Published:Updated:

தொடர் கதை: ஒன்று

தொடர் கதை: ஒன்று

தொடர் கதை: ஒன்று
தொடர் கதை: ஒன்று
தொடர் கதை: ஒன்று

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
இருவன்
ஓவியங்கள்:ஸ்யாம்
தொடர் கதை: ஒன்று

நானும் கணேஷ§ம் இப்போது பேசிக்கொள்வது இல்லை. காரணம்... ரணம்!

மேற்குத் தொடர்ச்சி மலைகளின் கீழ் கிடந்த ஒரு சிறு நகரத்தில் பிறந்த நான் குரு. என் நண்பன் கணேஷ்.

கிட்டி, புஸ்வாணம், கலைச்செல்வி டீச்சர், கபடி, ஃபுட்பால், முல்லையாறு, ரஜினி படம், ராஜா கடை பரோட்டா, மசாலா பால், திருட்டு தம் எனப் பலப் பல பரிமாணங்கள் எங்கள் நட்புக்கு உண்டு.

எட்டாங் கிளாஸ் படிக்கும்போதே, "ஆமாடா... எங்க அம்மாவும் எங்க அப்பாவும் அப்பிடிப் பண்ணதாலதேன் நான் பொறந்தேன். சும்மா, சாமி குடுத்துச்சு, சந்தையில வாங்கினேன்னு ஆளாளுக்கு டூப் விடுறாய்ங்கடா!" - ஆதி ரகசியத்தை அரை டிராயர் காலத்தில் போட்டு உடைத்தவன். கணேஷ் அப்படித்தான் எப்போதும்.

'பாரதி... அவன் பைந்தமிழின் சாரதி' என பாரதியார் பேச்சுப் போட்டிக்கு நாங்கள் தயாராகும் வேளையில், "சோப்பு டப்பா பிரைஸுக்கு, ஏன்டா இவ்ளோ கஷ்டப்படுறீங்க?" என, 'காமு மாமி காட்டிய சாமி படம்' புத்தகம் காட்டிச் சிரிப்பான்.

கிரிக்கெட் ஆடப் போனால், நான் கேப்டன். கணேஷ்... எங்கள் டீம் மேனேஜர். எதிர் அணி ஆட்களுடன் அப்போதே மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டவன். எப்பாடு பட்டாலும், பிற்பாடு தோற்கும் நிலை வந்தால், ஸ்டம்ப்களைப் பிடுங்கி எறிவது, ஸ்கோரைக் கன்னாபின்னா வென ஏற்றுவது, எவனையாவது பிடித்து மிதிப்பது... என ஆட்டத்தைக் கலைப்பதில் ஜித்தன்!

கல்லூரியில் சேர்ந்தோம். நான் பாட்டனி. அவன் எகனாமிக்ஸ். குலதெய்வம் கும்பிட ஊருக்குப் போனவன் வரவில்லை. ஒரு தகவலும் இல்லை. விடுமுறையில் வீடு திரும்பிய நான், நேரே கணேஷ் வீட்டுக்குப் போனேன்.

தொடர் கதை: ஒன்று

"உனக்குத் தெரியாதாடா... கணேஷ§க்கு ஆக்சிடென்ட்டு குரு. பஸ் ஸ்டாண்டுக்குப் பின்னால, சேர்மக் கனி ஆஸ்பத்திரியில சேர்த்து இருக்கோம்" என்றார் கணேஷின் அக்கா.

இரண்டு முட்டுச் சந்துகள் கடந்து, ஒரு குறுகலான தெருவில் இருந்தது அந்த கிளினிக். வரிசையாக இருந்த வீடுகளில் ஒன்றை வாடகைக்குப் பிடித்து மாற்றப்பட்ட மருத்துவமனை.

பச்சை பெஞ்ச்சில் பாக்யராஜும் மனோரமாவும் இருந்தனர். பக்கத்திலேயே, ஆற்காடு வீராசாமி. 'குட் காம்பினேஷன்' என மனசுக்குள் சிரித்தபடி உள்ளே நுழையப் பார்த்தேன். வெல்கம் திரைச்சீலை மறைத்தது. வேறு ஆள் யாரையும் காணோம்.

சில நிமிடங்கள் கழித்து சீலை நெகிழ்ந்தது. "எந்தா..?" என்றபடி வந்தாள் அவள். என் இமைகள் உறைந்தன. ஸ்டெப் ஃப்ரீஸில் தெர்மா மீட்டர் உதறி, "ஃபீவரோ..?" என்றாள். "இல்ல..." என்ற என்னை, புருவம் உயர்த்திப் பார்த்தாள். மெய்யாலுமே அப்படி ஒரு பெண்ணைச் சுற்று வட்டாரங்களில் நாங்கள் கண்டதே இல்லை. அலை சுருளும் கேசம், கரை புரளும் தேகம், செம்பருத்தி வாசம்... அடப் போங்க பாஸ்... ஆரஞ்சு கலர்ல அப்பிடி ஒரு ஃபிகர்!

தொடர் கதை: ஒன்று

நிச்சயம் கேரளக் குட்டி. அந்தக் கணத்தில் அவளை ஈன்றெடுத்த மலையாளிகளின் கால்களில் விழுந்து கரகரவென அழ சித்தமாக இருந்தேன். "எந்தா வேணும்?" என்றாள் மறுபடியும். "இல்ல, நான் கணேஷ் ஃப்ரெண்டுங்க" என்றேன்.

"ஓ... ஃபர்ஸ்ட் ரூம்" என்றாள். உள்ளே, கணேஷ் ஏராளமான கட்டுக்கள் போட்டு தாராளமாகப் படுத்துக்கிடந்தான். பக்கத்தி லேயே அவன் அப்பா. "வாடா குரு... பாரு உன் கூட்டாளிய. பைக்கை பைக்கு மாதிரி ஓட்டணும்... பிளேனு மாதிரி ஓட்டுனா... இப்பிடித்தான். இப்போ உனக்குப் பதில், நானாடா கக்கூஸ் போவேன்!" என்றவரைக் கலவரமாகப் பார்த்தேன். கோபம் வந்தால், தன்னைத்தானே தாறுமாறாகத் திட்டிக்கொள்ளும் வல்லமை படைத்தவர்.

"மெடிக்கல் ஷாப் வரை போயிட்டு வந்துர்றேன். பார்த்துக்க" என்று கிளம்பினார்.

'எப்படிரா இருக்க?' எனத்தான் கேட்க நினைத்தேன். ஆனால், "யார்றா அவ?" என்றேன்.

"சூப்பர்ல!" எனக் கண் சிமிட்டிச் சிரித்தான் கணேஷ். அவளின் பெயர் லாலி.

வண்டிப் பெரியாறு பக்கம் இருந்து வந்தவள். அந்த கிளினிக், ஒரு ட்ரிபிள் ரூம் வீடு. அரசு மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் காலையும் மாலையுமாக, நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே வந்து போவார். கொஞ்சம் சீரியஸ் என்றால், அட்மிஷன் போடுவார்கள். கணேஷின் அப்பா, டாக்டரின் நண்பர் என்பதால், மகன் கட்டிலில் கிடக்கிறான். மிக முக்கியமான விஷயம்... லாலியும் அங்கேயே தங்கி இருக்கிறாளாம்.

அச்சன் எவிட?" என அறைக்குள் எட்டிப்பார்த்த லாலியிடம், "இவன் என் ஃப்ரெண்டு" என்றான் கணேஷ். "ஓஓஓஓ..." எனப் புன்னகைத்தாள் ஓமனப் பெண்!

சம்பந்தமே இல்லாமல், "நான் சபரி மலைக்கு மூணு வாட்டி மாலை போட்ருக்கேன். டூ டைம்ஸ் பெரிய பாதையில..." என்றேன்.

"ஓ... மணிகண்டனாக்கும்" என அவள் சிரிக்க, "நோ நோ... ஐ யம் குரு" என்றேன் பெருமையாக!

இரவு விடைபெறுகையில் வாசலில் லாலி இருந்தாள். பல்சர் கிக்கரை மிதித்து உதறியவன், "ஓ பாப்பா லாலி... கண்மணி லாலி" என சன்னமான குரலில் பாடினேன். லாலியின் சின்னக் கண்களில் ஜாலி மின்னல்கள்!

இந்த இடத்தில் ரீ-மிக்ஸ் பாட்டுப் போட்டு, யோகி.ஙி-யை அழைத்து ஆடவைத்து, முட்டை பரோட்டா வாங்கிக் கொடுத்து, கடைசி பஸ்ஸில் மலேசியா ஏற்றிவிடத் தயாராக இருந்தேன். பாவம், யோகியைப் பார்த்தால், என் செல்லக் குட்டி லாலி பயந்துவிடுவாள் எனத் தவிர்த்தேன்.

தொடர் கதை: ஒன்று

"அது ஒரு ஸ்பெஷல் ஃபீலிங்டா!" என நண்பர்கள் யாரேனும் சொன்னால்... கலாய்ப்பேன். ஆனால், அன்று எனக்கு அந்த வெரி ஸ்பெஷல் ஃபீலிங். இரவின் கனவில், நிலவின் மகளாய் லாலி வந்தாள்!

அடுத்த நாள்தான் எனக்கு அந்த உண்மை உணர்த்தப்பட்டது. ஆக்சுவலி... அந்த க்யூவில் நான் ஏழாவது ஆளாம். ஆறு பேர் ஆல்ரெடி ஹார்ட் பேஷன்ட்ஸ். ஏன் இத்தனை பேர் எனக்கு நண்பர்களாக இருக்கிறார்கள் எனக் கெட்ட கோபம் வந்தது. குட்ட ரவி, அபுரார், சார்லஸ், அழகேசன், பாண்டிய ராஜன், செவன் சிவராஜ் அத்தனை பேரும், லாலியின் கடைக் கண் பார்வைக்காகக் கபடி ஆடினார்கள். அடப் பாவிகளா!

மறு நாள் காலை கிளினிக் போய்ப் பார்த்தால், புரட்சித் தலைவர் அட்மிட் ஆன அப்போலோ வாசல்போல செம கூட்டம். 'நீ எப்படா வந்த குரு?' என்ற நண்பர்களின் பார்வையில், 'எதுக்குடா வந்த, ஏன்டா வந்த, எவன்டா நீ வரலேன்னு அழுதது?' என்ற எரிச்சல்களே ஏராளம்.

"ஆமா, சகவாசம் சரியில்லாமத்தேன் இப்பிடி அடிபட்டுக் கெடக்குறான். எல்லாரும் வெளிய போங்கடா... பைக்குக்கு வேற தனிச் செலவு" என்றார் கணேஷின் அப்பா. சடக்கென்று அவர் கையைப் பற்றினான் குட்ட ரவி. "அப்பா... நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க. மார்க்கெட் வசூலுக்குப் போகணும்ல. போய் வேலையைப் பாருங்க. நான் பக்கத்துல இருந்து கணேஷைப் பாத்துக்கறேன்" - சொல்லும்போதே ரவியின் கருமணிப் பாப்பாக்கள் லாலி பின்னால் தவழ்ந்து உருண்டன. "ஆமாம்ப்பா..." என நாங்களும் நட்பு பொங்கிப் பாய்ந்தோம்!

கணேஷ§க்குச் சீக்கிரம் குணமாகிவிடக் கூடாது என்பதுதான் எங்கள் கூட்டுப் பிரார்த்தனை. குரூப் குரூப்பாக, ஷிஃப்ட் வைத்து ஆஸ்பத்திரியில் டாப் அடிக்க ஆரம்பித்தோம்.

எனக்குக் கிறுக்குப் பிடித்தது. இருப்பதிலேயே புதுச் சட்டையை எடுத்து, நானே நள்ளிரவில் துவைத்து, அதிகாலையில் அயர்ன் பண்ணி, அணிந்துகொண்டு, உலகம் அழியும் கடைசி நாளின் நோவா கப்பலில் லாலியுடன் ஏறிவிட தினம் தினம் ஓடுவேன்.

அன்றே லாலியை லவ் பண்ணி, கல்யாணம் பண்ணி, ஏழு நண்பர்களுடனும் குரூப்பாக கலர் போட்டோ எடுத்து, திருமண விருந்தில் அவன்களை சாம்பார் வாளி, தண்ணி ஜக் தூக்கவைத்து, அப்புறம் நாங்கள் மறு வீடு போய் வந்து, முதலிரவு நடந்து, கொடைக்கானல் ஹனிமூன் போய், ஒரு மழை நாளில் பிரசவத்துக்கு லாலியைத் தூக்கிக்கொண்டு ஓடும்போது... அப்பா மிதித்து முழிப்பு வந்தது!

வாலியைத் தன்பால் ஈர்ப்பது எப்படி என ஆளாளுக்கு ஒரு வெப்பனோடு களத்தில் குதிக்க... எனக்குள் கலவரப் புகை!

அவளுக்கு இளையராஜா பாடல்கள் மேல் வல்லியக் காதல் என்பதைக் கண்டுபிடித்தேன். அபுரார்... கரகரப் பிரியன். 'வா வா, அன்பே அன்பே... காதல், நெஞ்சே... நெஞ்சே' எனக் கொடூரமாகக் குரலெடுத்துப் பாடி, "ஃபிலிம் நேம் 'அக்னி நட்சத்திரம்'. ஹீரோ கார்த்திக், ஹீரோயின் நிரோஷா... நோக்கியோ" என்று கேட்லாக் போட்டுக் கிறுகிறுக்கவைத்தான். இதை லீடெடுத்து அவனவனும், 'ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்...', 'மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்' என ரவுண்டு கட்ட, கால் முறிந்த கணேஷ்பாபு கடுப்பில் பெட்டைப் பிராண்டினான்.

வராந்தாவில் லாலியைத் தனியே மறித்து, மீண்டும் 'ஓ பாப்பா லாலி... கண்மணி லாலி...'ன்னேன். அவள் சட்டென்று என் தலை கலைத்து, "குருவுக்கு எந்தா ஒரு வாய்ஸ். யேசுதாஸன்டே ஜெராக்ஸாயிட்டு..." என்றாள். உடலும் காது மடலும் சிலிர்த்தது. "ஓ... காதலி கைகளில் தாலாட்டவே காதலன் குழந்தை தான் காதலில்... ஓ..." என நான் உதடு குவித்ததில், நிச்சயம் யேசுதாஸுக்கு சோறு சாப்பிடும்போது புரையேறி, ஒரு சொம்பு தண்ணீர் குடித்து இருப்பார்!

இன்னொரு பக்கம் மலையாளத்தை ஆளாளுக்குத் தோலை உரித்து உப்புத் தடவிக் காயப்போட்டோம். 'எந்தா லஞ்ச் கழிஞ்சோ..?', 'கம்மல் வல்லிய பியூட்டி', 'ஒரு கிளாஸ் வெள்ளம் உண்டோ?' என்றெல்லாம் பய புள்ளைகள் கதைத்ததில், ஆயர் பாடி... நாயர் பாடியானது.

நான் டீக்கடை நாயரைப் பிடித்தேன், நான் சொல்ல, அவர் மொழிபெயர்க்க, லாலியின் முழி பெயர்த்தேன். "நமஸ்காரம், ஞான் குருவானு. குரு நல்லவனானு. ஸ்ரத்திக்க, தீர்மானிக்கேன்டது நிங்ஙளானு. பச்சே நஷ்டப்பட்டுப் போகரது. அத்ர மாத்ரம், எங்ஙன என்ர மலையாளம். நன்னாயிட்டு உண்டோ? ஒரு களிதமாஷ்!" என மம்மூட்டி, மோகன்லால் ஸ்டைலில் நான் பேச, உள்ளங்கையின் அத்தனை விரல்களையும் உதடுபோல் குவித்து, என் கன்னத்தில் ஒற்றி, "குரு, ஞான் மயங்கிப்போயல்லோ" எனக் கன்னம் சிவந்தாள் லாலி. சக்சஸ்!

யாராவது ஒருத்தனோடு லாலி எக்ஸ்ட்ரா டைம் பேசிவிட்டால், மற்றவர்களுக்குத் தலை சூடானது. ஆரம்பித்தது உள்குத்து அரசியல். "எனக்கு கை ரேகை பார்க்கத் தெரியும். கையை இவிட குடு..." என லாலியின் கையைப் பார்த்து, "ஆயுள் அபாரம். கூடிய சீக்கிரம் மேரேஜ் வரும். பட், மாப்பிள்ளை மலையாளி இல்லே" என பிட்டைப் போட்டேன். "ஹய்யோ... குரு, நீ பறஞ்சது மெய்யோ?" என லாலி ஆச்சர்யப்பட, உள்ளே நுழைந்தான் சிவராஜ். "ஏன்டா குரு, ஜேம்ஸ் அண்ணன் உன்னைக் கன்னாபின்னானு திட்டுறாருடா. டீக் கடையில் 300 ரூபா கடனாமே? உன்னை உடனே உரக் கடையில ஒரு அக்கவுன்ட் ஆரம்பிச்சு, பூச்சிமருந்து வாங்கிக் குடிக்கச் சொன்னாருடா!" என்று பினாமியாக ஒரு சுனாமி போட்டான். நிலைகுலைந்த நான் நொடியில் சுதாரித்து, "புரியுது செவனே... நீ ஏன் இப்பிடிப் பொய் பொய்யா சொல்றேனு? ஆமா, காலையில வர்ற வழியில உன் லவ்வரைப் பார்த்தேன்டா. உன்னை எங்கே பார்த்தாலும் செருப்பால அடிக்குமாம். 'அண்ணா, என் செருப்பைத் தர்றேன். நீங்க எடுத்துட்டுப் போய் அடிக்கிறீங்களா?'னு என்னைக் கேட்டுச்சுடா. 'பாவம், வெயில் நேரம், வெறுங் கால்ல நடந்தா, உன் காலு சுடும்மா'னு சொல்லி அனுப்பிவெச்சேன்" என எகிறித் திருப்பி அடித்தேன்.

"குரு... சிவா, ரெண்டு பேரும் கள்ளம்" என விரல் ஆட்டி லாலி சிரித்தாள்... சித்திரமாக!

தொடர் கதை: ஒன்று

சாயா சாப்பிடலாமா?" என லாலி கேட்க, "அழகேசனுக்கு மட்டும் சர்க்கரை இல்லாம... அவனுக்கு ஷ§கர்" என்றான் அபுரார்.

"இவன் இன்னும் ப்ளஸ் டூவே முடிக்கலைங்க!"

"கல்லாவுல காசடிச்சிட்டு வந்துட்டியாம்ல..?"

"ஏன்டா, நைட்டு ஒயின் ஷாப்ல தண்ணியப் போட்டு ஓவர் சலம்பலாம்?" - அவனவனும் சளைக்காமல் பகடை உருட்டினார்கள்.

அபுரார்தான் பணக்கார வாரிசு. பஸ் கம்பெனிக் குடும்பம். இது லாலிக்குத் தெரியவே கூடாது என எல்லோரும் ஏங்கினோம். ஆனால், "ஊருக்குப் போறப்போ சொல்லுங்க... நம்ம பஸ்ல ஃப்ரீதான்" என அபுரார் தன் குலப் பெருமையைச் சமயம் பார்த்து எடுத்துவிட்டான். "ஓ... அந்த பஸ் கம்பெனி ஓனரா நீங்க!" என லாலியின் முகம் எக்ஸ்ட்ரா பல்ப் மாட்ட, ஃபியூஸ் போனோம்.

சிவப்பு சிந்தனை சீற, வர்க்கப் போருக்கே தயாரானேன். "அடிப்படையில நான் ஒரு கம்யூனிஸ்ட் லாலி..." என்றேன். 'இவன் என்னடா புது ரூட் பிடிக்கிறான்?' என மற்றவர்கள் திருதிருக்கும்போதே, கியரைப் போட்டுக் கிளப்பினேன். "ஏ.கே.கோபாலன் தெரியுமா லாலி... ஏ.கே.ஜி... அவரோட சுயசரிதை படிச்சிருக்கீங்களா? புரட்சிங்க... அதாவது, புது இந்தியா. மாவோ சொன்னதைத்தான் ஏ.கே.ஜி-யும் சொல்றாரு."

"எந்தா ஞானம்... என்ட அச்சனும் கம்யூனிஸ்ட் பார்ட்டிதான். ஈ.எம்.எஸ் ஃபாலோயர்!"

"நான் சே குவேரா ஃபாலோயர்ங்க. க்யூபால பார்த்தீங்கன்னா..." என நான் மறுபடியும் டாப் கியர் தட்ட, அத்தனை பேரும் திகிலடித்தார்கள்.

"ஐயோ! வலிக்குதுரா... வலிக்குதுரா... விட்ருங்கடா" என ரூமுக்குள் 'பருத்திவீரன்' க்ளைமாக்ஸ் ப்ரியா மணி மாதிரி கதறினான் கணேஷ்!

ஆமாம், கணேஷ்... இது எதிலும் கலந்துகொள்ளவே மாட்டான். வேளாவேளைக்கு மாத்திரைகள் தந்து, காயங்களுக்கு மருந்து போட்டு, "இப்போ பெட்டரா ஃபீலோ?" என சின்னச் சின்னப் புன்னகை வார்த்தைகள்தான். பாவம், அவன் கஷ்டம் அவனுக்கு!

குட்ட ரவி ஒரு சுடிதார் ஸ்கீமை அறிவித்தான். ஆளுக்கு 50 ரூபாய் போட்டு, லாலிக்கு ஒரு சுடிதார் எடுத்துத் தர வேண்டுமாம். ஆஹா... செம ஐடியாவா இருக்கே என ஆளாளுக்குக் காசு சேர்த்து, தனியே தன்னந்தனியே வாங்கித் தரத் துடித்தனர்.

இத்தனை போட்டிகளுக்கு நடுவிலும் எனக்கு நம்பிக்கை இருந்தது. லாலி... மிக மிக நல்லவள். அன்பின் ஆட்டுக்குட்டி. பரிசுத்தமான பெண். என்னிடம் மட்டும் லாலி ஸ்பெஷலாகப் பழகுவதற்கான அத்தனை அறிகுறிகளும் தென்பட்டன. ஏனென்றால், நான் யேசுதாஸன்டே ஜெராக்ஸ்... புரட்சிக்காரன்!

கணேஷ் நடை வந்து எழுவதற்குள் லாலியிடம் லவ்வைச் சொல்லிவிட வேண்டும். இதற்காகவே காலேஜுக்கு லீவு போட்டுவிட்டு கிளினிக் பக்கமே திரிந்தேன். இரவு 9 மணி வரைதான் அங்கே அனுமதி. அதற்கு மேல் லாலியைப் பிரிந்து பிரியம் பிதுங்க வீடடைவோம்.

ஒரு ராத்திரி எப்படியாவது அங்கே டாப் அடித்துவிட வேண்டும் என்பதே அப்போது என் லட்சியம். அம்மா இல்லாத பையன். அக்கா வீட்டில் இருப்பார். அதனால், கணேஷ§க்கு அவன் அப்பாதான் இரவில் கிளினிக்கில் துணையாக இருப்பார். அந்தப் பெருங்கனவு, எனக்கு ஒருநாள் நனவானது. "திருச்சிக்கு ஒரு கல்யாணத்துக்குப் போறேன் குரு. இன்னிக்கு நீ கணேஷ§க்குத் துணையாத் தங்கிக்கிறியா?" என வேறு யாரும் இல்லாத நேரத்தில், கணேஷின் அப்பா என்னிடம் கேட்டார். காட் இஸ் கிரேட்!

அன்று இரவு, வீட்டில் கல்லூரிக்குக் கிளம்புகிறேன் என பேக்கை எடுத்துக்கொண்டு கிளம்பியவன், கிளினிக் வந்தேன். யாருமே இல்லை. காலிங் பெல் அடித்தேன். வாசலில் விளக்கைப் போட்டு வந்து கதவு திறந்தாள் லாலி. என்றாவது ஒருநாள்... எங்களுக்குத் திருமணமாகும். நான் ஆபீஸ் டூர் முடித்து வருவேன். அப்போதும் இப்படித்தானே லாலி வரவேற்பாள். பிங்க் நிற நைட்டி. குட்டிக் குட்டிப் பூக்கள். கூடவே மென்மையான டெட்டால் சுகந்தம்.

"ஹாய் லாலி, நைட் இங்க தங்கச் சொன்னார் அப்பா. காலையில சீக்கிரமா முத பஸ் பிடிச்சு நான் காலேஜ் போகணும்."

"ஓ... வரூ..." என்று என் பேக்கை வாங்கித் தோளில் மாட்டிக்கொண்டு போனாள் லாலி. சொர்க்கத்தின் சுருக்குப் பாதை இதுதானா? கணேஷ் பாபு கமறிக் கொண்டே திரும்பிப் படுத்தான். அடுத்த நிமிடம் மீண்டும் காலிங் பெல் சத்தம். விஷயத்தை எப்படியோ ஸ்மெல் பண்ணி, பாவிப் பயல் குட்ட ரவி மட்டும் வந்துவிட்டான்.

லாலியுடனான ராத்திரி விரிந்தது. குடிக்கூரா பவுடர் வாசத்தோடு லாலி வந்து பக்கத்தில் உட்கார்ந்தபோது எனக்கு உயிர் கிறங்கியது. 'டேய் கணேஷ்... தூங்கித் தொலைடா!' கால் வலிக்காரன் செம ஃப்ரெஷ்ஷாக இருந்தான். ரவி... அடுத்த ஜென்மத்துக்கு இப்போதே ஆந்தையாக இருந்தான்.

"எனிக்கு இஷ்டமாயிட்டு, ஓ பாப்பா லாலி பாடேன் குரு..." என்றாள் லாலி.

முயல் குட்டிகள் தவ்வும் பனிச் சாலையில் லாலியின் கை இறுக்கி நடக்கிறேன். மேற்குத் தொடர்ச்சி மலை முகடுகளில் காதல் வழிகிறது. இருள் ஏகாந்தம் பாடுகிறது. லாலியின் மடியில் ஒளிந்து, மார்பில் புதைந்து, மூச்சில் எரிந்து, மோட்சம் அடைந்து, சந்தன வாசத்தில் சாகிறேன்!

லாலி என் அருகே இருக்க, ஒரே நேரத்தில் என்னைக் காளான் குடையாகவும் குறிஞ்சி மலராகவும் உணர்ந்தேன். அந்த இரவில் அவள் மழையாகவும், நான் ஈசலாகவும் பிறந்து வந்ததாய் தவித்தேன்.

கட்டஞ் சாயா போடவா?"

"ம்..." - உற்சாகமாகத் தலையாட்டினேன்.

தொடர் கதை: ஒன்று

சமையல் அறையில் கட்டஞ் சாயா தயாரித்தாள் லாலி. பின்னால் போய் நின்றேன். அப்படியே கட்டிப்பிடித்து காதுக்குள் ஒரு முத்தம் தரலாமா?

"எந்தா... குரு... சைலன்ட்டாயிட்டு?"

"சும்மா!"

விடிய விடியப் பேசினோம். மூன்று கட்டஞ் சாயாக்கள். "நைட்டில பூ நல்லா இருக்கு..." எனத் துணி தொட்டபோது, சிரித்தாள். படுபாவி ரவி வெறித்தான். பேசினோம், பேசினோம்... பேசிப் பேசி அப்படியே தூங்கிவிட்டோம்.

அதிகாலை விழித்தபோது, ரவி உருண்டுகிடந்தான். மொசுமொசுவெனப் பூக்குவியல் மாதிரிகிடந்த லாலி சத்தம் கேட்டு எழுந்தாள்.

"லாலி, நான் கிளம்பறேன்..."

"அச்சச்சோ, பஸ்ஸுக்கு டைம் ஆகிருச்சா குரு. ஸாரி நான் தூங்கிட்டேன்."

அவசரமாக முகம் கழுவினேன். பை எடுக்கையில், பொசுக்கென்று என் கண் பார்த்து லாலி கேட்டாள், "எந்தா வேணும் குரு..?" என்ற கண்களில் தெரிந்தது நிச்சயமாகக் காதல்தான் லாலி.

எவ்வளவு இருக்கிறது கேட்க... என் உதடும் உயிரும் துடித்தது.

"ம்..?" - அவள் புருவங்கள் நடனமாடின.

"ம்... ம்... ஒரு கட்டஞ் சாயா!"

ஒரு வாரம் ஆயிற்று கல்லூரி திரும்பி. இரவு பகல், 24 மணி நேரமும் லாலிதான். காதலைச் சொல்லிவிட முடிவெடுத்தேன். ஒரு கிரீட்டிங் கார்டு வாங்கினேன். கவிதை எழுதினேன். பெரிய சாக்லேட் டப்பாவுடன் பஸ் ஏறினேன். பஸ்ஸ்டாண்டில் இருந்து நேரே ஆஸ்பத்திரிக்கு ஓடினேன். பூட்டிக்கிடந்தது. புரியாமல், பதறி கணேஷ் வீட்டுக்கு ஓடினேன். கணேஷ் காலைத் தொங்கப்போட்டு சாத்துக்குடி சாப்பிட்டுக்கொண்டு இருந்தான்.

"டேய், என்னடா இங்க இருக்க?"

"ஆமான்டா... கால் சரியாகிருச்சு. வந்துட்டேன்."

"ஆஸ்பத்திரி பூட்டிக்கெடக்கே?"

"ஆமா, ஓ நேரா அங்க போயிட்டியாக்கும்!"

"டேய்... லாலி எங்கடா?" என்ற என்னை கணேஷ் குறுகுறுவெனப் பார்த்தான்.

"அதை அவங்க மாமா வந்து கூட்டிட்டுப் போயிட்டார்டா!"

"ஏன்?"

"ஆமா... நீங்க நைட்டெல்லாம் வந்து தங்குனா... அக்கம்பக்கத்துல கம்ப்ளெயின்ட் பண்ணிட்டாங்க. டாக்டர் ஏதோ திட்டிட்டார். அவங்க ஊர்ல இருந்து வந்து கூட்டிட்டுப் போயிட்டாங்க."

உறைந்து உட்கார்ந்திருந்தேன். மனசு தவித்தது.

கணேஷ்... நான் லாலியை ரொம்ப லவ் பண்றேன்டா, இப்போ அவளை எப்பிடிப் பாக்குறது?"

"நீ மட்டுமா... ஒரு கூட்டமே லவ் பண்ணீங்களே!" - பகபகவெனச் சிரித்தான் கணேஷ்.

"என்னடா சிரிக்கிறே... நான் நிஜமாவே லவ் பண்றேன்டா!"

"அப்டியா மச்சான், ஏன்டா குரு... நீ இவ்ளோ சீரியஸா இருக்கே? உனக்கு ஒரு மேட்டர் சொல்லட்டா?" என்றவன் கிசுகிசுப் பான குரலில், "நான் லாலியை ............................" என்றதும் அதிர்ந்தேன்.

"டேய்..!"

"ரிலாக்ஸ்டா... ரெண்டு பேரும் டெய்லி ஒண்ணாத்தான கிளினிக்ல இருந்தோம். ஒருநாள் மருந்து எடுக்கும்போது, அவளை அப்பிடியே கட்டிப்பிடிச்சுட்டேன்."

"வேணாம்டா கணேஷ். பொய் சொல்லாதடா... இது காமெடி பண்ற விஷயம் இல்லடா!"

தொடர் கதை: ஒன்று

"ஐயோ, நிஜமா குரு! லாலி என்னைத் திட்டினா, அப்பிடியே அழுதா. என் கையைப் பிடிச்சு, அவங்க ஃபேமிலி கஷ்டம் எல்லாம் சொல்லிச் சொல்லி அழுதா. நான் இறுக்கிக் கட்டிப்பிடிச்சேன். 'என்னைக் கல்யாணம் பண்ணிக்குவியா?'ன்னு கேட்டா. காசா... பணமா... காட் பிராமிஸ்னு அவ தலையில் அடிச்சு சத்தியம் பண்ணேன்டா. அப்புறம்..." - பேச்சை முடிக்க முடியாமல் பகபகவெனச் சிரித்த கணேஷைப் பொளேரென அறைந்தேன்.

"மனுஷனாடா நீ?" என மாறி மாறி அறைந்தேன். உள் அறையில் இருந்து அவன் அக்கா ஓடி வந்து, "என்னாச்சு குரு? என்னடா கணேஷ§?" எனப் பதறி வர, விலகி வெளியே வந்தேன்.

மச்சான், டேய் குரு... ப்ளீஸ்டா. அன்னிக்கு என்ன நடந்துச்சுன்னா..." என கணேஷ் அதன் பின்னால் என்ன சமாதானம் சொல்ல, எத்தனை முறை வந்தாலும்...

நானும் கணேஷ§ம் இப்போது பேசிக்கொள்வது இல்லை. காரணம்... ரணம்!

தொடர் கதை: ஒன்று
தொடர் கதை: ஒன்று
(இன்னும் ஒன்று...)