Published:Updated:

தொடர் கதை: ஒன்று

தொடர் கதை: ஒன்று

தொடர் கதை: ஒன்று
தொடர் கதை: ஒன்று
தொடர் கதை: ஒன்று

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
இருவன்
ஓவியங்கள்:ஸ்யாம்
தொடர் கதை: ஒன்று

.டி.எம் சிலிப் பின்னால்கூட ஹைக்கூ எழுதும் மனசுக்காரன் நான். சாலையில் சைரன்

கேட்டாலே, அதில் பயணிக்கும் நோயாளிக்காக ஆண்டவனைப் பிரார்த்திக்கும் ஒருத்தி எனக்குக் கிடைத்து இருக்க வேண்டும். கிடைக்கவில்லை!

இட்ஸ் ஓ.கே. கிடைத்தாலும், இப்போது ஏற்பதாக இல்லை. காரணம் இயல்பானது. தனியார் கம்பெனியில், கொஞ்சம் ஓ.கே. சம்பளம் வாங்கும் ஆள் நான். என் குடும்பம், என்னை எதிர்பார்த்து இருக்கிறது. கல்யாண வயதில் எனக்கு ஒரு தங்கை இருக்கிறாள்!

லிபர்ட்டி தியேட்டர் பக்கம் ஃப்ளாட் ஒன்றில் நான் தனியன். கல்லூரிக் காலத்தில் என் பெயர்... எம்.எல்.ஏ. அதிரடிச் சரவெடியாக அமர்க்களம் புரிந்தவன். காலச் சிற்பி... டிங்கு டிங்கெனச் செதுக்கியதில், இப்போ குட் பாயாக சேல்ஸ் மேனேஜர். தமிழருவிமணியன், ஜக்கி வாசுதேவ், எஸ்.ராமகிருஷ்ணன் புத்தகங்களை கலெக்ஷனில் வைத்திருக்கும் அளவு மாறிவிட்ட என் வாழ்க்கையில், அவ்வப்போது ஷக்தி மாதிரி யாராவது காலிங் பெல் அடிக்கிறார்கள்!

10 வருடங்கள் இருக்கும் பார்த்து... திடுதிப்பென்று இந்த நடுநிசியில் காலிங் பெல். கதவைத் திறந்த என்னை, "நல்ல வேளைடா மச்சான்..." என உள்ளே தள்ளி அவனே கதவை அறைந்து சாத்தினான்.

ஷக்தி... கல்லூரி முடித்த புதிதில், யுரேகா ஃபோர்ப்ஸில் ஆறு மாத இன்டன்ஷிப் பார்த்தபோது பூத்த நட்பு. அதன் பிறகு, தொடர்பே இல்லை. இப்போது வந்து நிற்கிறான். அடையாளம் காணவே நேரம் பிடித்தது!

தொடர் கதை: ஒன்று

டேய் பிரகாஷ், நான் ஷக்திடா! வீடு வீடாப் போய் வெளக்கமாறு மெஷின் வித்தோமே மச்சான்!"

"டேய், என்னடா இது... 'அமராவதி' அஜீத் மாதிரி இருப்பே... இப்போ 'மங்காத்தா' தல மாதிரி வந்து நிக்குற. எங்கடா இருந்தே இவ்ளோ நாளு? ஆளையும் காணோம், போன் காலையும் காணோம்!"

"எல்லாம் சொல்றேன் பிரகாஷ்... ஒரு மேட்டர் பேசணும். என் பழைய டைரியில கிடைச்சது உங்க திருச்சி வீட்டு நம்பர். தங்கச்சிதான் போன் எடுத்துச்சு. உன் அட்ரஸ் தந்துச்சு."

"பதற்றப்படாத ஷக்தி... என்னடா மேட்டரு?"

அது வந்து... லவ்வுடா! ரொம்ப சின்ஸியரான லவ். எங்க வீட்ல தெரிஞ்சு, பெரிய பிரச்னை ஆகிருச்சு. என்னை என் மாமா பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணிவைக்கணும்னு அவங்க பிளான். என் மாமா, எக்ஸ் மினிஸ்டர். இப்போ என்னையும் என் லவ்வரையும் கொலை வெறியோடு தேடிட்டு இருக்காங்க. அவங்க கையில சிக்குனா... அவ்ளோதான் மச்சான்!" - கரகரவென அழுதான்.

"ச்சீ, அழாதடா! இப்போ அந்தப் பொண்ணு எங்க இருக்கு?"

"இங்கதான் நுங்கம்பாக்கம் கண்பத் ஹோட்டல்ல! ஃப்ளைட் ஏற மாட்டேன், இங்கயே செத்துப்போவேன்னு ரூம் போட்டு உக்காந்து இருக்கு."

"ஃப்ளைட்டா... ஆமா, பொண்ணு எந்தூரு?"

"அது ரஷ்யாடா!"

"என்னாது..?"

"ஆமடா, அது ரஷ்யன் பொண்ணு. பேரு சோபியா... சோபியா ஆண்டோனோவ்ஸ்கி!"

"மச்சான், என்னடா நீ டக்குனு உலக சினிமா காட்டுற? கார்ல் மார்க்ஸ் பேத்தியவா நீ லவ் பண்றே? சரி, இப்போ நான் என்ன பண்ணணும்?"

"எங்களுக்குக் கல்யாணம் பண்ணிவைக்கணும்!"

"டேய்ய்ய்ய்ய்... ஆக்சுவலா நீ யாருன்னே எனக்குத் தெரியாதேப்பா!"

"வெளாடாத பிரகாஷ். சீரியஸ் மேட்டர். எங்க அப்பா, எங்க மாமா, மில் ஆளுங்கன்னு ஏழெட்டு கார்ல எங்களை மெட்ராஸ்ல தேடுறாங்கடா. நான் வெளியே நடமாடுனா, சிக்கல். நீ முதல்ல கண்பத் ஹோட்டல் போய் சோபியாவை இங்க அழைச்சுட்டு வந்துரு. ப்ளீஸ்டா, சென்னைல உன்னைவிட்டா எனக்கு யாரும் தெரியாது!"

அப்படியே என்னை பார்சல் பண்ணினான். ஆட்டோ பிடித்து, டி-ஷர்ட் பெர்முடாஸுடன் ஏறினேன். "நண்பா... ரூம் நம்பர் 214. உன்னைப்பத்தி அவகிட்ட நிறையச் சொல்லி இருக்கேன்."

ஹோட்டலில் என்னை மார்க்கமாகப் பார்த்தார் ரிசப்ஷனிஸ்ட். நல்லவேளை, 'தி பார்க்'காக இருந்திருந்தால், கேட்டிலேயே பாட்டுப் பாடி பவுன்ஸர் என்னைத் திருப்பி அனுப்பி இருப்பான். இன்டர்காமில் பேசி விட்டு, "அவங்களே வர்றாங்க" என்றார். லிஃப்ட் கதவு திறந்து வெளிப்பட்ட சோபியா, ரோஜாப் பூவும் மல்லிப் பூவும் கூடி ஜனித்த நிறத்தில் இருந்தாள்.

தொடர் கதை: ஒன்று

எட்டுப்பட்டி பஞ்சாயத்தையே நான் சினிமாவில்தான் பார்த்து இருக்கிறேன். ஷக்தி புண்ணியத்தில், இன்டர்போல் வரைக்கும் தேடப்படுவேனோ?

"ஹாய், சோபியா... ஐ'ம் பிரகாஷ்!"

"வணக்கம் பிரகாஷண்ணா. உங்களைச் சந்திப்பதில் எனக்கு உள்ளபடியே மிக மகிழ்ச்சி. மன்னிக்கணும் அண்ணா... அகால வேளையில் உங்களைச் சந்திக்க நேர்ந்ததற்கு!" - மக்கள் டி.வி. தொகுப்பாளினி மாதிரி அத்தனை சுத்தமாக அவள் பேசிய தமிழில் எனக்கு ஆச்சர்ய அதிர்ச்சி.

"உங்களுக்குத் தமிழ் தெரியுமாங்க? சூப்பர்! வாங்க, ஷக்தி எங்க வீட்லதான் இருக்கான். உங்களை உடனே அழைச்சுட்டு வரச் சொன்னான். லெட்ஸ் கோ!"

ஆட்டோவில் வெளியே வேடிக்கை பார்த்தபடி வந்தவள், வள்ளுவர் கோட்டம் தாண்டும்போது விருட்டென்று தலை இழுத்துப் பம்மினாள். புரியாமல் நான் பார்க்க, கடந்து போன காரைக் காட்டி, "அதுல ஷக்தியோட அப்பா, அவங்க ஆளுங்களோடு போறார்..." என்றாள். எனக்கு வயிற்றில் பயப் பட்டாசு படபடத்தது. 'நாடோடிகள்' மாதிரி கால்ல லாரிச் சக்கரமோ, காதுல பைப் அடியோ வாங்க... எனக்கு சக்தி இல்லடா ஷக்தி!

"மன்னிக்கணும் அண்ணா... உங்களுக்குத்தான் சிரமம்!"

"ச்சேச்சே... நோ பிராப்ளம் சோபி..."

"என் பேரு சோபியா ஆண்டோனோவ்ஸ்கி என்ற மணிமேகலை. இங்க வந்து பேரை மாத்திட்டேன்."

"குட்... நல்ல பேரா மாத்தி இருக்கீங்க!" (என்னை மாத்து மாத்துனு மாத்துவாய்ங்களே மேடம்!)

மணிமேகலையோடு ரூம் வந்ததும் சட்டென்று என் கை பிடித்துக் கலங்கினான் ஷக்தி.

"தேங்க்ஸ்டா!"

இவன் கரூர் பக்கம் ஜல்லிப்பட்டி. இவள் ரஷ்யா. கார்ல் மார்க்ஸ் பூமிக்கும் கே.சி.பழனிச்சாமி பூமிக்கும் கெமிஸ்ட்ரி எப்படி?

"ஃப்ளைட் ஏறி வந்தா நண்பா என் வாழ்க்கையில..." - ஃப்ளாஷ்பேக் சொல்ல கிடார் தேடினான் ஷக்தி. "ஸாரிடா, தேங்கா எண்ணெய் தீர்ந்து மூணு நாளாச்சு... நீ நேரா மேட்டருக்கு வா!"

ஃப்ளாஷ் பேக் இதுதான்...

தொடர் கதை: ஒன்று

பிசினஸ் நிமித்தம் ஏதோ இன்டர்நேஷனல் எக்ஸிபிஷனுக்கு மாஸ்கோ ஃப்ளைட் ஏறினான் ஷக்தி. ஸீட் பெல்ட் போட்டு நிமிர்ந்தால்... பக்கத்து ஸீட்டில் சோபி. மேகக் கூட்டங்களுக்கு நடுவே

பரஸ்பர அறிமுகத்தில் ஷக்தி ஒரு தமிழன் எனத் தெரிந்ததுதான் முதல் கியர். திராவிட இயக்கங் களைப்பற்றிய ஆராய்ச்சிக்காக தமிழ் நாட்டுக்கு வந்து திரும்பும் ரஷ்யப் பெண் சோபி. கலைஞர் முதல் கபிலன் வரை ரஷ்யப் பொண்ணு போட்டுப் பொளந்ததில் கரூர்க்காரன் காலி.

ஆக்சுவலி... நம்ம ஷக்திக்கு அழகிரி - ஸ்டாலின் இருவரில் யார் அண்ணன் என்பதே அடிக்கடி மறந்து போகும். ரொம்ப காலமாக ஆர்.எம்.வீரப்பனை, ஆர்.எம்.கே.வி. ஓனர் என்று நினைத்த உணர்வாளன். வீரமா முனிவரைப்பற்றி அவள் பேச, விஜயகாந்த்தான் இனி எதிர்காலம் என இவன் பேச... தடதடவென அவள் தமிழ் பாய, சடசடவென இவன் குடை சாய... மாஸ்கோ ஏர்போர்ட்டில் இறங்கும்போது செம ஜெல்!

தன் வீட்டுக்கு அவனை அழைத்துப் போனாள் சோபி. அது விக்ரமன் படக் குடும்பத்தின் வெள்ளை ஜெராக்ஸ். 'வானத்தைப் போல' வெள்ளை விஜயகாந்த்தாக அப்பா. 'சூர்ய வம்சம்' ரோஸ் தேவயானியாக அம்மா. முறுக்கு, அதிரசம், இட்லி உப்புமா, வாழைப் பழத்துக்குப் பதில் நூடுல்ஸ், பர்கர், ஒயின்!

ஒரு வாரம் கழித்து ஷக்தியை ஃப்ளைட் ஏற்ற வந்த சோபி, ஏர்போர்ட் வாசலில் தன் காதலைச் சொன்னாள்.

'ஆதிக் காதல் அதிலோர் துளியில்

தேசம் அதை விரலில் துடைப்போம்

நேசம் அதை உயிரில் வளர்ப்போம்'

-என எழுதிக் கொடுத்தாள்.

ஷக்திக்கு புத்தியில் பூ பூத்தது. 'லெனின் தேசத்தில்... ஐஸ்வர்யா - ஒளவையார் - அன்னை தெரசா மூவரையும் பார்த்துவிட்டேன் உன் வடிவில், இனி என் வாழ்வு உன் மடியில்!'-என ஷக்தி எழுதிக் கொடுத்த ஆ.கோ கவிதையால் சோபிக்கு வெட்கம் பூசியது. கரூரில் ஆரஞ்சு பழுத்து, ரஷ்யாவில் பருத்தி வெடித்தது. வரும்போது அவனுக்கு அலுமினிய விமானம், அன்னப் பட்சி ஆனது!

சில மாதங்களுக்குப் பிறகு, சோபி, சென்னை வந்திருக்கிறாள். மெரினாவில் சுண்டல் வாங்கித் தந்து, மேன்ஷனில் சின்னக் குத்தூசியைப் பார்க்க அழைத்துப் போனான் ஷக்தி. போத்தீஸில் புடவை எடுத்துத் தந்து, ஹபிபுல்லா சாலையில் அறிவுமதியுடன் சூடான விவாதம். சந்திரா பவனில் அடை அவியல் சாப்பிட்டுவிட்டு, டிரஸ்ட்புரம் வீட்டில் வைரமுத்துவோடு தேநீர்.

"பறவைகளுக்கு பாஸ்போர்ட் ஏது? காதலுக்கு விசா எதற்கு?" என்ற வைரமுத்துவின் கர்ஜனையைக் கேட்டு இருந்தால், கரூர் வகையறாக்கள் உஷாராகி இருந்திருக்கலாம்!

அடுத்த எகிறலாக, சோபியை ஜல்லிப்பட்டிக்கு அழைத்துப் போனான் ஷக்தி. இத்தனை அழகுத் தமிழ் பேசுகிற ரஷ்யப் பெண்ணா? திருக்குறள்

முதல் தி.மு.க வரை பேசிய ரஷ்ய மணிமேகலையை ஷக்தி வீட்டில் எல்லோருக்கும் பிடித்துவிட்டது. அதிகாலை குளித்து, பாவாடை தாவணி அணிந்து, விளக்கேற்றி சாமி கும்பிட்டு, செல்லியம்மன் கோயிலில் மா விளக்கு போட்டால்... பிடிக்காதா பின்னே!

ஷக்தியின் மாமன் மகள் வயதுக்கு வந்தபோது, சடங்கு வைபவத்தின்போது ஷக்தியும் சோபியும் மான்டேஜ்களில் காதல் கபடி ஆடியதை முதன் முதலில் கண்டுபிடித்தவள், குத்தவெச்சு உட்கார்ந்து இருந்த அதே தவமணிதான்!

மறுநாளே... தென்னந்தோப்பில் ஷக்தியும் சோபியும் உம்மா கொடுத்ததை ஊர் பார்த்ததுதான் பிரச்னை. விஷயம் வீட்டுக்கு எட்ட... ஷக்தியின் அப்பாவுக்கு அருளேறியது!

ஆமா... நாங்க லவ் பண்றோம். இவளைத்தான் கட்டிக்கப்போறேன்" என ஷக்தி சொன்ன அடுத்த கணம், சோபியை ஆளாளுக்கு அடிக்கப் பாய்ந்தனர். ஷக்தியின் அப்பாதான் தடுத்து நிறுத்தி, "பாவம், அந்தப் புள்ள. அது கௌம்பட்டும்" என தன் காரிலேயே சென்னைக்கு அனுப்பிவைத்தார். "பொதுவா, நான் நல்லவன்தாம்மா. ஆனா, அது ஊர்ப் பிரச்னைகள்ல மட்டும்தான்... புரியுதா? நாளை காலையில் நீ இந்த நாட்லயே இருக்கக் கூடாது, கிளம்பு!" என எச்சரித்து அனுப்பினாராம்.

'செத்தாலும் இங்கேதான்' என சோபி சென்னையில் தங்கிவிட, ஷக்தியும் பின்னாலேயே எஸ்கேப்பாகி வந்துவிட்டான். அப்போதுதான் சமைஞ்ச தவமணிக்கு ஷக்தியைக் கட்டிவைக்க அங்கே அவர்கள் தயாராக, ஜோடிப் புறாக்கள் இப்போது என் வீட்டில். இருவரையும் தேடி (என்னோட சேர்த்தா... ஹாட்ரிக்!) பொலி போட, சென்னை மாநகருக்குள் அலைகிறது ஜல்லிப்பட்டி குரூப்.

"சரி... ஒண்ணும் பயப்படாதீங்க. பார்த்துக்கலாம் ரெஸ்ட் எடுங்க!" என்றேன். (ஆக்சுவலா, இந்த டயலாக்கை எனக்குத்தான் அவங்க சொல்லணும். அந்த அளவுக்கு பதற்றமாக இருந்தேன். லேசா ஒரு கொத்து கொத்திட்டுப் போனாய்ங்கன்னாக்கூட செலவு அள்ளிரும். மெடிக்ளைமோ, கலைஞர் காப்பீட்டுத் திட்டமோகூட நம்மகிட்ட இல்லையே பாஸ்!)

சார் உங்களைத் தேடி யாரோ வந்திருங்காங்க..." - அபார்ட்மென்ட் செக்யூரிட்டி வாசலில் வந்து நிற்க, எனக்குக் கிறுகிறுத்தது. ஷக்தி பதற்றமானான். "கூல்டா... பார்த்துட்டு வர்றேன்" என்றபடி கீழே வந்தேன்.

பளீர் கதர் வேட்டி - சட்டையில், 'சிங்கம்' சூர்யாவின் மீசையோடு சிவகுமாரே வந்தால் எப்படி இருக்கும்? அப்படி இருந்தார் ஒருவர். கூடவே,

அஞ்சாறு ஆட்கள்.

"தம்பி நீங்கதான் பிரகாஷா..?"

"ஆமாங்க... நீங்க..."

"ஏந்தம்பி... இந்த ஷக்தி உங்களைப் பாக்க வந்தானா?"

"எந்த ஷக்திங்க?"

"அதான், உங்ககூட கொஞ்ச நாள் வேலை பார்த்தானேப்பா, ஷக்தின்னு செவப்பா கரூர்ப் பையன் ஒருத்தன்."

"ஓ... ஆமா. அது ரொம்ப வருஷம் இருக்குமே சார். சொல்லுங்க என்ன விஷயம்.?"

"நான்தான் அவன் அப்பா!"

"ஐயோ... மேல வாங்க சார். ரோட்ல நிக்கவெச்சுப் பேசிட்டு இருக்கேன்."

"பரவால்ல தம்பி... ஒரு பிரச்னை. இந்த ஷக்திப் பய ஒரு பாரீன் பொண்ணை லவ் பண்ணிட்டான். ரெண்டும் இங்க மெட்ராஸ்லதான் சுத்திட்டுத் திரியுதுக. வீடு வீடா, ஹோட்டல் ஹோட்டலாத் தேடிட்டு இருக்கோம். அப்பிடி அவன் இங்க வந்தாலோ, அவனைப்பத்தித் தகவல் தெரிஞ்சாலோ, புத்தி சொல்லி அனுப்புங்க. எனக்கும் கொஞ்சம் தகவல் குடுங்க தம்பி..."

"நல்ல பையனாச்சே ஷக்தி. நீங்க சொல்றது ஷாக்கிங்கா இருக்கு சார். பட், என்கூட இப்போ அவன் டச்லயே இல்லியே சார். அப்புறம்... என் அட்ரஸ்... எப்டிக் கிடைச்சது சார்?"

"ம்... அரசியல்ல இருக்கோம்ல தம்பி' எனப் பார்த்தவர், "கல்யாணம் ஆயிருச்சா?" என்றார்.

"இல்ல சார், பேச்சிலர்ங்க. வீட்ல தங்கச்சி இருக்கு. அதுக்கு கல்யாணம் பண்ணிட்டுத்தான் யோசிக்கணும்ங்க" என்றேன்!

அவர்கள் கார் ஏறிப் போக, எனக்கு இதயம் பழையபடி துடித்தது. மேலே ஓடினேன். இரண்டு பேரும் ஜன்னலில் கீழே பார்த்தபடி நின்று இருந்தார்கள்.

"போயிட்டாங்க... ஒண்ணும் பிராப்ளம் இல்லை..."

"பார்த்தியாடா, எங்க ஃபேமிலி ஆட்கள் எவ்ளோ பயங்கரமானவங்கன்னு..." என ஷக்தி சொல்ல, "ஐயைய்யோ, உங்க அப்பா சாஃப்ட்டாக் கேட்டதால,

சமாளிச்சேன் ஷக்தி. என் பொடனியில சாத்தி இருந்தா, உடனே கூட்டி வந்து, உங்களைப் பிடிச்சுக் கொடுத்திருப்பேன்" எனத் தலை உதறினேன். உடனே எழுந்த சோபி உள் ரூமில் புகுந்துகொண்டாள்.

"ஷக்தி, இவ்ளோ பிராப்ளத்துக்கு நடுவுல இப்போ உங்க கல்யாணம் நடக்கணுமா? சோபி அவங்க நாட்டுக்குப் போகட்டும். நீ உங்க ஊருக்குப் போ. கொஞ்ச நாள் விஷயத்தை ஆறப்போடுங்க. எதையும் யோசிச்சுப் பண்ணலாம். நான் நல்லதுக்குத்தான் சொல்றேன்..."

ஏதோ சத்தம் கேட்டு எட்டிப்பார்த்தால்... சோபி விசும்பி விசும்பி அழுதுகொண்டு இருந்தாள். ஷக்தி ஓடிப்போய் அவளைக் கட்டிக்கொண்டான். சோபி அடக்க மாட்டாமல் தேம்பித் தேம்பி அழுதாள். நான் அதிர்ந்து நின்றேன்.

எங்கோ ரஷ்யாவில் பிறந்த ஒருத்தியை, இந்தியாவில் இந்த ஜல்லிப்பட்டிக்காரனுக்காக, சென்னையில் ஒரு நண்பன் வீட்டில் உட்கார்ந்து அழவைக்கிற காதல் எவ்வளவு மகத்தானது! நிலமும் நிறமும் கடந்த இந்தப் பேருணர்ச்சிதானே மானுடத்தின் உச்சம்! இந்த அன்புக்கு நான் என்ன செய்யப்போகிறேன். அவர்களின் அன்பை அங்கீகரிப்பது தவிர?

ஷக்தி... உங்க ரெண்டு பேருக்கும் நாளைக்குக் கல்யாணம்" என்றேன். சோபி தேம்பித் திரும்பினாள். ஷக்தி படபடத்தான்.

"எப்பிடிடா?"

"பண்றோம்டா!"

"மச்சான், நான் ஹிண்டு... இவ கிறிஸ்டியன். நான் இண்டியன்... இவ ரஷ்யன். ரிஜிஸ்டர் மேரேஜ்னா, நிறைய சட்டச் சிக்கல் இருக்குடா!"

"சர்ட்டிஃபிகேட்ஸ், பாஸ்போர்ட் இருக்குல்ல. கவலையைவிடு! மச்சான், வெளக்கமாறு மெஷின் வித்த மாணிக்கமா மட்டுமே என்னை நினைக்காதே. சென்னையில எனக்கு இன்னொரு பேர் இருக்கு... மாணிக் பாட்ஷா!" என்றதும், ஷோபியே சிரித்து விட்டாள். காமெடி பீஸ்தான் என்றாலும், காரியத்தில் இறங்கினேன்.

"எனக்குத் தெரிஞ்ச ஒரு பிரஸ் ரிப்போர்ட்டர் இருக்கார். எக்ஸ் சர்வீஸ் மேன். சினிமா ரிப்போர்ட்டர்தான். ஆனா, சிட்டியைக் கலக்குவார். அவரை வெச்சு முடிப்போம்."

பிரஸ் அண்ணனுக்கு போன் போட்டேன். "சொல்லு தம்பி... சோனா பிரஸ்மீட்ல இருக்கேன்..."

"ஐய்யே, அசிங்கமாப் பேசாதீங்கண்ணே. அப்புறமாக் கூப்பிடுறேன்."

"சரியாத்தானப்பா சொன்னேன். லைன் கிளியரா இல்லியோ?" எனக் குழம்பியவரிடம் சிரிப்பை அடக்கிக்கொண்டு, விஷயத்தைச் சொன்னேன்.

"அது பண்ணிரலாம்ப்பா. கல்யாணத்துக்கு நமீதாவைக் கூப்பிட்ருவோமா? ஈவினிங் பேப்பர்ல கலர் போட்டோவோடு, பேனர் நியூஸே போடுவான்."

"அண்ணே, ரகசியம்... ரகசியம்!" என்றேன்.

ஏகமாக அலைந்து, அண்ணா நகர் குட்டி சர்ச் ஒன்றில் அனுமதி கிடைத்தது. ஒரு வேன் பிடித்து மாப்பிள்ளை - பெண்ணை ஸீட்டில் படுக்கவைத்து ஒளித்து, சர்ச் அழைத்துப் போனோம். மஞ்சள் வெயில் அந்தியில் 'கர்த்தர் வாழ்கின்றார், காதல் நெஞ்சத்தில்...' என இடை வழிந்த சிறிய தேவாலயத்தில் ஷக்தி - சோபி மோதிரம் மாற்றி, இல்லறத்தைப் பதிவு செய்தார் கள். என் வாழ்வில் அப்படி ஓர் எளிமையான திருமணம் பார்த்ததே இல்லை.

வேனில் அப்படியே பூந்தமல்லி தாண்டிப் போய், பெங்களூரு பஸ்ஸில் அவர்களை ஏற்றிவிட்டோம். தன் காலேஜ் சீனியர் ஒருவன் இருக்கிறான் என அடுத்த இலக்கைச் சொன்ன ஷக்தி, "தேங்க்ஸ்ரா..." எனக் கை பிடித்தான்.

"நன்றிண்ணா" என்றாள் சோபி.

"மறக்கவே மாட்டோம்... பைடா!"

ஆனால், மறந்துபோனார்கள். அதுதான் கடைசி. அப்புறம் நான் இரண்டு கம்பெனிகள் மாறி, என் போன் நம்பர் மாற்றி ஒரு வருடம் ஆகிறது. ஷக்தியோடு தொடர்பே இல்லை. எங்கே, எப்படி இருக்கிறார்கள் என எதுவும் தெரியாது. இன்று ஏதோ ஒரு நம்பரில் இருந்து போன்!

தொடர் கதை: ஒன்று

யாருப்பா... பிரகாஷ்தான..?"

"ஆமாங்க!"

"உன் தங்கச்சி இப்போ வீட்ல இருக்காதே?"

"ஹலோ..." என்றேன் கோபமாக!

"ஹஹஹா... தூக்கிட்டோம்ல. எதுவானாலும் நேர்ல வா... பேசிக்கலாம்!"'

"ஹலோ... யாரு... யாருங்க நீங்க?" - என் உடம்பு அதிர்ந்தது.

"டேய், அண்ணன்காரன்தான நீ? உங்கிட்ட பேசணும்ல... முடிஞ்சா, இந்த அட்ரஸுக்கு வா!" என்றது குரல். தஞ்சாவூர் அட்ரஸ்.

பட்டென்று லைன் கட்டானது. ஊரில் வீட்டுக்கு போன் அடித்தால் ஃபுல் ரிங் போய் போய் மௌனமானது. என்ன ஆச்சு? கோபமும் வேகமுமாக தலை திகுதிகுக்க உடனடியாக கார் பிடித்தேன்!

அந்த அட்ரஸைக் கண்டுபிடித்து கதவைத் தட்டினால், திறந்தது ஷக்தியின் அப்பா.

எனக்குப் பயம் தொண்டையில் இருந்து கெண்டைக் காலுக்கு உருண்டது.

"நீயா? வா வா வா வா. எதிர்பார்க்காத இடத்தில், எதிர்பார்க்காத ஆளைச் சந்திக்கிறேன்..."

"சார்... சார், என் தங்கச்சி..?"

"என்னது? அன்னிக்கு எனக்கு ஒரு பிரச்னைன்னு உன் வீட்டு வாசலுக்கு வந்து நின்னப்ப, எங்க வீட்டுப் பையனை எவளோ ஒருத்தியோடு உன் வீட்டுக்கு உள்ளே வெச்சுட்டு இல்லைன்னு சொன்னவன்தானே நீ? இன்னிக்கு உங்க வீட்டுப் பொண்ணுக்கு ஒரு பிரச்னைன்னதும் பதறி வந்து நிக்கிறியோ?"

"சார்... ப்ளீஸ் அது தப்புதான். அன்னிக்கு எனக்குப் புரியலைங்க... புத்தி இல்லாமப் பண்ணிட்டேன் சார். அது எதையும் மனசுல வெச்சுக்காதீங்க. என் தங்கச்சி பாவம் சார்... அறியாத வயசு... அவ ஒரு குழந்தை சார்."

"எதைடா மனசுல வெச்சுக்கக் கூடாது, மறந்துருனு சொல்றே?"

"சார்... ப்ளீஸ், சார்... உங்க கால்ல விழறேன் சார்."

"இருப்பா... தவிச்சுப் போய் வந்திருக்கே. ஏய் புள்ள..." என உள்ளே பார்த்தார்.

என் தங்கை வந்தாள் மௌனமாக. கூடவே, என் அம்மாவும் அப்பாவும் அமைதியாக.

தொடர் கதை: ஒன்று

கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது எனக்கு.

"ஏய் புள்ள" என்றார் மறுபடியும்.

தழையத் தழையப் புடவை கட்டி, வகிடு வரை குங்குமம் பூசி, காபி கொண்டுவந்தது... சோபி.

"பயந்துட்டியா பிரகாஷ§, ஊரு உலகம்எல்லாம் தேடினாலும் ஷக்திக்கு இப்பிடி ஒரு பொண்ணை நாங்க பார்த்து இருக்க முடியாது. அவ்ளோ நல்ல பொண்ணுப்பா சோபி. எல்லாம் மறந்து நாங்க ஒண்ணா சேர்ந்துட் டோம். தலை தீபாவளி கொண்டாட, மகனும் மருமகளும் வந்துட்டாங்க. கல்யாணம் பண்ணிவெச்சவராச்சே நீங்க. உங்களையும் கூப்பிடணும்ல. வாய்யா தம்பி!"-எழுந்து என்னைக் கட்டிக்கொண்டார்!

"தங்கச்சிட்டதான் உன் புது நம்பர் வாங்கினேன். அப்பாவே பேசுறேன்னாரு" என எக்கச்சக்க ஸாரி சொல்லியபடி சிரித்தான் ஷக்தி!

தொடர் கதை: ஒன்று
தொடர் கதை: ஒன்று
(இன்னும் ஒன்று...)