Published:Updated:

தேவதைக் கதைகள் - மாயத் தூக்கத்தில் மூன்று இளவரசிகள் !

கே.முரளிதரன் ஹாசிப்கான்

தேவதைக் கதைகள் - மாயத் தூக்கத்தில் மூன்று இளவரசிகள் !

கே.முரளிதரன் ஹாசிப்கான்

Published:Updated:
##~##

விவேக தேசம் என்ற நாட்டை ஆண்டுவந்த ராஜாவுக்கு, மூன்று மகன்கள். மூவரும் வாலிபர்களானதும், அவர்கள் இந்த உலகத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் ஆளுக்கு ஒரு குதிரையைக் கொடுத்து, பயணம் போய்விட்டு வரச்சொன்னான் மன்னன்.

மூன்று பேரும் புறப்பட்டார்கள். மூத்தவர்கள் இரண்டு பேரும் ஆத்திரக்காரர்கள். கடைசி இளவரசனிடம் இருந்த கருணையும் அன்பும் அவர்களிடம் இல்லை. மூவரும் சேர்ந்தபடி பயணம்செய்து ஒரு காட்டை அடைந்தார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அந்த அடர்ந்த காட்டுக்குள், ஒரு மரத்தின் மேல் கட்டெறும்புகள், வரிசையாக தங்கள் உணவைச் சுமந்தபடி சென்றுகொண்டிருந்தன. அப்போது மூத்த இளவரசன், அந்த வரிசையைத் தட்டிவிட முயன்றான். கடைசி இளவரசன் அதைத் தடுத்து, 'அவை நமக்கு எந்தத் தீங்கும் செய்யவில்லையே. அவற்றை ஏன் தொந்தரவு செய்ய வேண்டும்?' என்றான்.

அவர்கள் பயணம் தொடர்ந்தது. அப்போது, ஒரு குளத்தில் வாத்துகள் நீந்திக்கொண்டிருந்தன. உடனே இரண்டாவது இளவரசன், ''ஆற்றில் இறங்கி வாத்துகளைப் பிடித்துவந்து சாப்பிடலாம்'' என்றான்.

அப்போதும் கடைசி இளவரசன் அதைத் தடுத்தான். அவர்கள் தொடர்ந்து நடந்தார்கள்.  வழியில் ஒரு மரத்தில், பெரிய தேன்கூடு இருந்தது. அதைப் பார்த்த மூத்த இளவரசர்கள் இரண்டு பேரும், ''தேன் கூட்டுக்குத் தீ வைத்து, தேனீக்களை விரட்டிவிட்டுத் தேனைச் சாப்பிடலாம்'' என்றார்கள்.

தேவதைக் கதைகள் - மாயத் தூக்கத்தில் மூன்று இளவரசிகள் !

வழக்கம்போல கடைசி இளவரசன் அதைத் தடுத்துவிட்டான். அவர்கள் தொடர்ந்து போய்க்கொண்டிருக்கும்போது, திடீரென பலத்த மழை பெய்ய ஆரம்பித்தது. அருகில் ஒரு கோட்டை தென்பட்டது. மூவரும் உள்ளே சென்றார்கள். அங்கே ஆள் அரவமே இல்லை. ஆங்காங்கே சில மனிதர்கள், குதிரைகளின் சிலைகள் மட்டுமே இருந்தன. உள்ளே போய்ப் பார்த்தபோது, ஓர் அறையில் தேவதையைப் போன்ற தோற்றத்துடன் ஒரு பெண் உட்கார்ந்திருந்தாள்.

அந்தப் பெண்ணிடம் சென்று, 'இங்கே என்ன நடந்தது? இந்தக் கோட்டை ஏன் இப்படி இருக்கிறது?' என்று கேட்டார்கள்.

அவள் பதில் ஏதும் பேசவில்லை. அவர்களை வேறு ஓர் அறைக்கு அழைத்துச் சென்றாள். அங்கே ஒரு மேஜை மீது பெரும் விருந்து தயாராக இருந்தது. மூன்று பேரும்  பசியாறினார்கள். 'இப்போது தூங்குங்கள். நாளை காலை பேசிக்கொள்ளலாம்' என்றாள் அந்தப் பெண்.

அடுத்த நாள் காலையில், ''இந்தக் கோட்டையை ஒரு சூனியக்காரி சபித்துவிட்டுப் போய்விட்டாள். நான் இந்தக் காட்டின் தேவதையாக எதுவும் செய்ய முடியாது. சாபம் நீங்க வேண்டுமெனில், மூன்று நிபந்தனைகள் இருக்கின்றன. முதல் நிபந்தனை, காட்டுக்குள் சென்று மாலை மங்குவதற்குள் அங்கே சிதறிக் கிடக்கும் 1,000 முத்துகளைச் சேகரித்து வர வேண்டும். ஒரு முத்து குறைந்தாலும் சேகரிப்பவர் கல்லாக மாறிவிடுவார்' என்றாள் தேவதை.

முத்துகளைச் சேகரிக்க முதல் இளவரசன் கிளம்பினான்.  மாலை வரை அவனால், 100 முத்துகளை மட்டுமே சேகரிக்க முடிந்தது. சூரியன் மறைந்ததும் அவன் கல்லாக மாறிவிட்டான். அவன் வராததைக் கண்ட இரண்டாவது இளவரசன், அடுத்த நாள் முத்துகளைச் சேகரிக்கச் சென்றான். அவனாலும் முடியவில்லை.

மூன்றாவது நாள் கடைசி இளவரசன் சென்றான். மதியம் வரை 100 முத்துகளே சேகரிக்க முடிந்தது.  அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. உட்கார்ந்து அழ ஆரம்பித்தான். அப்போது அந்தப் பக்கமாக வந்த கட்டெறும்புகள், அவனிடம் 'ஏன் அழுகிறாய்?' என்று கேட்டன. அவன் விஷயத்தைச் சொன்னான். அவனுக்கு உதவிசெய்வதாகத் தெரிவித்த கட்டெறும்புகள், சற்றுநேரத்தில் 1,000 முத்துகளையும் சேகரித்து அவனிடம் கொடுத்தன.அவற்றைக் கொண்டுபோய் தேவதையிடம் கொடுத்தான்.

தேவதை அடுத்த நிபந்தனையைச் சொன்னாள். ''இந்தக் கோட்டையின் இளவரசிகள் மூன்று பேர், கோட்டைக்குள் இருக்கும் ஓர் அறையில் தூங்குகிறார்கள். அந்த அறையைத் திறக்கும் சாவி, அருகில் இருக்கும் குளத்தில் கிடக்கிறது. அதை மாலைக்குள் எடுத்துவர வேண்டும்'' என்றாள்.

தேவதைக் கதைகள் - மாயத் தூக்கத்தில் மூன்று இளவரசிகள் !

இளவரசன் அந்தக் குளத்துக்குப் போனான். உள்ளே மூழ்கி, சாவியைத் தேடினான். மாலை நெருங்கிவிட்டது. அவன் அந்தக் குளத்தின் கரையில் உட்கார்ந்து அழ ஆரம்பித்தான். அப்போது, அந்தப் பக்கமாக சில வாத்துகள்  வந்தன. 'ஏன் அழுகிறாய்?' என்று கேட்டன. இளவரசன் பிரச்னையைச் சொன்னான்.

'இதற்குப் போய் அழலாமா? நாங்கள் உன் பிரச்னையைத் தீர்க்கிறோம்' என்றன. குளத்தின் உள்ளே மூழ்கி, சாவியை எடுத்துத் தந்தன.

அவன் மகிழ்ச்சியுடன் அந்தச் சாவியைக் கொண்டுவந்து தேவதையிடம் கொடுத்தான். தேவதை அறையைத் திறந்தாள். அங்கே, மூன்று இளவரசிகளும் தூங்கிக்கொண்டிருந்தார்கள்.

அடுத்து, மிகக் கடினமான ஒரு சோதனையைச் சொன்னாள் தேவதை. ''இந்த மூன்று பேரில் இளைய இளவரசியைக் கண்டுபிடிக்க வேண்டும். ஒரே அடையாளம், அவள் கடைசியாக தேன் குடித்திருக்கிறாள். அவளை சரியாகக் கண்டுபிடித்தால்தான் கோட்டையைப் பிடித்திருக்கும் சாபம் நீங்கும்'' என்றாள் தேவதை.

என்ன செய்வதென்று தெரியாமல் இளவரசன் சோர்ந்துபோய் உட்கார்ந்திருந்தபோது, அவன் காப்பாற்றிய தேனீக் கூட்டம் பறந்துவந்தன. அவைகளிடம் இந்தப் புதிரைச் சொன்னான். அவைகளில் ஒரு தேனீ பறந்துசென்று, தேன் அருந்திய இளவரசியின் வாயருகில் அமர்ந்தது. உடனே இளவரசன் அவளைக் கண்டுபிடித்துச் சொன்னான்.

மூன்று இளவரசிகளும் மாயத் தூக்கத்திலிருந்து விடுபட்டார்கள். கல்லாக இருந்தவர்கள் உயிர் பெற்றார்கள். சூனியக்காரியின் சாபத்திலிருந்து அந்த நாடும் கோட்டையும் விடுபட்டன. கடைசி இளவரசியைத் தான் கல்யாணம் செய்துகொண்டு, மற்ற இருவரையும் தன் சகோதரர்களுக்குத் திருமணம் செய்துவைத்தான் கடைசி இளவரசன். பிறகு, அந்த நாட்டை மூன்று பேரும் நீண்ட நெடுங்காலம் அற்புதமாக ஆட்சி செய்தார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism