Published:Updated:

சின்னச் சின்ன வண்ணக் கதைகள் !

சின்னச் சின்ன வண்ணக் கதைகள் !

சின்னச் சின்ன வண்ணக் கதைகள் !

சின்னச் சின்ன வண்ணக் கதைகள் !

Published:Updated:

பூணையும் எலியும் !

##~##

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு பூனையும் எலியும் ஒரே வீட்டில் நண்பர்களாக இருந்தன. உணவுக்காக வெளியில் செல்லும் பூனை, அங்கே கொரிக்கும் தின்பண்டம் இருந்தால்,  நண்பன் எலிக்காக எடுத்து வரும். இதைப்போல எலியும், பால் கிடைத்தால் கொண்டுவரும். இரண்டும் டைனிங் டேபிளில் சேர்ந்தே சாப்பிடும். இவர்களின் நட்பைப் பார்த்த முரட்டு நாய் ஒன்று பொறாமைப்பட்டது. இருவரையும் பிரிக்கத் திட்டம் போட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒருநாள் அந்த நாய், எலியைத் தனியாகச் சந்தித்து ''உன் பூனை நண்பன் இரவு உணவுக்காக வைத்திருக்கும் அந்தப் பாலில் விஷம் கலந்துள்ளது. அதை வெளியே கொட்டிவிடு'' என்று கூறியது.

பிறகு பூனையைச் சந்தித்த நாய், ''இன்று உன் நண்பனுக்கு உணவு எதுவும் கிடைக்கவில்லையாம். அந்த வெறுப்பில் நீ வைத்திருக்கும் பாலை கீழே கொட்டப்போவதாகச் சொன்னான்'' என்றது.

பூனை வேகவேகமாக வீட்டுக்குச் சென்றபோது, எலி அந்தப் பாலை கீழே கொட்டிக்கொண்டிருந்தது. ''அடப்பாவி, நீ இவ்வளவு மட்டமானவனா?'' என்றபடி எலி மீது பாய்ந்தது பூனை.

சின்னச் சின்ன வண்ணக் கதைகள் !

''சே... நல்லது செய்ய நினைத்த என்னை புரிந்துகொள்ளாத நீயெல்லாம் நண்பனா? இனி உன் நட்பே வேண்டாம்'' என்றபடி எலியும் ஓடியது.

அன்று ஆரம்பித்த ஓட்டம் இன்று வரை நிஜத்திலும், திரையில் டாம் மற்றும் ஜெர்ரியாகவும் ஓடிக்கொண்டேயிருக்கின்றன.

முதியவரின் உதவி !

 ஓர் ஊரில் ஜமீன்தார் ஒருவர் இருந்தார். அந்த ஊர் மக்கள் உதவிக்கோ கடன் வாங்கவோ, அவரையே நாட வேண்டியிருந்தது. அதனால், அவர் கடுமையாக நடந்துகொண்டாலும் அதைப் பொறுத்துக்கொண்டார்கள். இந்த நிலையில், அந்த ஊருக்குப் புதிதாக முதியவர் ஒருவர் வந்தார். அவர் ஏழைகளைத் தேடிச்சென்று உதவ ஆரம்பித் தார். இதனால், மக்கள் ஜமீன்தாரிடம் சென்று பண உதவி கேட்பதை நிறுத்திவிட்டார்கள்.

ஜமீன்தார் ஒரு திட்டம் தீட்டினார். ஒருநாள் அந்த முதியவரை தனது வீட்டு விருந்துக்கு  அழைத்தார். வந்தவரை பாதாள அறைக்குள் தள்ளி பூட்டிவிட்டார். 'இனி இந்த மக்கள் என்னிடம்தான் வரவேண்டும். வட்டியும் முதலுமாகக் கவனித்துக் கொள்கிறேன்'' என்று காத்திருந்தார்.

சின்னச் சின்ன வண்ணக் கதைகள் !

நாட்கள் ஓடிவிட்டன. யாரும் ஜமீன்தாரிடம் வரவில்லை. அவருக்கு மிகவும் ஆச்சர்யம். பாதாள அறைக்குச் சென்று, ''யாரும் என்னிடம் வராத அளவுக்கு அவ்வளவுப் பணமா கொடுத்திருக் கிறீர்கள்?'' என்று கேட்டார்.

முதியவர் சிரித்தவாறே, ''நான் பணம் கொடுத்ததாக யார் சொன்னது? இருக்கும் பணத்தில் சிக்கனமாக வாழ்வது எப்படி என்றும், பணத்தைச் சேமிப்பது எப்படி என்றும் கற்றுத்தந்தேன். அவ்வளவுதான்'' என்றார்.

திகைத்துப்போன ஜமீன்தார், அந்த முதியவரை அமைதியாக வெளியே அனுப்பிவிட்டார்.

புத்தர் என்ன சொன்னார் ?

ஜப்பான் நாட்டுப் படைத் தளபதி நொபு நாகா மிகவும் புத்திசாலி. ஒரு முறை போரிடச் சென்றபோது, எதிரியின் படைபலத்தைக் கண்ட இவர் வீரர்களுக்கு 'ஜெயிக்க முடியுமா?’ என்ற சந்தேகம் வந்துவிட்டது.

தயக்கத்துடன் நொபு நாகாவிடம் சென்று, ''எதிரியின் படைக்கு முன்பாக நாம் எம்மாத்திரம்?'' என்று கேட்டனர்.

நொபு நாகா யோசித்தார். ''இதை நாம் முடிவு செய்ய வேண்டாம். புத்தர் கோயிலுக்குச் சென்று பூவா, தலையா போடுவோம். தலை விழுந்தால், வெற்றி கிடைக்கும். பூ விழுந்தால், போர் செய்யாமல் திரும்பிவிடுவோம்'' என்றார்.

சின்னச் சின்ன வண்ணக் கதைகள் !

எல்லோருக்கும் சம்மதித்தனர். புத்தர் கோயிலில் காசை சுண்டிப் போட்டார். தலை விழுந்தது. ஒரே ஆரவாரம். 'புத்தரே சொல்லிவிட்டார், இனி என்ன கவலை?’ என்ற நம்பிக்கையோடும் உறுதியோடும் வீரர்கள் போரிட்டனர்... வெற்றி பெற்றனர்.

நாடு திரும்பியதும் வெற்றி விழா நடந்தது. அப்போது தளபதி நொபு நாகா, அந்த நாணயத்தை எல்லோருக்கும் காட்டினார். அதன் இரண்டு பக்கமும் தலைதான் இருந்தது.

''வெற்றியை நிர்ணயித்தது விதி அல்ல; உங்கள் உள்ளத்தில் ஊற்றெடுத்த நம்பிக்கையும், மன உறுதியும்தான்'' என்றார் நொபு நாகா.

நண்பர்களே... நீங்களும் சின்னச் சின்ன வண்ணக் கதைகளை எழுதி, எங்களுக்கு அனுப்புங்கள். அஞ்சல் அட்டையில் எழுதினாலே போதும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism