Published:Updated:

சின்னச் சின்ன வண்ணக் கதைகள் !

சின்னச் சின்ன வண்ணக் கதைகள் !

பிரீமியம் ஸ்டோரி

பரிசு !

##~##

அந்த நாட்டின் மன்னன் சரியான கிறுக்கன். ஒருநாள், 'தனது மூன்று மெய்க்காப்பாளர்களில் சிறந்தவர் யார்?’ என்ற சிந்தனை அவனுக்கு வந்தது. அதை அறிந்துகொள்ள, ஒரு பரிசோதனை செய்யத் தீர்மானித்தான்.

முதல் மெய்க்காப்பாளனுடன் படகில் கடலுக்குள் சென்றான். சற்றுத் தூரம் சென்றதும், தவறி விழுவதைப்போல் கடலில் விழுந்தான்.

அந்த மன்னனுக்கு நீச்சல் தெரியாது. எனவே, மெய்க்காப்பாளன் தண்ணீரில் பாய்ந்து மன்னனைக் காப்பாற்றினான். ''சபாஷ்! நீயே சிறந்த மெய்க்காப்பாளன். உனக்கு ஒரு வீட்டைப் பரிசாக அளிக்கிறேன்'' என்றான் மன்னன்.

மறுநாள், இரண்டாவது மெய்க்காப்பாளனுடன் கடலுக்குச் சென்ற மன்னன், அதேபோல் தவறி விழப்போனான். அந்த மெய்க்காப்பாளன் அதற்கு முன்பே பாய்ந்து காப்பாற்றினான். ''சபாஷ்! உனக்கு ஓர் ஊரையே பரிசாக அளிக்கிறேன்'' என்றான் மன்னன்.

சின்னச் சின்ன வண்ணக் கதைகள் !

மூன்றாவது நாள், மற்றொரு மெய்க்காப்பாளனுடன் சென்றான் மன்னன். முன்பு போலவே தவறி விழுந்து, ''காப்பாற்று... காப்பாற்று...'' என்றான்.

அந்த மெய்க்காப்பாளன் அமைதியாக படகைத் திருப்பிக்கொண்டு கரைக்கு வந்தான். அங்கே கூடியிருந்த மக்கள், அவனை உற்சாகத்துடன் வரவேற்றனர்.

''சபாஷ்! எங்கள் எல்லோரையும் காப்பாற்றிவிட்டாய். உனக்கு நாட்டையே பரிசாக அளிக்கிறோம். இனி, நீயே எங்கள் அரசன்'' என்றார்கள்.

நல்ல உள்ளம் !

 விதுனா என்ற நாட்டில் பல வருடங்களாக மழை பெய்யவில்லை. அதனால், அங்கிருந்த பறவைகள் வெப்பத்தால் தவித்தன. நீருக்காக ஏங்கின. இதற்கு ஒரு முடிவு காண, இரண்டு குயில்கள் காட்டுக்குள் சென்றன.

அங்கே, அழகான தூக்கணாங்குருவிகளைச் சந்தித்தன. குயில்கள் தங்கள் சோகக் கதையைக் கூறின. ''கவலைப்படாதீர்கள். உங்களுக்கு நாங்கள் உதவுகிறோம்'' என்று சொல்லிவிட்டு, தூக்கணாங்குருவிகள் கூட்டம் நடத்தின.

சின்னச் சின்ன வண்ணக் கதைகள் !

இலைகளின் நரம்புகளால் செய்த மிகப் பெரிய பாய் ஒன்றை குயில்களிடம் கொடுத்து, ''இது விசேஷமான பாய். எவ்வளவு வெப்பமானாலும்  காப்பாற்றும். இதை ஆற்றில் நனைத்து எடுத்தால், தண்ணீர் பல நாட்களுக்கு இதில் தங்கும். உங்கள் தாகத்தைத் தீர்த்துக்கொள்ளலாம்'' என்றன.

தூக்கணாங்குருவிகளுக்கு நன்றி சொல்லிவிட்டு, குயில்கள் நாட்டை அடைந்தன. எல்லாப் பறவை களும் அந்தப் பாயில் மகிழ்ச்சியுடன் தங்கின.

விரைவிலேயே நாட்டில் மழை பெய்தது. ''அடுத்தவர்களுக்கு உதவும் உங்கள் நல்ல உள்ளத்தால்தான் மழை வந்துள்ளது'' என்று சொல்லி, எல்லாப் பறவைகளும் அந்தக் குயில்களைப் பாராட்டின.

சோம்பேறி நட்பு !

அந்தக் காட்டில் ஒரு சிங்கம் இருந்தது. ஒருநாள், அது அந்தக் காட்டுக்குப் புதிதாக வந்த ஒரு புலியைச் சந்தித்தது. 'இதை நண்பனாக்கிக்கொண்டால், நமக்கான சாப்பாட்டைத் தேடும் வேலையை இதன் தலையில் கட்டிவிடலாம்’ என நினைத்தது.

''புதிதாக வந்திருக்கும் நண்பா... நீ இடம் தேடி சிரமப்பட வேண்டாம். என் குகையில் தங்கிக்கொள்!'' என்றது சிங்கம்.

புலியும் 'நல்லதாப் போச்சு. உணவு தேடி அலைய வேண்டாம். சிங்கம் கொண்டுவரும் சாப்பாட்டிலேயே கொஞ்சம் எடுத்துக்கொள்ளலாம்’ என நினைத்தவாறு சம்மதித்தது.

இரண்டும் குகையில் உறங்கின. மறுநாள் காலையில் கண் விழித்த சிங்கம், புலி உணவு தேடிச் செல்லும் என நினைத்தவாறு படுத்திருந்தது. புலியும் சிஙமும் நினைத்துக்கொண்டு அசையவில்லை.

சின்னச் சின்ன வண்ணக் கதைகள் !

இப்படியே மூன்று நாட்கள் ஆகிவிட்டன. அவற்றால் நகரக்கூட முடியவில்லை. அப்போது, ஒரு சிறுத்தை குகைக்குள் எட்டிப் பார்த்தது.

''சிங்க நண்பனே... நீ குகையைவிட்டுப் போய்ட்டியோனு நினைச்சேன். மூணு நாளா நீ வராததால் இந்தப் பக்கம் எனக்கு நல்ல வேட்டை. ஏவ்வ்வ்வ்'' என்று பெரிய ஏப்பத்துடன், வேட்டையாடிய ஒரு மானை இழுத்துச் சென்றது.

- ம.சுபிக்ஷா, (VI),
பாரிவள்ளல் மெட்ரிகுலேஷன்
பள்ளி, சிங்கம்புணரி.

   நேராக யோசி !

 ஒரு தாய் கொசு தனது இரண்டு பிள்ளைகளையும் அழைத்தது.

''பிள்ளைகளே... இன்று முதல் உங்களுக்கான உணவை நீங்களேதான் தேடிக்கொள்ள வேண்டும். மனிதர்களின் வீடுகளுக்கு எப்படிச் செல்வது? அவர்களை எப்படி நெருங்குவது என்று சொல்லித் தருகிறேன். கவனமாகக் கேட்டுக்கொள்ளுங்கள்'' என்றது தாய் கொசு.

இரண்டு கொசுக்களும் தாய் சொல்லிக்கொடுத்ததை உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டன. அன்று இரவு இரண்டும் தனித்தனியாக வேட்டைக்குக் கிளம்பின.

மறுநாள் காலை, முதல் கொசு சோர்வுடன் தனது இடத்துக்கு வந்தது. ''என்ன ஆச்சு? உணவு கிடைக்கவில்லையா?'' என்று கேட்டது தாய் கொசு.

சின்னச் சின்ன வண்ணக் கதைகள் !

''ப்ச்... இந்த மனுசங்களுக்கு நம்மைக் கண்டாலே பிடிக்கலை. அவங்க கைகளுக்குள் நசுக்கப் பார்க்குறாங்க'' என்றது.

அப்போது, இரண்டாம் கொசு உற்சாகத்துடன் வந்தது. ''அம்மா, நான் சந்தோஷமா இருக்கேன். மனுஷங்க நம்மைப் பார்த்ததும் கைகளைத் தட்டி வரவேற்கிறாங்க'' என்றது.

தாய் கொசு புன்னகையுடன், ''இப்படித்தான் எதையும் பாசிட்டிவ்வா எடுத்துக்கிட்டா, நம்ம உற்சாகத்தை யாரும் தடுக்க முடியாது'' என்றது.

- ந.பகவத் (IX),
ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயம்,
பெரியநாயக்கன்பாளையம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு