Published:Updated:

'நீநிஜூஜுவைச் சந்தித்த டினிகா !

ரஞ்சன குழலி, யூ.கே.ஜி. சொல்லக் கேட்டு எழுதியது... விழியன்.

பிரீமியம் ஸ்டோரி

 முத்து

##~##

'நீநிஜூஜு’ ஒரு குட்டிப் பெண். அவளை 'நீநி’ என்றும் அழைக்கலாம் 'ஜூஜு’ என்றும் கூப்பிடலாம். அவளை நிறையப் பேருக்குப் பிடிக்கும். காரணம். அவள் எல்லோரிடமும் அவ்வளவு அன்போடு பழகுவாள். அவளுக்கு 'மேஜிக்’ கூடத் தெரியும். ஆனால், அது கொஞ்சம் ரகசியம். அதை எல்லோரிடமும் காட்டிக்கொள்ள மாட்டாள்.

அன்று, உடல்நிலை சரியில்லாததால்  நீநி, பள்ளிக்குச் செல்லவில்லை. வீட்டில் தனியாகத் தூங்கிக்கொண்டிருந்தாள். அப்போது 'டொக்... டொக்...’ எனக் கதவு தட்டும் சத்தம் கேட்டது.

''அட, யாருப்பா இந்த நேரத்தில்?'' என்றபடியே எழுந்துசென்று கதவைத் திறந்தாள். வாசலில் நான்கு பெரிய்ய்ய்ய கால்கள் மட்டும் தெரிந்தன. தலையை வெளியே நீட்டிப் பார்த்தாள் ஜூஜு.

வெளியே பச்சை நிறத்தில் நான்கு மாடி உயரத்துக்கு ஓர் உருவம் நின்றுகொண்டிருந்தது. அதன் பற்கள், நம் கை அளவுக்கு இருக்கும். இரண்டு கண்கள். நீண்ட கழுத்து.

ஆனாலும் நீநி பயப்படவில்லை. அவள்தான் எல்லோருக்கும் பிடித்தவள் ஆயிற்றே. எதுக்குப் பயப்படணும்? அதனால் அந்த உருவத்தைப் பார்த்து ''என்னப்பா... என்ன வேண்டும்?’ என்று கைகாட்டிக் கேட்டாள்.

அதன் தலை நான்கு மாடி உயரத்தில் இருந்ததால், அதற்கு நீநிஜூஜு பேசுவது கேட்கவில்லை. உடனே ஜூஜு, 'பம்பம்போலே பம்பம்போலே’ என்ற மந்திரத்தைக் கூறினாள். உடனே அவள், அந்த உருவத்தின் உயரத்துக்கு பெரியவளாக மாறினாள்.

'நீநிஜூஜுவைச் சந்தித்த டினிகா !

''ம்... இப்ப சொல்லு, என்ன வேணும் உனக்கு? எதுக்கு என்னை எழுப்பினே?'' என்று கேட்டாள்.

''நான் இந்தப் பக்கம் ஒரு வேலையா வந்தேன். ரொம்பப் பசிக்குது. சாப்பிட ஏதாச்சும் தாயேன்'' என்றது அது.

''தர்றேன். ஆனா, நீ இவ்வளவு பெருசா இருந்தா, எப்படி வீட்டுக்குள்ளே வருவே?'' என்று கேட்டாள் நீநி.

'நீநிஜூஜுவைச் சந்தித்த டினிகா !

அது திகைப்புடன் யோசித்தது. ''கவலைப்படாதே'' என்ற நீநி, 'பம்பம்போலே பம்பம்போலே’ என்ற மந்திரத்தைச் சொல்லி, அதன் தலையில் ஒரு குட்டுக் குட்டினாள்.

உடனே அது, நாய்க்குட்டி அளவுக்கு  மாறிவிட்டது. நீநியும் அவளுடைய சாதாரண உருவத்துக்கு வந்துவிட்டாள். 'வா’ என வீட்டுக்குள் சென்றாள்.

'ஐஸ்கிரீம் சாப்பிடுறியா?'

'ஐஸ்கிரீமா... அப்படின்னா?'

'ஐஸ்கிரீம்னா ஐஸ்கிரீம்தான்.'

'என்ன சுவையில் இருக்கும்?'

'ஐஸ்கிரீம் மாதிரிதான் இருக்கும்''

'வேற ஏதாச்சும் இருக்கா?''

'நூடுல்ஸ் சாப்பிடுறியா?'

'வேணாம். கஞ்சி கிடைக்குமா?' என்று கேட்டது அது.

நீநிக்கு கஞ்சி வைக்கத் தெரியாது. ஆனாலும் சமையல் புத்தகத்தில் இருந்ததைப் படித்து செய்துவிடலாம் என்ற நம்பிக்கையில், அந்த விலங்கை உட்காரச் சொல்லிவிட்டு சமையல் அறைக்குச் சென்றாள்.

புத்தகத்தில் சொன்னது மாதிரியே பாத்திரத்தில் தண்ணீர் வைத்து, கொஞ்சம் அரிசிப்போட்டு, கொஞ்சம் உப்பும் போட்டாள். குட்டியான அந்த விலங்கு,  சமையல் அறையின் உள்ளே வந்து திட்டு மீது ஏறி, பாத்திரத்தை ஆர்வமாகப் பார்த்தது. 'சீக்கிரம் தயாராகாதா?' என்று கேட்டது.

'அப்போ, கொதகொத குள்ளா... கொதகொத குள்ளானு சொல்லிட்டு இரு. சீக்கிரம் தயாராகிடும்'' என்றாள் நீநி.

'நீநிஜூஜுவைச் சந்தித்த டினிகா !

அந்த விலங்கும் 'கொதகொத குள்ளா... கொதகொத குள்ளா’னு  சொல்லிக்கொண்டே இருந்தது. கஞ்சியும் சீக்கிரம் தயாரானது.

அந்தச் சூடான பாத்திரத்தை துணியால் பிடித்து எடுத்துவந்து முன் அறையில் வைத்த நீநி, சூடு குறைய, ஒரு கரண்டியால் துழாவினாள்.

''ஆமா நீ யாரு? எங்கிருந்து வர்றே?'' என்று கேட்டாள்.

''எங்களை 'டைனோசர்’னு கூப்பிடுவாங்க. நான் ஆறரை கோடி வருஷத்துக்கு முன்னாடி இருந்து வர்றேன். இப்போ ஊர், உலகம் எப்படி இருக்குனு பார்க்கலாம்னு வந்தேன்'' என்றது அது.

''ஓ... நீதான் டைனோசரா? உன் பேரு என்ன டைனோசர்?'' என்று கேட்டாள் நீநி.

''பேரா... அப்படினா?''

''எனக்கு நீநிஜூஜுனு பேரு. எங்க அப்பா, அம்மா, ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் நீநினு கூப்பிடுவாங்க. உன்னை எப்படிக் கூப்பிடுவாங்க?'' என்று கேட்டாள்.

''எனக்குப் பேரு எல்லாம் இல்லை. நீயே ஒரு பேரு வையேன்'' என்றது டயனோசர்.

நீநி கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு, ''டினிகா... நல்லா இருக்கா?'' என்றாள்.

'' 'டினிகா’... நல்லா இருக்கே!'' என்றது அது குஷியாக.

அதற்குள் கஞ்சி ஆறி இருந்தது. டினிகா அதனை ருசித்துக் குடித்தது. ''நேரமாச்சு. நான் கிளம்புறேன்'' என்று சொல்லிவிட்டுக் கிளம்பியது டினிகா. நீநிஜூஜுவும் உறங்கச் சென்றுவிட்டாள்.

'நீநிஜூஜுவைச் சந்தித்த டினிகா !

கொஞ்ச நேரத்தில், 'டொக்... டொக்...’ என்று மீண்டும் கதவு தட்டப்பட்டது. திறந்துப் பார்த்தால், மீண்டும் டினிகா.

''இப்ப என்னப்பா?'' என்று கேட்டாள் நீநி.

''என்னைக் குட்டியா மாத்தினியே... திரும்பப் பெருசா மாத்து. எங்க கூட்டத்துல  என்னைச் சேர்த்துக்க மாட்டேங்கிறாங்க'' என்றது டயனோசர்.

''ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... ஸாரிப்பா மறந்தேபோயிட்டேன்'' என்ற நீநிஜூஜு மந்திரத்தைச் சொன்னாள்.

''பம்பம்போலே பம்பம்போலே...''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு