேன்.''

''லவ்வா? நானும் அவரும் வந்து அவங்க வீட்ல பேசணுமா? எப்ப வரணும்னு சொல்லு.''

''அய்யோ! ரொம்ப ஷார்ப்க்கா நீ. முதல்ல நீ அவளைப் பாத்துப் பேசணும். நீ ஓ.கே. சொன்னாதான் அடுத்த ஸ்டெப்.''

''சும்மா கிரீடம் வைக்காதே. என்னைக் கேட்டுதான் லவ்வை சொன்னியா?''

''அதுக்கா... வந்து... எனக்கு உன் ஒப்பீனியன் ரொம்ப முக்கியம்.''

''காபி குடி. இங்க வேணாம். கோயிலுக்குப் போய்ப் பேசலாம்'' என்றாள் அக்கா.

சாரங்கபாணி கோயிலில் பகல் நேரம் என்பதால் கூட்டம் அதிகம் இல்லை. சுவாமி தரிசனம் முடித்து, பிராகாரத்தில் சௌகர் யமாக கருங்கல் படிக்கட்டு ஒன்றில் அமர்ந்து கொண்டோம்.

''குருக்கள் சிரிச்சாரே. இந்தக் கோயிலுக்கு அடிக்கடி வருவியாக்கா?''

''மனசு கஷ்டமா இருக்கிறப்பல்லாம் வரு வேன்.''

''உனக்கு என்னக்கா பிரச்னை?''

''அது இருக்கு ஆயிரம். வீட்டை புரமோட்டருக்கு வித்து, ஃபிளாட்ஸ் கட்டி நமக்கு ஒரு ஃபிளாட் எடுத்துக்கலாம். மிச்சப் பணத்தை பேங்க்ல போடலாம்னுசொல்றார் அவர். 'என் காலத்துக்கு அப்புறம் எது வேணாலும் பண்ணிக்கோ, அது வரைக்கும் விக்கக் கூடாது’ங்கிறாரு மாமனாரு. கால்குலேஷனுக்கும் சென்ட்டிமென்ட்டுக்கும் நடுவுல நான் மாட்டிக்கிட்டுத் தவிக்கிறேன்.''

''மாமா சொல்றதுதான் ரைட்டு. ரெண்டு பொண்ணுங்க வெச்சிருக்கே. மாமா சம்பளம் மட்டும் எப்படிப் போதும்? பிராக்டிக்கலா யோசிக்க வேணாமா? என்ன சென்ட்டிமென்ட் வேண்டிக்கெடக்கு!''

''இந்தியா - பாகிஸ்தான் உறவு மாதிரி எப்ப வும் வீடு டென்ஷன்லயே இருக்கு. இப்போதைக்கு முடிவுக்கு வராது. அதை விடு. ஸ்வேதா பத்திச் சொல்லு. கூட வேலை பாக்கறவளா?''

''ஆமாக்கா... பாரு.''

மொபைலில் இருந்த ஸ்வேதாவின் புகைப் படங்களைக் காட்டினேன். ஒரு போட்டோவை அவசரமாக நகர்த்தினேன்.

''பாத்துட்டேன். ஒண்ணா ஸ்விம் பண்ற அளவுக்குப் போயாச்சா?''

''இல்லக்கா. அது, ஒரு பிக்னிக் போனப்போ...''

''அழகா இருக்காடா. எந்த ஊரு?''

''பெங்களூர் பொண்ணு. அப்பா, அம்மா ரெண்டு பேரும் டாக்டர்ஸ். ஒரே  பொண்ணு. வொர்க்கிங் விமன்ஸ் ஹாஸ்டல்ல தங்கியிருக்கா. கார் இருக்கு. ஒரு ஃபிளாட் வாங்கி வாடகைக்கு விட்டிருக்கா. மேரேஜ் ஆச்சுன்னா, அங்க மூவ் பண்ணலாம்னு சொல்றா. வெரி இன்டலிஜென்ட். நல்லாப் பழகுவா. ஃபேஸ்புக்ல நிறைய ஃப்ரெண்ட்ஸ். பிளாக்ல கட்டுரைகள் எழுதுறா. அவளோட வெளிப்படையாப் பேசுற குணம்தான், என்னை முதல்ல அட்ராக்ட் பண்ணிச்சிக்கா.''

''அவங்க அப்பா அம்மாவுக்குத் தெரியுமா? அவங்க என்ன சொல்றாங்க?''

''அது... வந்து... அவ இப்போ பேரன்ட்ஸோட பேசறது இல்லைக்கா. அவங்க பெர்மிஷன் அவசியம் இல்லை. மேரேஜுக்குக்கூட அவங்க வர மாட்டாங்க.''

''அடப்பாவி! பெத்தவங்களோட அப்படி என்னடா சண்டை?''

''டிஃபரன்ஸ் ஆஃப் ஒப்பீனியன். அக்கா... ஸ்வேதா ஒரு டைவர்ஸி.''

''என்னடா சொல்றே?''

''பேரன்ட்ஸ் பாத்து செஞ்சுவெச்ச கல்யாணம். திலீபுக்கும் ஸ்வேதாவுக்கும் செட் ஆகலை.அவங்களுக்குள்ள பேசி முடிவெடுத்து... லீகலா பிரிஞ்சிட்டாங்க. டைவர்ஸ்ல, இவ பேரன்ட் ஸுக்கு சம்மதம் இல்லை. இது... அவ சுதந்திரத் துக்குக் கொடுத்த விலை.''

அக்கா, முழங்கால்களைக் கட்டிக்கொண்டு என்னை ஆழமாகப் பார்த்தாள்.

ஒரு காபி குடிக்கலாமா?

''நீ எப்படி அவளை லவ் பண்ணே?''

''ஒரே ஆபீஸ். ஒரே பேட்ச். அவள் குணம் முதல்ல பிடிச்சது. அவளோட அழகும்தான். அவள் ஒருநாள் லீவு போட்டா, மனசு கெடந்து தவிச்சது. அவள் புன்னகைக்கு எங்கிட்ட நிறைய ரியாக்ஷன். கை குலுக்கறப்ப அலுவல் தொடர்பு மீறி வேற ஒரு நெருக்கம் ஃபீல் பண் ணேன். ஒரு காபிக்குக் கூப்புட்டேன். வந்தா. பட்டுனு சொல்லிட்டேன். ரெண்டு நாள்ல யோசிச்சு சொல்றேனு சொன்னா. ரெண்டுநாள் கழிச்சு அதே காபி ஷாப். அப்பதான், 'தான் ஒரு டைவர்ஸி’னு என்கிட்டே சொன்னா. எனக்கு ஷாக்தான். ஆனா, அவள் மேற்கொண்டு சொன்ன தகவலெல்லாம் அந்த அதிர்ச்சியை எதுவும் இல்லாமப் பண்ணிருச்சு. அன்னைக்கு ரெண்டு பேரும் என்ன பேசிக்கிட்டோம்னா...''

ந்து நிமிடங்களுக்கு மேல் தீவிரமாக காபியை ஒரு கப் குடிப்பதும், ஒருவர் முகத்தை ஒருவர் பார்ப்பதுமாக இருந்தோம்.

''திலீப் மேல எனக்குக் கோபமில்லை ராஜ். பேரன்ட்ஸ் மட்டும்தான் அவன் உலகம். அவ னுக்கு அவங்க மனசு காயப்பட்டுடக் கூடாது. எனக்கு என் மனசு காயப்படக் கூடாது. யாராச் சும் ஒருத்தர் காம்பரமைஸ் பண்ணிக்கணும். அவங்களால முடியல. என்னாலயும் முடியலை'' என்ற ஸ்வேதா தன் நகங்களைப் பார்த்துக்கொண்டாள்.

''ஸ்வேதா... என்ன பிரச்னைனு நான் கேக்க மாட்டேன். நீ விலகினதுக்கு நியாயமான கார ணம் இருக்கும்னு தெரியும். அதனால, எனக்கு நீ எந்த விளக்கமும்...''

''இல்ல ராஜ்... உனக்குத் தெரியணும். நான் டிரான்ஸ்பரன்ட்டா இருக்க விரும்பறேன். இதுக்கு முன்னாடி நான் வேலை பார்த்த இடத்துல, எனக்கு பதவி உயர்வோட ஆஸ்திரேலியா போறதுக்கு ஒரு வாய்ப்பு வந்துச்சு. நான் ஏங்கின நல்ல வாய்ப்பு. அந்த நேரம் பாத்து நான் கர்ப்பமாகிட்டேன். திலீப்கிட்டே பேசி னேன். கலைச்சுடுறேன்னு சொன்னேன். முதல்ல அவனுக்குப் பிடிக்கலை. அப்புறம் புரிஞ்சிக்கிட்டு ஓ.கே. சொல்லிட்டான். ஆனா, அவன் அப்பா-  அம்மா சம்மதிக்கவே இல்லை. நூறு காரணம் சொன்னாங்க. என் கேரியர் முக்கியம்னு சொன்னா, அவங்களால புரிஞ்சுக்க முடியல. தீலீப் ஒரு வாரம் ஊர்ல இல்லை. நானே ஹாஸ்பிட்டல் போய் டெர்மினேட் பண்ணிட்டேன். ஊர்லேர்ந்து வந்து, குதிச்சான். 'உனக்கு ஓ.கே-ன்னுதானே சொன்னே... இது நம்ம வாழ்க்கை. அதை உன் அப்பா, அம்மா டிசைட் பண்ணக் கூடாது’னு  சொன்னேன்!''

''அப்புறம்?''

''தினமும் திகட்டத் திகட்ட விவாதங்கள், ஈகோ க்ளாஷ். வேலையை விடு. ஆஸ்திரேலியா போகக் கூடாதுனு அபத்தமான நிபந்தனைகள்.  நான் கர்ப்பத்தைக் கலைச்சிக்கிட்டதே அதுக்குத் தானே... அந்த வாய்ப்பை எப்படி நான் விட முடியும்? என் அப்பா, அம்மாகிட்ட சொன்னா, அவங்களும் என் மேலதான் கோபப்பட்டாங்க. டைவர்ஸுக்கு அப்ளை பண்ணிட்டு ஆஸ்திரேலியா போயிட்டேன். திரும்பி வந்ததும் தீர்ப்பு கிடைச்சது. இந்த கம்பெனியில நல்ல ஆஃபர் குடுத்தாங்க. ஏதோ கொஞ்சம் அதிர்ஷ்டம் இருக்கு எனக்கு.''

''ஏன்?''

''இங்க வந்ததாலதானே உன்னை சந்திச்சேன். எனக்கு உன்னைப் பிடிக்கும் ராஜ். நீ புரப்போஸ் பண்ணுவேன்னு எதிர்பார்த்தேன். எனக்கு ஓ.கே. நீ உன் காதலை மறுபரிசீலனை செய்யலாம். பந்து இப்ப உன் கோர்ட்ல!''

''ஸ்வேதா... இதான் உன் ஸ்பெஷாலிட்டி. கோபம்னா... கோபம்;வெறுப்புன்னா... வெறுப்பு; காதல்னா காதல்! கண்ணாடி மாதிரி அப்பட்டமா உள் உணர்வுகளை வெளிப்படுத்துற. உன்கிட்ட ரெண்டு பெர்சன்ட்கூட வேஷம் இல்ல. என் லவ்வுல எந்த மாற்றமும் இல்ல. கும்பகோணத்துல என் அக்கா இருக்கா. அவதான் எனக்கு எல்லாம். அவ சம்மதம் எனக்கு முக்கியம்.''

''வெல். போய்ட்டு வா. அவங்க ஓ.கே. சொல்லலைன்னா, உன் காதலை ரப்பர் வெச்சி அழிச்சிடுவே... ரைட்?''

''இல்லை! என் லவ் பென்சில் ஆர்ட்டீன் இல்லை. கல்லுல செதுக்கின சிற்பம்!''

''மை காட்! கவிதையா? சிற்பம்னா, அப்போ உளி வெச்சுதான் உடைக்கணுமா?''

''ஏன் இப்படி நெகட்டிவாப் பேசறே? அக்கா சொன்னா, எனக்கு யானை பலம்!''

''இப்ப நோஞ்சானா இருக்கேல்ல?''

ஒரு காபி குடிக்கலாமா?

''ஸ்வேதா... ப்ளீஸ்.''

''ஏய்... சும்மா கலாய்ச்சேன். அக்காவைப் பாத்துட்டு வந்தே முடிவு சொல்லு. நீ 'சரி’ சொன்னா, காதலிக்கலாம். 'வேண்டாம்’ சொன்னா, காதலிக்க வேண்டாம். அவ்வளவுதானே!''

''உன்னால அவ்வளவு சிம்பிளா எடுத்துக்க முடியுமா?''

''நீ கிடைக்கலைன்னா, கொஞ்சம் வருத்தமாதான் இருக்கும். ஆனா, கடல்ல குதிக்க மாட்டேன். வேற வேலைக்கு மாறவும் மாட்டேன். ஒரு வாரத்துல அந்த ஏமாற்றத்துல இருந்து வெளியே வந்துடுவேன். அதேசமயம் இந்த ஆண்கள் எல்லாருமே சுத்த மோசம்னு பச்சை குத்துற பைத்தியக்காரத்தனமும் செய்ய மாட்டேன்.''

''ஏன் இப்படிலாம் பேசறே? நெகட்டிவா எந்த முடிவும் எடுக்கலையே!''

''பாசிட்டிவாவும் எடுக்கலையே... ரெண்டு நாளைக்கு முன்னாடி உன் காதல் அத்தியாயத்துல உன் அக்கா வரலையே. உன் தயக்கம் ரொம்ப நியாயம் ராஜ். வேணும்னா உனக்கு ஒரு சாய்ஸ் தரட்டுமா? நாம கொஞ்ச  நாள் 'லிவ்விங் டு கெதரா’ இருக்கலாமா? சரியா வரலைனா, கை குலுக்கிட்டுப் பிரிஞ்சிடுவோம். என்ன சொல்ற?''

கன்னத்தில் கை வைத்து வியந்து பார்த்தேன் அவளை!

ன்னத்தில் கைவைத்து வியந்து என்னைப் பார்த்துக்கொண்டிருந்தாள் அக்கா.

''இப்படிலாமா ஒருத்தி பேசுவா? புக்ஸ்ல படிக்கிற மாதிரி இருக்குடா. ஒரு காபி குடிக்கிற நேரத்துல எல்லாத்தையும் முடிவு பண்ணிட முடியுமாடா?''

''இப்போ நிறையப் பேர் இப்படித்தான்க்கா.''

''இப்ப நான் என்ன சொல்லணும்?''

''உனக்கு என்ன தோணுதோ சொல்லு!''

''புரியலை ராஜ். நிஜமாப் புரியல. இதெல் லாம்தான் சுதந்திரமாடா? புருஷன் வேணாம், பெத்தவங்க வேணாம், வயித்துல உதிச்ச குழந்தை வேணாம். நீ நோ சொல்றியா... அப்ப நீயும் வேணாம்... எதுவுமே வேணாமா? என்ன தான் வேணும்? சுதந்திரம் மட்டும்தானா? அதாவது முடிவெடுக்கிற சுதந்திரம்! என்னால முடியுங்கற சுதந்திரம்! அப்ப, மனுஷங்க, உறவு, அவங்க உணர்வு எதுவுமே முக்கியமில்லயா?''

''உன் ஜெனரேஷன் வேறக்கா. இப்பல்லாம் மைண்ட்செட் மாறிடுச்சுக்கா!''

''என்னடா மைண்ட்செட்? இது சுயநலம் இல்லையா? என் புருஷனுக்கும்எனக்கும் நூறு சண்டை வந்திருக்கு. ரெண்டு தடவை அடிச்சிருக்கார். அப்ப பத்துப்பதினஞ்சு தடவை நாங்க டைவர்ஸ் பண்ணிருக்கணும்.''

''அக்கா, தப்பா எடுத்துக்காதே. ஒருவேளை... நீ வேலைக்கு போய் சம்பாரிச்சுட்டு இருந்தா, நீயும் அதை நிஜமா யோசிச்சிருப்பே!''

''உளறாதே. சம்பாரிக்கிறது அன்பைத் தொலைச் சுட்டு அநாதையா தெருவுல நிக்கிறதுக்கா? வீட்ல சண்டை நடக்கிறப்பலாம் மாமனார் சொல்ற வார்த்தைக்கு நாங்க எப்பவோ தனியாப் போயி ருக்கணும்.பெரியவங்களை மதிச்சு விட்டுக்கொடுத்து வாழ்ந்துட்டு இருக்கோமே... நாங்கள்லாம் முட்டாள்களா ராஜ்?''

''அது மனப்பூர்வமா இல்லையேக்கா. சகிச்சுக்கிட்டுதானே அட்ஜஸ்ட் பண்ணிட்டு இருக்கீங்க? நெட் ரிசல்ட்... நிம்மதி இல்லையே!''

''பாசத்துக்கும் நன்றிக்கும் கட்டுப் பட்டு வாழ்ற வாழ்க்கைல குறைகள் இருந்தாலும், ஒரு பெருமிதம் இருக்குடா. தன்னை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பிவெச்ச கம்பெனியை விட்டுட்டு, பெட்டர் ஆஃபர்னு இப்ப இந்த கம்பெனிக்கு வந்திருக்காளே... இதுல எத்திக்ஸ், விசுவாசம் எதாவது இருக்கா? அதெல்லாம் லைஃப்ல வேணவே வேணாமா?''

கைகளைக் கட்டிக்கொண்டு அக்காவைப் பார்த்தேன்.

''ஸோ... ஸ்வேதாவை மறந்துடு! அவ உனக்கு வேணாம். அதானே?''

அக்கா அமைதியாக தன் வளையல்களை நிமிண்டிக்கொண்டிருந்தாள்.

''ராஜ், நான் சொல்றதை வெச்சு... நீ முடி வெடுக்கப்போறதில்லை. எனக்குத் தெரியும்.''

''அப்படி இல்லைக்கா. உன்னால ஸ்வேதா வைப் புரிஞ்சிக்க முடியலை. நீ ஒரு ஜெனரேஷன் பின்னாடி இருக்கே. ஒருவேளை... நீ அவளோட பழகினா...''

அக்கா பெருமூச்சுவிட்டாள். கொஞ்ச நேரம் கோபுரக் கலசத்தைப் பார்த்தாள்.

''ராஜ்... நம்ம தாத்தாவும் பாட்டியும் கல்யா ணத்துக்கு முன்னாடி பார்த்துக்கவே இல்ல. நம்ம அப்பாவும் அம்மாவும் பேசிக்கவே இல்லை. நானும் உன் மாமாவும் திருட்டுத்தனமா கோயி லுக்குப் போனோம். நீங்க டெஸ்ட் ட்ரைவ் பண்ணி கார் வாங்குற மாதிரி ஒரு டிரையல் லைஃப் பத்தி யோசிக்கிறீங்க. இதுல எது சரி, எது தப்பு? இது உங்க உலகம்! உங்க நியாயங்களும் சிந்தனைகளும் வேறயா இருக்கு. இதுக்குள்ள எங்க நியாயத்தை எப்படிப் புகுத்த முடியும்? நீ அவளைக் கல்யாணம் பண்ணிக்கோ ராஜ். நாளைக்குப் பிரச்னைனு பிரிஞ்சாலும் ரெண்டு பேரும் வருத்தப்படப்போறதில்லை. அப்ப ட்ரை பண்ணிப் பார்க்குறதுதானே சரி?''

''மனசார சொல்றியா... இல்ல நான் வருத்தப் படக் கூடாதுன்னு சொல்றியா?''

''என்னால அவங்கப்பா, அம்மா மாதிரி உன் னோட சண்டை போட்டுக்கிட்டு பேசாம இருக்க முடியாதுடா. நீ எதிர்பார்க்குற பதிலைச் சொல்லிட்டேன்ல... விட்டுடேன்!'' என்றாள்.

எனக்குப் புரிந்தது. ஆனாலும் புரியவில்லை!