Published:Updated:

காட்டுக்கு வந்த கறுப்புப் பூனை !

ந.ஆஷிகா முத்து

காட்டுக்கு வந்த கறுப்புப் பூனை !

ந.ஆஷிகா முத்து

Published:Updated:
##~##

அந்தக் காட்டுக்கு கறுப்புப் பூனை ஒன்று வழிதவறி வந்துவிட்டது. என்ன செய்வது என்றே புரியாமல், 'யாராவது உதவிக்கு வர மாட்டார்களா?’ என்று ஏக்கத்துடன் பார்த்தது.

அப்போது, குண்டு முயல் ஒன்று அந்தப் பக்கம் வந்தது. அதைப் பார்த்ததும் பூனைக்கு சந்தோஷம். 'இந்த முயலிடம் கேட்கலாம்’ என்று அருகில் சென்றது. உடனே முயல், ''ஏய் யார் நீ? கறுப்பாக, பார்க்கவே பயமாக இருக்கிறாய். தள்ளிப் போ'' என்று கத்திக்கொண்டே ஓடிவிட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பூனைக்கு மிகவும் வருத்தம். 'இதுக்காக நான் சுண்ணாம்பையா பூசிக்கிட்டு வர முடியும்?’ என்று நொந்துகொண்டு, அங்கிருந்த ஒரு மரப்பொந்தில் உட்கார்ந்துகொண்டது.

ஓடிப்போன குண்டு முயல், சற்று நேரத்தில் ஒரு கூட்டத்தையே அழைத்துவந்தது. ''இதோ, இவன்தான் அந்தக் கறுப்புப் பயல். நாம் இவனோடு பழக வேண்டாம். இவனுடைய நிறம் நம் மீது ஒட்டிக்கொள்ளும்.'' என்றது.

''ஆமாம்... ஆமாம்... நீ சொல்வது சரி. ஏய்... பூனைப் பயலே இங்கிருந்து கிளம்பு'' என்று மற்ற முயல்களும் கோஷம்போட்டன.

காட்டுக்கு வந்த கறுப்புப் பூனை !

பூனையோ, ''நண்பர்களே, நான் வழி தவறி வந்துவிட்டேன். எனக்கு இந்தக் காட்டில் யாரையும் தெரியாது. தயவுசெய்து என்னை உங்கள் நண்பனாக ஏற்றுக்கொள்ளுங்கள்'' என்று      கெஞ்சியது.

குண்டு முயலோ, அதைக் கிண்டல்செய்து திட்டி அனுப்பிவிட்டது. கறுப்புப் பூனை மனம்  தளரவில்லை. அடுத்த நாள், முயல் கூட்டம் அந்த இடத்துக்கு வந்தபோது, மீண்டும் அருகில் சென்று நட்புக்காகக் கெஞ்சியது.

காட்டுக்கு வந்த கறுப்புப் பூனை !

அப்போது, பெரிய மீசைகொண்ட முயல் ஒன்று ஏதோ யோசித்தது. ''சரி, நீ கொஞ்சம் தள்ளி நில்லு. எங்கக் கூட்டத்தோடு பேசிட்டு முடிவைச் சொல்றோம்'' என்றது.

பூனை அந்த இடத்தைவிட்டு நகர்ந்தது. பெரிய மீசை முயல், குண்டு முயலையும் மற்ற முயல்களையும் புதர்ப் பக்கமாக அழைத்துச்சென்று ரகசியக் குரலில் பேசியது. ''சும்மா அந்தப் பூனையை விரட்டுறதுக்குப் பதில், நமக்கு வேலை செய்ய வைத்துக்கொள்வோம். காரியம் முடிஞ்சதும் துரத்திடுவோம்'' என்று சொன்னது.

எல்லா முயல்களும் சம்மதித்தன. குண்டு முயல், அந்தப் பூனையைச் சொடுக்குப்போட்டு அருகில் அழைத்தது. ''எங்களோட செயற்குழுவில் பேசினதில், உன்னை நண்பனாக சேர்த்துக்க முடிவுசெய்துட்டோம். ஆனால், ஒரு கட்டளை. நாங்க சொல்ற வேலைகளைச் செய்யணும். அதில், எங்களுக்கு மனநிறைவு ஏற்பட்டால், உன்னை முழுசா சேர்த்துக்கிறோம்'' என்றது.

பூனைக்கு மிகவும் சந்தோஷம். ''நீங்க என்ன சொன்னாலும் செய்றேன்'' என்றது.

''சரி, ஓடிப்போய் எங்க எல்லோருக்கும் கேரட் பறிச்சுட்டு வா பார்க்கலாம்'' என்றது பெரிய மீசைகொண்ட முயல்.

பூனை குஷியுடன் ஓடியது. முயல்கள் சிரித்துக்கொண்டே கைகளைக் கோத்துக்கொண்டு 'ரிங்கா... ரிங்கா... ரோஸஸ்’ என விளையாட ஆரம்பித்தன.

சற்றுநேரத்தில், கைகள் நிறைய கேரட்களுடன் வந்த பூனை, ''இந்தாங்க, எல்லோரும் எடுத்துக்கங்க'' என்றது.

குண்டு முயல் இடுப்பில் கைகளை வைத்துக்கொண்டு முறைத்தது. ''என்ன இது சின்னப்புள்ளைத்தனமா. 10 கேரட்டுகளைப் பறிச்சிட்டு வந்திருக்கே? நாங்க ஆளுக்கு 10 சாப்பிடுவோம். அதோ, அந்த மரத்துக்குப் பக்கத்துல கோணிப் பை இருக்கு பார். அதை எடுத்துட்டுப்போய் பை நிறையப் பறிச்சுக்கிட்டு வா'' என்றது.

காட்டுக்கு வந்த கறுப்புப் பூனை !

கறுப்புப் பூனை அலுத்துக்கொள்ளாமல், பையை எடுத்துக்கொண்டு கிளம்பியது. சற்றுநேரத்தில்... கேரட் நிரம்பிய மூட்டையை தூக்க முடியாமல், இழுத்துக்கொண்டு வந்தது. அதன் உடல் முழுவதும் வியர்த்துக்கொட்டியது.

''தீயா வேலை செய்றியே பூனை... வெரிகுட். அப்படியே எங்க எல்லோருக்கும் ஆற்றுத் தண்ணியைப் பிடிச்சுட்டு வா'' என்ற பெரிய மீசைகொண்ட பூனை,  தண்ணீர் பாட்டில் ஒன்றை எடுத்துக்கொடுத்தது.

பூனைக்கு மிகவும் களைப்பாக இருந்தது. ஆனாலும், முயல்களின் நட்பைப் பெற்றுவிட வேண்டும் என்பதால், ஆற்றை நோக்கி ஓடியது. ''ஹா... ஹா... நம்மகிட்டே ஏமாறதுக்காகவே எங்கிருந்தோ வந்திருக்கான் பார்'' என்று குண்டுமுயல் சொல்ல, மற்ற முயல்கள் சிரித்தன.

''சரி, எல்லோரும் சாப்பிடுவோம்'' என்றது ஒரு முயல்.

மூட்டையைப் பிரித்து குஷியுடன் சாப்பிட ஆரம்பித்தன. அந்த சந்தோஷத்தில் தங்களுக்குப் பின்னால் நெருங்கிய ஆபத்தை அவை உணரவில்லை. அங்கே, ஒரு சிங்கம் பதுங்கிப் பதுங்கி வந்தது. கர்ஜனையுடன் முயல் கூட்டத்தை நோக்கிப் பாய்ந்தது.

திடுக்கிட்ட முயல்கள், தலைதெறிக்க நாலா திசையிலும் ஓடின. ஆனால், குண்டு முயல் சுதாரிக்கும் முன்பு சிங்கத்தின் காலடியில் சிக்கிக்கொண்டது.

''ஹி... ஹி... டேய் குண்டுப் பயலே, ஒருநாள் நான் தூங்கிட்டு இருந்தப்ப, நீதானே என் வாலில் முள்செடியைக் கட்டினே?'' என்று கேட்டது சிங்கம்.

''ஐயோ... நான் அப்பாவிங்க. அந்த வம்புக்கெல்லாம் போக மாட்டேன்'' என்றது குண்டு முயல்.

காட்டுக்கு வந்த கறுப்புப் பூனை !

''பொய் சொல்லாதே! முள்செடியைக் கட்டினதோடு, தூரமா நின்னுக்கிட்டு என்னைக் கைதட்டி எழுப்பினே. 'முயல் குதிச்சுப் பார்த்திருக்கே... தாவிப் பார்த்திருக்கே... பயத்தோடு ஓடிப் பார்த்திருக்கே... கம்பீரமா உன் முன்னாடி கைநீட்டிப் பார்த்திருக்கியா? பார்க்கிறியா.... பார்க்கிறியா?’னு டயலாக் பேசினவன்தானே நீ'' என்றது சிங்கம்.

''ஐயையோ, அது நான் இல்லீங்க... என் அண்ணன் முங்கிகிங்கி. நான் அவனோட தம்பி கிங்கிமுங்கி'' என்றது குண்டு முயல்.

''அடேய்... அடேய்... பயங்கரமான ஆளுடா நீ. தூரமா நின்னா, சூர்யா மாதிரி பேசுறது. பக்கத்தில் வந்துட்டா, வடிவேலு மாதிரி பம்முறது. இன்னிக்கி நீ தொலைஞ்சேடா!'' என்றபடி கையை ஓங்கியது.

இவற்றையெல்லாம் மற்ற முயல்கள் ஆங்காங்கே பதுங்கியவாறு பார்த்துக் கொண்டிருந்தன. அப்போது தண்ணீர் பாட்டிலுடன் வந்த பூனை, கொஞ்சமும் தாமதிக்காமல் சிங்கத்தை நோக்கி பாட்டிலை வீசியது.

திடீரென முகத்தைத் தாக்கி, கொட்டிய தண்ணீரால் சிங்கம் சில நொடிகள் திணறிப்போனது. அது போதாதா? குண்டு முயல் அங்கிருந்து நழுவி, ஒரே ஓட்டமாக ஓடிவிட்டது.

சிங்கம் கோபத்துடன் கர்ஜித்துவிட்டு, ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றது. பிறகு, எல்லா முயல்களும் ஒன்றுகூடின. ''பூனைத் தம்பி... எங்களை மன்னிச்சிரு. உதவி கேட்ட உன்னை வேலை செய்யவிட்டு சிரிச்சோம். ஆனா, நீ என் உயிரையே காப்பாத்திட்டே. உன்னைப் பத்திரமா இந்தக் காட்டிலிருந்து வெளியே அனுப்பிவைக்கிறோம்'' என்றது குண்டு முயல்.

அன்று முழுவதும் முயல்களுடன் சந்தோஷமாக விளையாடியது கறுப்புப் பூனை. அடுத்தநாள், காட்டின் எல்லைக்கு பூனையை அழைத்துவந்த முயல்கள், சந்தோஷத்துடன் வழியனுப்பின.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism