Published:Updated:

தொடர் கதை: ஒன்று

தொடர் கதை: ஒன்று

தொடர் கதை: ஒன்று
தொடர் கதை: ஒன்று
தொடர் கதை: ஒன்று

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
இருவன்
ஒவியங்கள்:ஸ்யாம்
தொடர் கதை: ஒன்று

சீனிவாசனை தமிழக முதலமைச்சராகப் பார்க்க ஆசைப்பட்டால்... அவனின் முதல்

கையெழுத்து... நாஞ்சில் நாடனை தமிழக அரசின் தலைமைச் செயலராக நியமிப்பதாகத்தான் இருக்கும். காரணம்... டாஸ்மாக்!

6000 என்பது கடும் சாராயத்தின் புனை பெயர் குடுவை. மூன்றை முழுங்கி இருந்தான் சீனு. நீங்கள் ஏஞ்சலினா ஜோலியாக இருந்தாலும் சரி, சீனு

உங்கள் போனை அட்டென்ட் பண்ண மாட்டான்!

ஆனால், அப்போது போதை!

மொபைலில் சரண் ஒளிர்ந்தான். உலகின் எந்த மூலையில் சீனு சரக்கு வாங்கினாலும் 'முதல் மரியாதை' சிவாஜி மாதிரி சரணுக்கு விரல் நடுங்கி, இமை துடிக்கும்.

"சீனு எங்கடா இருக்க?" என்றான் ஏகப்பட்ட எனர்ஜியுடன்.

"ஹலோ... யாரு? கௌதம் மேனன் ஹியர்!"

"ஹிஹி... மச்சான் எங்கடா இருக்க?"

"இதென்ன கேள்வி... நியூயார்க்லதான்!"

"அய்யே... கே.கே நகர் ஹவுஸிங் போர்டு ஒயின்ஷாப்பா? வந்துட்டே இருக்கேன். என்னா ஓடுது? ஜெகத்ரட்சகனா... சசிகலாவா?"

"போடா டவுசர். கையில காசு இல்லாம கல்யாண மண்டபம் தேடிட்டுத் திரியுறேன்... தயவு செஞ்சு வந்துராத மச்சான்!"

அயன் வண்டி அண்ணாமலை உள்ளே வந்தான்.

தொடர் கதை: ஒன்று

"என்ன சீனு... ரெகுலரா ஓடுது?"

"என்ன பண்றது? கவர்மென்ட்டே ஒரு பக்கம் டாஸ்மாக்காத் திறந்துவிட்டாய்ங்க. இன்னொரு பக்கம் கௌதம் மேனன் படமா ரிலீஸ் பண்றாய்ங்க... குடிக்காம என்ன பண்றது?"

குளுமை ஏறி குஜாலாக வெளியே வந்தான். ரெண்டு குவார்ட்டர் பிடித்து இடுப்பில் சொருகும்போது, எதிரே அஞ்சு வருஷமாக ரிலீஸ் ஆகாமல் கிடக்கும் சத்யராஜ் பட டைரக்டர், விஜயகாந்த் கண்களோடு நின்றுஇருந்தார்.

"சீனு... 'மைனா' ப்ரிவ்யூ பார்த் தேன்டா. கலக்கிட்டாங்க. ரொம்ப டிஸ்டர்பா இருக்கு. வர்றியா... ஒரு ஒன் லைன் சொல்றேன்."

"நானுந்தான் இன்னிக்கு கலைஞர் டி.வி-யில பத்தாவது தடவையா 'பருத்தி வீரன்' பார்த்து டிஸ்டர்பா இருக்கேன். உள்ள போங்க. நீரவ் ஷா அசிஸ்டென்ட் உட்கார்ந்திருக்கான். பாக்கெட் பொடைப்பா இருக்கு. பார்த்துப் போங்க... பக்கத்து டேபிள்ல பாலா அசிஸ்டென்ட்ஸ் உக்கார்ந்திருக்காய்ங்க... கொரவளையைக் கடிச்சுருவாய்ங்க."

நிலா கடையில் முட்டை பரோட்டா பார்சல் சொன்னான். பார்சல் வருவதற்குள் கொஞ்சம் சீனு.

தஞ்சாவூர் பக்கம் கிராமம். ஒரு மொக்க தெலுங்குப் படத்தில் அசிஸ் டென்ட்டாக வேலை பார்த்துவிட்டு, சென்னையில் வாய்ப்புக்குத் திரியும் புலியூர் பேச்சிலர். ஜெனிலியாவைக் காதலித்துக் கல்யாணம் பண்ண, ஒரு ஹீரோயின் ஸ்க்ரிப்ட் வைத்திருக்கிறான். தேவயானிகளுக்கு ராஜ குமாரன்கள் கிடைக்கும் உலகத்தில்... இது சாத்தியம்தானே!

ஆனால், விதி வலியது. படப்பிடிப்புகளில் ரிச் கேர்ள்ஸ்கூட, சீனுவை புரொடக்ஷன் பாய் என நினைத்து, வெட் க்ளாத் கேட்கிறார்கள். ஒருமுறை கேரவனில் த்ரிஷாவை க்ளோஸில் பார்த்து உதடு துடித்தது. சீரியல் ஷூட்டிங் ஒன்றில் மாமியார் நளினிக்கு டயலாக் சொல்லும்போதும் கால்கள் வெடவெடத்தன.

பார்சலை வாங்கும்போது மொபைல் ரிங்கியது. ஏதோ புது நம்பர். எடுத்தால், "ஹெல்லோ பிரகாஷ்..." - பெண் குரல். சீனுவின் இதய மாடத்தில் ஒரு புறா படபடத்தது. சாதாரணமாக வங்கிகளில் இருந்து லோனுக்குப் பேசும் பெண் குரல்களுக்கு எல்லாம் குடல் சிலிர்ப்பது சீனுவின் குல வழக்கம்.

"ஹேய் பிரகாஷ்..."

"பிரகாஷா..? அப்படி யாரும் இங்கே இல்லையே..."

"ஹேய்... குடிச்சிருக்கியா? டோன்ட் ப்ளே வித் மீ பிரகாஷ். எனக்கு அழுகை அழுகையா வருது..."

"யாருங்க நீங்க... ஹலோ, இது ராங் நம்பர்ங்க!"

"இதோ பாரு... இப்போ நான் எங்கே இருக்கேன் தெரியுமா? கொடைக்கானல் சூஸைட் பாயின்ட்ல. என்னென்னவோ பேசி, என்னை ஏமாத்திட்டல்ல. இங்கேஇருந்து குதிச்சு செத்துப் போறேன் போ. அப்போ தெரியும் என் அருமை உனக்கு..."

தொடர் கதை: ஒன்று

சீனுவுக்குப் போதை கலைந்து, பூச்சி பறந்தது.

"ஹழ்ழ்லோ மேடம்... கரெக்ட் நம்பர் போடுங்க. இது ராங் நம்பர்ங்க..."

"கெட் லாஸ்ட் ராஸ்கல். இப்போகூட நீ காமெடி பண்றேல்ல. அடையாளம் தெரியாமப் போயிரலாம்னு நினைச்சேன். இப்போ என் மொபைலை இங்கேயே விட்டுப் போறேன். லாஸ்ட் கால் பார்த் துட்டு, போலீஸ் வரும். அப்போவாவது நம்ம லவ் இந்த உலகத்துக்குத் தெரியட்டும். உன்னை நாசம் பண்ணிட்டுத்தான்டா போவேன்!"

சட்டென்று லைன் கட்டாக, சீனுவின் தலைக்குள் 'எந்திரன்' செகண்ட் ஆஃப் ஓடியது. அதிர்ந்து போய், அந்த நம்பரை மீண்டும் தட்டினான். 'த சப்ஸ்கிரைபர்... ' என்று ஒரு முழு நீள வாக்கியம்.

ரூமுக்கு வந்து அதிர்ச்சி விலகாமல் 'சலப்'பென்று ஒரு கல்ப் அடித்தான். என்னடா இது புது எழவு... அதிகாலையில் போலீஸ் வந்து பொடங்கையில் அடித்து, புழலுக்கு பார்சல் கட்டுவதை சன் நியூஸில் லைவ் பண்ணுவானே!

முதல் படம் ஹிட், ஸ்விஃப்ட் கார், விகடன் பேட்டி, ஃபிலிம்பேருக்கு வெள்ளை குர்தா, கேன்ஸுக்கு க்ரே கோட், ஆஸ்கருக்கு ப்ளாக் ஷெர்வானி... எல்லாம் போச்சு. எல்லாவற்றையும்விடக் கொடுமை, சக அசிஸ் டென்ட் டைரக்டர்கள் இதையே ஒரு கதை பண்ணி க்ளவுட் நைனிலோ, ரெட் ஜெயன்ட் டிலோ சொல்லி, டைரக்டராகும் வாய்ப்புகள் வேறு பிரகாசமாக இருக்கின்றன.

தலை உதறி அந்த நம்பருக்கு லைன் போட்டால், ஸ்விட்ச்டு ஆஃப். 'டோன்ட் மிஸ்டேக் மீ... நீங்க நினைக்கிற ஆள் நான் இல்லைங்க' என மெசேஜ் தட்டினான். 'அடப் பாவி... நீயே ஆதாரம் தட்றியா... சிக்கிட்டியேடா சீனு' என போதையைத் தாண்டி பயம் கவ்வியது. நிலைகொள்ளாமல் சரணிடம் சரண் அடைந்தான். பின்னணியில் இசை அதிர எடுத்து, "சொல்லு மச்சான்..." என்றான்.

"டேய் ரூமுக்கு வர்றியா... ஒரு மேட்டர்டா..."

"நான் ஏ.ஆர்.முருகதாஸ் பேசுறேன். என்ன வேணும்?"

"மச்சான், உனக்கு ஒரு குவார்ட்டர் இருக்குடா..."

"ஓ அப்டியா..? பட்... இங்க ஃபுல்லே ஓடிட்டு இருக்கே. குட் நைட்... ஹாட் ட்ரீம்ஸ்!"

கொந்தளிப்பில் கொத்து பரோட்டாவில் கோலம் போடும்போது, மறுபடி அந்த ராங் நம்பரில் இருந்து போன், படபடப்பாக எடுத்தேன்.

"ஹல்... ஹல்ழோ..."

"ஹலோ, பக்கத்துல இருக்குற பிரகாஷ்ட்ட போனைக் குடுங்க..."

"ஒரு நிமிஷம் நான் சொழ்றதைக் கேழுங்க. முதழ்ழ, சத்தியமா நான் பிரகாஷ் இழ்ழ. பட், நீங்க எமோஷனழ்ழ ரொம்ப தப்பான முடிவு எடுத்துருக்கீங்கனு மட்டும் தெரியுது."

"ஐ டோன்ட் கேர்!"

"ப்ளீஸ்! சொல்றதைக் கேளுங்க... லவ் மட்டுமே லைஃப் கிடையாது. அது ஒரு ஃபீலிங் அவ்வளவு தான்... மழைச் சாரழ்ழ நனைஞ்சா... சந்தோஷமா இழுக்கு, ரயில் கூவழுதைக் கேட்டா... சோகமா இருக்கு. இதெல்லாம்தான் வாழ்க்கை. தோட்டத் துல பூக்குழ ஒரு பூச்செடியோ, கூடத்துல நிக்கிற நாய்க் குட்டியோகூட நம்மளைப் புதுசா ஆக்கிழும். மனசுக்கும் புத்திக்கும் மத்தியிழ வண்டி ஓட்டணும். தட்ஸ் ஆல்!" என முதல் படத்துக்கு எழுதிவைத்து இருந்த டயலாக்கை எல்லாம் ஆர்.ஆர். இல்லாமல் அள்ளி வீசினான்.

தொடர் கதை: ஒன்று

எதிர் முனையின் மௌனத்தில், மூச்சு முட்டியது. கொஞ்ச நேரத்தில் சட்டென்று அந்த மௌனமும் முறிந்தது. மறுபடி முயற்சித் தால் ஸ்விட்ச்டு ஆஃப். தொண்டை கமறி, முட்டை பரோட்டா சிதறி, குழப்பமும் மயக்கமும் கும்மியடிக்க... உறங்கிப்போனான்.

காலையில் விழித்தவுடன் காலி பாட்டில் கண் சிமிட்ட, கோலி உருண்டது வயிற்றில். வாரிச் சுருட்டி மொபைல் எடுத்தால், 'ஒன் மெசேஜ் ரிசீவ்டு'. அதே ராங் நம்பர்.

'நன்றி ராங் நம்பரே! - நீ இல்லையென்றால்... நான் இறந்திருப்பேன். உனது வார்த்தைகளால் உயிர் வாழ்கிறேன்'- திவ்யா

படபடப்பாக போன் தட்டினான்.

"ஹலோ... திவ்யா?"

"ஹாய் ஸாரி. நேத்து தெரியாம உங்களை டிஸ்டர்ப் பண்ணிட்டேன். ரொம்ப நெர்வஸா இருந்தேன்... அதான். பட், நீங்க சொன்ன

விஷயம் என்னைத் தூங்கவே விடலை. இப்போ தெளிவாயிட்டேன். ரொம்ப தேங்க்ஸ்... உங்க பேரு?"

"நான் சீனு. லிங்குசாமி அசிஸ்டென்ட்டுங்க. அருள்நிதிக்கு ஒரு கதை சொல்லி இருக்கேன். பவர்ஃபுல் ஸ்க்ரிப்ட். ஆக்ஷன் சப்ஜெக்ட். பட், செமத்தியா ஒரு லவ் டிராக் இருக்குங்க. பை தி பை... நேத்து தூக்கமே போச்சுங்க. தேங்க் காட்... நீங்க ரியலைஸ் பண்ணதே பெரிய விஷயங்க!"

"ம்... நேத்து இருந்த டென்ஷன்ல சொல்லணும்னு தோணலை. இப்போ தோணுது. உங்க வாய்ஸ் ரொம்ப ஸ்வீட்டா, கான்ஃபிடென்ட்டா இருக்கு சீனு!"

"ஹிஹ்ஹிஹி... ரொம்ப தேங்க்ஸ்ங்க!"

"முன்னாடியே உங்களை மீட் பண்ணி இருந்தா, லைஃப் இன்னும் நல்லா இருந்திருக்கும்!"

"ஹிஹிஹிஹிஹி..."

"ஓ.கே-ப்பா... டாடி வந்துட்டாரு. அப்புறமாக் கூப்பிடுறேன்."

சடக்கென்று வந்து விழுந்த அந்த 'ஓ.கே-ப்பா' சீனுவின் சரீரத்தில் சாக்லேட் பேப்பர் சுற்றியது. ஓவர்நைட்டில் ஒரு வாழ்க்கை ஸ்க்ரிப்ட்டில் இத்தனை ஸீன்களா?

10 மணிக்கு பொங்கலைப் போட்டு போனைப் பார்த்தால், திவ்யாவின் மிஸ்டு கால்.

"ஹலோ... கால் பண்ணி இருந்தீங்களா?"

"ஸாரி... பிஸியா இருக்கீங்களா? டிஸ்டர்ப் பண்ணிட்டேனா? இப்போ தான் மேகி சாப்ட்டேன். நீங்க சாப்ட்டு ஆச்சா?"

"ம்... இப்போதான் ஜிம்ல இருந்து

வந்தேன். எய்ட் பேக்ஸ் வைக்கலாம்னு..."

"ஓ... தட்ஸ் கிரேட்!"

"தேங்க்ஸ்ங்க... சும்மாதான். ஸ்ட்ராங்க் பாடி இஸ்... ஸ்ட்ராங்க் மைண்ட்ங்க!"

"சூப்பர். இப்போதான் குளிச்சுட்டு வந்தேன். ஆமா, உங்க முதல் படம் பத்தி சொல்லவே இல்லியே..."

பாரதிராஜா துவங்கி, பாண்டி ராஜ் வரைக்கும் பலப்பல காதல் கதைகள் அரை மணிக்கு ஒரு முறை சொன்னான் சீனு.

ஹைய்யோ... ஐ லவ் சினிமா. ஏம்ப்பா, உன் முதல் படத்துக்கு எனக்கு டிக்கெட் தருவியா?"

தொடர் கதை: ஒன்று

"ஏங்க... ஆடியோ ரிலீஸுக்கு நீங்கதாங்க சீஃப் கெஸ்ட்!"

"இப்போ இப்படித்தான் சொல்வீங்க. அப்புறம் கண்டுக்கவே மாட்டீங்க. இந்த பாய்ஸே இப்படித்தான்..."

சீனுவுக்கு ஜிவ்வென்றது.

"ஹலோ... நாங்கெல்லாம் அப்படி இல்ல... இப்ப டில்லாம் பேசறதா இருந்தா, போனை வைங்க..."

"ஹேய் ஸாரி... கோச்சுக்காதப்பா! ஓ.கே. மம்மி வந்துட்டாங்க அப்புறம் கூப்பிடுறேன்."

மண்டை காயும் மதியம், வடபழனி சிக்னலில் நிற்கும்போது திவ்யாவின் மெசேஜ். 'டி.வி.டில 'விண்ணைத் தாண்டி வருவாயா' பார்த்தேன். உன் ஞாபகமாவே இருக்குடா இடியட்!'

சீனுவுக்குள் பரவச பபுள்ஸ் கொப்பளித்தது. 'நீ ஜெஸ்ஸியா... ஜெனிலியாவா?' என ரிப்ளை தட்டி னான். 'பட்டுப் பூச்சி வந்தாச்சா... மேகம் உன்னைத் தொட்டாச்சா' எனப் பதில் வந்தது. 'மகாலிங்கம் மெஸ்' கலைஞர் அரிசி பூக்குவியலானது. பைக், பாராசூட்டானது. கண்களில் யாரோ மிட்டாய்க் கடை போட்டார்கள். இதற்கு முன்பு ஒரு பெண் சீனுவிடம் இப்படிப் பேசியதே இல்லை. கண்ட வனையும் பார்த்துக் காது புகைந்தவனின் முள் காட்டில் இது முதல் மழை.

அந்த நாளின் முடிவில் திவ்யாவிடம் இருந்து இப்படி ஒரு மெசேஜ் வந்தது, 'ஒரு நாளில் இப்படி எல்லாம் ஆகுமா... உன்னிடம் எதையோ கேட்கச் சொல்லி என் மனசு நச்சரிக்கிறது. யோசித்தால்... அழுகையாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது!'

ஜென் கவிதை மாதிரி அனுப்பி இருந்தாள்.

தூக்கம் வராமல் நாலு தெரு நடந்து போய் தம் டீ போட்டான் சீனு. அன்று முழுக்க அந்த பிரகாஷைப் பற்றி சீனுவும் கேட்கவில்லை, அவளும் சொல்ல வில்லை.

அந்தக் காயம்தானே பிரியமாக மாறி இருக்கிறது. அதுசரி... திவ்யா எப்படி இருப்பாள்? இந்த இரவின் மேல் அவள் சித்திரத்தை வரைய வரைய... சந்தோஷமாக இருக்கிறது. திவ்யா... கடவுள் எனக்குத் தவறான எண்ணில் இருந்து அனுப்பிய சரியான பரிசே... சீக்கிரம் சந்திப்போம் குட்டிம்மா!

அடுத்த மூன்று நாட்களும் அமோகமாகப் போனது. தமிழ் சீரியல்களின் வெள்ளிக் கிழமை எபிசோடு மாதிரி ஒவ்வொரு அலைபேச்சும், குறுந் தகவலும் அன்பின் அடுத்தடுத்த கட்டத்துக்குத் தொடரும் போட்டன. ஒரே ஒருமுறை பிரகாஷைப் பற்றிக் கேட்டதற்கு, அவள் அழுதாள். அது அவன் அன்பை அதிகமாக்கியது. பார்வையற்ற பேரன்பன் சிற்பத்தைக் கைகளால் வருடி வருடி, விழிகளையும் சுழிகளையும் உணர்வதுபோல், திவ்யாவைக் கனவில் செதுக்கிக்கொண்டு இருந்தான் சீனு. இன்று கேட்டேவிட்டான்,

திவ்யா... நாம மீட் பண்ணலாமா?"

"ம்... அதுக்கு முன்னாடி நான் ஒண்ணு சொல்லவா?"

"ம்...."

"நான் ஒருத்தரை லவ் பண்றேன்?"

பதற்றமானான் சீனு. பிரகாஷ் ரீ-என்ட்ரியா?

"யாரை...ம்..?"

"ம்... க்ளூ வேணா தர்றேன். நான் இதுவரைக்கும் அவரைப் பார்த்தது இல்லை. லவ்வைச் சொல்லிட்டுதான் பார்க்கலாம்னு இருக்கேன். அப்புறம் அவர் பேரு செல்லமா ரெண்டெழுத்து... ஐயோ! மம்மி வந்துட்டாங்க... கூப்பிட்றேன்."

இதைவிட ஒரு பெண் எப்படிச் சொல்வாள்? சீனுவுக்கு ஜிவ்ஜிவ் ஜிவ்என்றது. திருதிருத்துத் திரிந்தவனின் நெஞ்சக் குளத்தில் சரண்தான் சந்தேகக் கல்லை விசிறினான். ஓசிக் குடிக்கு வந்தவன், மொத்த மேட்டரையும் கேட்டுவிட்டு நிமிர்ந்தான்.

"மச்சான்... முதல்ல அது பொண்ணுதானான்னே எனக்கு ஒரு டவுட் இருக்குடா. நண்பய்ங்க எவனாவது உன்னைக் கலாய்க்க குரல் மாத்திப் பேசி இம்சையைக் குடுக்கலாம்ல!" என் ஜாலி ஃபீலிங்கில் ஜல்லியைக் கொட்டினான்.

"ச்சே...சே அப்பிடி இருக்குமா மச்சான்?"

"இருக்கும்ரா... போன வாரம் எனக்கு ஒரு கம்னாட்டி போன் போட்டு, இந்த மொபைல் நம்பருக்கு குலுக்கல்ல எல்.சி.டி டி.வி விழுந்திருக்கு. சிட்டி சென்டருக்கு ஈவ்னிங் 6 மணிக்கு வந்தா வாங்கிக்கலாம்னான். நம்பிப் போனா... நம்ம டோரி முத்து. 'சிக்குனியா சிக்குனியா'ன்னு பிராண்டி எடுத்து, கே.எஃப்.சி சிக்கன்ல 500 ரூவா தாளிச்சுட்டான்."

சீனுவுக்குச் சுருக்கென்றது.

"குரலைக் கேட்டா அப்பிடித் தோணவே இல்லையே மச்சான்..."

"சரி, இந்த மேட்டரை என்ட்ட விடு... நான் கண்டுபிடிக்கிறேன். அது என்னா மாதிரி பார்ட்டின்னு கரெக்டா வாட்ச் பண்ணி அடிக்கிறேன்..." என்றவன், இன்னும் சில கொக்கிகளைப் போட்டான்.

"உனக்கு போன் பண்ணுவாளா?"

"இல்ல... மிஸ்டு கால்தான் குடுப்பா..."

"நீயாப் பேசும்போது அடிக்கடி வெயிட்டிங் போகுதா?"

"ஆமா... கத்தார்ல கஸின்ட்ட பேசுறேங்கிறா."

"டாடி வந்துட்டாங்க, மம்மி வந்துட்டாங்கன்னு அவ கட் பண்ணும்போது, போன்ல 'க்ளிங்'னு மைனூட் சவுண்ட் கேக்குதா?"

"கவனிக்கலையே மச்சான்..."

"தட் இஸ் விஞ்ஞானம்... எப்போவாவது பிரகாஷ் பத்தி நீ கேட்டதுக்கு அவ அழுதாளா..?"

"ஆமா..."

"இட் இஸ் மெய்ஞ்ஞானம்!"

"இனிமே, இந்த விஷயத்துல நான்தான் உனக்கு கோச். டோன்ட் வொர்ரி மச்சான்!"

அப்போது கரெக்ட்டாக திவ்யாவின் மிஸ்டு கால். சரண் கண்களில் பல்பு, "ஸ்பீக்கர் போன் போட்டுப் பேசுரா..." என்றான். நான் ஸ்பீக்கர் போன் போட்டுப் பேச, உருவமே அரவமாகி சீரியஸாகக் கேட்டான். கட் பண்ணிவிட்டு கொஞ்ச நேரத்தில் கொலைக் குத்து போதையாகி நான் சரிய, மறுபடி போன். தவழ்ந்து வந்த வனைத் தடுத்தாட்கொண்டு சரணே போனில் பேசினான்.

"ஹலோ... சீனு இப்போ ஏ.ஆர்.முருகதாஸ் சாரோட ஒரு மீட்டிங்ல இருக்கார். முக்கியமான ஸ்க்ரிப்ட் வொர்க்... நீங்க..."

"------------------------"

"ஓ... நான் அவர் ஃப்ரெண்ட். நான் ஏட் ஏஜென்ஸில இருக்கேன்... வோடஃபோன் விளம்பரத்துல ஜூஜூ பொம்மை பார்த்தீங்களா? அதுக்கெல்லாம் நான்தான் டிசைனர்!"

".............................."

"ஓ.கே. நான் சொல்றேன்!"

காலையில் குளித்துவிட்டு, வெளியே துணி காயப்போடப் போனால் இஸ்திரி வண்டி பக்கத்தில் நின்று சரண் பேசிக்கொண்டு இருந்தான்.

"ஒண்ணு சொல்லணும்னு நினைச்சேன்... அப்போ சொல்ல முடியலை. உங்க வாய்ஸ் ஸ்வீட்டா இருக்குங்க. ஸாரி, நான் கொஞ்சம் ஓப்பன் ஹார்ட்!"

சுருக்கென்றது சீனுவுக்கு. நிலாவில் டிபன் முடித்து கை கழுவ வந்தால்,

"இன்னும் ஷிம்மிலேயா இருக்கீங்க. ஓ... டவல்... ஸோ நாட்டி"- முறைத்துப் பார்த் தால், 'போ வர்றேன்' என சைகை சிக்னல் காட்டினான் சரண்.

சீனுவுக்கு வெறியேறியது. அங்கங்கே நின்று திவ்யாவுக்கு போன் போட்டால், எப்போதும் வெயிட்டிங். ஒருமுறை போனை எடுத்து, "கஸின்க்கு ஒரு பிராப்ளம்பா... அதான். ஹே, டாடி வந்துட்டாங்க கூப்பிடு றேன்" என்றாள்.

'ஐ மிஸ் யூ மிஸ் யூ மிஸ் யூ மிஸ் யூ...' என 100 மிஸ் யூவுக்குப் பதிலே இல்லை. சாயங்காலம் வண்டியை வாசலில் நிறுத்த, ரூம் திறந்திருந்தது. உள்ளே நுழைந்தால், பாத்ரூமை மூடிக்கொண்டு சத்தம் போட்டுப் பேசிக்கொண்டு இருந்தான் சரண்.

"சீனுவா... சும்மாதான் திரியுறான். எதாவது சீரியல் சான்ஸ் வாங்கித் தர்றேன்னு சொன்னாக் கேக்கணும்ல. பைக் டியூ இருக்கு. சேட்டு துரத்துறான்... செக்யூரிட்டி போட்டது நான்தான்... ஓ.கே. லிவ் இட் திவ்ஸ்!"

"............................"

"யாரை... ப்ளீஸ் ப்ளீஸ் சொல்லேன்..."

சீனுவுக்கு வெறியேறியது. எப்போது போன் போட்டாலும் வெயிட்டிங். தவறி லைன் கிடைத்தாலும், திவ்யா எடுக்கவில்லை. அப்படியே எடுத்தாலும், 'டாடி வந்துட்டாங்க... மம்மி வந்துட்டாங்க'. சீனுவுக்குக் கிறுக்குப் பிடித்தது. கோபம் எகிறியது. பேச்சுக்கள் காதிலேயே ஒலித்து உயிரெடுத்தன.

மறுநாள் ராத்திரி ஆவேசம் பொங்கப் பொங்க... பைக்கில் தாமஸ் மவுன்ட் ஏறினான். சல்பேட்டா சாத்திவிட்டு, மலையில் இருந்து சென்னையைப் பார்த்துக் காறித் துப்பியபடி மொபைலில் திவ்யாவுக்குத் தட்டினான்,

"ஹழ்ழ்லோ திவ்ழ்யா... குழ்ழ்டிம்மா..."

"நான் அப்புறம் பேசுறேன்..."

"ஹேய்... ஒரு நிமிழ்ஷம் சொழ்ழதைக் கேழும்மா..."

"வீட்ல எல்லாரும் இருக்காங்க என்னை டென்ஷன் பண்ணாத..."

"ஏய்ழூய்யி... யாழ் யாழை டெழ்ஷன் பண்ழா..? ந்தா பாழு ஐ ழவ் யூ."

"திஸ் இஸ் லாஸ்ட் வார்னிங். இனிமே என்ட்ட பேசாத... கெட் லாஸ்ட் ராஸ்கல்!"

"ம்மா... ம்மா... தோ பாழு, இப்பிழிலாம் பேசாத... நான் இப்போ எங்கே இழுக்கேன் தெழியுமா? தாமஸ் மவுன்ட்ல... இங்கேழுந்து குதிச்சு செத்துழுவேன்!"

"குதிச்சுரு ரொம்ப நிம்மதி!" - பட்டென்று கட்டானது கால்!

ப்ரீ க்ளைமாக்ஸ்

------------------------------------

ரூமுக்கு வந்தால், படிக்கட்டில் சரண் குரல் உருண்டு வந்து தாக்கியது.

"என்னது... குதிக்கப் போறேன்னானா? குதிக்கச் சொல்லிட்டியா? குதிச்சுருவானா... ஹாஹ்ஹாஹ்ஹா..."

க்ளைமாக்ஸ்

--------------------------

ஒரு வாரம் கழித்து சரண் ரூமுக்குப் போனால்... மொபைலில் கொஞ்சிக்கொண்டு இருந்தான்.

"என்னம்மா... மெஹந்தி வெச்சுருக்கியா... ஒன்ஸ் மோர் அந்த டாட்டூஸ் ஜோக்

சொல்லேன்..."

கடுப்பாகப் பார்த்தான் சீனு.

"யார்றா... திவ்யாவா?"

"இல்லடா... மேகா..."

"என்னது?"

"நான் சீனு ஃப்ரெண்ட் சரண். இது திவ்யா வோட ஃப்ரெண்ட் மேகா!"

தொடர் கதை: ஒன்று
தொடர் கதை: ஒன்று
(இன்னும் ஒன்று...)